Published:Updated:

பல துறைகளில் ஈடுபட்டாலும் ஒரு துறையில் நிபுணர் ஆகலாம்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

பல துறைகளில் ஈடுபட்டாலும் ஒரு துறையில் நிபுணர் ஆகலாம்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

பல்வேறு விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் இருக்கும் ஒருவர் எதிலும் தலைசிறந்த நபராக இருக்க மாட்டார் என்கிற அர்த்தம் கொண்ட ‘Jack of all trades, master of none’ என்கிற சொலவடை ஒன்று ஆங்கிலத்தில் இருக்கிறது. இந்தக் கருத்துக்கு எதிராக, பல்வேறு விஷயங்களிலும் ஈடுபாடு கொண் டிருக்கும் அதில் ஏதாவது ஒரு விஷயத்தில் தலைசிறந்தவராக இருக்க முடியும் என்பதைக் கூறுகிற கிளிப்போர்ட் ஹட்சன் என்பவர் எழுதிய புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துகிறோம்.

ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி நிபுணராக முயல்பவரைக்காட்டிலும் பல்வேறு விஷயங்கலிலும் ஈடுபட முயல்பவரே இந்த நவீன உலகில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற மாற்றுக்கருத்தை ஆணித் தரமாக நச்செனச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: Master of None
 ஆசிரியர்: Clifford Hudson
பதிப்பகம்:‎ Harper Business
புத்தகத்தின் பெயர்: Master of None ஆசிரியர்: Clifford Hudson பதிப்பகம்:‎ Harper Business

ஏன் நிபுணராக வேண்டும்?

நம்மை மற்றவர்கள் ஒரு விஷயத்தில் நிபுணர் (எக்ஸ்பர்ட்) என்று அழைத்தால் அதில் மிகப் பெரிய மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் நமக்கு உண்டாகிறது. அதே சமயம், நமக்கு கிடைத்து உள்ள மிகவும் குறுகிய கால அளவிலான (ஒரே ஒரு முறை வாழும்) வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நாம் நிபுணராக மாற அந்த விஷயத்தில் நீண்ட காலம் நாம் ஈடுபட வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த நவீன உலகில் நாம் ஈடுபட விரும்பக்கூடிய விஷயங்கள் நிறையவே மாறியிருக்கிறது. அவற்றை எல்லாம் எப்படி/எப்போது இந்தப் பிறவியிலேயே முயற்சி செய்து பார்ப்பது? அதிலும் வேகமாக மாறிவருகிற இந்த உலகில் பல்வேறு விஷயங்களையும் முயற்சி செய்யவில்லை எனில், நீண்ட நாள் அடிப்படையில் நாம் தகுதி மற்றும் திறமையில் தேக்கநிலையை சந்தித்துவிடுவோம் இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

நிபுணத்துவம் நிரந்தரத்தைத் தருமா?

சரி, நாம் எதற்காக நிபுணராக விரும்புகிறோம்? ஒரு விஷயத்தில் நிபுணராகிவிட்டால், அது செளகரியமானதொரு வாழ்க்கைக்கு உத்தரவாதமாகிவிடும் என்று நினைப்பதால்தான். உதாரணமாக, ஒரு டாக்டராக இருந்து ஒரு குறிப்பிட்ட வகை அறுவை சிகிச்சையில் நிபுணராக இருந்துவிட்டால், அதன்பின் வாழ்க்கையை சுலபமாக ஓட்டிவிட முடியும். ஒரு வக்கீலாக இருந்து குறிப்பிட்ட சட்டத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்து நிபுணத்துவம் பெற்றுவிட்டால், அதன் பின்னால் வாழ்க்கை நிலையானதாகிவிடும் என நினைக்கிறோம். இந்த நினைப்பே ஒரு மாயைதான். ஆனால், உண்மை என்ன தெரியுமா?

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிங்கிள், திருமணமானவர், குழந்தைகளைப் பெற்றவர் (தாய்/தகப்பன்), வளர்ப்புப் பிராணிகளை விரும்பி வளர்ப்பவர், பணியில் இருப்பவர், ரிடையர் ஆனவர் என எந்தப் பருவத்தில் இருந்தாலும் உங்களுக்கு நிதர்சனமான உண்மை, வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சீஸன் உண்டு. எதுவும் நிரந்தரம் இல்லை; நிலையானதுமில்லை என்பதுதான். ஒரு விஷயத்துக்கு தரப்படும் முன்னுரிமைகள் (priorities) காலத்துக்கேற்ப மாறுபடும்; மனிதர்கள் மாறுவார்கள், புதிய கனவுகள் உருவாகும். தவிர்க்க முடியாத இந்த மாற்றங்களுக்கு மத்தியில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம். ஏனென்றால், மனிதர்களின் இயல்பே அது. ஆனால், மனிதர்கள் அவ்வளவு சீக்கிரமாக மாறிவிடுவதில்லை. ஒரு சில மாறுதல்களைச் செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை சற்று மாற்ற முயற்சி செய்யலாம்.

உதாரணமாக, நாள் முழுவதும் சேரில் உட்கார்ந்துகொண்டு வேலை செய்வதற்குப் பதில் ஒரு வேலை நாளில் அரை நாளைக்கு நின்றுகொண்டே வேலை பார்க்கலாம். ஏனென்றால், நாம் பணியிடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பொசிஷன் என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதே இல்லை. அதில் செய்யப்படும் சிறிய அளவிலான மாறுதல்கள் பெரிய அளவிலான பலனைத் தரவல்லது என்பதுதான் நிஜம். வேலை பார்க்கும் சூழல் அலுவலகமோ, வீடோ, ஒரு காபி ஷாப்போ என எங்கு அமர்ந்து வேலை பார்த்தாலுமே வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் என்பது மாறும்போது அது மிகப்பெரிய புத்துணர்ச்சியை நமக்குள் உருவாக்கும்.

அது மட்டுமல்ல, அன்றாடம் காலை வேளையில் அலுவலகத் தில் செய்யும் வேலையை மதியத்திலும், மதியத்தில் செய்யும் வேலையைக் காலையிலும் செய்து பாருங்கள். அதிலும் முன்னேற்றம் தெரியவே செய்யும். குறிப்பாக, மாற்றம் என்பதை நினைத்து பயம் கொள்ளவே கொள்ளாதீர்கள். அதிலும் சிறுசிறு மாற்றங்களை எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் அவ்வப்போது நிகழ்த்திப் பாருங்கள். இது போல் செய்து நீங்கள் கொண்டு வருகிற மாற்றங்கள் உங்களை ஒன்றை விட்டு மற்றொன்றில் கால்பதிக்கச் செய்து அதில் சிறந்த திறனுடன் செயல்படவும் வைத்துவிட வாய்ப்புள்ளது என்கிறார் ஆசிரியர்.

பல துறைகளில் ஈடுபட்டாலும் ஒரு துறையில் நிபுணர் ஆகலாம்!

வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?

வாய்ப்பு என்பதை நாமே கஷ்டப்பட்டு உருவாக்கி, அதன் பலனை அடைய வேண்டும் என்ற புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஓரளவுக்கே சரியான புரிதல் ஆகும். கஷ்டப்பட்டுக் கண்டறிந்து திறன் வளர்த்து வெற்றியை ருசிப்பது என்பதெல்லாம் சரிதான். இத்தகைய வெற்றியில் நமக்கு முழுமையான திருப்தியும், செயல்களில் முழுமையான கட்டுப்பாடும் நமக்கு இருக்கும். அதே சமயம், மற்றுமொரு வாய்ப்பும் நம்மை நோக்கி அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும். நீங்கள் பாட்டுக்கு செய்யும் விஷயங்களைச் செய்துகொண்டே இருப்பீர்கள். எங்கிருந்தோ ஒரு வாய்ப்பு உருவாகி (யாராலோ உருவாக்கப்பட்டு/பயன்படுத்தத் தெரியாமல்/வாய்ப்பாகவே அவரால் கருதப் படாமல்) அது உங்களை நோக்கி நகர்ந்து வந்து உங்கள் கதவைத் தட்டும். அந்த வாய்ப்பை உணர்ந்து அதில் தேவையான அளவு கவனம் செலுத்தி முழுவெற்றி பெறத் தேவையானவற்றைத் திட்டமிட்டு செய்யும் திறனை நீங்கள் வளர்த்துக்கொண்டீர்கள் எனில், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும். அவற்றின் மூலம் நீங்கள் பெறும் அனுகூலங்கள் இரட்டிப்பாக இருக்கும். ஒன்று, நீங்களாக உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு; மற்றொன்று, உங்களை நோக்கி வருகிற வாய்ப்புகள் என உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை யும் பன்மடங்காக உயரும்.

