நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நினைத்ததைச் செய்யும் பவர்... அதிகாரத்தை அடையும் வழிகள்!

அதிகாரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகாரம்...

எம்.பி.ஏ புக்ஸ்

எல்லாக் கலாசாரங்களிலுமே ஒரு கதாநாயகன் ஒரு மந்திரப்பொருளைக் (விளக்கு, மோதிரம், குச்சி போன்றவை) கண்டெடுத்து அதன்மூலம் அநியாயம் செய்பவர்களைத் துவம்சம் செய்து நியாயத்தை நிலைநிறுத்திய கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டு விருப்பத்துடன் கேட்கப்படவும் செய்கின்றன. என்னதான் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற நவீன வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே செல்கிறபோதிலும், ரொம்பவும் சுவாரஸ்ய மான இதுபோன்ற கதைகள் காலத்தால் அழிக்க முடியாததாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த மாதிரியான கதைகள் அனைத்துமே பவர் (நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் சக்தி) குறித்து சொல்லப்படும் கதைகளாகும். ஹீரோக்களும் வில்லன்களும் இந்த மாதிரியான பொருளைக் கையகப்படுத்துவதற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்து மோதிக்கொள்ளும் கதைகளுமே மிகவும் பிரபலமானவையாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன.

புத்தகத்தின் பெயர்:
Power, 
For All
ஆசிரியர்:
Tiziana Casciaro, 
Julie Battilana
பதிப்பாளர்:
Simon & Schuster
புத்தகத்தின் பெயர்: Power, For All ஆசிரியர்: Tiziana Casciaro, Julie Battilana பதிப்பாளர்: Simon & Schuster

அதிகாரம் என்றால் என்ன..?

பவர் அதாவது, அதிகாரம் என்பது அடுத்தவர்களுடைய செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை ஒருவர் தன்னிடமுள்ள கவர்ச்சிகரமான பண்பினாலோ, கட்டாயப் படுத்தும் பண்பினாலோ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. மற்றவர்களின் தேவை அல்லது விருப்பம் என்ன என்பதை அறிந்து, அதைப் பெருவாரியான மக்களுக்குப் பெற்றுத் தருகிற முயற்சி ஆகும். இந்தத் தேவை/விருப்பம் என்பது பணம், நல்ல தண்ணீர், நிலம், வீடு, கார் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது பொருள்சாரா மனநிலை சார்ந்த விஷயமான மதிப்பு, பெருமை, இணைத்துக்கொள்ளல், சாதனை போன்றவை யாக இருக்கலாம். இப்படி மதிக்கப்படும் விஷயங்களுக்கு ஏற்றாற்போல் நீங்கள் கொண்டிருக்கும் திறமை, உடல்பலம், பணம், கடந்த கால வெற்றியின் சரித்திரம் (Track Record), நெட்வொர்க் போன்றவையே உங்களுக்கு மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் சக்தியைத் தருகிறது. எனவே, அடுத்தவருக்கு என்ன தேவை/விருப்பம் என்று தெரிந்து வைத்திருப்பதும், அதை அவர் வேறு எங்காவது/யாரிடமிருந்தாவது பெற முடியுமா என்பதைத் தெரிந்து வைத்திருப்பதைப் பொறுத்தே உங்கள் அதிகார சக்தி எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

நினைத்ததைச் செய்யும் பவர்...
அதிகாரத்தை அடையும் வழிகள்!

அதிகாரத்தின் அபரிமிதமான சக்தி...

பவர் என்பது நம்மைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்தன்மை கொண்டதாக இருக்கிறது. பவர் என்பதே உலகத்தில் பெருமளவு பேசப் பட்ட மற்றும் எழுதப்பட்ட நம்முடைய வாழ்வில் அன்றாடம் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், வீடு, நட்பு வட்டம் என்பதில் ஆரம்பித்து, அலுவலகம், உலக நாடுகள் மத்தியில் செய்யப் படும் ராஜதந்திரங்கள், பெருந்தொழில்கள் என அனைத்து விஷயங்களிலும் பவர் என்பதே நீக்கமற தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

பவரை எப்படிப் பெறுவது, அதை எப்படி தக்க வைத்துக்கொள்வது, பதவி உயர்வு கிடைத்த பின்னரும்கூட நான் பவர்ஃபுல்லாக இருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு வர மாட்டேன் என்கிறதே, எப்படி மற்றவர்களை நான் நினைப்பதைப் போல் மாறச் செய்வது, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பாஸ்களை என்னால் எதிர்க்க முடிவதில்லையே, ஏன், என்னிடம் இருக்கும் பவரை நான் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்கிறேனா என்பதை நான் எப்படித் தெரிந்துகொண்டு நடப்பது... என்பது போன்ற கேள்விகளே நம்மில் பலரின் மத்தியில் நிலவுகிறது.

கஷ்டப்படாமல் பவர் வராது?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது எனில், நாம் அனைவருமே உலகில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, இதில் இருந்து மாறுபட்ட மனிதராக நம்மால் நடக்க முடியுமா என்று நினைப்பதாலேயேதான். அதிலும், சமீப காலமாக அதிகமாகக் கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு. ‘‘உலகத்தில் நான் எதிர்கொள்ளும் அனைத்துமே ஏன் என்னை அழுத்த நினைக்கிறது, அதை எதிர்த்து எதுவுமே என்னால் செய்ய முடியவில்லையே, அது எதனால்?’’ என்கிற கேள்விதான் அது.

மாணவர்கள், அதிகாரிகள், குடும்பத்தலைவிகள் என உலகின் எல்லா மூலையில் இருக்கிற பல்வேறு தரப்பட்ட மனிதர்களுக்குமே இந்தவித சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. அவர்களுடைய பணியிடம், குடும்பம், சமுதாயம் எனும் அத்தனை இடத்திலும் அதிக அளவிலான கன்ட்ரோலை அவர்கள் பெற்று அதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து காட்டவே அனைவரும் விரும்புகின்றனர். ஓர் இடத்தில் இருக்கும் அனைவருமே இதே போன்ற நினைப்பில் செயல் படுவதால், அது அவ்வளவு எளிதில் நடப்பதில்லை – பவர் சுலபத்தில் கைகூடிவருவதில்லை. இதில் வெற்றி பெறு வதற்கான பாதை நிறையவே கரடுமுரடானதாக இருக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் அந்த வெற்றியைப் பெற எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையோ, எத்தனை முறை கடுமையான தோல்விகளைச் சந்தித்த பின்னால் அந்த வெற்றியை அடைந்தார்கள் என்பதையோ நாம் சொல்லக் கேட்கிறோம்.

பவர் பற்றி 3 வகையான சிந்தனை...

ஒருவர் செய்ய விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு பவர் என்பதே தலையாய விஷயம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவே செய்கின்றனர். ஆனாலும், பவரே அனைத்துக்கும் தலையாயது என்பதை ஒப்புக்கொள்வதற்கும் நடைமுறையில் அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இடையே எக்கச்சக்கமான வித்தியாசம் இருப்பதாலேயேதான் இந்தப் பவரைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளல் சிக்கலில் மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன.

முதலாவதாக, பவர் என்பது தரப்படுவதில்லை. அது சில அடிப்படைக் குணாதிசயங்களை இயல்பிலேயே கொண்டவர்களால் கையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற எண்ணமாகும். அந்தக் குணாதிசயம் ஒருவரிடம் இருந்து விட்டால் பவரைக் கையில் எடுத்துக்கொண்டு தொடர்ச்சி யாக அதைக் கையில் வைத்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை.

ஆனால், இந்த மாதிரியான சிறப்பு குணாதிசயம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதைத் தேடிப் பிடித்துத் தெரிந்துகொள்ள நினைப்பது ஒரு வீணான வேலையேயாகும். உதாரணமாக, நீங்கள் பலருடன் பழகுகிறீர்கள். ஒரு சிலரிடம் உங்களால் காண்பிக்க முடிகிற ஆளுமை ஒரு சிலரிடத்தில் காண்பிக்க முடிவதில்லை இல்லையா, இது எதனால்?

ஒரு தனிநபராக ஒரு சிலரிடத்தில் உங்களால் பவர் காட்ட முடிகிறது. ஒரு சிலரிடத் தில் காட்ட முடியவில்லை எனில், பவரைப் பெற சிறப்பு குணாதிசயம் என்று ஏதும் இல்லை என்று புரிகிறது இல்லையா? அப்படிப்பட்ட குணாதிசயம் என்ற ஒன்று இருந்தால் ஒரு சிலரிடம் பவர் காண்பிக்க முடிகிற உங்களால் ஏன் வேறு சிலரிடம் காண்பிக்க முடிவதில்லை?’’ என்று கேட்கிறார்கள் ஆசிரியைகள்.

இரண்டாவதாக, பவர் என்பது ஒருவர் வகிக்கும் பதவியையொட்டிய ஒன்று. ராஜா மற்றும் ராணி, பிரசிடென்ட் மற்றும் ஜெனரல்கள், போர்டு மெம்பர்கள் மற்றும் சி.இ.ஓ-க்கள், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் போன்றவர்களுக்கே உரித்தானது இது என்பதுதான் நாம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகும்.

மனித வாழ்க்கையின் ஆரம்பத் தில் இருந்து இந்த வகை புரிந்து கொள்ளல் என்பது நம்மீது திணிக்கப்பட்டுவிடுகிறது. பல்கலைக்கழக எம்.பி.ஏ மாணவர் களிடையே சமீபத்தில் நீங்கள் பார்த்த ஐந்து பவர்ஃபுல் மனிதர் களைப் பட்டியலிடுங்கள் என்று சொன்னால், 95% பேர் அதிகாரத் தில் இருக்கும் ஐந்து நபர்களையே பட்டியலிட்டனர். அதே சமயம், ‘‘எங்களுடைய பவரை சரியாகப் பயன்படுத்த முடியாமல் நாங்கள் திணறுகிறோம் என்று சொன்னதில் பலரும் சி.இ.ஓ-க்கள்தாம்’’ என்கின்றனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியைகள். வெறுமனே தலைமைப் பொறுப்பை ஏற்றிருப் பதால் மட்டுமே அவர்் சொல்வதை அவருடைய டீம் முழுமையாக நிறைவேற்றும் என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. உச்ச பட்ச பதவியில் இருக்கும்போது அவர் சொல்வதை அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் கேட்டு நடப்பார்களே தவிர, நமக்குப் பவரைத் தந்துவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

இறுதியாக, பவர் என்றாலே அழுக்கு மற்றும் அசிங்கம் நிறைந்தது என்பது. அதைப் பெறுவதற்கும் செயலாக்குவதற்கும் சூழ்ச்சி, ஈவு இறக்கம் இல்லாமல் வற்புறுத்தும் குணம், கொடூரபுத்தி என்பவை கட்டாயம் வேண்டும்; இதையெல்லாம் பார்த்தபின், ‘‘நான் ஏன் பாவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்று நினைக்கும் எண்ணமாகும். பவர் நெருப்பைப் போன்றது. தவறாகக் கையாண்டால், அதைக் கையாள்பவரையுமே பொசுக்கிவிடும் என்பதுதான் நிதர்சனம். பவர் கையில் கிடைத்தால் கொஞ்சம் மதிகெட்டு கெட்ட ஆட்டம் போட வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்றபோதிலும், இந்த உலகத்தில் எதை உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றாலும், பவர் என்பது கட்டாயம் தேவை என்பதை மறுக்க முடியாது.

மேலே சொன்ன இந்த மூன்று விஷயங்களுமே தனித் தனியாகவும், பல்வேறு விகிதாசாரத்தில் ஒன்றாகவும் இணைந்து பவர் என்பது குறித்த பல்வேறு குழப்பங்களை நம் அனைவருடைய மனதிலும் தோற்றுவிற்கிறது. இந்தக் குழப்பமே நம்மை ஏமாற்றமடையும் மனநிலைக்குக் (Frustration) கொண்டு சென்று, பவர் என்றாலே பாலிடிக்ஸ். நம்முடைய நிலைமைக்கும் தகுதிக்கும் அது ஒத்துவராது. இது நமக்கு வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைக்கிறது. இதுவே மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால், இப்படி ஒதுங்கிச் செல்வதால் நம்மால் நம்மீது அடுத்தவரின் பவர் ஏறி நர்த்தனமாடுவதைத் தவிர்க்க முடியாமல் போகவும், நம்முடைய சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கவும், நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியாமல் திணறவும் செய்யும் சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

சிறப்பாகக் கையாளப்பட்டால் சிறந்த பல நல்ல விளைவுகளையும், தவறாகக் கையாண்டால் பல தீய விளைவுகளையும் கொண்டுவந்து சேர்க்கும் பவரை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்!