Published:Updated:

உங்கள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் தத்துவங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

உங்கள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் தத்துவங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தத்துவவியலைக் கற்றுத் தரும் பேராசிரியரான ஜானி தாம்சன் என்பவர் எழுதிய ‘மினி பிலாசபி’. அழகான பல தத்துவங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: Mini Philosophy
 ஆசிரியர்: Jonny Thomson
பதிப்பகம்:‎ Wildfire
புத்தகத்தின் பெயர்: Mini Philosophy ஆசிரியர்: Jonny Thomson பதிப்பகம்:‎ Wildfire

‘‘தத்துவம் என்றாலே அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்மில் பெரும்பாலான வர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால், தத்துவம் குறித்து படிக்கலாம் என நினைத்தால் அதில் இருக்கும் பண்டைய கால கிரேக்க வார்த்தைகளின் கடினத்தன்மை உடனடியாக நம்மை அந்நியப்படுத்திவிடும். (உதாரணமாக, fallacious என்கிற வார்த்தை. அந்த இடத்தில் false என்ற வார்த்தையே போதும்!) தத்துவங்கள் என்பவை இந்தவித அந்நியத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டியதில்லை. அந்த உண்மையைச் சொல்லவே இந்தப் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன்’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

நீதி நெறிமுறைகள்படி நடப்பது...

நீதிநெறிமுறை (Ethics – எத்திக்ஸ் / எத்திக்கல்) என்ற விஷயத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். உங்கள் வாழ்நாள்களில் அனைத்து தினங்களிலுமே நீங்கள் நீதி நெறிமுறையின் அடிப்படை யில் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளைக் கடந்து செல்வீர்கள். நீங்கள் மற்ற மனிதர்களை பாதிக்கும்படி செய்யும் அனைத்து விஷயங்களிலும் நீதி நெறிமுறையின்படி இருக்க வேண்டியிருக்கும்.

பிளாட்டோ என்னும் அறிஞர் மந்திரசக்தி கொண்ட மோதிரம் குறித்த சிந்தனை, கி.மு 375-ம் ஆண்டில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்த மோதிரம் கையில் கிடைத்த ஒரு மனிதன் உடனடியாக அதைத் தன்னுடைய சுயநலத்துக்காகத்தான் உபயோகிப்பான். இந்த மாதிரியான ஒரு சக்தி கிடைத்த ஒருவன் ஒருக்காலும் அதை சொந்த லாபத்துக்கு பயன்படுத்த மாட்டான் என்று நீங்கள் நினைத்தீர்கள் எனில், நீங்கள் ஒரு முட்டாளேயன்றி வேறில்லை’ என்றார் பிளாட்டோவின் சகோதரரான க்ளாவ்கான்.

இது போன்ற சக்தி உங்கள் நண்பருக்குக் கிடைத்தால் என்ன செய்வார் என்று கேட்டுப் பாருங்கள். அவ்வளவு ஏன், உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இந்தக் கேள்விக்கான விடை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மனதார நீங்கள் திருடுவதற்கோ, மற்றவர்களுடைய இடத்தினுள் அனுமதியின்றி நுழைவதற்கோ, தண்டிப்பதற்கோ, அச்சிலேற்ற முடியாத காரியங்களைச் செய்வதற்கோ இந்த சக்தியை உபயோகிக்க மாட்டீர்கள் என்றாலும், இவற்றையெல்லாம் செய்ய முடியும் என்று மனதுக்குள் பட்டியலிடவாவது செய்வீர்கள்தானே? இந்த மந்திர மோதிரம் நமக்கு எதை உணர்த்துகிறது எனில், அதிகாரமானது (சக்தி) மனிதனை நேர்மையற்றவனாக ஆக்குகிறது என்பதைத்தானே?

