Published:Updated:

வேலை செய்யவிடாமல் தடுக்கும் சக ஊழியர்களை சமாளிக்கும் வழிகள்! அலுவலக ஊழியர்களுக்கான அசத்தல் டிப்ஸ்

ஊழியர்களுக்கான டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஊழியர்களுக்கான டிப்ஸ்

MBA BOOKS

வேலை செய்யவிடாமல் தடுக்கும் சக ஊழியர்களை சமாளிக்கும் வழிகள்! அலுவலக ஊழியர்களுக்கான அசத்தல் டிப்ஸ்

MBA BOOKS

Published:Updated:
ஊழியர்களுக்கான டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஊழியர்களுக்கான டிப்ஸ்

நம்மில் பெரும்பாலானோர் முட்டாள்தனம் மிகுந்த மற்றும் எரிச்சலூட்டக்கூடிய செயல்களைச் செய்யும் நபர்களுடன் பணிபுரிய வேண்டியுள்ளது. அலுவலகத்தில் தேவையே இல்லாமல் பிரச்னைகளை உருவாக்கக்கூடிய இதுமாதிரியான நபர்களை உதாவக்கரைகள் என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவர்களைக் கண்டறிவது எப்படி, அவர்களைக் கையாள்வதற்கான யுக்திகள் என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
    Wait, I’m Working With Who?!?
ஆசிரியர்:
Peter Economy
பதிப்பாளர்:
Career Press, Harper
Collins India 
Private Limited
புத்தகத்தின் பெயர்: Wait, I’m Working With Who?!? ஆசிரியர்: Peter Economy பதிப்பாளர்: Career Press, Harper Collins India Private Limited

புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. ‘‘நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் முதன்முதலாக என்னிடம் ஒருவர் வந்து பேசினார். கொஞ்ச நாள்கள் அவருடன் பழகிய பிறகு தான் தெரிந்தது, அலுவலகப் பணிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையிலான இன்டர்நெட் பிரெளசிங் செய்தல், போன் பேசுதல், பொழுதுபோக்குதல் போன்றவை மட்டுமே அவருடைய வேலை என்பது. பாஸ் எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை முடிக்க படாதபாடுபடுவதைப் போன்ற ஆக்டிங்கை சூப்பராகச் செய்வார். எதையும் குறித்த காலத்தில் முடிக்க மாட்டார். யாரிடமாவது வேலையை சாதுரியமாகத் தள்ளிவிட்டுவிடுவார். இப்போது புதிதாய் நான் போய் அவரிடம் சிக்கிக்கொண்டேன்.

கொஞ்ச நாளில் எனக்குத் தெளிவாக ஒன்று புரிந்தது. சக பணி யாளர்கள் எல்லோரும் அவரைக் கண்டால் தெறித்து ஓடுகின்றனர். ஏனென்றால், அவர் ஓர் உதவாக்கரை. ஒருவழியாய் என் பாஸிடம் பயத்துடன் தயங்கித் தயங்கி நான் விஷயத்தைச் சொல்ல அவரோ, அந்த ஆளா, அவர் அப்படித்தான்’’ என்று உடனே அவரை ரூமுக்கு வரச் சொல்லி, ‘‘நீங்கள்தான் வீணாய்ப் போய்விட்டீர்கள் எனில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஆளையும் சேர்த்து வீணடிக்காதீர்கள்’’ என்று எச்சரிக்க, அதற்கப்புறம்தான் எனக்கு அலுவலகச் சூழலே புரிந்தது. பாஸ் மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால், நான் வேறு வேலையைத் தேடிப் போயிருப்பேன்.’’

இது மாதிரியான அனுபவம் நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். என்ன, நாம் பாஸிடம் சொல்லாமல், நாமே இது மாதிரியான உதவாக்கரை நபர்களிடம் இருந்து விலகியிருப்போம் இல்லையா? இது போன்ற நபர் களுடன் ஆரம்பத்தில் நட்பு பாராட்டி விட்டால் அந்த நட்பைவிட்டு வெளியேறுவதற்கு எக்கச்சக்கமான துணிவு வேண்டும்.

வேலை செய்யவிடாமல் தடுக்கும் சக ஊழியர்களை சமாளிக்கும் வழிகள்! அலுவலக ஊழியர்களுக்கான அசத்தல் டிப்ஸ்

தொடர்ந்து அலுவலகத்துக்குத் தாமதமாக வருவது, புறம்பேசுவது, உடல்நிலை சரியாக இருக்கும்போது கூட உடல்நலமில்லை என்று பொய் சொல்லி விடுப்பு எடுப்பது, சண்டை போடுவது, பொழுதுக்கும் சோஷியலைஸ் செய்துகொண்டே இருப்பது (நண்பர்களுடன் உரை யாடுதல்/உறவாடுதல்), அடிக்கொரு தரம் யாரிடமும் பர்மிஷன் சொல்லாமல் செல்வது, சாப்பாட்டுக் காக எக்கச்சக்கமான நேரத்தை எடுத்துக்கொள்வது, சத்தம் காட்டாமல் சீக்கிரமாகவே அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுவது, பாஸிடம் பொய்யை மட்டுமே பேசுவது, சுத்தம்/சுகாதாரம் கிலோ என்ன விலை என்று கேட்பது, சொந்த வேலையை முழுமூச்சாகப் பணியிடத்தில் செய்வது போன்ற செயல்களே இது மாதிரியான உதவாக்கரை நபர்களின் குணாதிசயங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

சக பணியாளர்கள் இப்படிப்பட்ட குணாதிசயங்களுடன் இருந்தால்கூட பரவாயில்லை, நமக்கு மேலே இருந்து நம்மை வழிநடத்திச் செல்ல வேண்டிய பாஸே ஒரு உதாவக் கரையாக இருந்தால் என்ன செய்வது என்பது பற்றிச் சொல்கிறார் ஆசிரியர்.

இது மாதிரியான பாஸ்கள், அவர் களுடைய எதிர்பார்ப்பு என்பது என்ன என்பதைத் தெளிவுபடுத் தாமலே இருப்பார்கள். அப்படியே தெளிவுபடுத்திவிட்டாலும் அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்; ஒரு வேலையை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, ‘இப்போது என்ன செய்கிறீர்கள், எப்படிச் செய்கிறீர்கள், அதைச் செய்தாகிவிட்டதா, இதைச் செய்ய மறந்துவிடாமல் செய்யுங்கள்’ என மைக்ரோ மேனேஜ் செய்துகொண்டே இருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அது யாருடைய பிரச்னையோ என்பதுபோல கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். பணியாளர் களின் புரொஃபஷனல் முன்னேற்றத் துக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் பணியாளர்கள் நமக்கு அடிமையாக இருப்பதே வசதி என்ற மனநிலையில் செயல்படுவது போன்ற வற்றில் ஒரு குணத்தையோ, இந்த வித குணங்கள் பலவற்றையும் பல்வேறு விகிதாசாரத்தில் கலவையாகக் கொண்டிருப்பதே இது மாதிரியான பாஸ்களுக்கான அறிகுறிகளாகும்’’ என்கிறார் ஆசிரியர்.

‘இதெல்லாம் எனக்குப் பிரச்னையே இல்லை. அலுவலகத்தில் யார் என்ன செய்தால் என்ன, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். முன்னேற்றம் தானே வரும்’ என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் பாஸ்கூட உங்களுக்கு அறிவுரை சொல்லலாம். எல்லா நாளும் லேட்டாக வரும் பக்கத்து சீட்டுக்காரர், அந்த ஆளிடம் பேசினாலே வெறுப்பாக இருக்கிறது. அவ்வளவும் பொய், விஷம் என்ற ரீதியிலான நபர், இவரோடு எல்லாம் வேலை பார்க்க வேண்டுமென்பது என் தலையெழுத்து என்பது போன்ற சூழ்நிலையைத் தரும் நபர்களின் பட்டாளம் போன்ற நிலையில் நாம் பணிபுரிந்தால் நாளடைவில் நம் உற்பத்தித்திறன் என்பது நம்மை விட்டு விட்டு வெகுதூரம் ஓடிவிடும் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

உங்கள் அலுவலகத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இது மாதிரியான நபர்கள்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய 25 கேள்விகளையும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார் ஆசிரியர்.

