Published:Updated:

கவனச்சிதறல் பிரச்னையைத் தீர்க்கும் 12 நிமிட பயிற்சி..!

கவனச்சிதறல்
பிரீமியம் ஸ்டோரி
News
கவனச்சிதறல்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

இன்றைக்கு நாம் வாழும் அல்ட்ரா-மாடர்ன் வாழ்க்கையில் கவனத்தை சிதறவைப்பதற்கான காரணிகள் எக்கச்சக்க மானதாக இருக்கிறது. கவனச்சிதறல் என்கிற பிரச்னைக்கு நாம் சுலபமாக ஆட்பட்டுவிடுவதுதான் இதற்குக் காரணம். இந்தவிதக் கவனச்சிதறலுடன்தான் நாம் வாழ வேண்டுமா, இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என்று கேட்டீர்கள் எனில், இதற்கான வழிகள் இருக்கவே செய்கின்றன. சரியான பயிற்சியின் மூலம் வித்தியாசமாகக் கவனம் செலுத்தும் பண்பை நாம் வளர்த்துக்கொண்டால், தீர்ந்தது பிரச்னை. இந்தப் பண்பை வளர்த்தெடுப்பது எப்படி என்பது குறித்து சொல்லும் ‘பீக் மைண்ட்’ (Peak Mind) புத்தகத்தைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கவனச்சிதறல் பிரச்னையைத் தீர்க்கும் 12 நிமிட பயிற்சி..!

கவனம் குறித்து கவனமாக இருங்கள்

‘‘குறைவான கவனம், வேறொன்றில் கவனம், பல விஷயங்களில் கவனம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லா கவனம் எனப் பல வகைகளில் நீங்கள் கொள்ளும் கவனத்தை வகைப்படுத்தலாம். ஒரு விஷயத்தில் நீங்கள் வைக்கும் கவனமே நீங்கள் அதிலிருந்து எதை உணர்கிறீர்கள், கற்றுக்கொள்கிறீர்கள் மற்றும் நினைவில் நிறுத்துகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதுடன், அந்த விஷயம் குறித்து நிதானமாக இருக்கிறீர்களா, என்ன மாதிரியான எதிர்வினையை அந்த விஷயத்தில் ஆற்றுகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

கவனம் என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதொரு விஷயம். கவனம் மதிப்பு மிக்கது. அது உங்களிடம் இருந்து நீங்கள் உணராமலேயே திருடப்படலாம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியையான அமிசி பி.ஜா (Amishi P.Jha).

கவனம் குறித்த சில உண்மைகள்...

‘‘மூளையை நோக்கி எக்கச்சக்கமான விஷயங்கள் வருகின்றன. அவற்றில் முக்கிய மானவை மட்டுமே எடுத்துக்கொள்ள ஒரு வடிகட்டியாகக் கவனம் என்பது மூளையால் உபயோகிக்கப்படுகிறது. இந்த வடிகட்டியை உபயோகிப்பதாலேயே மூளையானது ‘ஓவர் லோட்’ ஆகாமல் பார்த்துக்கொள்கிறது.

கவனம் என்பது சக்தி வாய்ந்த ஒன்று. அதுதான் மூளையின் அதிகாரி. ஏனென்றால், அதுதான் மூளைக்கு எந்த விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டியாய் இருக்கிறது. எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அந்த விஷயத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

இரண்டாவதாக, கவனம் என்பது எளிதில் உடைந்துபோகிற தன்மை கொண்டது. அதாவது, எளிதில் சிதறக்கூடிய ஒன்று. அதுவும் எப்போதெல்லாம் நாம் மனஅழுத்தம், பயம் அல்லது கெட்ட மனநிலையில் இருக்கிறோமோ, அப்போ தெல்லாம் கவனம் என்பது வெகுவாகச் சிதறிப்போய்விடுகிறது.

மூன்றாவதாக, கவனம் என்பது பயிற்சியின் மூலம் அதிகப் படுத்திக்கொள்ள முடியும். எங்களுடைய ஆராய்ச்சியின் வாயிலாக, நாங்கள் கண்டறிந்தது அதைத்தான். சரியான பயிற்சிகள் மூலம் நம்முடைய கவனம் செலுத்தும் திறனை அதிகரித்து வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால் களையும் முழுமையாகக் கையாண்டு வெற்றி பெறலாம்’’ எனக் கவனம் பற்றி நமக்கு அதிகம் தெரியாத பல உண்மை களைச் சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

கவனச்சிதறல் பிரச்னையைத் தீர்க்கும் 12 நிமிட பயிற்சி..!

களவாடப்படும் கவனம்...

‘‘இன்றைக்குக் கவனம் குறித்த ஒரு நெருக்கடியான நிலையில் நாம் வாழ்ந்துவருகிறோம். கவனம் முழுவதுமாகக் குறைந்து, சோர்வடைந்த மூளையுடன், ஆகக்குறைந்த செயல்திறனுடன், வாழ்வில் சாதிக்க வேண்டிய விஷயங் களைச் சாதிக்காமல் வாழ்ந்து வருகிறோம். இதற்குக் காரணம், கவனத்தைப் பெற போட்டிபோடும் வர்த்தக ரீதியிலான உலகம் (அட்டென்ஷன் எகானமி – செய்தி, பொழுதுபோக்கு மற்றும் சோஷியல் மீடியா உள்ளிட்டவை).

மனிதர்களின் கவனத்தை வர்த்தக ரீதியிலாகப் பெறுதலுக் கான சரியான சட்டதிட்டங்கள் இல்லாத காரணத்தால் நம்முடைய விலை மதிப்பில்லாத கவனம் என்பது பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது. பல மனிதர்களின் கவனம் திரட்டப்பட்டு, மறுபேக்கேஜிங் செய்யப்பட்டு அதிக விலைக்கும் மிக அதிக லாபத்துக்கும் விற்கப்படுகிறது. மனோதத்துவ நிபுணர்களும், சாஃப்ட்வேர் பொறியாளர்களும், செயற்கை நுண்ணறிவும் இணைந்து நமக்கு எதிராகக் கவனத்தைக் களவாடும் நோக்குடன் பணியாற்றுகிற இந்த உலகில் நாம் இவற்றுக்கு இறையாகி நம்முடைய கவனம் எனும் செல்வத்தை நாமே வலியப்போய் இழக்கிறோம்’’ என்கிறார் ஆசிரியர்.

என்னதான் தீர்வு?

‘‘அடடா, அப்படியென்றால் என்னுடைய கவனிக்கும் திறனில் குறைபாடா...’’ என்று கவலைப்படாதீர்கள். உங்களுடைய கவனிக்கும் திறனில் எந்தவிதக் குறைபாடும் இல்லை. நம்முடைய மூளை யானது கம்ப்யூட்டர் அல்காரி தத்துக்கு ஈடுகொடுத்து இயங்கி வருகிறது. நம்முடைய மூளை யானது சரியான முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்குத் தலைசிறந்த சான்றாகும்.

இன்னும் சொல்லப்போனால், நம்முடைய கவனம் என்பது மிகச் சிறப்பாக இருப்பதாலேயே நாம் நம்மை சுலபத்தில் நம்முடைய எதிராளிகளிடம் (பொழுதுபோக்கு மற்றும் சோஷியல் மீடியா போன்ற) இழந்துவிடுகிறோம். உங்கள் கவனத்தை இவற்றிலிருந்து திருப்புகிறேன் பேர்வழி என்று சண்டையிடக் கிளம்பினீர்கள் எனில், ஒருபோதும் உங்களால் வெற்றி பெற முடியாது.

இன்றைக்குக் கவனத்தை சிறப்பாகக் கையாண்டு அதிகரிப்பது எப்படி என்பதைச் சொல்லித் தரும் பலரும், கவனச் சிதறலுக்கான காரணிகளின் மீது ஒரு யுத்தம் நடத்துங்கள் என்கிறார்கள். உதாரணமாக, ‘செல்போனைத் தொடாதீர்கள், நோ சோஷியல் மீடியா’ என்பது போன்றவைதான் அவை.