அது மட்டுமல்ல, அதிகாரமே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. நம் அனைவருக்குள்ளும் ஒரு சிறிய கொடுங்கோலன் ஒருவன் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறான். சமூகக் கட்டுப்பாடுகள், அக்கம்பக்கம் இருப்ப வர்கள் நாம் என்ன செய்கிறோம் என்று பார்த்துக்கொண்டிருக் கிறார்கள் என்ற எண்ணம் போன்றவையே நம்மை நல்லவர்களாக வழிநடத்திச் செல்கிறது. சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே நம்மை நல்லவர்களாக வாழச் செய்கிறது. இதனாலேயேதான் தனிமனிதனாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, கட்டுப்படுத்த சரியான அமைப்புகள் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் கட்டமைப்பில் இருந்தாலுமே நாடுகளின் ரகசியங்கள், கார்ப்ப ரேட்டுகளின் தந்திரங்கள், அரசியல்வாதிகள் சொல்லும் அழகான பொய்கள் போன்றவை எல்லாம் இந்த மந்திரசக்தி கொண்ட மோதிரத்தின் தத்துவத்தில் இருந்து உருவாகுபவை தானே? என்று கேட்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

உங்கள்  வாழ்க்கையில் வளம் சேர்க்கும் தத்துவங்கள்!

எது சரி, எது தவறு..?

நாம் எல்லோருமே சரியான விஷயங்களை சரியான நேரத்தில் செய்து வெற்றி பெறவே விரும்புகிறோம். மேலும், நாம் நல்லவர்களாக இருக்கவும் விரும்புகிறோம். நாம் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலையில் சரியான விஷயம் எது என்று எப்படிக் கண்டுபிடித்து, செய்வது. நான் துணிச்சலான ஒரு நபராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் அஜாக் கிரதையாக (பொறுப்போ, கவலையோ) இல்லாமல் இருப்பதைத் தவிர்ப்பது எப்படி, நான் சாந்தமாக இருக்க விரும்பினால், நான் மந்தமாக இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி, பெருந்தன்மையானது எப்போது தாழ்வுமனப்பான்மை ஆகிறது?

பிளாட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தைத் தந்துள்ளார். யாருக்கும் தீமை இல்லாததை செய்வது, சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்வது என்பதெல்லாம் நாம் எந்தளவுக்கு நல்லவர்களாக இருக்கிறோம் என்பதில் இருந்தே அமைகிறது என்கிறார் அரிஸ்டாட்டில்.

தொடர் பயிற்சிகளாலும், வெற்றி பெற்றவர்களுடைய பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவதாலும் நாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கருணை கொண்ட மனிதராக இருக்க விரும்புகிறீர்களா? கருணை கொண்ட காரியங்களை அடிக்கடி செய்யுங்கள். மன்னிக்கும் பண்பு உங்களிடத்தில் அதிகரிக்க வேண்டுமா? மன்னிக்கும் குணம் அதிகம் கொண்டிருக்கும் நபர் ஒருவரை முழுமையாகப் பின்பற்றி அவர் மாதிரி நடந்துகொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் மனதார நம்பிச் செய்யும் விஷயமாகவே நீங்கள் மாறிப்போவீர்கள் என்பதுதான் உலக நியதி.

நாம் செய்யும் விஷயங்களே நாம் யார் என்பதை நிர்ணயிக் கிறது என்பது சரி எனில், சிறப்பானதொரு நபராக இருப்பது ஒருமுறை செய்யும் காரியத்தால் வருவதில்லை. அதுவே பழக்கமாக மாறிப் போனால் மட்டுமே சாத்தியம் என்கிறார் ஆசிரியர்.

என்னதான் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலை யில் எதைச் செய்வது சரியாக இருக்கும் என்பதைக் கண்டறிவது கடினமான விஷயம். எல்லா முடிவுகளும் தனிப்பட்ட குணாதிசயங் களைக் கொண்ட ஒன்றாகவே (Unique) இருக்கிறது. ஒரு சூழலில் துணிச்சலான முடி வாகத் தெரியும் ஒரு விஷயம், மற்றொரு சூழலில் அப்படித் தெரிவதில்லை. இதனால்தான் நல்லது என்பது இரு நேரெதிரான விஷயங்களின் (extreme) நடுவே இருப்பது என்கிறார் அரிஸ்டாட்டில். அதாவது, நல்ல செயல்கள் என்பது பல நல்லதுக்கும் பல கெட்டதுக்கும் நடுவே இருப்பதுதான். துணிச்சல் என்பது அசட்டுத் தைரியத்துக் கும் பயந்தாங்கொள்ளித் தனத்துக்கும் நடுவில் இருப்பது தான். கப்சிப் அமைதிக்கும் கத்திக் குவிப்பதற்கும் நடுவில் இருப்பதுதான் கனிவு. கஞ்சத் தனத்துக்கு ஊதாரித்தனத் துக்கும் நடுவில் இருப்பதுதான் பெருந்தன்மை.

