Published:Updated:

பார்வையாளர்களைக் கட்டிப்போடும் ‘பேச்சுக் கலை’ மந்திரம்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

பார்வையாளர்களைக் கட்டிப்போடும் ‘பேச்சுக் கலை’ மந்திரம்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இயல்பாகவே பேசுவதில் வல்லவர்கள் கூட மேடை ஏறி நான்கு நிமிஷம் பேச வேண்டும் என்றால் தத்து பித்து என்று தடுமாற ஆரம்பித்துவிடுகிறார்கள். நாலு பேர் அமர்ந்திருக்கும் சபையில் மேடையேறி பேசுவதற்கு வரும் பயத்தை ‘கிளாஸ்ஸோ போபியா’ என்று சொல்கிறார்கள். இந்த போபியாவானது கிட்டத்தட்ட 75% மனிதர்கள் மத்தியில் இருக்கிறது. ஏன் இந்த பயம், இந்த பயத்தை வெற்றிகொள்ளும் வழிகள் என்னென்ன என்பதை சொல்லும் புத்தகத்தைத் தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

புத்தகத்தின் பெயர்: Speaking 
with Confidence
 ஆசிரியர்: Nick Gold
பதிப்பகம்:‎ Penguin Business
புத்தகத்தின் பெயர்: Speaking with Confidence ஆசிரியர்: Nick Gold பதிப்பகம்:‎ Penguin Business

சரியாகப் பேச என்ன செய்ய வேண்டும்?

‘‘நாம் இதற்கு சரிப்பட்டு வர மாட்டோம் என்று நாமே முடிவு செய்துகொள்வதாலேயே நாம் மேடையேறியதும் சிலையாய் நின்று விடுவது, வார்த்தைகள் குளறுவது, தப்பும் தவறுமாகப் பேசுவது போன்ற விஷயங்கள் நமக்கு நிகழ்கின்றன. நீங்கள் சரியான முயற்சியையும் பயிற்சியையும் எடுத்துக்கொண்டால் இந்த நிலையில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். மேடையில் சிறப்பாகப் பேச என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கூறும் ஆசிரியர், மேடை பேச்சுக்கு முன், மேடைபேச்சின்போது மற்றும் மேடை பேச்சுக்குப் பின் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார்.

மேடையில் பேசும்போது தடுமாறக் காரணம் என்ன?

சிறந்த பேச்சாளர்களின் மத்தியில் நாம் காணும் ஒரு விஷயம் அவர்களில் யாரும் ஒருவரைப் போல் ஒருவர் பேசுவதில்லை. அவர்களிடம் இருக்கும் தனித்துவமே அவர்களை சிறந்த பேச்சாள ராக உருவெடுக்க வைக்கிறது. ஒரு நல்ல பேச்சாளராகத் திகழ நீங்கள் முதலில் உங்களுக்கே உண்மையானவராக இருக்க வேண்டும். (நீங்கள் சொல்லும் கருத்தை முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக நம்புவது என்ற அடிப்படையில்). அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் பேசும் கருத்துகளை உங்களால் பிரமாதமாக வெளிப்படுத்த முடியும். இதனாலேயேதான் எல்லோ ராலும் நல்ல பேச்சாளாராக முடியும் என்கிறேன் நான். இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டும் எனில், உங்களாலும் சிறந்த பேச்சாளராக முடியும்.

மனிதன் தன்னுடய மழலைப் பருவத்தில் அவனுடைய வாயில் ஆரம்பத்தில் வார்த்தைகளே வராதபோது, நம்மால் பேச முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறப்பாகப் பேச முயற்சி செய்கிறான். நாளடைவில் மனிதனை வந்துசேரும் அவநம்பிக்கையே அவனை மேடையில் பேசவிடாமல் தடுக்கிறது. நம்முடைய மூளையானது முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும்போதுதான் சிறுவயதில் நாம் பேச ஆரம்பிக்கும்போது கொண்டிருந்த கற்பனைத் திறனை எல்லாம் புதைத்துவிட்டு, பயத்தை வளர்த்தெடுத்து தடுமாறச் செய்கிறது.

சிறு பிராயத்தில் யார் என்ன நினைத்தால் என்ன என்று நினைத்து (சற்றும் வெட்கம் கொள்ளாமல்) பேசும் நாம் வளர்ந்து ஆளானவுடன் எதிரே இருப்பவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்துப் பேச பயப்படுகிறோம். சிறு பிள்ளையாக இருக்கும்போது சுவாரஸ்யமாக இருந்த பேச்சு என்பது வயது முதிர்ந்த பின்னால் நாம் ரிஸ்க் எடுக்கும் (என நினைக்கும்) ஒரு விஷயமாக மாறிவிடுகிறது. அதாவது, அந்தச் சூழ்நிலையில் நீங்கள் (சிறுவயதில் இருந்த பேசத் துணிந்த ஒரிஜினல் நிலை) தொலைந்துபோய்விடுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் உங்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியது அவசிய மாகிறது. சிறுவயதில் எந்த அளவுக்கு நீங்கள் பேசுவதில் ஆர்வமாக இருந்தீர்களோ, அந்த அளவுக்கு வயது முதிர்ந்த பின்னரும் ஆர்வமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

பார்வையாளர்களைக் கட்டிப்போடும் ‘பேச்சுக் கலை’ மந்திரம்..!

நன்கு தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...

அடுத்தபடியாக, நீங்கள் பேசும் விஷயங்களை நீங்கள் முழுவதுமாகத் தெரிந்து வைத்துக்கொள்வதுடன், அதை முழுமையாக நம்பவும் வேண்டும். உங்கள் சக பணியாளர்கள் உங்களுடைய பிரசன்டேஷனைத் தயார் செய்திருந்தாலுமே அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை முழுமையாகப் பார்த்து அவை முழுமையாக உங்களுடைய நம்பிக்கைகளுடன் ஒன்றிப் போகின்றவைதானா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள். வெறுமனே டேட்டாக்களின் நம்பகத்தன்மை பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை. இதை ஏன் சொல்கிறேன் எனில், நீங்கள் நம்புகிற விஷயங்களை மட்டுமே உங்களால் உங்கள் அனுபவத்துடன் சேர்த்து சுவையாகச் சொல்ல முடியும். அப்படி உங்கள் அனுபவங்களைச் சேர்த்து சொல்லும் விஷயங்கள் சிறப்பாக உங்களுடைய பேச்சைக் கேட்பவர்களிடம் சென்றடையும்.

உங்கள் பேச்சைக் கேட்பவர்களும் மனிதர்கள்தானே? மனிதர்களுக்கு எப்போதுமே அனுபவம் சார்ந்த கதைகள் கூறப் படும்போது அவற்றை சுலபமாக கிரகித்துக்கொள்வார்கள். மேலும், ஒரு பேச்சாளராக உங்களுடைய அனுபவத்தை நீங்கள் உங்களுடைய கருத்துடன் சேர்க்கும்போது அது உங்களுக்கும் (பேசுவதற்கு) மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். இந்த நம்பிக்கையே உங்கள் பயத்தைப் போக்கி சிறப்பான வகையில் பேசவைக்கும்.

உடல்மொழி முக்கியம் பாஸ்...

பேச்சில் முக்கியமான விஷயமான உடல்மொழியின் அவசியத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். ‘‘நம்முடைய பேச்சின் அங்கமாகிய வார்த்தைகளும் அதை நாம் உச்சரிக்கும் முறையும் நம்முடைய பேச்சானது சிறப்பாக அமைய உதவும் விஷயங்களின் ஒரு பகுதியே. இந்த இரண்டையும் தாண்டி சரியான உடல்மொழியைக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். இந்த உடல்மொழியானது உங்களுடைய பேச்சைக் கேட்பவர்களுக்கு அதன் அர்த்தத்தை சிறப்பாகக் கொண்டு சேர்க்க வல்லது. ஒரே விஷயத் தைப் பல்வேறு விதமான ஸ்டைல்களில் கொண்டு சேர்க்கும் வல்லமை உங்களிடம் இருந்தால், அது மிகவும் சிறப்பு’’ என்றும் கூறுகிறார் ஆசிரியர்.

மேடையில் எப்படிப் பேச வேண்டும்?

சரி, ஒரு விஷயம் குறித்த மீட்டிங்குக்கு ஏற்பாடு செய் கின்றனர். உங்களைப் பேச அழைக்கின்றனர். எங்கே இருந்து பேச்சை ஆரம்பிப்பது என்பதுதான் முதல் கேள்வி யாக இருக்கும் இல்லையா? அந்த மீட்டிங்கின் அடிநாதம் என்ன என்பதைக் கண்டறிந்து அதிலிருந்துதான் நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். அந்த அடிநாதம்தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை உங்கள் பேச்சில் தொடர்ந்து இழை யோட வேண்டும்.

ஒரு விஷயம் குறித்து பேச ஆரம்பிக்கும்போது அந்த விஷயம் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் சற்று நாசூக்காக பேச்சைக் கேட்பவர்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் பேசப்போகும் விஷயம் குறித்து பேச உங்களுக்குத் தேவையான தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவுபடுத்தினால் உங்கள் பேச்சைக் கேட்கும் நபர்கள், நாம் தகுதியான நபருடைய பேச்சைக் கேட்கத் தான் வந்துள்ளோம் என்று பேச்சைக் கேட்கத் தொடங் குவார்கள்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இது பெரிய விஷயமில்லை என்றுதான் தோன்றும். ஆனாலும், இதை முதலில் செய்வதுதான் மிகச் சரியான விஷயம். அடுத்த படியாக, நீங்கள் பேசப் போகும் விஷயம் குறித்து சிந்தனையைத் தூண்டும் கேள்வி ஒன்றைக் கேட்க வேண்டும். இது உங்கள் பேச்சைக் கேட்பவர்களு டைய கவனத்தை உங்களை நோக்கி முழுமையாக இழுக்க வல்லது.

மனதில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்...

உங்களுடைய பேச்சைக் கேட்பவர்கள் எந்த மாதிரி யான உணர்வைப் பெற வேண்டும், ஏன் அவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும், நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட் கப் போகிறீர்களா அல்லது அவர்களுடைய கேள்விக்குப் பதிலைச் சொல்லப் போகிறீர்களா, உங்களுடைய பேச்சைக் கேட்பவர்கள் நீங்கள் பேசி முடித்த பின் எதை அவர்கள் மனதில் நிலைநிறுத்திச் செல்வார்கள், உங்கள் பேச்சின் மூலம் மூன்று முக்கியமான விஷயங் களை மட்டும் அவர்களிடத் தில் கடத்த நினைத்தால் அவை எந்த மூன்று முக்கிய மான விஷயங்கள் என்பது போன்ற கேள்விகளை நீங்கள் மனதில்கொண்டே உங்களுடைய பேச்சைத் தயாரிக்க வேண்டியிருக்கும். இந்தக் கேள்விகள்தான் உங்கள் பேச்சின் அடித் தளத்தைக் கட்டமைக்க வேண்டும். இவற்றை முடிவு செய்த பின் உங்களிடம் இரண்டு கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் எதைக் கூற விரும்புகிறீர்கள் மற்றும் இறுதியாக நீங்கள் எதைக் கூறி பேசி முடிக்க விரும்புகிறீர்கள் என்பதே அந்த இரு கேள்விகள்’’ என்கிறார் ஆசிரியர்.

மறக்க முடியாதபடிக்கு பேசுவது எப்படி?

அடிப்படை செய்தியில் ஆரம்பித்து உங்களுடைய டெக்னிக்கல் அறிவு மற்றும் வேல்யூவை (மதிப்பீடு) சார்ந்தே உங்களுடைய பேச்சு இருக்க வேண்டும். கதை வாயிலாக கருத்துகளை சொல்வதன் அவசியம், பேசுகிற சூழ்நிலைக்கு (தொழிலாளர், முதலாளிகள், நிர்வாகிகள் போன்ற பிரிவுகள்) ஏற்ற ஆளாக மாறிக் கொள்ள வேண்டியதன் அவசியம், உரையை நிகழ்த்து வதில் இருக்கும் நுட்பங்கள் மற்றும் உரையை உரையாடலாக எப்போது மற்றும் எப்படி மாற்றி அமைப்பது போன்றவற்றையும் இந்தப் புத்தகத்தின் தனித்தனி அத்தியாயங்களின் வாயிலாக விளக்கி யுள்ளார் ஆசிரியர். பேச்சைக் கேட்பவர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் கருத்துகளைத் தெளிவாகச் சொல்வது மற்றும் வெறும் பேச்சாளர் என்பதில் இருந்து ஒரு புரஃபஷனல் பேச்சாளர் என்ற நிலையை அடைவது போன்றவற்றையும் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

பேச்சு குறித்த பின்னூட்டங்களைப் பெற்று எப்படி பேச்சை மேம்படுத்திக்கொள் வது மற்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல் லாம் கட்டாயம் பேச வேண்டியதன் அவசியம் என்ற இரண்டையும் சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

பேசும் கலையைக் கற்று ஜெயிக்க உதவும் இந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் ஒரு முறை படிக்கலாம்!