இன்றைக்கு உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களைவிட மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். அதிலும் மனச்சோர்வு என்கிற பிரச்னை பலரையும் வாட்டி வதைக்கிறது. இந்தப் பிரச்னைக்கான காரணங்களை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வையும் தருகிறது இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் ‘வொய் ஹஸ் நோபடி டோல்ட் திஸ் பிஃபோர்’ என்கிற புத்தகம்.

மனச்சோர்வு என்பது...
‘‘நாம் அனைவருமே அவ்வப்போது மனச் சோர்வை அடையவே செய்வோம். எப்போது மனச்சோர்வு அடைகிறோம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒரு சிலர் ஆண்டுக்கு ஒருமுறையும், ஒரு சிலர் நாளுக்கு ஒருமுறையும், ஒரு சிலர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையும் மனச்சோர்வு அடைவார்கள். மனச்சோர்வுக்கு சைக்காலஜிஸ்ட்டுகளிடம் தெரபிக்கு வருகிறவர்கள் அது பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ளமல் நீண்ட நாள்களுக்கு தன்னுள்ளேயே போட்டுப் புதைக்க முயன்றும் அடக்கியாள முயன்றும் தோற்றுப் போனவர்கள்தாம்.
இன்னும் சிலர், மனச்சோர்வு என்பது மூளையின் குறைபாடு என்று நினைத்து, அதை மறைக்க நினைக்கின்றனர். இதனால் அன்றாட வாழ்வில் எப்போதுமே துருதுருவென்றும், எல்லோரிடமும் மகிழ்ச்சியைக் காட்டியும் செயல்படுகின்றனர். ‘உள்ளே அழுகிறேன். வெளியே சிரிக்கிறேன்’ என்ற வேஷத்தை பிரமாண்டமாகப் போடுகிறவர்கள் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள். இது நாளடைவில் தீராத தலைவலியைக் கொண்டுவந்துவிடுகிறது.
‘‘மனச்சோர்வு என்பது ஒருவருக்கு அவருடைய தனிப்பட்ட (மனதினுள்ளே நிகழும் விஷயங்கள்) மற்றும் சுற்றுச்சூழலில் (நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்) இருக்கிற விஷயங்கள் என்ற இரண்டுமே காரணியாக இருக்கிறது. எதனால் நமக்கு மனச்சோர்வு வருகிறது என்பதை சரியாக நாம் கண்டறிந்து விட்டால் (நம்மால் மட்டுமே அது முடியும்) அதற்கேற்ப நம்முடைய பயணத்தை மாற்றி அமைத்து பிரச்னைகளைச் சரிசெய்துகொள்ள முடியும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மனநிலை (Mood) என்பது நம்மை நிர்ணயிக்கும் ஒரு விஷயம் இல்லை. நாம் அனுபவிக்கும் ஒரு விஷயம். வெளி உலக வெப்பம் போல் ஒரு நாள் குளிராகவும், ஒரு நாள் வெப்பமாகவும் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் மனச் சோர்வு என்பதை ஒருவரால் மொத்தமாகத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால், வாழ்க்கை நமக்கு வெற்றி, தோல்வி, அழுத்தம், இலகு என்பது போன்ற பல சூழல்களை வழங்குகிறது. எப்படி வெயில் காலத்தில் அதற்கேற்ற ஏற்பாடு களையும் (இளநீர், தர்பூசணி என) குளிர் காலத்தில் அதற்கேற்ப ஏற்பாடுகளையும் (ஸ்வெட்டர், டீ என) செய்துகொள்கிறோமோ, அதே போல்தான் இந்த மனநிலையிலும் நாம் செய்துகொள்ள வேண்டும். இவற்றைப் பரிபூரணமாக உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள ஆரம்பித்தால் சுலபமாக நாம் இவற்றைக் கடந்து செல்லலாம். அதை விட்டுவிட்டு, எதிர்த்துச் செயல்பட நினைத்தால், அது நம்மை பாதிக்கவே செய்யும்’’ என்கிறார் ஆசிரியை.

மனச்சோர்வுக்கான காரணம்...
நம்முடைய எண்ணத்துக்கும் மனநிலைக்கும் எக்கச்சக்கமான சம்பந்தம் இருக்கிறது. மோசமான மனநிலையானது, மோசமான எண்ணம் மற்றும் செயலுக்கு வழி செய்கிறது. மோசமான எண்ணம் மற்றும் செயல் நம்மை இன்னமும் மோசமான அனுபவங்களைப் பெற வைக்கிறது. அந்த மோசமான அனுபவங்கள் மனநிலையை இன்னும் அதிக அளவில் பாதிக்கிறது. எனவே, மனநிலையில் வரும் மாறுதல் எதனால் வருகிறது என்பதை நாம் ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கை களை மேற்கொள்ள ஆரம்பித்தால், அதனால் வருகிற அத்தனை பின்விளைவுகளையும் ஒட்டுமொத்தமாக தவிர்க்க முடியும் என்று சொல்லும் ஆசிரியை, இதற்கு உதாரணமாக சரியாகத் தூங்காத தினங்களை நினைவுகூரச் சொல்கிறார். ‘‘இரவு கண்விழித்து வேலை பார்த்திருப்போம். உடல் சூடேறியிருக்கும். தேவையான அளவு தண்ணீர் குடித்திருக்க மாட்டோம். அதிகாலையில் எழுவதற்கு அலாரம் வைத்திருப்போம். ஆழ்ந்த தூக்கதில் இருக்கும்போது அலாரம் அலறும். விழித்து ஆஃப் செய்தால் தலைவலிக்க ஆரம்பிக்கும். அன்றைக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இருக்கும். பாஸ் குறை சொல்வார். மனநிலை இன்னமும் மோசமாகும் என இது ஒரு தொடர் சங்கிலியாகப் போய்க் கொண்டேயிருக்கும். இதில் மனச்சோர்வுக்குக் காரணியாக இருந்தது எது, மூளையின் குறைபாடா? இல்லை, தூக்கமின்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்ததுதான் இல்லையா?’’ என்று கேட்கிறார் ஆசிரியை.
‘‘நம் மனநிலை என்பது மாறுதலுக்கு உட்பட்டது. யாருமே தொடர்ந்து எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியுடனேயே இருப்பதில்லை. நமக்குத் தேவையானவை கிடைக்காமல் போகும்போது மனச்சோர்வு கொள்வது மனித இயல்பே. எனவே, அது மூளையின் குறைபாடு இல்லை. நம்முடைய உணர்வுகளைக் கட்டமைக்கும் பல விஷயங்களின் மீது நமக்கு முழுக் கட்டுப்பாடு என்பது சாத்தியமான ஒன்றே ஆகும். அதற்காக இந்த ஸ்விட்சை அழுத்தினால் மகிழ்ச்சி. அந்த ஸ்விட்சை அழுத்தினால் சோகம் என்ற நிலையில் நாம் இருக்க முடியாது. ஒரு விஷயம் குறித்து நாம் எப்படி உணர்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது மட்டும் நிச்சயம். இதனாலேயே நம்முடைய மனநிலையைக் கெடுப்பது எது என்பதைக் கண்டறிந்து அதை நம்மால் சரிசெய்துகொள்ள முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன்’’ என்கிறார் ஆசிரியை.
மூளை செயல்படும் விதம்...
“நம்முடைய மூளை எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம். நாம் ஒரு விஷயத்தை நம்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த விஷயம் குறித்து வெளி உலகத்தில் நமக்குத் தேவையானவற்றை மூளை பார்க்கும். அந்த விஷயத்தில் நம்முடைய நம்பிக்கைக்கு எதிரான கருத்து உலகத்தில் இருந்தாலுமே நம்முடைய மூளை அவற்றைப் பார்க்கத் தவிர்த்துவிட்டு, நாம் நம்பும் விஷயத்தையே ஊர்ஜிதம் செய்ய முயற்சி செய்யும். உதாரணமாக, நமக்கு அபரிமிதமான திறமை இருக்கிறது என நம்முடைய மூளை நம்புகிறது. இந்த நம்பிக்கையுடன் பதவி உயர்வை எதிர்பார்க்கிறது. பதவி உயர்வு கிடைக்காமல் போகிறது. எனக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. பதவி உயர்வு தருவதில் பாரபட்சம் இருக்கிறது என்று மூளை நம்புமே தவிர, பதவி உயர்வுக்கான ஒரு சில தகுதிகள் எனக்கு இல்லை. அது என்னென்ன என்ற ரீதியில் சிந்திக்கவே செய்யாது. இதனா லேயே மனச்சோர்வு என்பது சுலபத்தில் நமக்கு வந்துவிடுகிறது.