என்ன, யாரோ உருவாக்கிய வாய்ப்பை நாம் பயன்படுத்து வதா? நமக்கான வாய்ப்பு களை நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத் தவர்கள் உருவாக்கிய வாய்ப்பை உபயோகித்தால், நாம் சந்தர்ப்பவாதியாக ஆகி விடமட்டோமா என்பீர்கள்.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும், வாய்ப்பு களைக் கண்டறிந்து உபயோகித்துக் கொள்வதற் கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டாம் வகையை இந்த உலகம் காலம் காலமாக கொஞ்சம் எதிர்மறையாகவே பார்க்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

அடுத்தவர் உருவாக்கிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்...

சுரண்டல் பேர்வழி, கணக்கு பார்த்து விதைக்கும் பேர்வழி, தன்னுடைய லாபத்துக்கே அலையும் பேர்வழி என்ற பெயரை எல்லாம் உலகம் உங்களுக்கு சூட்டி மகிழ்வதில் முனைப் பாக இருப்பார்கள். இது போன்ற ஆட்களுக்குப் பஞ்சமே இருக்காது. எனவே, வாய்ப்பு கிடைத்தால் அடுத்தவர்கள் உருவாக்கிய வாய்ப்பை நீங்கள் உங்களுக் கென பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், தனிமனித னாக ஒருவர் வாய்ப்பைக் கஷ்டப்பட்டு உருவாக்கிக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று. அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும். அதே சமயம், உலகில் உள்ள ஏனைய மனிதர்கள் அனை வரும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கவே செய்வார்கள். அதைக் கண்டறிந்து உங்கள் வெற்றிக்கு உபயோகித்துக் கொள்ளத் தயங்காதீர்கள். இப்படிப்பட்ட வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் எனில், உங்களுக்கு பல்வேறு விஷயங்களும் (Jack of all trades) தெரிந்திருக்க வேண்டும் இல்லையா?

ஒரு விஷயத்தில் வெற்றி பெற அதில் கவனம் குவித்தல் என்பது மிக மிக அவசியமான ஒன்று. அதே சமயத்தில், இன்னோவேஷன் செய் வதற்கு அந்த அளவுக்கு அதிகமான கவனம் தேவை இல்லை. ஏனென்றால், மிகச் சிறந்த புதியன கண்டுபிடிப் பாளர்கள் (Innovators) எல்லோருமே தற்சமயம் நடக்கும் நிகழ்வில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில்லை. எதிர்காலம் குறித்த சிந்தனையாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

வாழ்க்கையில் தேங்கிப் போக காரணம்...

வாழ்க்கையின் பல விஷயங்களில் நாம் தேங்கிப் போய் நின்றுவிடுவதற்குக் காரணம் நாம் நம்முடைய முழுமையான கவனத்தை அதில் செலுத்திவிடுவது தான். இந்த வித முழுமையான கவனத்தை நாம் செலுத்தக் காரணம், நம்முடைய வசதி மற்றும் சுகத்துக்காகதான். செய்வதைத் தெளிவாகப் புரிந்து கவனத்துடன் செய்தால், நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்ற சூழல் உருவாகி, அது நமக்கு பாதுகாப்பை அளிக்கும் என்கிற எண்ணத்தில் இது உங்களை ஸ்பெஷலிஸ்ட் ஆக்குமா எனில், வாய்ப்பு உள்ளது என்ற பதில் கிடைக்குமே தவிர, உறுதியாக ஆக்கும் என்று கூறமுடியாது என்கிறார் ஆசிரியர்.

வாழ்க்கையில் வெற்றி பெற...

‘‘வாழ்க்கையில் வெற்றி பெற ஒன்றைத் தேர்தெடுத்து அதில் தொடர்ந்து கடினமான கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்பது நிஜம் இல்லை. வாழ்வும் வேலையும் செழிக்க முற்றிலும் கணிக்க இயலாத (Unpredictable) நடவடிக்கையே பெரிதும் உதவும். இதை நான் என் வாழ்வில் முழுமையாக உணர்ந்து வாழ்ந்து பார்த்து வெற்றியும் பெற்றுள்ளேன். நீங்களும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள என்னுடைய மற்றும் ஏனைய வெற்றியாளர்களின் கதைகளின் மூலம் உணர்ந்துகொண்டு பல்வேறு விஷயங்களி லும் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுங்கள்’’ என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

நிலையற்ற இந்த உலகில் மாற்றம் என்பது மட்டுமே நிலையானது என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைத் தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.