Published:Updated:

பணியாளர்களை உற்சாகப்படுத்தும் பாராட்டும் கலை!

பாராட்டும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
பாராட்டும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந் தாலும் சரி, அடிமட்ட ஊழியராக இருந்தாலும் சரி, எல்லோரும் எதிர் பார்ப்பது, வேலை செய்யும்போது கிடைக்கும் பாராட்டைத்தான். அந்தப் பாராட்டு கிடைக்காதபோது பணியுடன் நமக்கு இருக்கும் ஒட்டுதல் என்பது கணிசமாகக் குறைந்து விடுகிறது. ஊழியர்கள் செய்த வேலைக்குப் பாராட்டாமல் விடுவது எவ்வளவு ஆபத்து என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வை சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
The 5 Languages of 
Appreciation in the Workplace
ஆசிரியர்கள்:
Gary Chapman 
& Paul White
பதிப்பாளர்:
Moody Publishers
புத்தகத்தின் பெயர்: The 5 Languages of Appreciation in the Workplace ஆசிரியர்கள்: Gary Chapman & Paul White பதிப்பாளர்: Moody Publishers

சம்பளமும் பாராட்டும் ஒன்றல்ல...

‘‘அலுவலகத்தில் வேலை பார்க்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களே... பிறகு எதற்கு பாராட்டு எதிர்பார்ப்பு..?’ என்று நீங்கள் கேட்கலாம். சம்பளம் எவ்வளவுதான் கொடுத்தாலும், செய்த வேலைக்கான ஒரு பாராட்டு கிடைப்பதையே மனிதமனம் வெகுவாக விரும்புகிறது. ‘‘என்னுடைய பாஸுக்கு பாராட்டுவது என்றால் என்ன வென்றே தெரியாது. எவ்வளவு சிறப்பாக வேலையைச் செய்தாலுமே அவர் வாயைத் திறந்து பாராட்ட மாட்டார். அதே சமயம், சிறியதொரு தவற்றை நான் செய்துவிட்டேன் எனில், உடனடியாகத் திட்ட ஆரம்பித்து விடுவார். பெரிய கனவோடு இந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். கனவெல்லாம் கானல் நீராகி விட்டது. சம்பளமெல்லாம் நல்ல சம்பளம் தான். ஆனால், என்ன பிரயோஜனம்? என்ன பாடுபட்டாலும் ஒரு பாராட்டு கிடையாது. அதனால் நான் வேலையை விட்டுச் செல்கிறேன்’’ என்று புலம்பும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படியெனில், பணத்தை விட பாராட்டே பெரிது என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள் இல்லையா’’ என்று கேட்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

சுறுசுறுப்பைக் குறைக்கும் பாராட்டின்மை...

பணியிடத்தில் சரியான பாராட்டு கிடைக்க வில்லை எனில், என்னவாகும்? பணியாளர்கள் பணியில் கொண்டிருக்க வேண்டிய ஈடுபாட்டை இழப்பார்கள். ‘எப்போது பார்த் தாலும் வேலை, வேலை என்றே பிழைப்பு இருக்கிறது. நம்மைக் கவனிக்க ஆளேயில்லை’ என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள். இது மாதிரியான சூழலில் பணியாளர்கள் மத்தியில் நிறைய எதிர்மறைக் கருத்துகள் உருவாகும். பழிசொல்லுதல், முணுமுணுத்தல், புறம்பேசுதல் போன்றவை அதிகம் நடக்கும். குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த செயல்பாடு இல்லாதுபோகும். இதனால் நிறுவனத்தின் நோக்கம் என்பதை நோக்கிய அவர்களுடைய செயல்பாட்டில் தொய்வுநிலை ஏற்படும். இவை அனைத்தும் ஒருசேர நடப்பதால், திறமையான பணியாளர்கள் வேலையை விட்டுப் போக ஆரம்பிப்பார்கள்.

வெறும் பாராட்டு நிச்சயம் உதவாது...