எதிலும் கவலையும் குறையும் அவநம்பிக்கையும் கொண்டிருப்பது, பொறாமைத் தீயில் எப்போதுமே வெந்து கொண்டிருப்பது, எதிலும் எதற்கும் எல்லோரையும் மிரட்டுவது, யார் செய்த வேலையையும் தான் செய்தேன் என்று பெயர் வாங்கிக்கொள்ள முயல்வது, வதந்தியும் புரணியும் பேசித் திரிவது, எப்போதும் சோம்பேறித்தனத்துடன் இருப்பது, மைக்ரோமேனேஜ் செய்ய முயல்வது, எல்லோரையும் தனக்குப் போட்டியாக நினைக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது, தற்பெருமை மட்டுமே பேசுவது, புகார் கூறுவதையே முழுமுதல் தொழிலாக இருப்பது, எவரையும் எல்லாவற்றிலும் குறை கண்டு பிடித்துத் தூற்றுவது, உடன் பணிபுரிபவர் மனது புண்படும் வகையில் புறம் பேசுவது, முதுகில் குத்துவது, எதற்கும் அசைந்து கொடுக்காமல் பதிலே பேசாமல்/போடாமல் இருப்பது, வெட்டிப் பேச்சே பிழைப்பாய் திரிவது, அலுவலகத்துக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்ற பெரும் குணாதிசயங்களே இது மாதிரி யான உதாவக்கரை நபர்களிடம் நிறைந்திருக்கும்’’ என்று சொல் கிறார் ஆசிரியர்.

இதுமாதிரியானவர்கள் நம்முடைய எமோஷன்களுடன் விளையாடுவதால், இவர்கள் நமக்கு பெரும் தீங்கு விளை விப்பவர்கள் என்று தெரிந்தவுடன் அவருடன் டீல் செய்யும்போது நம்முடைய எமோஷன்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டு, செயல்பட பழகிக்கொள்ள வேண்டும். மேலும், இது மாதிரி நபர்கள் அலுவலகத்தினுள் விளையாடும் விளையாட்டில் பங்கேற்காமல் ஒதுங்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சண்டைகள் வந்தாலோ, சண்டைபோடும் சூழல் உருவனாலோ அதை நீர்த்துப் போகச் செய்யும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களை விட்டு ஒதுங்கிப் போகாமல் எதிர்ப்புக் குரல் கொடுத்து அவர்களை ஒழிக்கவும் முயல வேண்டும். ஏனென்றால், நமக்கேன் வம்பு என்று இவர்களை விட்டு ஒதுங்கி அனைவரும் போகும்பட்சத்தில் அவர்கள் அலுவலகத்தினுள் விருட்சமாகக் காலூன்றிவிடும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்காக சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்திவிடக் கூடாது. எது நாளடைவில் நம்மையும் நம் நிறுவனத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அதை வெட்டி எறிய முற்பட வேண்டும். நம்மை முன்னேற விடாமல் தொந்தரவு செய்யும் இது மாதிரியான நபர்களைச் சரி செய்கிறேன் என்று இறங்கி, நீங்களும் அவர்களைப் போல ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வும் உங்களுக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால், இவர்கள் குணம் நம்மிடம் எளிதில் வந்து ஒட்டிக் கொள்ளும். இதனால் மேலே நாம் பார்த்த குணங்களில் ஏதாவது ஒன்றை நாம் பெற்றுவிட்டோமா என்று அப்போதைக்கு அப்போது நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இது மாதிரி நபர்கள் அலுவலகத்துக்குள் கால்பதிக்காமல் இருக்க ஒரு நிர்வாகியாக நீங்கள் இருப்பின் ஆள்களைப் பணிக்கு சேர்க்கும்போது கொஞ்சம் நிதானித்து தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் நபர் அலுவலகத்தில் சக ஊழியர்களைக் கெடுக்கும் ஆள் இல்லை என்பதை நன்கு ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னர், பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

மிகச் சரியான உதவாக்கரையாக இல்லாமல் கொஞ்சம் முன்னேயும் பின்னேயுமான குணாதிசயங்களுடன் சிலர் பணிக்கு அமர்த்தப்பட்டுவிடலாம். அவர்களுக்குச் சரியான முறையில் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் முழு உதவாக்கரையாக உருவாகாமல் மீட்டெடுத்து அவர்களுக்கும் நிறுவனத் துக்கும் நல்லதைச் செய்யுங்கள். திருத்தவே முடியாது என்று நினைக்கும் நபர்களை எள்ளளவும் தயக்கம் இல்லாமல் பணியிலிருந்து நீக்கி விடுங்கள்’’ என்று கூறி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

உதவாக்கரை (Jerk) மனிதர்களைப் புரிந்து கொண்டு, அலுவலகச் சூழலில் அவர்களைக் கையாள்வது எப்படி, அவர்களுடைய உறவில் இருந்து மீண்டுவருவது எப்படி மற்றும் அவர் களுடனான உறவை வளர விடாமல் தடுப்பது எப்படி என்பதை, பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங் களுடன் தெள்ளத் தெளிவாக விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பயன்பெறலாம்.