முன்பின் தெரியாதவர்களுடன் பழகுவதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் என்ன என்பது பற்றிச் சொல்லும் புத்தகத்தை இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம். ஏன் நாம் முன்பின் தெரியாதவர்களிடம் பேச மாட்டேன் என்கிறோம், எப்போது பேசுவோம், அப்படிப் பேசினால் என்னவாகும் என்ற மூன்று விஷயங்களுக்கான விடைகளைத் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்தப் புத்தகத்தை எழுதியவர் இறுதிச் சடங்குகளைத் தலைமையேற்று நடத்தும் (Funeral Director) பணியில் இருந்தவரின் பேரனாவார்.

“என்னுடைய தாத்தாவின் தொழிலானது என்னுடைய வளர்ப்பு முறை மற்றும் வளர்ந்த சூழல் என்னுடைய பொதுவான உணர்வுகள், நகைச்சுவை மற்றும் உலகம் குறித்த பார்வை போன்றவற்றை ஒரு மாதிரியாகக் கட்டமைத்து இருந்தது. மனிதர்கள் அனைவரிடமே ஒரு சில மதிப்புமிக்க விஷயங்கள் இருக்கவே செய்கிறது. ஒவ்வொருவரிடமும் உங்களை ஆச்சர்யப் படுத்தும் விஷயமோ, மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயமோ, திகிலடையச் செய்யும் விஷயமோ, திருந்தவைக்கும் அளவிலான விஷயமோ இருக்கவே செய்யும்.
அவர்களுடன் பழகினால் மட்டுமே நம்மால் அந்த விஷயம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும். இவற்றையெல்லாம் நான் எங்கே யிருந்து கற்றுக்கொண்டேன் தெரியுமா..?” என்று கேட்கும் ஆசிரியர் அந்த நிகழ்வையும் சொல்கிறார்.
ஒரு நாள் டாக்சியில் செல்லும்போது பெண் ஓட்டுநர் அந்த டாக்சியை ஓட்டினாராம். சாதாரணமாக டாக்சி ஓட்டுநரிடம் பேசும் பேச்சான இதே ஊர்தானா, எவ்வளவு நாளாக இந்தத் தொழிலில் இருக்கிறீர்கள், எப்படிப் போகிறது தொழில் என்ற கேள்விகளைக் கேட்டு முடித்தபோது, அந்த ஓட்டுநர் அவருடைய கதையைச் சொன்னாராம்.
அந்தப் பெண்மணி ஒரு பெரும் பணக்கார வீட்டில் பிறந்தவராம். பிறந்த சிறிது நாள்களில் அவர்கள் முறைப்படி ஒரு சடங்கு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் காலில் சிறிய குறைபாடு உருவாகிவிட்டதாம். அந்தக் குறை பாட்டுக்காக அவரை அனைவரும் கிண்டல் செய்வார்களாம். அவருடைய பெற்றோரும் கூட அந்த பிரச்னையை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டார்களாம். வளர ஆரம்பிக்கையில் இந்தக் குறைபாட்டால் அவரால் அவ்வப்போது சரியாக நடக்க முடியாமல் அடிக்கடி கீழே விழுந்தும் விடுவாராம். அதற்கு என்னுடைய பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? என்று கேட்டாராம்.

‘‘பெரிய டாக்டரிடம் அழைத்துச் சென்றார் களா? தெரபிஸ்ட்டிடம் கூட்டிச் சென்றார் களா?’’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, அவர் சிரித்தாராம். ‘‘என்னை நடன வகுப்பில் சேர்த்துவிட்டார்கள் என்றாராம். “காலில் பிரச்னைக்கு ஏன் நடன வகுப்பு...” என்று கேட்டதற்கு, “நான் கீழே விழும்போது நளினமாக விழ வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் நினைத்தார்கள்” என்றாராம்.
“பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் என்ன இது முட்டாள் தனமான முயற்சி என்று நினைத்தேன். ஏற்கெனவே கூறியபடி, என்னுடைய தாத்தாவின் தொழில் ரீதியாகப் பல்வேறு விதமான மனிதர்களின் கதையைக் கேட்டிருந்த எனக்கு முற்றிலும் புதிய நபர் ஒருவர் இப்படி யெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் என்று சொன்னது மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. அந்தப் பெண் டிரைவரிடம் பேசிய பின்னர்தான் முன்பின் தெரியாதவர்களிடம் பேசிப் பழகுவதன் அவசியத்தை நான் உணர்ந்தேன்” என்கிறார் ஆசிரியர்.
“எட்டு மணி நேர வேலை, பராமரிக்க கைக்குழந்தை, வேலை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சு, வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் படித்தல், வெட்கத்தை விட்டுச் சொன்னால் நிறைய ஸ்மார்ட்போனை நோண்டுதல் என்ற எல்லைக்குள்ளேயே சக்கரவளையம் வந்துகொண்டிருந்த எனக்கு, புதியவர்களிடம் பழக வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இந்த டாக்சி டிரைவர் பெண்மணியிடம் பேசிய பின்னர் எனக்குத் தோன்றியது’’ என்கிறார் ஆசிரியர்.
ரிச்சர்ட் சென்னட் எனும் சோஷியாலஜிஸ்ட், ‘வாழ்க்கை யில் சிக்கல்கள் வரும்போது மட்டுமே நாம் முன்பின் தெரியாதவர்களிடம் பேச முயல்கிறோம்’ என்கிறார். உதாரணத்துக்கு, வழிதெரியாமல் சிக்கிக்கொண்டபோது வழிகேட்டல், போனில் பேசி பீட்சா போன்ற உணவுகளை ஆர்டர் செய்தல் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே. அதுவும் இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்த பின்னால், முன்பின் தெரியாதவர்களுடன் பேசுவதற்கு இருந்த கொஞ்சநஞ்ச வாய்ப்பும் மிகவும் குறைந்துபோய்விட்டது. தெரிந்தவர்களிடம்கூட பேசும் பேச்சின் அளவே குறைந்து போனதற்கு காரணம் இதுதான் இல்லையா’’ என்று கிண்டலாகக் கேட்கும் ஆசிரியர், ‘‘முன்பின் தெரியாதவர்களிடம் பேசினால் சிக்கல்கள் வரக்கூடும் என்று நினைத்து, போனுக்குள் மூழ்கி சோஷியல் மீடியாவில் இருக்கும் அதிக அளவிலான சிக்கலான விஷயங்களில் நாம் நம்மை மூழ்கடித்துக்கொள்கிறோம்’’ என்கிறார்.
அது சரி, நாம் ஏன் முன்பின் தெரியாதவர்களிடம் போய் பேசுவதில்லை? அதற்குப் பல காரணம். ‘‘நாம் என்ன அவர்களிடம் போய் பேசுவது? அவர்கள் வந்து பேசினாலே எனக்கு எரிச்சலாக வரும். ஒரு கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டு பில் போடும்போது பில் போடும் நபர் கேஸுவலாக, ‘‘அப்புறம் சார், எப்படி இருக்கீங்க, பண்டிகைக்கு ஊருக்குப் போனீர்களா’’ என்று கேட்டால், ‘இந்த ஆளுக்கு என்ன கவலை...’ என்று எனக்கு எரிச்சலே உருவாகும். ஆனாலும், டாக்சி டிரைவரிடம் பேசியது போன்ற தருணங்களும் என் வாழ்வில் இருந்தது. அந்த மாதிரி சூழல்களில் நான் எதையாவது புதியதாகத் தெரிந்து கொண் டேன். ஒரு நுட்பமான பார்வை, ஒரு ஜோக், ஒரு விஷயம் குறித்த மாற்றுச் சிந்தனை என முன்பின் தெரியாத நபர்களுடன் செய்யும் உரையாடலின் முடிவில் ஏதாவது ஓர் உதவியான விஷயம் இருக்கவே செய்தது” என்கிறார் ஆசிரியர்.
“இதையெல்லாம்விட முன்பின் தெரியாதவர்களிடம் உரையாடிய பின்னால் எனக்கு ஒரு நிம்மதி கிடைத்ததைப் போன்ற உணர்வு மேலிட்டது. இந்த உணர்வு எதனால் என்பதை நான் ஆராய விரும்பினேன். இது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு கம்யூனிகேஷன் குறித்து வகுப்பு கள் எடுக்கும் ஒரு நிபுணரிடம் கேட்டேன். ‘‘அதுதான் முன்பின் தெரியாத நபர்களுடன் செய்யும் உரையாடலின் மகத்துவமே. முன்பின் தெரியாத நிறைய நபர்களுடன் இன்னும் பழகிப் பாருங்கள். இந்த உணர்வு இன்னும் மேம்படும்” என்றார்.
“இவ்வளவு நிம்மதி உணர் வைத் தரக்கூடிய ஒரு விஷயத்தை நாம் ஏன் வேண்டி விரும்பி செய்வதில்லை? ஏனென்றால், புதியதாக முன்பின் தெரியாதவர் களிடம் உரையாட முனைபவர் களுக்கு எக்கச் சக்கமான பயம் மனதில் இருக்கும். ஹிட்ச்காக்கின் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’ படம் மனதின் முன் ஓடும். முன்பின் தெரியாதவர் களிடம் எதையாவது உளறிக் கொட்டி, அந்த சினிமாவில் நடந்ததைப்போல் கொலை ஏதாவது நடந்துவிட்டால்..? என்றெல்லாம் தோன்றும்.
இந்த பயம் இன்று, நேற்று என்றில்லை. காட்டில் மனிதன் வேட்டையாடிப் பிழைத்த காலத் திலிருந்து இருந்து வந்துள்ளது. இப்படி பயந்து பேசாமல் பழகாமல் இருந்தால், தனிமையைத் தவிர வேறு எதுவும் நம்முடன் இருக்காது. வளர்ந்த நாடுகளில் இந்தவித பயம் அதிகமாக இருப்பதால்தான் அமெரிக்கா மற்றும் யுகே போன்ற நாடுகளில் வயது முதிர்ந்தவர்கள் பலரும் தனிமையில் தவிக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள். மேலும், புகைபிடித்தல் அளவுக்குத் தனிமை என்பதும் உங்களுடைய உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஒன்று என்கின்றன ஆய்வுகள்” என்கிறார் ஆசிரியர்.
“ஏன் தனிமை இன்று அதிகமாகி விட்டது? தொழில்நுட்ப வளர்ச்சி என்பது முன்பின் தெரியாதவர் களை நாம் தவிர்ப்பதற்கான முழுமுதல் கேடயமாக இருக்கிறது. இதனால் நம்முடைய சோஷியல் ஸ்கில் (மனிதர்களுடன் உறவாடும் திறன்) வெகுவாகக் குறைந்து போகவும் புதியவர்களைச் சந்திக்காமலேயே போகவும் செய்கிறோம். நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் போனா லுமே தொழில்நுட்பம் வாயிலாக நாம் நமக்குத் தெரிந்தவர் களுடனேயே இணைந்திருக் கிறோமே தவிர, அக்கம்பக்கம் வசிக்கும் முன்பின் தெரியாத நபர்களைக் கண்டுகொள்வதே இல்லை.
ஒரே காலனியில் அடுத்தடுத்து வசித்தாலுமே பழக்கம் என்பது பெரிய அளவில் இல்லாதுபோய் விடுவது இதனால்தான். இதைவிட முக்கியமான காரணம், முன்பின் தெரியாத நபர்கள் குறித்து நம்முள் விதைக்கப்பட்டிருக்கும் (முன்பின் தெரியாதவர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்கிற எண்ணம்) மிகவும் மோசமான அபிப்பராயம் இந்தவித தொடர்பின்மையை அதிக அளவில் ஊக்கு விக்கிறது” என்கிறார் ஆசிரியர்.
“முன்பின் தெரியாதவர்களிடம் பழகுவதன் மூலம் நாம் மேம்பட்ட, ஸ்மார்ட்டான மற்றும் மகிழ்ச்சியான நபராக வாழ்வோம். இதையெல்லாம் தாண்டி நமக்கு இந்த உலகம் குறித்து குறைந்த அளவு பயமே இருக்கும். மேலும் முன்பின் தெரியாதவர்களுடன் உரையாடுவது நமக்கு புதிய வாய்ப்பு களையும் உறவுகளையும், உலகம் குறித்த புதிய பார்வை யையும் தரவல்லது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்” என்கிறார் ஆசிரியர்.
“முன்பின் தெரியாதவர் என்று நினைத்து ஒதுங்கி இருக்காமல், புதிதாகச் சந்திக்க இருப்பவரின் குணம், அவரும் நாமும் எப்படிப்பட்ட விஷயங்களில் இணக்கமாகப் போகிறோம் அல்லது எதிரும்புதிருமாக இருக்கிறோம் என்பது போன்ற விஷயங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இது நம்முடைய நட்பு வட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் இந்த உலகத்தில் வெற்றிகரமாக இயங்கவும் பெருமளவு நமக்கு உதவும்” என்கிறார் அவர்.
பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களைக் கொண்டும், ஆராய்ச்சி முடிவுகளை மேற்கோள் காட்டியும் எழுதப் பட்டுள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன்பெறலாம்.