‘அப்படியெனில், பணியாளர்களுடைய வேலைக்கு நன்றி சொன்னால் போதுமா’ என்று கேட்டால், அது போதாது என்றே கூற வேண்டும். வெறுமனே நன்றி என்று கூறுவது போதவே போதாது. ஒரு பணியாளராக நமக்குத் தேவை மதிப்பு மட்டுமல்ல. அந்த மதிப்பு என்பது நிறுவனத்தில் நமக்கு மனதார தரப்பட வேண்டும். வெறும் உதட்டளவில் கூறப்படும் நன்றி என்கிற வாய்ச்சொல்லானது இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே செய்யாது. அது வெறும் பசப்பு வார்த்தை யாக மட்டுமே பார்க்கப்படும். பணிக்கான அங்கீகாரத்தைத் தருவது நிறுவனத்துக்கு உதவியானதொரு விஷயமாக இருக்கும். ஆனால், பாராட்டு என்பதே நிறுவனத்துக்கும் பணியாளருக்கும் உதவி செய்யும் ஒரு விஷய மாக இருக்கும். பதவியில் இருக்கும் ஒரு நபராக நீங்கள் உளமார ஒருவரைப் பாராட்டுவது எப்படி என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி உளமார்ந்த பாராட்டும் செயல்பாடுகள் உங்களுடைய குழுவில் அடிக்கடி நடக்கும்போது பணியிடக் கலாசாரம் என்பது விரும்பத்தக்க அளவில் மிகவும் முன்னேற்றம் அடையும். அந்தச் சூழ்நிலையிலேயே நிர்வாகிகளும் பணியாளர்களும் பணியை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பிப் பார்கள். நாம் அனைவருமே பாராட்டப்படும் சூழலில் செழித்து வளரும் குணாதிசயத்தைக் கொண்டிருப்பதனாலேயே இது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

பணியாளர்களை உற்சாகப்படுத்தும் பாராட்டும் கலை!

பாராட்டுவதில் இரு மொழி...

பாராட்டுதல்களைச் செய்வதில்/பெறுவதில் ஒவ்வொரு மனிதரும் முதல்நிலை மொழி மற்றும் இரண்டாம் நிலை (primary and secondary language) மொழி என்ற இரண்டு வகை மொழிகள் நடைமுறையில் இருக்கின்றன. இவற்றை ஐந்து பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். உதாரணமாக, ஒருவருக்கு பரிசுப் பொருள்கள் தந்து பாராட்டினால் அதைப் பாராட்டாக எடுத்துக்கொள்வார். மற்றவரோ, பரிசெல்லாம் வேண்டாம். பாராட்டு என்பது உளமார இருக்க வேண்டும். வெறும் உதட்டளவில் இருந்தால், அதில் பயனில்லை. அதிலும் பரிசெல்லாம் தந்து பாராட்டுவதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை என்று சொல்வார்கள். அதிலும் பரிசைப் பெற ஒவ்வொரு முறை மேடைக்கு அழைக்கப்படும்போதும் அதைத் துன்புறுத்தலாகவே பார்ப்பார்கள்.

இந்த நுணுக்கமான கலையை ஐந்து விதமான மொழிகளில் (இங்கே மொழி என்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது பாராட்டப் படும் நடைமுறையை) கூறமுடியும் என்று சொல்லும் ஆசிரியர்கள் அவற்றைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளனர்.

வார்த்தைகள் மூலம் பாராட்டு...

வார்த்தைகள் வாயிலாக உறுதிப்படுத்திப் பாராட்டுதல் (word of affirmation) என்ற வகையில் பாராட்டப்படுவது முதல் முறை ஆகும். வாடிக்கையாளர்களின் மத்தியில் இவர்தான் எங்கள் பிரிவின் சிறந்த சொத்து. இவருடைய முயற்சியால்தான் எங்களுடைய பிரிவு வெற்றி அடைகிறது என்று சொன்னால் மட்டுமே, ஒரு சிலர் மிகவும் சிறந்த பாராட்டைப் பெற்றதாக நினைப்பார்கள். அதாவது, சரியான நபர்கள் முன்னால் சரியான வார்த்தைகளை பிரயோகிப்பதன் மூலம் தெரிவிக் கப்படும் பாராட்டை சிறந்ததாக நினைக்கும் நபர்கள் பலருண்டு.

தரமான நேரம் ஒதுக்கல்...

இரண்டாவது வகையாக ஆசிரியர் சொல்வது, தரமான நேரத்தை ஒதுக்குவதை (quality time). அப்படி என்றால், சிறப்பாகச் செயல்படும் குழு உறுப்பினருக்கு சிறப்பான நேர ஒதுக்கீட்டைத் தந்து, அவர் பேசுவதைக் கேட்டு, அவருக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருக்கிறது; அலுவலகத்துக்கு முக்கியமான நபர்அவர் என்கிற ரீதியில் நடந்துகொள்வதே தரமான நேரத்தை ஒதுக்குவது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இப்படித் தரமான நேர ஒதுக் கீட்டைப் பெறுகிற நபர் ‘நான் ஒரு முக்கியமான நபராக இந்த நிறுவனத்தில் இருக்கிறேன்’ என்ற மனநிறைவைக் கொண்டு அதன் மூலம் மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுகிறார்.

தோளோடு தோள் கொடுத்து...

மூன்றாவதாக ஆசிரியர்கள் சொல்வது, சிக்கலான தருணங் களில் தோளுடன் தோள் கொடுத்து பணிபுரிவதை. சிறந்த செயல்திறன் கொண்ட பணியாளர்களுமே சில சமயங் களில் வேலைப் பழுவால் தடுமாற்றம் கொள்ள நேரிடும். அது போன்ற தருணங்களில் அவருடைய பாஸுடன் இருந்து உதவி, வேலைகளை முடித்துக் கொடுத்தால், அதை மிகப் பெரிய அங்கீகாரமாக அந்தத் திறமை வாய்ந்த நபர் மனதில் கொண்டு செயல்படுவார். இது போன்று உயர்நிலையில் இருக்கும் அதிகாரிகளுடன் பணிபுரிபவர் களுடன் இணைந்து வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுடைய சிக்கலான பணிகளை முடிப்பதில் முனைப்புக் காட்டுவது மிகப் பெரியதொரு அங்கீகாரமாக பணியாளர்களால் பார்க்கப் படுகிறது என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

சரியான பரிசை வழங்குங்கள்...

நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது, சரியான பரிசுகளை வழங்கும் வழியை. அதிக விலை, குறைந்த விலை என்றெல்லாம் இல்லாமல் அவருக்கு என்ன பிடிக்கும், எதை அவர் மறக்க முடியாத நினைவுப் பரிசாக நினைப்பார் என்பதையெல்லாம் ஆராய்ந்து (அதற்காக நேரம் செலவழித்து) ஒரு நினைவுப் பரிசை வாங்கிக் கொடுத்தால் பாராட்டப்படும் நபர் நிச்சயமாகப் பெருமிதம் கொள்வார். ‘எந்தள வுக்கு நமக்குப் பிடித்தது என்பதை யெல்லாம் ஆராய்ந்து பரிசு தந்துள் ளார்கள். நிறுவனத்தில் நாம் நிச்சயமாக மதிக்கப்படுகிறோம் என்ற பெருமிதத்தைக் கொண்டு, அவர் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முயற்சி செய்வார் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

நல்லதொரு கைகுலுக்கல்...

ஐந்தாவது, நல்லதொரு கைகுலுக்கல், ஹை ஃபை, தோளில் தட்டுதல், கட்டியணைத்து வாழ்த்துதல் போன்ற உடலைத் தொட்டுப் (physical touch) பாராட் டுதல் எனும் நடை முறையை இந்தவகை யாருக்கெல்லாம் ஒத்துப்போகும் என்பதைக் கண்டறிய அலுவலகத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையை சற்றுக் கூர்ந்து பாருங்கள். குறிப்பாக, ஃபார்மல் அலுவலக நேரம் என்றில்லாமல் சாப்பாட்டு நேரம், அலுவலக விழாக்கள் போன்றவற்றில் அனைவரையும் கூர்ந்து நோக்குங்கள். மேலே சொன்ன உடல் மொழிகளை அதிகம் செய்யும் நபர்களுக்கு இதுபோன்ற பாராட்டுகளே சிறந்த வெகுமதி யாக இருக்கும் என்று சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

இந்த ஐந்து வகை பாராட்டுதலுக்கான மொழிகளையும் எந்த மாதிரியான நபர்களிடம் உபயோகிக்க வேண்டும், அவர்களைக் கண்டறிவது எப்படி, ஒவ்வொரு வித மொழியிலும் என்னென்ன நன்மை தீமைகள் இருக்கின்றன, யாரிடம் எந்த மாதிரியான பாராட்டு மொழி தவிர்க்கப்பட வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் ஆசிரியர்கள் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களின் மூலமும், ஆராய்ச்சி முடிவுகளின் மூலமும் எளிய நடையில் தெளிவாகப் புரியும்படி விளக்கியுள்ளனர்.

இந்த வித நடைமுறைகளுக்கான நபர்களைக் கண்டறியும் போது பொதுவாக, நாம் ஏமாந்துவிடக்கூடிய இடங்கள் எவை, ரிமோட்/விர்ச்சுவல் பணியாளர்களை எப்படிப் பாராட்டுவது, பல ஜெனரேஷன்களைச் சார்ந்த (அதிக வயது வித்தியாசம் உள்ள பணியாளர்கள்) பணியாளர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் என்ன மாதிரியான பாராட்டு தலுக்கான நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், எந்தெந்த மாதிரியான நிறுவனங்களில் எந்தெந்த மாதிரியான பாராட்டு நடைமுறைகள் எடுபடும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கியிருக்கும் இந்தப் புத்தகம் நிறுவன மேலாளர்களும், தொழில் செய்பவர்களும் அவசியம் படிக்க வேண்டும்!