நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

மன அழுத்தத்தை எதிர்கொள்ள பிராக்டிகல் டிப்ஸ்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

மன அழுத்தம் என்பது இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது. அதிலிருந்து மீண்டு வர முடியுமா என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி. நிச்சயம் முடியும் என்று சொல்வதுடன், ஏழே நாள்களில் மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கான வழிகளையும் சொல்கிறது ‘The Seven-Day Stress Prescription’ என்னும் புத்தகம் இந்தப் புத்தகத்தைதான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியை ‘ஸ்ட்ரெஸ்’ குறித்த ஆராய்ச்சியாளர் ஆவார். தொடர்ந்து நீண்ட நேரம்/நாள் ‘ஸ்ட்ரெஸ்’ஸில் இருக்கும்போது, அதன் காரணமாக நமக்கு வேகமாக வயதாகிவிடுகிறது என்றும், அதனாலேயே பல்வேறு விதமான நோய்களும் வந்துவிடுகிறது என்றும் எச்சரிக்கிறார் அவர். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி அவர் சொல்லும் விஷயங்களைப் பார்ப்போம்.

புத்தகத்தின் பெயர்: The Seven-Day Stress Prescriptionஆசிரியர்: Elissa Epelபதிப்பகம்:‎ Penguin Life
புத்தகத்தின் பெயர்: The Seven-Day Stress Prescriptionஆசிரியர்: Elissa Epelபதிப்பகம்:‎ Penguin Life

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை...

‘‘மன அழுத்தம் என்பதே இல்லாத உலகில் நீங்கள் வாழ விரும்பு கிறீர்களா? அதாவது, கவலை இல்லை, ஏக்கம் இல்லை, அழுத்தமும் இல்லை என்ற சூழலில் இருக்க விரும்புகிறீர்களா? இது சாத்தியமா எனில், ஒரு சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஏனெனில், மன அழுத்தம் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக, மனிதனுடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இன்றைக்கு உருவெடுத்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், மன அழுத்தம் அதாவது, ‘ஸ்ட்ரெஸ்’ என்பது இருந்தால் அதை நாம் ஏற்றுக்கொண்டும் எதிர்கொண்டும் வாழப் பழகிக்கொள்வோம். அது இல்லாமல் போனால் மிகவும் கஷ்டப் பட ஆரம்பித்துவிடுவோம் என்பதுதான் நிஜம். ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு எதிராக நாம் எதிர்வினையாற்ற முனையும்போதுதான் வாழ்க்கையில் நாம் அடுத்த நொடி, அடுத்த நாள், அடுத்த மாதம் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிடுகிறோம்.

ஆதி மனிதனில் ஆரம்பித்து இன்றைக்கு நவீன இன்டர்நெட் உலகில் வாழும் மனிதன் வரை, மனிதகுலம் கண்ட முன்னேற்றம் என்பதே ‘ஸ்ட்ரெஸ்’ என்பதை எதிர்கொண்டு, அதற்கு சரியாக எதிர்வினையாற்றியதுதான். ஏனென்றால், ‘ஸ்ட்ரெஸ்’ நம்மை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக இருக்கிறது. ‘ஸ்ட்ரெஸ்’தான் நம் சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணியாகத் திகழ்ந்து, நம் சிந்தனை சக்தி மற்றும் உடல் சக்தி ஆகிய இரண்டையும் திரட்டி ஒருங்கிணைத்து, நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி பெற செய்துவிடுகிறது. இதனால்தான் ‘ஸ்ட்ரெஸ்’ என்பது நமக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. சரியான அளவில் சரியான இடைவெளியில் நாம் எதிர்கொள்ளும் ‘ஸ்ட்ரெஸ்’தான் நம்மைத் தொடர்ந்து முன்னேறச் செய்வதற்கான காரணியாக இருக்கிறது.

மனிதர்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்களைத் தருகிற ‘ஸ்ட்ரெஸ்’ இன்றைக்கு மனிதர்களுக்கு ஒரு பிரச்னையாக உருவெடுத்துவிட்டது. ஏனென்றால், சரியான அளவில் சரியான இடைவெளியில் நாம் எதிர்கொண்டிருந்த நிலைமையை ஒட்டுமொத்தமாக மாற்றி, இன்றைக்கு 24 மணி நேரமும் அழுத்தத்துடன் வாழ்கிற நிலைப்பாட்டை எடுத்துவிட்டோம். ‘ஸ்ட்ரெஸ்’ எனும் கடலில் நாம் நீச்சலடிக்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று. காலை கண்விழித்தது முதல் இரவு கண்மூடும் வரை மன அழுத்தத்தைத் தொடர்ந்து எதிர்கொள்கிறோம்.

தேவைகள், இலக்குகள், போக்குவரத்து, செய்ய வேண்டிய காரியங்கள் அடங்கிய பட்டியல், எதிர்பாராமல் உருவாகிற சிறிய மற்றும் பெரிய அளவிலான சிக்கல்கள், முள்ளாய் தைக்கிற வார்த்தைகள் எனப் பல்வேறு விஷயங்களும் மன அழுத்தத்தை உருவாக்கும் ட்ரிக்கர்களாக உள்ளன. இவைதான் நம் உடலில் மன அழுத்தத்துக்கான எதிர்வினையாற்றும் ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. அவ்வளவு ஏன், நம்மைப் பற்றிய நம் எண்ணங்களே மன அழுத்தம் உருவாக காரணமாகவும் இருக்கின்றன. எனவே, ‘ஸ்ட்ரெஸ்’ என்பதை நம்முடைய வாழ்வில் இருந்து வெளியேற்றவே முடியாது. அது நம் வாழ்வின் ஓர் அங்கம். நம்மால் இதை மாற்றவே முடியாது.

எதை நம்மால் மாற்ற முடியும் தெரியுமா? மன அழுத்தத்துக்கு எதிராக நாம் ஆற்றும் எதிர்வினையைத்தான். பரபரப்பாக மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் எதிர்பாராதவை நடக்கும் என்று எதிர்பார்த்து வாழ கற்றுக்கொண்டால் அதுவே மன அழுத்தத்துக்கான அருமருந்தாக இருக்கும்.

மன அழுத்தத்தை எதிர்கொள்ள 
பிராக்டிகல் டிப்ஸ்!

‘ஸ்ட்ரெஸ்’ பற்றி புரிந்துகொள்ளுங்கள்...

இதில் கவலைப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாக கூறுவது, இந்த உலகில் வாழும் மனிதர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் ‘ஸ்ட்ரெஸ்’ லெவல் குறித்த சிக்கலைத்தான்.

‘ஸ்ட்ரெஸ்’ குறித்து முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ‘ஸ்ட்ரெஸ்’ என்பதே கூடாது என்று நாம் நினைப்பது தவறு என்பதைத்தான். ‘ஸ்ட்ரெஸ்’ என்பது மோசமான ஒன்றல்ல. ஆனால், தொடர்ச்சியாக நாள் முழுக்க அழுத்தத்தில் இருப்பதுதான் மோசமான ஒன்றாகும். தொடர்ந்து நம்மை அழுத்தும் ‘ஸ்ட்ரெஸ்’ நமது உடலில் இருக்கும் செல்களை சீக்கிரமே முதிர்வடையச் செய்துவிடும்.

மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி என இன்றைக்கு நமக்குச் சொல்லப்படும் அறிவுரைகள் எல்லாம் நல்லவையே. ஆனால், அவை முழுமையான அறிவுரைகள் அல்ல. அரைகுறை யானவை என்பதுதான் உண்மை. ‘ஸ்ட்ரெஸ்’ தரும் விஷயங்களை விட்டு வெளியேறுங்கள். ரிலாக்ஸாக இருக்கத் தேவையான ஸ்ட்ராட்டஜிக்களைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்றே பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். இவை எல்லாம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான முதல் படிகளே ஆகும்’’ என்று சொல்லும் ஆசிரியர், இந்தப் புத்தகத்தில் ‘ஸ்ட்ரெஸ்’ மிகுந்த சூழ்நிலை களை எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான விஷயங்களைக் கூறியுள்ளார்.

‘‘நான் எச்சரிப்பது ஒரே ஒரு விஷயம் குறித்துதான். ‘ஸ்ட்ரெஸ்’ என்பதை ஒரேயடி யாக நீங்கள் ஒதுக்கிவிட முடியாது. குழந்தை வளர்ப்பதில் இருந்து நல்லதொரு கரியரை அமைத்துத் தருவது, வாழ்வில் நல்லதொரு நிலைக்கு வருவது வரை இந்த உலகில் அத்தனை விஷயங் களும் ‘ஸ்ட்ரெஸ்’ உருவாக்கும் விஷயங்களே ஆகும்.

ஏன் இவற்றால் ‘ஸ்ட்ரெஸ்’ நமக்கு உருவாகிறது? ஏனென் றால், இவை அத்தனையிலும் நாம் அதீத கவனம் வைக் கிறோம். இம்மி அளவும் நாம் இதில் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் பெரும் கவலை கொள்கிறோம். ‘இது பற்றி கவலைப்படா தீர்கள்’ எனில், நாம் கேட்டுவிடுவோமா?

சரி, நாம் நம்முடைய வாழ்க்கை குறித்து நாம் கவலைப்பட்டுக்கொண்டே தான் இருப்போம். கொஞ்ச நேரம் கவலைப்படுவதை விட்டுவிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்கள் என்று சொன் னால் அது நல்ல வழியாகத் தெரிகிறது இல்லையா?

ஓகே, நாம் ரிலாக்ஸ் செய் கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அடுத்து ஒரு பெரிய ‘ஸ்ட்ரெஸ்’ வெள்ளம் நம்மை நோக்கி வருகிறது என்றால் என்னவாகும்? என்னதான் நாம் ரிலாக்ஸ் செய்திருந்தாலும் அந்த வெள்ளம் நம்மை மூழ்கடித்து விடவே செய்யும்.

எப்படித் தவிர்க்கலாம்..?

நம் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் நிச்சயமற்ற தன்மைக்கு நாம் ஆற்றும் எதிர்வினையை நிறுத்தி வைக்க முயற்சி செய்வதே மன அழுத்தம் தவிர்க்க உதவும் வழியாகும். தவிர்க்கவே முடியாத இந்த நிச்சயமற்ற தன்மையைப் பார்த்து பயந்தும் அதை எதிர்த்து போராடவும் முயல் வதாலேயே ‘ஸ்ட்ரெஸ்’ என்பது நமக்குள் உருவாகிறது.

வாழ்வில் உருவாகும் நிச்சயமற்றதன்மை என்பது தவிர்க்க முடியாதது என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு இந்த நிச்சயமற்ற தன்மையே நம்முடைய வாழ்க்கையை வடிவமைக் கிறது என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டு செயல் பட முயல வேண்டும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்...

நிச்சயமற்றத் தன்மையை எதிர்கொள்ள பழகிக்கொள் வது எப்படி, நம் கட்டுப் பாட்டில் இல்லாத விஷயங் கள் குறித்து கவலைப் படுவதை அறவே தவிர்ப்பது எப்படி, மன அழுத்தத்துக்கு நாம் ஆற்றும் எதிர்வினை யானது நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உதவும் அளவுக்குப் பார்த்துக்கொள்வது எப்படி, நம்முடைய உடலின் இயக்கத்தை மன அழுத்தத்தை சுலபமாக ஏற்றுக்கொள்ளுமாறு பழக்கப்படுத்திக்கொள்வது எப்படி, நம்முடைய நரம்பு மண்டலம் மன அழுத்தத்துக்கு ஆற்றும் எதிர்வினையை மட்டுப் படுத்தப் பழகுவது எப்படி, நம்முடைய பிசியான ஷெட்யூல் வாழ்க்கையில் சந்தோஷமான விஷயங் களை மட்டுமே நிரப்பப் பழகுவது எப்படி என்பதை எல்லாம் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்த வழிகள் அனைத்தையும் நடைமுறைப் படுத்துவது எப்படி என்பதை விளக்கமாக தனித்தனி அத்தியாயங்களில் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியை. ‘‘இந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ‘ஸ்ட்ரெஸ்’ஸை நம்மால் சுலபமாக எதிர்கொள்ளவும் கையாளமுடியும்’’ என்கிறார் அவர்.

துன்பம் வரும் வேளையில சிரிங்க...

‘‘நிச்சயமற்றதன்மை உங்கள் முன்னே தோன்றும் போது சிரித்துப் பழகுங்கள். நிச்சயமற்றதன்மை ஒரு விஷயத்தில் இருக்கிறது எனில், அதனால் கெட்டது மட்டுமல்ல, நல்லதும் நடக்கலாம். நிச்சய மற்ற சூழலில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. வாழ்க்கை முழுக்க முழுக்க வாய்ப்புகளை வழங்கு வதாகவே நமக்கு இருக் கிறது. இந்த வாழ்க்கையை எதிர் கொண்டு வெற்றி கரமாகப் பயணிக்க இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மனதில்கொண்டு செயல்பட்டால், ‘ஸ்ட்ரெஸ்’ உங்களை அண்டவே அண்டாது’’ என்று முடிக்கிறார் ஆசிரியை.

பரபரப்பாக செயல் படுகிற அத்தனை பேரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!