அனுபவ ஞானம் தரும் பயிற்சி...

குறிப்பாகச் சொன்னால், எல்லாவற்றிலும் மிதமான நிலையைக் கடைப்பிடிப்பது. சரி, இந்த நடுநிலையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதற்குத்தான் பயிற்சி தேவை. இதைத்தான் அரிஸ்டாட்டில் அனுபவ ஞானம் என்கிறார். நாம் நல்லவர்களாக நடந்து அறத்தைப் பின்பற்றும்போது எப்படி ஜிம்முக்குச் சென்று நாள்பட பயிற்சி செய்தால் உடல்வாகு கிடைக்கிறதோ, அதேபோல் அனுபவ ஞானமும் நமக்குக் கிடைக் கிறது. இந்தக் கலை கைகூடி வந்துவிட்டால் எதிலும் சரி யானதை நம்மால் தேர்ந் தெடுக்க முடியும் என்கிறார் அரிஸ்டாட்டில்.

நட்பு எப்படி இருக்க வேண்டும்?

நட்பு குறித்து அரிஸ் டாட்டில் சொல்லும் தத்துவம் அழகானது. நமக்கு உதவும் நண்பர்கள், இனிமையான நண்பர்கள் மற்றும் நல்ல நண்பர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கிறார் அவர். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரியும் (அல்லது மாலையில் கிளப் பில் உங்களுடன் விளை யாடும்), அன்றாட மதிய உணவு வேளையின்போது உடனமர்ந்து சாப்பிட்டு சில சமயம் வார இறுதி நாள் களிலும் கம்பெனி தரும் நண்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர் களுடைய பழக்கம் என்பது ஒரு நோக்கத்தின் அடிப் படையில் இருக்கும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவோம். அதனால் அவர்கள் நம்முடைய நண்பர்களாக இருப்பார்கள். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டால், அவர் களில் பலர் நட்பு குறைந்து, இறுதியில் தொடர்பில் இல்லாமலே போய்விடுவார்கள். இன்னும் சிலர் உங்கள் சந்தோஷத்தில் முழுமையாகப் பங்கேற் பார்கள். ஆனால், வயது அல்லது இடமாற்றம் போன்ற காரணங்களால் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். ஆனால், இவர்கள் குறித்த நினைவுகள் மட்டும் நம்மைவிட்டு நீங்கவே நீங்காது.

ஒரு சிலர் நீங்கள் மேன்மையடைய வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து அரும்பாடு படுவார்கள். உங்களிடம் உரிமையோடு இவர்கள், ‘‘இவருடன் நீங்கள் பழகாதீர்கள், இந்த வருடம் உங்களுக்கு புரொமோஷன் நிச்சயம் கிடைக்கும் என்பது போன்ற அட்வைஸ் மற்றும் ஊக்கத்தை உங்களுக்குத் தருவார்கள். இவர்களே உங்களுடைய ரகசியங்களை (நீங்கள் மனமுடைந்து அழுததைப் பார்த்திருந்தாலும்கூட) ஒருபோதும் வெளியே சொல்லாதவர்கள். இவர்கள் உங்களை ஒருபோதும் கைவிடவும் மாட்டார்கள். எப்போதுமே உங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருப்பார்கள். இந்த மூன்றாம் வகை நண்பர்களையே தேர்ந்தெடுத்து நட்புடன் பழக வேண்டும். அதற்காக மற்ற இரண்டு நண்பர்களையும் தவிர்க்க வேண்டியதும் இல்லை என்று சொல்லும் அரிஸ்டாட்டில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட தன்மையுடன் இருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்.

இவ்வாறு பல்வேறு தத்துவங்களின் விளக் கங்களை 10 பெரும் பிரிவுகளாகப் பிரித்து இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது. பல்வேறு தத்துவ ஞானிகள் கூறிய தத்துவங்களை இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப எளிதில் புரிந்துகொள்ளும்படி உதாரணங்களுடன் எளிமையான நடையில் தொகுத்துத் தந்திருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism