பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

புதிய வேலை... புதிய அலுவலகம்... சமாளித்து மீளும் சக்சஸ் வழிமுறைகள்!

புதிய வேலை...
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய வேலை...

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

புதியதாக ஒரு வேலைக்குச் செல்வது நம்மைக் கொஞ்சம் அழுத்தத்துக்குள் மூழ்கடிக்கிற விஷயமே. புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும், நிறைய புதிய விஷயங் களைத் தெரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள வேண்டும் என்பதுடன், நம் பயோடேட்டாவில் நாம் சொல்லியிருக்கும் பொய்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப நாம் நடந்துகொள்ள வேண்டும்.

புத்தகத்தின் பெயர்: I Hope This 
Email Finds You Never
ஆசிரியர்: Ken Kupchik, Emily Ann Hill 
பதிப்பகம்:‎ HarperCollins Leadership
புத்தகத்தின் பெயர்: I Hope This Email Finds You Never ஆசிரியர்: Ken Kupchik, Emily Ann Hill பதிப்பகம்:‎ HarperCollins Leadership

கடுமையான நாள்கள்...

படிப்பை முடித்துவிட்டு முதன்முதலாக வேலைக்குச் செல்லும் நபராக இருந்தாலும் சரி, ஏற்கெனவே வேலையில் இருந்த பெரும் அனுபவத்துடன் புதியதாக ஒரு நிறுவனத்துக்கு வேலை மாறிச் சென்றாலும் சரி, முதல் சில நாள்கள் கொஞ்சம் கடுமையானதாகத்தான் இருக்கும். ஏதும் பெரிய தவறுகளைச் செய்து விடக் கூடாது என்கிற எண்ணமே நம்மிடம் மேலோங்கி இருக்கும். நிறுவனங்களும் தங்களுடைய செயல் பாட்டைப் பற்றி புதிய பணியாளர்களுக்குப் போதனை செய்ய ஆரம்பத்தில் அறிமுகப் பயிலரங்குகளை நடத்துகின்றன. இதன் மூலம் சக பணியாளர்களைத் தெரிந்துகொள்ளவும், நிறுவனத்துடன் செய்துகொள்கிற ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்ளவும், எதனால் அந்த நிறுவனம் இயங்குகிறது மற்றும் எவை அந்த நிறுவனம் இயங்கத் தடையாக இருக்கிறது என்பதைப் புதிய பணியாளர்கள் ஓரளவுக்குக் கிரகித்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலும், புதிதாகப் பணிக்குச் சேருகிறவர்கள் இந்த ஆரம்ப நாள்களைப் பற்றியே பெரிய அளவில் கவலைப்படுவார்கள். அது தேவையற்ற ஒன்றாகும். ஏனெனில், இந்த ஆரம்பப் பயிலரங்குகள் முடிவடைந்தபின் நிஜமான களத்தில் இதைவிட பெரிய அளவி லான சிக்கல்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். எனவே, ஆரம்ப நாள்கள் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.

இதனால் நீங்கள் ஆரம்ப நாள்களைப் பற்றி ரொம்பவும் கவலைப் படாமல் குறைந்தபட்சமாக ‘இந்த ஆளை நாளடைவில் நம்முடைய நிறுவனத்துக்கு ஏற்றாற்போல் மோல்ட் செய்துகொள்ள முடியும்’ என்று நிறுவனம் உங்களைக் குறித்து நம்பும் அளவுக்கு நடந்து கொண்டால் அதுவே போதுமானதாக இருக்கும் என்று சொல்லி ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புதிய வேலை... புதிய அலுவலகம்...
சமாளித்து மீளும் சக்சஸ் வழிமுறைகள்!

புதிய மனிதராகக் காட்டுங்கள்...

“ரொம்பவும் பிரமாதமான ஆரம்பம் உங்களுக்கு நிறுவனத்துக்குள் இருந்துவிட்டால் பின்னாளில் எக்கச்சக்கமான வேலையும் பார்க்க வேண்டியிருக்கும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதன்முதலாக உடன்பணிபுரிபவர்களை அறிமுகம் செய்யும் வைபவம் நடைபெறும். நேரிடையாக இருந்தாலும் சரி, கோவிட் 19-க்குப் பிந்தையை ரிமோட் வொர்க்கிங்கில் ஆன்லைனாக இருந்தாலும் சரி, இது ஒரு வைபவமே.

நம்மைப் பற்றி பொய்யான பெருமையைப் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக நமக்கு அது இருக்கும். இந்தச் சமயத்தில், நல்ல தொரு இம்ப்ரெஷனை உருவாக்கினால், நல்ல சில நட்புகள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், மோசமான முதல் இம்ப்ரஷனை உருவாக்கிவிட்டால் பலரிடம் நட்புக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இதனாலேயே உங்களுடைய முகத்தில் தலைசிறந்த, உங்களுடைய பொய்யான சிரிப்பை எப்போதும் தவழவிட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒரிஜினலைப் போலல்லாமல் புத்தம் புது நபராக உங்களை காட்டிக்கொள்ளுங்கள்” என்கிறார் ஆசிரியர்.

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்...

“புரொஃபஷனலாக ஆடை அணிந்துகொள்வது, சந்திக்கும் நபர்களுடைய பெயரை சரியாக நினைவில் வைத்துக்கொள்வது மற்றும் உச்சரிப்பது, மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்பது என்ற மூன்று விஷயங்களுமே உங்களை நல்லவராகக் காட்டிக்கொள்வதில் உங்களுக்குப் பேருதவி செய்யும்.

கண்ணைப் பார்த்துப் பேசுதல், உங்கள் காலை நீங்களே வாரிக்கொள்ளும் ரீதியிலான ஒரு சில ஜோக்குகளை அடிக்காமல் இருப்பது, கேலியான விஷயங்களைப் பேசாமல் இருப்பது, மற்றவர்கள் கொஞ்சம் கலாய்த்தாலும் அதைப் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்று வெளிக்காட்டிக்கொள்ளுதல், நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் முரண்பாடான கேள்வியைக் கேட்காமல் இருத்தல், நாளின் இறுதியில் ஒரு சிறிய நன்றி தெரிவிக்கும் மெயிலை அனுப்புதல் போன்றவை உங்களுக்கு இந்த விஷயத்தில் பேருதவியாக இருக்கும்.

புன்னகை, பொய் மற்றும் மிக மிகக் குறுகிய கால சந்திப்பு என்ற மூன்று விஷயங்களே பெஸ்ட் ஃபர்ஸ்ட் இம்ப்ரஷனை கொடுக்கும். ரொம்பவும் உங்களைப் பற்றிய விஷயங்களை ஷேர் செய்யாதீர்கள். இது உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல, பர்சனல் கேள்விகளை முழுமையாகத் தவிருங்கள். ஒருவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது இடைமறித்து பேசவே பேசாதீர்கள். அதே போல, எதிரே நிற்பவரை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளாதீர்கள்.

ஏனென்றால், பின்னொருநாள் அவரைக் கழுவி ஊற்ற வேண்டியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருங்கச் சொன்னால், ஒரு புரொஃபஷனலாக அணுகுவது என்பது பெரிய விஷயமாக இல்லாத நபராக உங்களைக் காட்டிக்கொள்வதே சிறந்த நடைமுறையாக இருக்கும்.

சுருங்கச்சொன்னால் ஒரு புரொஃபஷனலாக, மனசாட்சியுள்ள, அணுகுவதற்கு பெரிய விஷயமாக இல்லாத நபராக உங்களை காட்டிக்கொள்வதே சிறந்த நடைமுறையாக இருக்கும்.

என்னதான் கவனமாக இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி உங்கள் அறிமுகம் என்பது கொஞ்சம் சொதப்பலாக நடந்துவிட்டாலுமே பெரியதாக அது குறித்து கவலைப் படாதீர்கள்” என்கிறார் ஆசிரியர்.

நிஜமான அர்த்தங்கள்...

மேலதிகாரிகள் பேசும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும் அவற்றின் நிஜமான அர்த்தங்கள் என்பது குறித்து தனியாக ஓர் அத்தியாயம் தரப்பட்டுள்ளது.

உதாரணமாக, மேலதிகாரி, ‘நாம் அனைவரும் இந்தக் காரியத்தில் ஒன்றாக இணைந்து செயல்படப் போகிறோம்’ என்று சொன்னால், ‘நீங்கள் சொந்த முயற்சியில் இந்தக் காரியத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும்’ என்று அர்த்தம். ‘உங்களுடைய பாதுகாப்பே எங்களுடைய முதல் விருப்பம்’ எனில், ‘சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் தவறாமல் செய்வோம்’ என்று அர்த்தம். ‘வொர்க்-லைஃப் பேலன்ஸ் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது’ எனில், ‘நீங்கள் இரவு பகல் என எல்லா நாளும் உழைத்தே ஆக வேண்டும்’ என்று அர்த்தம்.

‘இது உங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு’ என்று சொன்னால், ‘தற்போதைக்கு இந்த வேலையைச் செய்ய வேறு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்’ என்று அர்த்தம். ‘இந்த முடிவு ஒன்றும் சுலபமானது இல்லை’ எனில், ‘இதுதான் நான் எடுத்ததிலேயே சுலபமான முடிவு என்று அர்த்தம்’ என்கிறார் ஆசிரியர்.

எவையெல்லாம் சரி..?

ஆரம்பம் எல்லாம் நன்றாக போய்விட்டது. எத்தனை நாள்கள் நீங்கள் புதிய நபர் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு திரிய முடியும்? எந்த ஒரு நிறுவனமும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நபரை முதல் சில நாள்களி லேயே பணியைத் தொடங்க வேண்டும் என்று நினைப் பதில்லை. ஆரம்பத்தில் நீங்கள் மிகவும் சிரத்தையாக செயல்பட்டு வேலையைத் தொடங்கிவிட்டால் உங்கள் மீது அனைவரின் கவனமும் விழுந்துவிடும். இதற்காக ‘நான் புதிய ஆள். அதனால் பொறுப்பே எடுக்க மாட் டேன்’ என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுத்தால், உங்கள் மீது அனைவரின் கவனமும் விழுந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த நபர் என்பதால், எவையெல்லாம் மன்னிக்கப் படும் மற்றும் எவையெல்லாம் மன்னிக்கப்படாது என்கிற பட்டியலையும் ஆசிரியர் ஓர் அத்தியாயத்தில் தந்துள்ளார்.

பழைய ஆளாக மாறுவது எப்போது..?

“புதிதாக வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்தில் எத்தனை நாள்தான் நடிப்பது, எப்போது பழைய ஆளாக மாறுவது என்று கேட்கிறீர் களா? உங்கள் பெயரை எல்லோரும் நினைவில் வைத்திருக்கும்போது, உங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை நீங்கள் உருவாக்கிக்கொண்ட பிறகு, நீங்கள் தவறு செய்யும்போது வேலை பார்ப்பவர்கள் கோபத்தை நேரடியாக வெளிக்காட்டும்போது, புதியதாகச் சேர்ந்த ஒருவரைப் பயிற்றுவிக்கும்படி உங்களிடம் சொல்லும்போது எனப் பல்வேறு விஷயங்களே நீங்கள் பழைய ஆளாகிவிட்டீர்கள் என்று காட்டும்” என்கிறார் ஆசிரியர்.

பல்வேறு அலுவலக விஷயங்கள்...

கைகுலுக்கலில் ஆரம்பித்து, காபி குடிப்பது, மன்னிப்பு கோருவது, அலுவலகம் சார்ந்த சோஷியல் மீட்டிங்குகளில் எப்படி நடந்துகொள்வது, பணியிட நண்பர் மற்றும் எதிரிகளை எப்படிக் கண்டறிவது, பல்வேறு விதமான சகபணியாளர்களையும் அவர்கள் குணத்துக்கேற்ப கையாளுவது, அவர்களுக்கென்று ஓர் எல்லையை வகுத்துக்கொள்வது, அவர்களுடைய சோஷியல் மீடியா ரிக்வெஸ்ட்டுகளைக் கையாளுவது, மேனேஜர் என்ற ஆளுமையுடன் சிறப்பான உறவைப் பேணுவது, ரிமோட் வொர்க்கிங்கை எப்படி திறமை யாகச் செய்வது, மீட்டிங்குகளில் எப்படி சிறப்பாகப் பங்கேற்பது என்பது போன்ற பல்வேறு விதமான அலுவல் சார்ந்த நுணுக்கங்களையும் தனித்தனி அத்தியாயம் வழியாக விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுவது எப்படி என்பதுதான் இன்றைக்குப் பலரது பிரசனை. புதிதாக வேலைக்குச் செல் பவர்கள் ஆரம்ப காலத் தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மிகவும் விளக்கமாகவும், எளிய நடையிலும், மிகச் சிறந்த நகைச்சுவையுடனும் சொல்கிற இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து அந்தக் கருத்துக்களைப் பின் பற்றி பயன் பெறலாம்.