Published:Updated:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற்ற மனிதரா?

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற்ற மனிதரா?

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

வாழ்வின் உண்மையான வெற்றி எது, உங்களுடைய தடத்தை இந்த உலகத்தில் நீங்காமல் இருக்கும் அளவுக்கு எப்படி பதித்துச் செல்வது, அதுவும் பணம், புகழ் மற்றும் அதிகாரம் போன்றவற்றை எல்லாம் துரத்திச் செல்லாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
 The Secret Society of Success 
ஆசிரியர்: 
Tim Schurrer
பதிப்பகம்:‎ 
Thomas Nelson Publishers; ITPE edition
புத்தகத்தின் பெயர்: The Secret Society of Success ஆசிரியர்: Tim Schurrer பதிப்பகம்:‎ Thomas Nelson Publishers; ITPE edition

எது வெற்றி..?

‘‘பணம், புகழ் மற்றும் அதிகாரம் இல்லாமல் செல்வாக்கு மிக்க நபராக உருவெடுப்பது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். இந்த மூன்று மட்டுமே வெற்றிக்கான அடையாளம் இல்லை. இந்த உலகம் இதுவரை வெற்றி என்று எதைச் சொல்கிறதோ, அதெல்லாம் வெற்றிக்கான அறிகுறி இல்லை. ஒருவர் மில்லியன் டாலர் சம்பாதித்தபின், அவர் வெற்றி பெற்று விட்டார் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாமா அல்லது பணியிடத்தில் உயர்ந்த பதவியைப் பெற்று விட்டாலோ, ஒரு பவர்புல்லான நபராக ஆகிவிட்டாலோ வெற்றி பெற்றதாக அர்த்த மாகிவிடுமா...’’ என அடுக்கடுக்கான கேள்வி களை ஆரம்பத்தில் நம்முன்னே வைக்கிறார் ஆசிரியர்.

நம்முடைய ஆழ்மனதுக்கு இவையெல்லாம் வெற்றி இல்லை என்று நிச்சயமாகத் தெரியும். ஆனாலும், இதை நோக்கித்தான் நாம் பயணிக் கிறோம். பெரிய அளவிலான சம்பள உயர்வு, பெரிய கார், பங்களா போன்றவற்றை மனதில் கொண்டே நாம் அன்றாடம் இயங்குகிறோம். இந்த விஷயங்கள் எல்லாம் கிடைக்காமல் போகும்போது, ஏக்கம், மன அழுத்தம், விரக்தி, முழுச்சோர்வு ஆகிய விஷயங்கள்தான் நமக்குக் கிடைக்கிறது.

இந்த நெகட்டிவ்வான விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமெனில், வெற்றி குறித்த நம்முடைய எண்ணங்களை (கலா சாரத்தில் ஊறிப்போய் இருக்கும் தவறான எண்ணம்) நாம் முழுமையாக மாற்றியாக வேண்டும். வெற்றி என்றால் என்னவென்று நாம் நம்முடைய மனதினுள் வரையறுத்து வைத்திருக்கிறோமோ, அதை நாம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி மாற்றி அமைக்கப்பட்ட வெற்றி குறித்த நம்முடைய வரையறை (Definition), நம்முடைய வாழ்வை சிறப்பானதாக்குவதுடன், நாம் அழியாததொரு தாக்கத்தை இந்த உலகில் ஏற்படுத்திச் செல்லவும் வழிவகை செய்யும் என்கிறார் ஆசிரியர்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற்ற மனிதரா?

இரண்டு விதமான மனிதர்கள்...

‘‘அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின், மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதும் புத்தக ஆசிரியர் டொனால்ட் மில்லருக்கு (ஸ்டோரி பிராண்ட் நிறுவத்தின் உரிமையாளர்) அவருடைய நிறுவனத்தை நடத்தித் தருகிற உதவியாளராக நான் இருந்தேன். இதன் மூலம் பல தொழில் முனைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி செய்ததில், இரண்டு விதமான மனிதர்களை என்னால் இனம் காண முடிந்தது. ஒன்று, வெற்றிக்கான அணிகலன் கலான அந்தஸ்து, அங்கீகாரம், பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு செயலாற்றும் ‘ஸ்பாட்லைட் மைண்ட் செட்’ கொண்ட மனிதர்கள். இரண்டாவது, வெற்றி குறித்த மாற்று சிந்தனையைக் கொண்ட ‘சீக்ரட் சொசைட்டி’ அங்கத்தினர்கள். இந்த இரண்டாவது வகை மனிதர்கள் பற்றிய பல்வேறு விஷயங்களைத் தருவதுடன், அவர்கள் மாதிரி உருமாற்றிக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.

‘எனக்கு இதில் என்ன இருக்கிறது..?’

உலகம் முழுவதிலும் இருக்கும் பிசினஸ் ஸ்கூல்களில் மார்க்கெட்டிங் குறித்து சொல்லித் தரும்போது, ‘இதில் எனக்கு என்ன இருக்கிறது?’ என்கிற கேள்வியை வாடிக்கை யாளர்கள் கட்டாயமாகக் கேட்பார்கள் (WIIFM – What is in it for me?) என்று குறிப்பிடுவார்கள். அவருக்கு ஏற்றாற்போன்ற விஷயங்களைச் சொன்னால் மட்டுமே அவர் அந்தப் பொருளை வாங்குவார். 1970-களில் நாம் சராசரியாக எதிர்கொண்ட விளம்பரங்களின் அளவு ஐந்நூறாக இருந்தது. இன்றைக்கு இந்த அளவு பத்து மடங்கு உயர்ந்து, ஐந்தாயிரமாக இருக்கிறது. இப்படி WIIFM என்ற கொள்கையைத் தாங்கிய கமர்ஷியல் விளம்பரங்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கும்போது, இந்த WIIFM இல்லாத தகவல்களைக் கண்டுகொள்ளாத அளவுக்கு நம் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது. இதை மாற்ற வேண்டும் எனில், நீங்கள் சொந்தமாக யோசித்து அதீத கவனத்துடன் முழுமனதாகச் செயல்பட வேண்டியிருக்கும்.

‘பொருள்/சேவையை வாங்க நினைக்கும்போதுதான் WIIFM என்ற அளவீட்டில் நாம் செயல்படுவோம். மற்ற வேளைகளில் நாம் ஏன் அப்படி செயல்படப்போகிறோம்’ என்று நீங்கள் வாதிடலாம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? நாம் அனைவருமே கொஞ்சம் கொஞ்சமாக ‘கன்ஸ்யூமர் மைண்ட் செட்’ என்னும் மனநிலையிலேயே முழு வாழ்க்கையையும் நடத்த ஆரம்பித்துவிடுவோம். லாபம் குறித்து தொடர்ந்து சிந்திப்பதே நம் ‘டிஃபால்ட் செட்டிங் ஆகிவிடும்.

இந்த வித ‘டிஃபால்ட் மோடு’தான் அங்கீகாரம் மற்றும் கவனம் பெறுதலுக்காக ஏங்கும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது. இதுவே நம்மை ‘ஸ்பாட்லைட் மைண்ட் செட்’டுக்குக் கொண்டு செல்கிறது. இதுவே நம்மை பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றை நோக்கி அலையவும் ஏங்கவும் செய்து, அதிருப்தியான மனநிலைக்கும் கொண்டு செல்கிறது. எப்போதுமே நம்முடைய ஆழ்மனதில் ஒரு ஏக்கத்துடன் வாழும் நிலைக்கு தள்ளிவிடுகிறது.

புகழுக்கு ஏங்கும் குழந்தைகள்...

இதில் என்ன கொடுமை எனில், இன்றைக்குக் குழந்தை களும்கூட இந்த மனநிலைக்கு ஆட்பட்டுவிடுகிறார்கள் என்பது தான். குழந்தைகள் யூடியூப் ஸ்டார் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் வீடியோ எடுத்து யூடியூபில் பதிவேற்றுகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதில் தவறில்லைதான். அவர்கள் சொல்லும் விஷயங்கள் யாருக்கோ பயனுள்ளவையாக இருக்கலாம்; இல்லாமலும் போக லாம். பயனுள்ள, ரசிக்கத்தக்க வீடியோக்கள் வைரலாகவும் வாய்ப்புள்ளது.

ஆனால், வைரலாக வேண்டும் என்று எதிர்பார்த்து வீடியோ எடுத்தால் என்ன ஆகும்? அப்படி நினைத்து எடுக்கப்படும் வீடியோக்களில் அர்ப்பணிப்பு இருக்காது. தவிர, மிகுந்த எதிர் பார்ப்புடன் எடுக்கப்படும் இது போன்ற வீடியோக்கள் வைரலாகவில்லை எனில், வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கமும் அதிருப்தியுமே தோன்றி மகிழ்ச்சியைக் குலைக்கும். மன மகிழ்ச்சிக்காக செய்கிற ஒரு விஷயமே கடைசியில், மகிழ்ச்சியைக் குலைக்கிற மாதிரி ஆகிவிடுவது எவ்வளவு முரண் என்று கேட்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

உங்களுக்காக நீங்கள் வாழ்ந்தால்..?

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்ட இரண்டாவது வகை மனிதர்களைக் கொண்ட சீக்ரெட் சொசைட்டியில் அங்கம் வகிக்க என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்?

இது போன்று நாம் வாழ முயலும்போது நம்முடைய வெற்றி என்பதை நாமே நிர்ணயம் செய்து அதனுள்ளேயே முழுமையாக வாழ முயல்வோம். நாம் செய்யும் விஷயங்களில் மனநிறைவு என்பது நமக்கு அதிகமானதாக இருக்கும். ஆனால், இந்த மனநிறைவு என்பது மற்றவர்களால் ஆனதாக (பாராட்டு, அங்கீகாரம், சரியாய் செய்துள்ளீர்கள் என்று நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கூறுவது போன்ற) இருக்காது. நம்மால் ஆனதாக (நல்லது செய்கிறோம், நன்றாகச் செய்கிறோம் என்ற) இருக்கும்.

இந்த நிலையைப் பின்பற்றினால் மற்றவர்கள் வெற்றி பெற நாம் உதவுவோம். நாம் இருக்கும் துறையில் பேராவலுடன் மிகவும் கடினமாக உழைப்போம். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும், நாம் பங்கேற்கும் புராஜெக்ட்டுகளையும் சிறப்பானதாக ஆக்குவோம். ஸ்பாட்லைட்டில் இருக்கும் போதும், அதில் இல்லாமல் அதன் பின்னால் இருந்து செயல்படும் போதும் ஒரே மாதிரியாக செயல்பட முடியும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்று நினைப்பதைவிட நம்மால் அவர்களுக்கு என்ன பலன் என்ற நினைப்புடன் நாம் வாழ்வோம்.

ஏன் பின்பற்ற முடியவில்லை..?

‘‘மேலே கூறிய அனைத்தும் சுலபமாகப் பின்பற்றக்கூடியதாக இருக்கிறது அல்லவா? பின் ஏன் ஒரு சிலரே இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்? ஏனெனில், இந்த நடைமுறையைப் பின் பற்றுவது சுலபமில்லை. மனிதன் பிறந்ததில் இருந்தே சுயநலம் கொண்டவன். தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றி நினைத்தே நாள்களைக் கழிப்பவன். பிறந்த குழந்தை பால் கிடைக்கும் வரை அழுகிறது. வளர வளரக் கேட்பது கிடைக்கும் வரை அடம் பிடிக்கிறது. ஆனால், ஒரு முழு மனிதனாக உருவெடுத்த பின்னால், மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது எப்படி என்று சிந்தித்து வாழுங்கள் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமாகும்? எனவே, நீங்கள் இந்த உலகம் புகட்டும் வெற்றி என்ற தவறான பாதையை விட்டுவிட்டு, இந்தப் புத்தகம் செல்லும் கருத்துகளைப் பின்பற்றி வாழ்ந்தால், புது மாதிரியான ஊக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வீர்கள் என்று அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

இந்த மனநிலையைப் பெறுவது எப்படி, நம்மை இந்த புதிய சிந்தனைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வது எப்படி, இதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெறுவது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறியுள்ளது இந்தப் புத்தகம். இவற்றைப் பின்பற்றி இந்த சீக்ரெட் சொசைட்டியின் அங்கத்தினராக நீங்கள் மாறிய நொடியிலேயே வெற்றி உங்களுடையதாகிவிடுகிறது என்று கூறி புத்தகத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

வெற்றி என்பது குறித்த மாற்றுச் சிந்தனையையும், மன நிறைவுக்கான பாதையையும் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism