Published:Updated:

தன்னை அறிந்த தலைவனே வெற்றிக்கு வழிவகுப்பான்!

எம்.பி.ஏ புக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

தலைமைப் பதவி வகிப்பவர்கள் தோற்பது எதனால், நல்ல குழு இருந்தும் அந்தக் குழுவால் பெரியதாக எதையும் சாதிக்க முடியாமல் போவது எதனால்? தலைமைப் பதவியில் இருக்கும் நபர் தன்னைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் இருப்பது தான் காரணம். ஒரு தலைவரால் தன்னைப் பற்றியே (குணாதிசயங்கள், சிறப்புக் குணங்கள், இயலாமைகள் போன்றவற்றை) முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை எனில், என்னவாகும்?

குழுவின் செயல்பாடு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவிடும் இல்லையா? இந்த உண்மையை நச்சென்று புரியும்படி எடுத்துச் சொல்லி ஆரம்பிக்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
The Self-Aware Leader: Play to Your Strengths, Unleash Your Team
ஆசிரியர்:
John C. Maxwell
பதிப்பாளர்:
HarperCollins 
Leadership
புத்தகத்தின் பெயர்: The Self-Aware Leader: Play to Your Strengths, Unleash Your Team ஆசிரியர்: John C. Maxwell பதிப்பாளர்: HarperCollins Leadership

ஜான் சி.மேக்ஸ்வெல் என்பவர் எழுதிய ‘தி செல்ஃப் அவேர் லீடர்’ எனும் புத்தகம்தான் அது. நல்ல தலைமைப் பண்புடன் செயல்பட்டு முன்னேற்றம் காண நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது இந்தப் புத்தகம்.

சுய விழிப்புணர்வு இருக்கிறதா..?

பொதுவாக, தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றிய சரியான சுய விழிப்புணர்வைக் (self-awareness) கொண்டிராமல் இருப்பதே அவர்களுடைய செயல்பாட்டுக்கு குறுக்கே இருக்கும் பெரியதொரு தடையாக இருக்கிறது என்பதே லீடர்ஷிப் கோச்களில் (தலைமைப் பண்பு பயிற்சியாளர்கள்) பெரும்பான்மையானவர்கள் சொல்லும் காரணமாக இருக்கிறது.

தலைவர் ஒருவர் அவருக்குத் தன்னைப் பற்றிய சுயவிழிப்புணர்வு இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கான வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். ஏனென்றால், எல்லாத் தலைவர்களுக்குமே அவர்களைப் பற்றி அவர்களே புரிந்துகொள்ள முடியாத பகுதி ‘ப்ளைண்ட் ஸ்பாட்’ (blindspot) என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. இந்த ‘ப்ளைண்ட் ஸ்பாட்’டுகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் ஒரு தலைவர் தன்னைப் பற்றிப் புரிந்துகொள்ள மிக உதவியாக இருக்கின்றன.

எதிரிகள் உள்ளே இருக்கிறார்கள்...

ஒரு தலைவராக நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என்னவென்று கேட்டால் எதைக் கூறுவீர்கள்? நீங்கள் வீரமிகு தலைவராக இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதிலாக எதைச் சொல்வீர்கள்? ‘அடுத்தவர்களைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம், என்னுடைய தவறினால் தான் இந்த மாதிரியான ஆள்கள் இடைஞ்சல் களைக் கொண்டு வர முடிந்தது’ என்பதுதானே உங்களுடைய பதிலாக இருக்கும். சிறந்த தலைவர்கள் சிறந்தவர்களாக இருக்க அவர்கள் கண்டறிந்து செயல்பட்ட ஒரே ஒரு சிறந்த விஷயம், ‘எதிரிகள் வெளியே இல்லை - நமக்குள்ளேதான் இருக்கிறார்கள்’ என்பது தான் அது.

மனிதர்களின் மிகப் பெரிய பிரச்னையே சரிசெய்யப்பட வேண்டிய தன்னைத் தவிர்த்து விட்டு, உலகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சரிசெய்து விட வேண்டும் என்று துடிப்பதுதான். ஏனென்றால், எந்தவொரு காலகட்டத்திலுமே நம்மைக் குறித்த நியாயமான எடை போடுதல் ஒன்றை நாம் செய்ய முழுமனதுடன் முயல்வதே இல்லை. உலகத்தை சரிசெய்ய நினைக்கும் முன் உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள் என்பதுதான் நிஜமாகவே சுடுகிற உண்மை.

தன்னை அறிந்த தலைவனே வெற்றிக்கு வழிவகுப்பான்!

குழுவைப் புரிந்துகொள்ளுங்கள்...

‘‘நல்ல தலைமை என்பது தன்னுடன் இருக்கும் குழுவினரின் உலகம் குறித்து நல்ல புரிந்துகொள்ளலுடன் இருக்க வேண்டும். பணிவு என்றால் என்ன என்று தெரியாத நபர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் கிடைத்தால், எந்த அளவுக்கு சூழ்நிலை ரணகளமாகும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இதனாலேயே திமிர் பிடித்த/வீம்புமிக்க தலைவர்களால் நீண்ட நாள்கள் தங்களுடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை.

இந்த மாதிரியான நபர்கள் அவர்களுடைய சக பணியாளர்கள், கீழ்பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுடைய பாஸ்கள் போன்றவர்களை வெகுசீக்கிரத்தில் அந்நியப்படுத்தி விடுவார்கள். எந்த அளவுக்கு இந்த அந்நியப்படுத்துதல் என்பது இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெற்றி என்பது கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைந்துகொண்டே போகும்.

நாம் முட்டாளாக இருக்கும்போது உலகத்தையே நாம் வெற்றிகொள்ள நினைக்கிறோம். புத்திசாலியாக மாறும் அடுத்த கணமே நாம் நம்மை வெல்லவே நினைக்கிறோம். ஏனென்றால், நம்மை நம்மால் வெல்ல முடிந்தால், உலகம் சுலபத்தில் நம்முடைய கைக்குக் கிடைத்துவிடும் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

சலித்துக்கொள்ளக் கூடாது...

தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எப்போதுமே முன்னால் செல்லவே விரும்புபவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். பார்வை, சிந்தனை, செயல் என அனைத்திலுமே அவர்கள் முன்னால் செல்லவே நினைக்கிறார்கள். தலைமைப் பதவியில் இருப்பவர் அப்படி முன்னே சென்றுகொண்டிருக்கும் வேளையில், உங்களுடைய குழு உங்களுக்கு ஈடுகொடுத்து வேகமாகப் பயணிக்க முடியாத சூழலிலேயே இருக்கும். அப்போது, ‘அட, என்னப்பா... இவ்வளவு பின்னால் இருக்கிறீர்கள்’ என நீங்கள் சலித்துக்கொள்ளவே கூடாது. அப்படி சலித்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள் எனில், நீங்கள் பரபரவென்று இருப்பீர்கள்.

உங்கள் குழுவோ கொஞ்சம் மெதுவானதாக இருக்கும். உங்களுடைய சலிப்பு அதிகமாக அதிகமாக உங்கள் குழுவின் செயல்பாடு மெதுவாகக் குறையுமே தவிர, வேகம் எடுப்ப தற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, ஒரு தலைவராக நீங்கள் மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நபராக இருக்க வேண்டியிருக்கும். இந்தப் பொறுமை உங்களிடம் இருக்கிறதா என்று எடை போட்டுப் பார்த்து அதை நீங்கள் வளர்த்துக் கொண்டேயாக வேண்டும்.

பொறுப்பு உணர்ந்து செயல்படுவது...

‘‘நல்ல மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் பின்பற்ற முயலுங்கள். தீய மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்களைப்போல், நீங்கள் இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். தனி நபராக நீங்கள் பொறுப்பின்றி (Accountability) நடந்துகொள்ளும் ஆளாக இருந்தீர்கள் எனில், நிறுவனத்தில் ஒரு தலைவராக நீங்கள் மிகுந்த சிக்கல்களையே சந்திக்கவே செய்வீர்கள்.

பொறுப்பு என்பது நான் ஏன் இந்தச் செயல்களைச் செய்தேன் என்பதை விருப்பத்துடன் உடனிருக்கும் பலருக்கும் விவரிப்பது/விவரிக்கத் தயாராக இருப்பது என்றே நினைத்துக் கொள்கின்றனர். அதாவது, நான் செய்வதையே நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல், இவற்றையெல்லாம் நான் இந்த நோக்கத்துடன்தான் செய்தேன் என்பதை விவரிப்பதே பொறுப்பு என்று நினைக் கின்றனர்.

பொறுப்பு என்பது அதுவல்ல. பொறுப்பு என்பது ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் முன்பே ஆரம்பித்துவிடுகிறது. அந்தச் செயலுக்கான திட்டங் களைப் போடும் முன் ஏனையவர் களின் அறிவுரைகளைக் கேட்க முயல்வது மற்றும் அந்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது போன்றவையே பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. இதை எந்தளவுக்கு ஒப்புக்கொண்டு, ஒரு தலைவர் செயல்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் செய்யும் செயல்களில் வெற்றி வாய்ப்பு என்பது அவருக்கு அதிகமாக இருக்கிறது. ஒருவருடைய தலைமைப் பண்பு என்பது, அவரை அவர் எப்படி வழிநடத்திச் செல்கிறார் என்பதில் இருந்தே வெளிப்படுகிறது என்பதையும் நினைவில் கொள் ளுங்கள்’’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

வெறுமனே தலைமைப் பதவியைப் பெற்றுவிடுவதன் மூலமே ஒருவர் வெற்றிகரமாகச் செயல்பட்டுவிட முடியாது. அதாவது, குழுவின் முன்னேற்றத் தைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு தலைவர் தான் மட்டும் முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பதே உண்மை.

ஒரு தலைவராக நீங்கள் உங்களுடைய குழுவைக் கருணையுடன் கவனித்துக் கொள்ளத் தவறினால், நீங்கள் எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலுமே, அதை உங்கள் குழு கவனிக்கவே கவனிக்காது. ஏனென்றால், உங்களுடைய குழு உங்களுடன் சரியான உறவில் இருக்காது.

பதவியைக் குறியாகக் கொண்டு (குழு உறுப்பினர்களைக் கொண்டு) ஏணியில் ஏற நினைப்பவர்கள் போட்டியை உருவாக்குகின்றனர். உறவைக் குறியாகக் கொண்டவர் கள் குழுவின் மத்தியில் ஒரு பாலமாக இருந்து செயல் படுபவர்களாக இருக்கின்றனர். குழுவுக்கும் தலைமைக்கும் இடையே உருவாகும் போட்டி தோல்வியையே தருவதாக இருக்கும். குழுவுக்கும் தலைமைக்கும் உருவாகும் இணக்கம் வெற்றியைக் கொண்டுவந்து தரவல்லது.

‘‘வெற்றி என்பது எத்தனை தவறுகளை நீங்கள் செய்கிறீர்கள் என்பதில் இருந்து நிர்ணயிக்கப்படுவதில்லை. எத்தனை தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள் என்பதில் இருந்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. வெற்றிக்கான தலைமை என்று குழுவினர் நம்புகிற மாதிரி, இது வெற்றிக்கான குழு எனத் தன்னுடைய குழுவைத் தலைமை நம்புவதும் அவசியம்.

உறுதியாகக் கிடைத்த வெற்றிக்கான அங்கீகாரத்தைக் குழுவினர் அனைவருடனும் பகிர்ந்துகொள்வது மிக அவசியம். நிறைய பேர் ஒருங்கிணைந்து வேலை செய்தால் மட்டுமே தலைமையில் இருப்பவர்களால் வெற்றி பெறமுடியும்’’ என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தைக் கூறி புத்தகத்தை முடிகிறார் ஆசிரியர்.

புதியதாகத் தலைமைப் பதவியை ஏற்றவராக இருந்தாலும் சரி, நீண்ட அனுபவத்தைக் கொண்ட நிர்வாகியாக இருந்தாலும் சரி, தலைமைப் பதவி வகிப்பவருக்கு தேவையான சுயவிழிப்புணர்வு குறித்து அனைவருக்கும் தேவையான கருத்துகளை மிக மிக எளிய நடையில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். இதை அனைவரும் கட்டாயம் ஒருமுறை படித்துப் பயன்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு