Election bannerElection banner
Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலை மேம்படுத்த ஊழியர்களுக்கு தனி நிதி தரும் நிறுவனங்கள்!

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

கூகுள் என்றில்லை, பல நிறுவனங்களும் கொரோனா முடிந்த பிறகும் கணிசமான அளவில் மக்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைத்தால் என்னவென்று யோசித்துவருகின்றன.

கொரோனாவால் பல நிறுவனங்கள் தமது பணியாளர்கள் அனைவரையும் ‘ரிமோட் வொர்க்கிங்’ செட்-அப்புக்கு மாற்றியது. அதில் கூகுளும் ஒன்று. அலுவலகத்தில் மின்சாரம் பயன்படுத்தாதது, உணவகச் செலவுகள் இல்லாதது எனப் பல வகைகளிலும் கூகுள் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட அளவு பணம் மிச்சமாகியிருக்கிறது. இதைப் பணியாளர்களுக்கே தர நினைத்த கூகுள், ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 75,000 ரூபாய்) தொகையை அளித்துள்ளது. அது, பணமாகத் தரப்படவில்லை. வீட்டிலிருந்து வேலை பார்க்க பணியாளர்கள் விரும்பும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்தப் பணத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்ல, பணியாளர்கள் பல பொருள்களைத் தெம்பாக வாங்கி அலுவலகத்துக்கு இணையாகத் தங்களது வொர்க் ஃப்ரம் ஹோம் செட்-அப்பை மாற்றியமைத்திருக்கின்றனர். கூகுள் என்றில்லை பல நிறுவனங்களும் கொரோனா முடிந்த பிறகும் கணிசமான அளவில் மக்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைத்தால் என்னவென்று யோசித்துவருகின்றன.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

கொரோனா நோய் தாக்கம் தொடங்கியதிலிருந்தே பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதித்துள்ளன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பிறகும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலையைத் தொடருமாறு அறிவுறுத்திவருகின்றன. ஐ.டி துறையில் மட்டுமே அதிகமாகக் காணப்பட்டு வந்த 'வொர்க் ஃப்ரம் ஹோம்' கலாசாரம், இந்த சூழலால் தற்போது நிதித்துறை, வங்கித் துறை, மேலாண்மை போன்ற பல துறைகளில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. சமீபத்திய வாரங்களில் TCS, HCL போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்தான் வருங்காலம்' எனப் பேசுவதைப் பார்க்கமுடிகிறது.

கொரோனாவுக்குப் பின்பும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை நிர்வாகக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாற்ற, பல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), உலகமெங்கும் இருக்கும் அதன் 4.48 லட்சம் ஊழியர்களில் (இந்தியாவில் 3.5 லட்சம் உட்பட) 75% நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே வேலைசெய்ய வைக்கலாம் எனத் திட்டமிட்டுவருகிறது.

வுண்டர்மேன் தாம்சன் என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமும் தனது 50 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், தனது ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று நாள்கள் அலுவலகத்திலும், இரண்டு நாள்கள் வீட்டிலும் வேலை செய்ய வைக்கப்போகிறதாம். இன்னும் கொரோனா சூழல் எத்தனை நாள்களுக்கு இருக்கும் எனத் தெரியாததால், வீட்டிலிருந்தே வேலை செய்வதால் ஊழியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று இந்நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தொடர்ந்து அப்படியே நல்ல முறையில் வேலைபார்க்க என்ன செய்யலாம் என யோசித்துவருகின்றன. வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம் மின் கட்டணம், வாடகை, பராமரிப்பு செலவுகள், உணவு, போக்குவரத்து போன்ற நிர்வாகச் செலவுகளைப் பெருமளவில் குறைக்க உதவுகிறது.

TCS
TCS

ஆனால் மொத்தமாக வீட்டிலிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றால், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என நினைக்கின்றன நிறுவனங்கள். வீடுகளிலிருந்து பணிபுரியும் போது எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று அலுவலகம் போன்ற சரியான பணியிட அமைப்பு இல்லாதிருப்பது. ஸோஃபா, டைனிங் டேபிள், கட்டில் என கிடைக்கும் இடத்தில் அமர்ந்து லேப்டாப்பைப் பயன்படுத்துவதால், பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, நீண்ட நேரம் கணினிக்கு முன் வேலை செய்ய பணிச்சூழலுக்கேற்ற நாற்காலிகள் மற்றும் மேசைகள் வீடுகளில் இல்லாததால், ஊழியர்கள் கழுத்து மற்றும் முதுகு வலி, பார்வைக் கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் பணி செய்யத் தேவைப்படும் பொருட்களை அவர்களே முன்வந்து வழங்கிவருகின்றன. கூகுள், உபர் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தளவாடங்கள் வாங்க குறிப்பிட்ட தொகையை (allowance) வழங்கியுள்ளன. ஃப்ரெஷ்வொர்க்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம், இந்தியா உட்பட அது செயல்படும் 13 நாடுகளில் உள்ள சுமார் மூவாயிரம் ஊழியர்களுக்குத் தளவாடங்களை வாங்க சுமார் 250 அமெரிக்க டாலர்கள் (சுமார் 18,000 ரூபாய்) வழங்கியுள்ளது. பெரிய மானிட்டர், தளவாடங்கள் மற்றும் கீபோர்டுகள் போன்றவற்றையும் வழங்கியிருக்கிறது.

சில நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் உடல்நலம் மற்றும் உடற்தகுதி அலவன்ஸின் ஒரு பங்கை அலுவலகத் தளவாடங்களை வாங்க ஒதுக்கியுள்ளன. "இந்தியா முழுவதும், 400-க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் இணையச் செலவினங்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்கின்றது. மேலும், உயர்தர தளவாடங்களை வாங்க முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்கிறார் லெனாக்ஸ் (LENOX) இந்தியா தொழில்நுட்ப மையத்தின் கார்ப்பரேட் சேவை மேலாளர் கார்த்திகேயன்.

டாடா ஸ்கை நிறுவனம், ஊழியர்களுக்கு வேண்டிய மேசை மற்றும் நாற்காலிகளை வீட்டிற்கே அனுப்பி வைக்கிறது. இந்நிறுவனங்கள் முன்னணி தளவாட நிறுவனங்களான கோத்ரேஜ் இண்டீரியோ, IKEA, ஹெர்மான் மில்லர், ஃபாப்ரெண்டோ போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. பெங்களூரைச் சேர்ந்த ரேஸர்பே நிறுவனம் ரென்ட்லைட் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாடகைத் தளவாடங்களை ஊழியர்களுக்கு வழங்கிவருகின்றன.

வொர்க் ஃப்ரம் ஹோம் செட்-அப்
வொர்க் ஃப்ரம் ஹோம் செட்-அப்
"பல நகரங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், ஊழியர்களின் வீட்டிற்கே இந்தப் பொருட்களை டெலிவரி செய்கிறோம். இதனால் கடந்த 30 நாள்களில் மட்டும் எங்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது"
கோத்ரெஜ் இண்டீரியோவின் துணைத் தலைவர் சமீர் ஜோஷி
வொர்க் ஃப்ரம் ஹோம்... ஐ.டி துறையைக் குறிவைக்கும் சைபர் அட்டாக்!

ஹெர்மன் மில்லர் இந்தியா நிறுவனமும் பல ஆர்டர்களைப் பெற்று வருகிறதாம். வொர்க் ஃப்ரம் ஹோம் பணிச்சூழல்தான் எதிர்காலமாக மாறிவரும் நிலையில் அதற்கு ஏற்ப ஊதியம், வேலை நேரம், தொழிலாளர் ஒப்பந்தம் போன்றவற்றையும் மாற்றியமைக்க நிறுவனங்கள் தீவிரம் காட்டிவருகின்றன.

இப்படி நிறுவனங்கள் வீடுகளையே அலுவலகங்களாக மாற்றுவது சரிபட்டுவருமா... உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு