தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

வெற்றி தராத விடாமுயற்சி... சரியான நேரத்தில் கைவிடும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

விடாமுயற்சி செய்பவர்களையே இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. 'வெற்றி பெற்றவர்கள் ஒருபோதும் இலக்கை நோக்கிய பயணத்தைக் கைவிட்டதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தைக் கைவிட்டவர்கள் வெற்றி பெற்றதில்லை’ என்கிற பழமொழியைச் சொல்லிச் சொல்லி, உலகமே நம்மை விடா முயற்சி என்ற மந்திரத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், எந்தவொரு காரியத்திலும் தொடர் முயற்சி செய்வதை எப்போது கைவிட வேண்டும் என்பதை விளக்குகிறது.

புத்தகத்தின் பெயர்: Quit: The Power of Knowing When to Walk Awayஆசிரியர்: Annie Dukeபதிப்பகம்:‎ Portfolio
புத்தகத்தின் பெயர்: Quit: The Power of Knowing When to Walk Awayஆசிரியர்: Annie Dukeபதிப்பகம்:‎ Portfolio

கைவிடும் கலை...

நாம் செய்யும் பல காரியங்களில் விடா முயற்சியோ, கைவிடுதலோ ஒரு நிரந்தர முடிவாக இருந்து விடுவதில்லை. எந்த ஒரு விஷயத்திலும் நாம் எடுக்கும் முடிவை மாற்றவே முடியாது எனில், என்னவாகும்? தீர்க்கமாகச் சிந்தித்து நீங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய சூழ்நிலையில், முடிவெடுக்கும்போது இருக்கும் சூழல் நாளடைவில் பெருமளவு மாறிவிடுகிறது. காலப்போக்கில் மடு மலை யாகவும், மலை மடுவாகவும் மாறிவிடுகிறது. இதனாலேயே ஒருவர் தன்னுடைய முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனில், முதலில் அவர் கைவிடுதல் என்னும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கேற்ற எதிர்வினையை ஆற்றியே ஆக வேண்டும். விடாமுயற்சி செய்கிறேன் என்று ஒட்டுமொத்த சூழலும் எதிராகத் திரும்பிய பின்னாலுமே ஒரு விஷயத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கக் கூடாது இல்லையா?

நாம் முடிவெடுத்து ஈடுபடும் எல்லா காரியங்களிலும் நாம் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால், முடிவெடுக்கும் தருணத்தில் அந்தக் காரியம் குறித்த முழுமையான தகவல்கள் நம்மிடத்தில் இருப்பதில்லை. இதனாலேயே நாம் பலமுறை பாதகமான விளைவு களையும் சந்திக்க நேருகிறது.

வெற்றி தராத விடாமுயற்சி... சரியான நேரத்தில் கைவிடும் கலை!

பாதகமான விளைவுகள் தோன்றும்போது...

இதில் இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது. உதாரணமாக, சராசரி யாக நாம் ஈடுபடுகிற 80% காரியங்களில் நாம் வெற்றி பெறுகிறோம். 20% காரியங்களில் நாம் தோல்வி அடைகிறோம் என வைத்துக் கொள்வோம். இந்த 20% காரியங்களில் நாம் அடையும் வெற்றி, தோல்வியை நாம் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது போவதாலேயே சிக்கல் அதிகமாக உருவாகிறது.

ஒரு காரியத்தை நாம் செய்ய ஆரம்பிக்கிறோம். ஆரம்பித்த பின்னால் புதிய தகவல்கள், புதிய நிகழ்வுகள், புதிய மனநிலைகள், புதிய எதிர்ப்புகள் எனப் பலவிதமான பாதகமான விஷயங்கள் நம்முன்னே வந்து நிற்கின்றன. இப்படிப் பலவிதமான பாதகமான விஷயங்கள் நம்முன்னே வந்த பின்னால் நாம் எடுக்க வேண்டிய முடிவு ஒன்றே ஒன்றுதான், கைவிடுதல் என்ற முடிவுதான் அது.

கைவிடுதல் என்பதே திடீரென்று மாறியுள்ள தற்போதைய சூழல், புதியதாக உருவாகியுள்ள பாதகமான நிலைமை, ஆரம்பிக்கும்போது இருந்த சூழ்நிலைக்கும் தற்போது இருக்கிற சூழ்நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஆரம்பிக்கும் போது நீங்கள் இருந்த மனநிலைக்கும் தற்போது நீங்கள் இருக்கிற மனநிலைக்கும் இடையே இருக்கிற வித்தியாசம் போன்றவற்றுக்கு நீங்கள் ஆற்றும் எதிர்வினையாக இருக்கும்.

இந்தவித எதிர்வினையை ஆற்றுவது எப்படி என்பதைக் கற்றுத் தேர்ந்துகொள்வதன் மூலமே நாம் இதுபோன்ற சூழ்நிலை களை எதிர்கொள்ளும்போது அசைவற்றுப்போய் சூழ்நிலைக் கைதியாக வாழ்வதைத் தவிர்க்க நம்மால் முடியும். அதிலும், அதிக அளவிலான நிச்சயமற்றத்தன்மை இருக்கும் சூழலில் கைவிடுதல் என்பதே செயல்படும் வேகத்தை அதிகரித்து, சோதனை முயற்சிகளை ஊக்குவித்து நம்முடைய செயல் திறனை அதிகரிக்கும். இதனாலேயே கைவிடுதலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு முடிவாக வைத்துக்கொள்வது நமக்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இமயமலை ஏறிக்கொண்டிருக்கும்போது உச்சிக்குச் செல்லும் கடைசித் தருணத்தில் வானிலை திடீரென்று மாறும்போது பயணத்தை முடிக்கும் முடிவை நாம் சட்டென எடுத்துவிடுவோம் இல்லையா, அது மாதிரி முடிவை நாம் எடுக்கப் பழக வேண்டும்.

கைவிடுதலில் உள்ள சிக்கல்கள்...

நிச்சயமற்ற சூழ்நிலையில் கைவிடுதல் என்னும் கலையைக் கற்று வைத்துக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். ஆனால், ஒரு காரியத்தை சுலபமாகக் கைவிட முடிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம், ஒரு காரியத்தைத் தொடங்கும் போது, இப்படி நடந்தால் என்ன செய்வது என்று நெகட்டிவ் கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. அந்தக் காரியத்தைத் தொடங்கிய பிறகு பிரச்னை ஏதும் வந்தால், அதைக் கைவிடாமல், ஏதோ ஓர் அதிசயம் நடந்து நாம் ஜெயித்துவிட்டால் என்கிற கேள்வியை எக்கச்சக்கமான முறை கேட்போம்.

இப்படி பல முறை கேட்பதாலேயே நம்மால் அந்தக் காரியத்தைக் கைவிட்டுவிட்டு, மீண்டு வர முடியாமலே போய்விடும்.

செய்யும் எந்தவொரு காரியத்தையும் கைவிடுவதில் இருக்கும் முக்கியமான சிக்கலே, கைவிடுவது பற்றி நாம் எப்போது சிந்திக்க ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான். சரியான நேரத்தில் ஒரு காரியத்தை ‘இது சரிப்பட்டு வராது’ என்று முடிவுகட்டி நாம் கைவிட முயற்சி செய்தாலுமே அந்தச் சமயத்திலும், ஆரம்பித்தவுடன் வெகு சீக்கிரமாகவே நாம் கைவிட நினைக்கிறோமோ, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணமே நம்முடைய மனதில் மேலோங்கி நிற்கும். இதனால் இந்த முடிவை எடுப்பது சுலபமான ஒன்றாக இருப்பதில்லை.

கைவிட மறுக்கும் காரணங்கள்...

ஒரு காரியத்தைக் கைவிடுவது பற்றி சாதாரண மாக சிந்திக்கும்போது, அது மிகவும் சுலபமான விஷயமாக நமக்குத் தோன்றும். அதே சமயத்தில், ஒரு காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அதைக் கைவிடுவது குறித்து நாம் சிந்திக்கும் போதுதான் அந்த முடிவை எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

ஏனென்றால், செய்கிற காரியத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு வேறொன்றை ஆரம்பித்தால், அது நம் முன்னேற்றத்துக்குத் தடை யாக இருக்கும் என்ற பொதுப்புத்தி நம்மிடையே நிலவி வருகிறது.

மேலும், நாம் கைவிட நினைக்கும் விஷயத்தில் இப்போது நடப்பதைப்போல் அல்லாமல் எதிர்காலத்தில் நமக்கு சாதகமான எதுவும் நடந்துவிடாது என்பதை உறுதியாக நாம் நம்பும் வேளையில்தான் நாம் அதைக் கைவிட நினைப்போம். ஆனால், இப்படி நம்புவதற்கு எக்கச்சக்கமான தடைகள் நம்மிடையே இருக்கின்றன.

ஒரு தொழில் சரியாகப் போகவில்லை. நஷ்டம் அடைந்துகொண்டிருக் கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன நினைப்போம்? இன்னும் கொஞ்சம் முதலீடு செய்து, அதிக நேரம் செலவழித்து, திட்டங்கள் தீட்டி, அதைச் சரியாக நடைமுறைப்படுத்தினால், வென்றுவிடலாம் என்றுதானே?

இப்படி நினைப்பதுதான் மனித இயல்பு. இந்த இயல்பு தான் எதையும் கைவிட முடியாதபடி நம்மைத் தடுத்து விடுகிறது. அதுவும் தவிர, இவ்வளவு நேரமும் பணமும் செலவழித்த பின்னால் இதைக் கைவிடுவதா என்ற எண்ணமும் நம்முள்ளே சேர்ந்துகொள்ளும். இதனா லேயே செய்யும் காரியத்தை நாம் தொடர்ந்து செய்யவே பிரியப்படுகிறோம்.

இதையும் தாண்டி, நாம் செய்துகொண்டிருக்கும் விஷயங்களும் நமக்குக் கிடைத்த வரம் என்று நாம் நம்புகிறோம். நஷ்டமடைந்து கொண்டிருந்தாலுமே ‘என்னிடம் இருக்கிற மாதிரி யாரிடமும் இல்லை’ என அதீத நம்பிக்கை நம்மிடையே இருக்கும். இதனாலேயே அதைக் கைவிடுவதில் மிகப் பெரிய தயக்கம் நமக்குள் உருவாகும். இந்தத் தயக்கமே நாம் இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து இருக்க நினைப் பதற்கான (status quo) காரணியாக இருக்கிறது.

தடுக்கும் ஈகோ...

இது தவிர, நமது ஐடியா, நம்பிக்கை மற்றும் நடவடிக்கை என்ற மூன்றும் சேர்ந்துதான் நம்மை அடையாளப்படுத்துகிறது. நாம் செய்யும் விஷயத்தைக் கைவிட நினைக்கும்போது நம்முடைய அடையாளத்தைக் கைவிடுவதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். இந்த ஈகோதான் கைவிடுதல் என்பதற்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. இதையும் தாண்டி நம்மிடம் எதிர்காலம் குறித்து இருக்கும் நம்பிக்கை (optimism) என்பதும் கைவிடுதல் என்ற முடிவை எடுக்கத் தடைக்கல்லாகவே இருக்கும்.

ஆனால், நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை மிகவும் குறுகிய காலத்துக் கானது. இது போன்ற குறுகிய காலத்தைக் கொண்ட நம் வாழ்வில் நாம் பிரயோஜனமாக இல்லாத காரியங்களை செய்வதன் மூலம் வீணடித்துவிடக் கூடாது.

‘‘இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு செயல் படுவது நம்மை சிறப்பாகச் செயல்பட வைக்கும். அதே சமயம், இலக்குகள் நம்முடைய அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் பிரயோ ஜனம் இல்லாத விஷயங்களைத் தொடர்ந்து செய்ய வைத்துவிடும்.

இலக்குகள் என்பவை வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு நிலைகளைக் கொண்டவை. தோல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று தெரிந்துகொண்டு லாகவமாக அந்த இலக்குக் கான செயல்பாட்டைக் கைவிட்டுச் செல்வதே புத்திசாலித்தனம்’’ என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

கைவிடுதல் என்பது ஒரு தவறான நிலைப்பாடு என்ற எண்ணம் நிலவி வரும் இந்த உலகில் அதன் முக்கியத்துவத்தையும், சரியான நேரத்தில் கைவிடுவதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களையும் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை வாழ்க்கை யில் வெற்றி பெற நினைக்கும் அனைவரும் அவசியமாக ஒரு முறை படித்து முன்னேறலாம்!