பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கொஞ்சம் முட்டாள்தனமாகச் செயல்பட்டால் முன்னேறலாம்... சாதிக்கலாம்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஒரே ஒருமுறை நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையில் எதையாவது உருப்படியாகச் செய்தாக வேண்டும் என்று நினைக்கிறோம். தனிமனித வளர்ச்சி மற்றும் சாதனைகள் புரிவதற்கான சிந்தனையுடன், இந்த உலகுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற லட்சியமும் சேரும்போது அது மிகவும் சிறப்பான செயல்பாட்டுக்கு வழிவகை செய்வதாக இருக்கிறது.

புத்தகத்தின் பெயர்: How to Beginஆசிரியர்: Michael Bungay Stanierபதிப்பகம்:‎ Page Two, New York, USA
புத்தகத்தின் பெயர்: How to Beginஆசிரியர்: Michael Bungay Stanierபதிப்பகம்:‎ Page Two, New York, USA

உலகுக்காக உழைக்கும் லட்சியம்...

உலகத்துக்கு ஏதாவது செய்வது எனில், என்ன? ‘‘புதியதொரு டெக்னாலஜியைக் கண்டுபிடிப்பது, அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது, சந்திர மண்டலத்துக்கு ஆள் அனுப்புவது என ஏதாவது ஒன்றைச் செய்வது தான் அது. இப்படிப் பொதுவான, பெரிய விஷயங்கள் என்றில்லாமல், சுற்றி இருப்பவர் களுடன் நல்லுறவைப் பேணுவது, நல்லதொரு குழுவை உருவாக்குவது, கிரியேட்டிவ் புராஜெக்ட் ஒன்றை உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது என்பது போன்றவையும் இதில் அடங்கவே செய்யும்.

‘‘உலகத்துக்கான லட்சியம் என்று ஏன் சொல்கிறேன் எனில், வெறுமனே உங்களுடைய சந்தோஷத்துக்கான விஷயங்களை மட்டுமே செய்யாமல், இந்த உலகம் குறித்தும் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான். இந்த உலகத்தில் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் விஷயங்களைவிட அதிகப்படியான விஷயங்களை நீங்கள் உலகுக்குத் தர வேண்டும் என்பதுதான் நோக்கம். இப்படி நமக்கும் உலகுக்கான விஷயங்களையும் சேர்த்து லட்சியங்களை நிர்ணயம் செய்யும்போது அவை ஒன்றுக்கொன்று இசைவாகச் செயல்பட்டு அதனுடைய பலனை மிகப் பெரியதாக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

லட்சியம் எத்தனை பெரிதானாலும் இதைச் செய்து முடிக்க மிகப் பெரியதொரு பிரச்னையாக இருப்பது எது தெரியுமா? எங்கே ஆரம்பிப்பது என்பதில்தான். இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், மூன்று முக்கியமான படிநிலைகளை நீங்கள் கடந்து வர வேண்டும். முதலாவது, நல்லதொரு பிரயோஜன மான இலக்கை நிர்ணயிப்பது; இரண்டாவது, அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது; மூன்றாவது, அந்த லட்சியத்தை நோக்கி பயணிப்பதில் இருக்கும் ஆரம்பநிலை தடைகளைத் தாண்டுவது (Threshold). இந்த மூன்று படிநிலைகளையும் சிறப்பாகச் செய்தால், உங்களுடைய லட்சியப் பயணமானது ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்’’ என்று சொல்லும் ஆசிரியர், இந்த மூன்று படிநிலைகளைப் பற்றியும் விளக்கமாகப் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லியிருக்கிறார்.

இலக்கு எப்படி இருக்க வேண்டும்?

மிகவும் பிரயோஜனமான இலக்கு என்பது உங்கள் நலனையும் உலகத்தின் நலனையும் இணைப்பதாக இருக்க வேண்டும். அது அதிமுக்கியமானதாகவும், நினைத்தாலே சிலிர்ப்பூட்டுவதாகவும், அடைந்தேயாக வேண்டும் என்ற வேட்கையைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அந்த லட்சியமானது, அதை நோக்கிய பயணம் என்பது மதிப்புமிக்க ஒன்று என்ற எண்ணத்தை நமக்கு முழுவதுமாகத் தருவதாக இருக்க வேண்டும். இந்தப் பயணத்தில் வெற்றியடைய எவற்றையெல்லாம் இழக்க வேண்டும் என்பதை யும் தெளிவாக நீங்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்படி தெரிந்துகொண்டால் மட்டுமே பயணத்தை செய்வதற்கான மனஉறுதி நம்மிடையே உருவாகும்.

கொஞ்சம் முட்டாள்தனமாகச் செயல்பட்டால் முன்னேறலாம்... சாதிக்கலாம்..!

மோசமான படிநிலைகள் நம்மை வெறுப்படைய வைக்கும்...

‘அங்கே சுற்றி இங்கே சுற்றி படிநிலைகள் (Process) பற்றித்தானே பேசுகிறீர்கள். எங்களுக்கு இந்த மாதிரி படிநிலைகள் என்றாலே அலர்ஜியாயிற்றே’ என்கிறீர்களா?

மோசமான படிநிலைகளே நமக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கும். படிநிலைகள் மிகவும் கடுமையானதாக (அதிக அளவிலான சட்டதிட்டங்கள் அதிகம் கொண்டவையாக) இருந்தால், அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதிலேயே நம்முடைய கவனம் இருக்கும். அதே சமயத்தில், ஒரு நல்ல படிநிலை என்பது நல்ல விஷயங்கள் பலவற்றைக் கொண்டதாக இருக்கும். அதே போல, அந்தப் படிநிலையானது இலகுவான தாக (குறைந்தபட்ச சட்டதிட்டங்கள் கொண்டவையாக) இருக்கும் பட்சத்தில் இது நமக்கானது என்றே நாம் நினைக்க ஆரம்பிப்போம்’’ என்று சொல்லும் ஆசிரியர், இந்தப் படிநிலையை நீங்கள் அப்படியே எடுத்துக்கொண்டு செயல் படுகிற பல்வேறு நபர்கள் மத்தியில் சோதனை செய்து அதன் பின்னரே சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

எங்கே ஆரம்பிப்பது என்கிற தயக்கம்..?

“இலக்கை நிர்ணயித்தாயிற்று. திட்டங்களும் கனவுகளும் ஏராளம். ஆனால், எங்கே ஆரம்பிப்பது என்பதுதான் எனக்கு புரியவே மாட்டேன் என்கிறது என்றே பலரும் கூறுகின்றனர். இதற்கான வழி என்ன?

உங்களுடைய கடந்த கால நடவடிக்கைகளை நீங்கள் அலசிப் பாருங்கள். எங்கே எல்லாம் நீங்கள் தயக்கம் கொள்கிறீர்கள் என்பதைக் கண்டறிய முயலுங்கள். தயக்கம் கொள்ள ஆரம்பிக்கிற இடத்தில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. இந்தவித தயக்கம்கொள்ளும் சூழல்களே நீங்களே உங்களுடைய லட்சியத் துக்கு எதிராக முட்டுக்கட்டையைத் தூக்கிப்போடும் தருணங் களாக உருவாகின்றன.

இந்தத் தயக்கம் நாள்பட சரியாகிவிடும் என்று நாம் நினைத்துக்கொண்டு நம்மை நாமே சமாதானம் செய்துகொள் வோம். அது தவறு. சரியாகிவிடும் என்பது ஒரு நம்பிக்கைதானே (hope) தவிர, தயக்கத்தைப் போக்கும் மருந்தாகாது. நமக்குத் தேவை தீர்வு. அதனால், தயக்கம் எதனால் வருகிறது என்பதை ஆராயுங்கள். உங்களுடைய லட்சியம் உருப்படியானது இல்லை என்ற உள்ளுணர்வோ, நிலைப்பாடோ உங்களுக்குள் இருந்து அதனால் தயக்கம் உருவாகிறதா? சரியான லட்சியம் என்பதை நீங்கள் மறுபடி மறுபடி உறுதி செய்து கொண்டீர்கள் எனில், ஏன் அதில் தயக்கம் வருகிறது, எப்படி அதில் ஈடுபாட்டுடன் செயல்படுவது, இதற்கான விடை என்ன, சரியான லட்சியத்தை நோக்கிய பயணத்தை செய்யாது போனால் என்னென்ன சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து சிந்தியுங்கள். அந்த சிந்தனைக்குப் பின் உங்களிடம் இருக்கும் தயக்கம் தானாகவே வெளியேறிவிடும்’’ என்கிறார் ஆசிரியர்.

முட்டாள்தனமான செயல் பாடுகள் தேவை...

“பெரும் சாதனைகளைச் செய்ய கொஞ்சம் முட்டாள் தனமான செயல்பாடுகள் தேவை” என்கிறார் ஆசிரியர். “உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் நீங்கள் முன்னேறும்போது உங்களை நீங்களே பாராட்டிக்கொள் வதும், முன்னேற்றம் இல்லாதபோது உங்களை நீங்களே தண்டித்துக் கொள்வதும் அவசியம். இது கொஞ்சம் வித்தியாசமான ஐடியாவாக இருந்தாலுமே இது நிச்சயம் உங்களுக்கு உதவவே செய்யும்” என்று சொல்லும் ஆசிரியர், எப்படிப்பட்ட பாராட்டுகள் மற்றும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்த விளக்கங் களையும் விரிவாகக் கூறியுள்ளார்.

லட்சியத்தை நோக்கிய பயணம் என்பதை ஆரம்பிக் கும்போது லட்சியம் மட்டுமே மனதில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், இதற்கு உதார ண மாக ஒன்றைச் சொல்கிறார்.

‘‘இரண்டு மீன்குஞ்சுகள் தண்ணீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த பெரிய மீன் ஒன்று, ‘என்ன, தண்ணீர் எப்படி இருக்கிறது’ என்று கேட்டுவிட்டுப் போனதாம். கொஞ்சம் தூரம் சென்ற பின் மீன்குஞ்சுளில் ஒன்று மற்றொன்றிடம், ‘என்ன கேள்வி இது’ என்று கேட்டதாம்.

இதிலிருந்து என்ன தெரி கிறது? அந்த மீன்குஞ்சுகளுக்கு நீந்தத் தெரிகிறதே தவிர, தண்ணீர் என்ற ஒன்றே அவற்றுக்குப் புலப்பட வில்லை என்பதுதானே! அதே போல்தான். லட்சியம் என்பதுதான் நமக்குத் தெரிய வேண்டுமே தவிர, அதை அடையும் பயணத்தில் இருக்கும் சிரமங்கள் நமக்கு புலப்படவே கூடாது” என்கிறார்.

“லட்சியத்தை நோக்கிய இந்தப் பயணத்தை நாம் முன்பின் செய்தது இல்லை. எனவே, எல்லாமே புதிதாக இருக்கும். இதனாலேயே இந்தப் பயணத்தை ஆரம்பிக்க நமக்கு தயக்கம் இருக்கும். ஆரம்பித்தாலுமே அதைத் தொடர மறுப்போம் (False Start எனும் பொய்யான ஆரம்பித்தல்கள் பலவும் இருக்கும்). இதனாலேயே இந்தப் பயணத்தை ஆரம்பித்தவுடன் நாம் எதிர்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச இடைஞ்சல்களையும் இன்னல்களையும் கண்டறிந்து அவை அனைத்தையுமே ஒரே மூச்சாக தாண்டிவிட வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

மூன்று கொள்கைகள்...

இதற்காக மூன்று கொள்கைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார் ஆசிரியர். ‘‘சின்னச் சின்ன அடிகளாக எடுத்து வைத்தல், நம்முடைய தலைசிறந்த திறமைகள் அனைத்தையும் நினைவில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தனியாக பயணிக் காமல் துணை ஒருவருடன் பயணித்தல் என்பவையே அந்த மூன்று கொள்கைகள்’’ என்று சொல்லும் ஆசிரியர், இவை குறித்தும் விளக்கமாகக் கூறியுள்ளார்.

‘‘சரியான இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்ல முயல்வதன் மூலம் ஒரு தேவதையுடன் மல்யுத்தம் நடத்தத் திட்டமிடுகிறோம். தேவதையை வெல்ல முடியாது என்றாலுமே, நாம் ஈடுபடும் அந்த மல்யுத்தமே நமக்கு நன்மைகள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதாக இருக்கிறது. இந்த யுத்தத்தில் நாம் முழுமூச்சாக இறங்கும்போது நம் முழுத் திறனையும் உபயோகிக்கவே முயல்கிறோம். அதுவே நமக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கிறது’’ என்று சொல்லி இந்தப் புத்தகத்தை முடிக்கிறார்.

எந்த ஓர் இலக்கையும் நோக்கிப் பயணிப்பதில் முதல் அடியை எடுத்து வைக்க நாம் தயங்கவே செய்கிறோம். அந்தத் தயக்கத்தை உடைத் தெரியும் உபாயங்கள் பலவற்றையும் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!