நம்முடைய மூளையின் செயல்பாட்டை / சிந்திக்கும் விதத்தை நம்மால் கன்ட்ரோல் செய்யவே முடியாது. ஆனால், நாம் எதைப் பார்க்கிறோம் (ஸ்பாட்லைட்) என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. நம்முடைய கவனத்தை எங்கே நாம் வைக் கிறோம் என்பதைப் பயிற்சியின் மூலம் நம்மால் வெகுவாக மாற்றி அமைக்க முடியும். இந்தப் பயிற்சி இருந்தால் நாம் மேலே சொன்ன பதவி உயர்வு உதாரணத்தில் அந்தப் பதவிக்குத் தேவையான குணாசியங்கள் என்னென்ன, அதில் எவை நம்மிடத்தில் இல்லை என்பதில் கவனம் செலுத்த முடியும். அப்படிச் செலுத்துவதன் மூலம் மனச் சோர்வுக்கான பாதையில் மூளைப் பயணிப்பதை முழுமையாக நம்மால் தவிர்க்க முடியும். அதைத் தவிர்த்துவிட்டு, பதவி உயர்வு பெற்றவரை பொறாமையுடன் பார்த்தால், (ஸ்பாட் லைட்) மூளை மனச்சோர்வு நிலையை நோக்கியே பயணிக்க ஆரம்பிக்கும்” என்கிறார் ஆசிரியை.
பர்ஃபெக்ஷன் வேண்டாமே...
“ஒரு மனிதனாக நல்ல முடிவு களை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டுமே தவிர, பர்ஃபெக்ட்டான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. பர்ஃபெக்ட்டான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முடிவு களையே எடுக்க மாட்டார்கள். நல்ல மூளை (மனச்சோர்வு இல்லாத) கொண்டிருக்க நாம் இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும். நாம் இயங்க முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பர்ஃபெக்ட்டான முடிவை எடுக் கிறேன் பேர்வழி என்று முடிவுகள் எடுப்பதை நீண்ட நாள்களுக்கு தள்ளிப்போட்டால், அது மனச்சோர்வுக்கே வழிவகுக்கும்” என்கிறார் ஆசிரியை.
“மோட்டிவேஷன் என்றால் என்ன? நமக்கு நல்லது எனும் விஷயத்தை நம்முடைய மனது விரும்பாத போதும்கூட செய்ய எத்தனிப்பதற்குத் தேவையானது தான் மோட்டிவேஷன். நினைவிருக்கட்டும், வெறும் மோட்டிவேஷன் மட்டுமே உங்களை சாதனையாளராக்காது. செயல்களே உங்களை சாதனை யாளர்களாக ஆக்கும். இந்த உலகில் மோட்டிவேஷனுடன் பிறந்தவர்கள் என ஒருவரும் கிடையாது. மோட்டிவேஷனை நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாது என்றாலும், அது சார்ந்த பல விஷயங்களை நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும். சின்னச் சின்ன பல விஷயங்கள் நம்மை மோட்டி வேஷனுக்கான பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் செல்லும் வல்லமை பெற்றது.
அவமானம் என்பது மோட்டிவேஷனுக்கான பெரிய காரணி என்று நாம் அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளோம். தோல்விக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவுமுறையை மாற்றியமைத்தாலே அது உங்களுடைய மோட்டிவேஷனை அதிகப்படுத்துவதற்கான பெரியதொரு காரணியாக இருக்கும்” என்கிறார் ஆசிரியை.
வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்கேயிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும், வலி எனும் உணர்வை எப்படிக் கையாள வேண்டும், நாம் பேசும் வார்த்தைகளை எப்படி பவர் ஃபுல்லான ஒன்றாக ஆக்கிக்கொள்வது, பேரிழப்புகளை எப்படி எதிர்கொள்வது, தனிநபரின் மனவலிமைக்கு அடிப்படைத் தேவையான விஷயங்கள் என்னென்ன, குறைசொல்பவர்களை எப்படிக் கையாளுவது, நம்பிக்கை வளர்ப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களை புதிய கோணத்தில் தருகிறது இந்தப் புத்தகம். இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் உங்களுக்கு மனச்சோர்வு என்பது இருக்கிறது எனில், எப்படி அதற்கான உதவியைப் பெறுவது என்பது குறித்துச் சொல்லும் அத்தியாயத்துடன் முடிகிறது இந்தப் புத்தகம்.