Published:Updated:

முடிவு எடுப்பதில் தயக்கமா..? அச்சம் தவிர்... உடனே குதி!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

தைரியமிக்க இளைஞர்களே, கேரியரில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும், புதிதாகத் தொழில் தொடங்க வேண்டும் அல்லது இப்போது வாழும் வாழ்க்கையைவிட சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறீர்களா? அதற்கான முதல் அடியை எடுத்து வைக்க நினைக்காதீர்கள். எதைச் செய்ய நினைக்கிறீர்களோ, அதில் உடனடியாகக் குதித்துவிடுங்கள் என்று சொல்லி ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
Jump: Dare to Do What Scares You in Business and Life
ஆசிரியர்:
Kim Perell
பதிப்பாளர்:
HarperCollins 
Leadership
புத்தகத்தின் பெயர்: Jump: Dare to Do What Scares You in Business and Life ஆசிரியர்: Kim Perell பதிப்பாளர்: HarperCollins Leadership

‘என்ன இது, முன்பின் தெரியாத விஷயத்தில் குதிக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ‘ரொம்ப பயமா இருக்கிறதே!’ என்றுகூட நீங்கள் சொல்லலாம். ‘‘தலைகீழாக மாற்றத் துணியும் எந்த முயற்சியும் நிச்சயம் பயமுறுத்துவதாகத்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுதான் உண்மையும்கூட. ஆனால், அந்த பயத்தையும் தாண்டி உங்களுடைய தைரிய உணர்வு (Gut) அதில் ஈடுபடச்சொல்கிறது எனில், அந்தப் புதிய காரியத்தில் கண்ணுக்குப் புலப்படாத மிகப் பெரிய வெற்றி உங்களுக்கு காத்திருக்கிறது என்று அர்த்தம். இது நிச்சயம் நடக்கும் என்று பந்தயம்கூட கட்டலாம். உங்களுடைய உள்ளுணர்வு, ‘இதுதான் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க சரியான தருணம் என்று சொல்கிறது என்றால், அதைச் செய்யுங்கள்’’ என்று சொல்கிறது இந்த வாரம் பார்க்க இருக்கும் புத்தகம் (Jump: Dare to Do What Scares You in Business and Life).

வாழ்க்கையை மாற்றியமைக்கும்...

வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி அமைக்கும் முடிவுகளை எடுக்கத் தயங்கு கிறீர்களா? பின்வரும் கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ‘நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு எப்படி வந்தீர்கள், இப்போதுள்ள இந்த நிலைக்கு நீங்கள் வர முடிவெடுத்தபோது, உங்கள் கை, கால்கள் நடுங்கி இருக்குமே, நெஞ்சு படபடத்து, உள்ளங்கை வேர்த்திருக்குமே! அப்போதெல்லாம் துணிந்து முடிவெடுத்த நீங்கள், இப்போது ஏன் எடுக்கத் தயங்குகிறீர்கள், அப்போதெல்லாம் முடிவெடுத்து காரியத்தில் இறங்கி ஜெயித்தீர்களே, இப்போது என்ன தயக்கம், குளத்தில் குதிக்காமல் நீச்சல் போட்டியில் வீரனாகிவிட முடியுமா?

முடிவு எடுப்பதில் தயக்கமா..? அச்சம் தவிர்... உடனே குதி!

மூன்று சூழ்நிலைகள்...

எப்போதெல்லாம் மனிதர்கள் பெரிய அளவிலான காரியங்களில் குதிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவை பின்வரும் மூன்று சூழ்நிலைகளாகவே இருக்கும். 1. வேறு வழியே இல்லை என்னும் சூழ்நிலையில். 2. ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாக உணரும்போது. 3. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நகர முடியாமல் (முன்னேற்றம் எதுவுமின்றி) சிக்கிக்கொண்ட சூழ்நிலையில்.

முதலாவது, வேறு வழியே இல்லை என்னும் சூழலில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள குதிப்போம். இதுபோன்ற சூழ்நிலையில் மாற்றம் என்பது செய்தே ஆக வேண்டிய ஒரே ஒரு விஷயமாக நம்முன்னே இருக்கும். வேறெதையும் செய்வதற்கு வாய்ப்பே இருக்காது. உதாரணமாக, வேலையை இழந்த சூழல், திவாலான நிலை, பெரிய இழப்பு போன்ற வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வு... இது போன்ற சூழலில் இதுவா, அதுவா எனத் தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் இருக்காது. எமர்ஜென்சி எக்ஸிட் வழியாகக் குதிப்பது போன்ற சூழல். குதித்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் யாரும் நம்மைத் தள்ளி விட வேண்டியது இல்லை. நாமாகவே குதித்துவிடுவோம்.

இரண்டாவது சூழலில், (வாய்ப்பைக் கண்டறிந்து குதிப்பது) நாம் ஏற்கெனவே செளகரியமான நிலையில் சந்தோஷமாக இருப்போம். வாழ்க்கையை மாற்றி எதை யாவது சாதிக்க வேண்டும் மற்றும் அதற்கான முயற்சிகளை துணிந்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் வசதி களுடன் இருப்போம். நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற துணிச்சலுடன் இந்தச் சூழ்நிலையில் நாம் புதிய காரியத்தில் குதிப்போம். இந்தச் சூழ்நிலையில் உள்ளது உள்ளபடி என்று பார்க்காமல், எதிர்காலத்தை சிறப்பாகக் கணிக்க முடிவதால் நாம் குதிப்போம்.

மூன்றாவது சூழலில், முன்னேற்றம் இல்லாத, போரடிக்கிற, ‘என் தகுதிக்கு நான் இருக்கும் நிலைமை சற்றும் சம்பந்தம் இல்லையே’ என்று நினைக்கக் கூடிய நிலையில் இருப்போம். அதாவது, பல விதமான செளகரியம் இருக்கும். ஆனால், திறமைக்கேற்ற சவால்கள் இருக்காது. இந்தச் சூழ்நிலையில் ஏன் குதிக்காமல் இருக்கிறோம் எனில், தெரிந்த சூழலை விட்டு விட்டு, முன்பின் தெரியாத விஷயத்தில் ஏன் இறங்க வேண்டும் என்று நினைப்பதால் தான்.

இந்த மூன்று சூழ்நிலைகளிலும் வெவ்வேறு காரணங்களால் நாம் புதிய காரியங்களில் குதிப்போம் என்றாலும், என்ன காரணத்துக்காக நாம் புதிய காரியத்தில் குதிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கான நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் குதிக்கிறோம் என்பதுதான் விஷயமே!

ஆறு கேள்விகள்...

இந்த நம்பிக்கையைப் பெற ஆறு கேள்விகளை நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். 1. இந்தக் காரியத்தில் குதிப்பதால் மிகவும் மோசமான ஒரு நிலையில் என்ன நடக்கும். 2. இந்தக் காரியத்தில் நான் குதிப்பதாலும் அதனால்வரும் பின்விளைவுகளாலும் யாரெல் லாம் பாதிக்கப்படுவார்கள். 3. வேறு யாராவது இதுபோன்ற காரியத்தைச் செய்திருக்கிறார் களா. 4. என் திறமை மற்றும் அசாத்திய சக்திகள் என்னென்ன. 5. இந்தப் பாதையில் பயணிக்க நினைக்கும்போது முதல் மூன்று அடிகள் என்னென்ன என்பதை என்னால் ஓரளவு சரியாக யூகிக்க முடிகிறதா. 6. கணிக்க முடியாத சூழலில் பயணிக்க நான் தயாராக இருக்கிறேனா என்பவையே அந்த ஆறு கேள்விகள். இதற்கு அடுத்த படியாக, நல்லதொரு மாற்றுத் திட்டத்தையும் நீங்கள் கண்டு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியை.

இப்படிக் கேள்விகள் கேட்டு மாற்றுத் திட்டத்தையெல்லாம் கண்டுபிடித்த பின்னாலும் சுலபமாகக் காரியத்தில் குதித்து விட முடியுமா என்ன, பல்வேறு தயக்கங்களும் சாக்குபோக்கு களும் நம்மால் சொல்லப்படுமே! இந்தத் தயக்கங்களைப் போக்கவும், சாக்குபோக்குகளைச் சொல்லாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்?

‘நான் தோற்றுப் போய்விடுவேன் என்று பயமாக இருக்கிறது’, ‘இதைச் செய்ய எனக்கு நேரமில்லை’, ‘என்னிடம் இதற்குத் தேவையான பணம் இல்லை’, ‘எனக்கு இந்த விஷயத்தில் தேவையான அனுபவம் இல்லை’ என்பது போன்ற சாக்குப் போக்கு களே இதில் பெரும்பான்மையான வையாக இருக்கின்றன. இந்த சாக்கு போக்குகளைக் களைந்தால் தான் நமக்கு நம்பிக்கை என்பது பிறக்கும் என்கிறார் ஆசிரியை.

உள்ளுணர்வு மீதான நம்பிக்கை...

தோல்வி குறித்த பயம், நிலையற்ற தன்மைக்கு பயம், நிராகரிக்கப்படுதலுக்கு பயம், பெரிதாக சோபிக்க முடியாமல் போய்விட்டால் என்னாவது என்று பயம், இப்படி பெரிய ரிஸ்க் எடுத்து வெற்றி பெற்று என்ன சாதிக்கப்போகிறோம் என்கிற பயம் எனப் பல்வேறு பயங்களும் நம்மைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு குதிக்கவிடாமல் தடுக்கும். பிரச்னைக்குப் பழகிக்கொள்வதும், சங்கடமான சூழலே செளகரியம் என்று ஆக்கிக்கொள்வதும், அசெளகரியத்துக்கு உள்ளேயே நம்மை ஆழ்த்திக்கொள்வதும் எப்படி அதற்கான பயிற்சிகள் என்னென்ன என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.

உதாரணமாக, நிராகரிக்கப்படுவதைப் பழகிக்கொள்ள நீங்கள் சாமான் வாங்கும் ஒவ்வொரு கடையிலும் தள்ளுபடியைக் கேளுங்கள். அநேக கடைகள், ‘தள்ளுபடி இல்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டி ஒன்றும் தர முடியாது’ என்பார்கள். அப்போது, நிராகரிப்பு என்பது பழகிப்போகும் என்கிறார் ஆசிரியை. அதே போல், உங்களுடைய உள்ளுணர்வின்மீது நம்பிக்கையை வளர்க்க சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி நடந்து அந்த அனுபவத்தை வைத்து முன்னேறுங்கள் என்கிறார்.

இறுதியாக, நீங்கள் வெற்றி என்று நினைப்பது எது என்பதைத் தீர்மானமாக முடிவுசெய்துகொள்ளுங்கள். அப்படி முடிவு செய்தபின்னால், அதற்கான திட்டங்களைத் தீட்டி காரியத்தில் குதியுங்கள் என்று சொல்லும் ஆசிரியை, இந்த இரண்டையும் செய்வது எப்படி என்று விளக்கமாக இரண்டு அத்தியாயங்களில் கூறியுள்ளார். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு, உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான காரியத்தைச் செய்யுங்கள் என்று முடிகிறது இந்தப் புத்தகம்.

வாழ்க்கையின் பாதையை மாற்றி சாதிக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.