இதைச் செய்து ஒருநாளும் உங்களால் வெற்றி பெற முடியாது. இவையெல்லாம் ஒரு கடலில் உள்ள வேகமானதொரு சுழல்நீரில் எதிர்நீச்சல் அடிப்பதற்குச் சமமானது. இதனால் எந்தவிதமான பலனும் இருக்காது. இந்தச் சூழ்நிலையில் நமக்குத் தேவையானது கவனச் சிதறலை உருவாக்கும் விஷயங் களில் இருந்து பாதுகாப்பே ஒழிய அவற்றை வெல்வதல்ல. அவற்றை ஒருபோதும் நம்மால் வெல்லவும் முடியாது.

எங்களுடைய ஆராய்ச்சியின் போது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட நபர்களிடத்தில் ‘கவனமாக இருங்கள்...’ என்று பலமுறை கூறினாலும் அவர்களால் முழுமை யான கவனம் செலுத்த முடியாத சூழலிலேயே இருந்தனர். ஒரு சிலசமயம், ‘செலுத்தப்படும் கவனத்துக்கு ஏற்றாற்போல் பணம் தருகிறோம்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் முதலில் செய்ய வேண்டியது, நம்முடைய கவனம் குறித்து கவனம் கொள்ள வேண்டியது என்பதைத்தான். கவனம் என்றால் என்ன, அது எப்படி மூளையினுள் கட்டமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கவனம் என்பது ஒரு சில விநாடிகளே ஒளிர்கிற ஒரு ஃப்ளாஷ்லைட்டைப்போல் (Flashlight) என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னமும் சொல்ல வேண்டுமெனில், கவனம் என்பது தொடர்ந்து எரிகிற ஒரு ஃப்ளட் லைட்டைப் போலான (Floodlight) ஒன்று என்ற நினைப்பில் இருந்து நாம் மொத்தமாக வெளியே வர வேண்டும் என்கிறார் ஆசிரியை.

எப்படித் தவிர்க்கலாம்?

சரி, கவனச் சிதறலைத் தடுப்பதற்கான முயற்சியை நாம் செய்யும்போது, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகப் பின் வருவனவற்றைக் கூறுகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

‘‘கவனத்தை அதிகரிப்பதற்கு முயற்சி செய்யும் நீங்கள், அதற்கான நடைமுறையைக் கடைப்பிடிக்கும்போது நீங்கள் உங்களுடைய மூளையை சுத்தப்படுத்தப்போவது இல்லை. உங்களுடைய நோக்கம், உங்களுடைய மூளையை அமைதிப் படுத்தவோ, ஓய்வெடுக்க வைக்கவோ முயல்வதில்லை. உங்கள் மூளையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டியதெல்லாம் இல்லை. குறிப்பாக, அப்படிப்பட்ட நிலையொன்று இல்லவே இல்லை’’ என்று சொல்லும் ஆசிரியர், இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்து கொண்ட பின்னர், நான்கு வாரங்களுக்கு தினசரி 12 நிமிட அளவில் செய்ய வேண்டிய பயிற்சிக்கான விஷயங்களையும் அதற்கான அட்டவணையையும் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை. நான்கு வாரம் அன்றாடம் 12 நிமிட நேரம் ஆசிரியைக் கூறியுள்ள நடைமுறையைப் பின்பற்றினால் கவனம் கொள்ளும் கலை என்பது அனைவருக்கும் முழுமையாக வசப்படும் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியை.

கவனச்சிதறல் என்பது மிக அதிக அளவில் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில், அது குறித்த மிகவும் அவசியமான ஆராய்ச்சி முடிவுகளால் பெறப்பட்ட மாற்றுச் சிந்தனைகள் பலவற்றை நாம் அறிந்து, பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமே கவனத்தைக் கட்டுக்குள் வைக்கும் கலைக்கான பயிற்சியை சொல்லும் இந்தப் புத்தகத்தை வாழ்க்கையில் முன்னேற்றம் காண நினைக்கும் அனைவரும் கவனத்துடன் படித்து சிறப்பான பலன்களைப் பெற்று மகிழலாம்.