Published:Updated:

பணியிடத்தில் இணக்கமான உறவே படிப்படியான முன்னேற்றம் தரும்!

எம்.பி.ஏ புக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

பணியிடம் என்பது ஒரு பணியாளர் சக பணியாளர்களுடன் எந்த அளவுக்கு சுமுகமான உறவைக் கொண்டிருக்கிறாரோ, அந்த அளவுக்குச் சிறந்த அனுபவம் அவருக்குக் கிடைக்கும். புதிதாகப் பணியில் சேருபவர்களுக்கு அவற்றைச் சொல்லித் தந்து தெளிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் ‘மாஸ்டரிங் பிஹேவியர்’ என்ற புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
 Mas tering Behaviour: Managing Self and Others
ஆசிரியர்:
Payal Anand
பதிப்பாளர்:
 SAGE 
Publications  Pvt. Ltd
புத்தகத்தின் பெயர்: Mas tering Behaviour: Managing Self and Others ஆசிரியர்: Payal Anand பதிப்பாளர்: SAGE Publications Pvt. Ltd

ஆளுமை மற்றும் அகங்காரம்...

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பணியிடத்தில் கிட்டத்தட்ட 85% பணியாளர்கள் முரண்பாடுகளைக் (conflict) கொண்டிருக்கவே செய்கின்றனர். இதில் 49% பேர் கொண்டிருக்கும் முரண்பாடுகள் ஆளுமை (personality) மற்றும் அகங்காரம் (ego) காரணமாக இருக்கிறது. 34% பேருக்கு இந்த முரண்பாடுகள், பணியிடத்தில் இருக்கும் பணிச்சுமையின் காரணமாக உருவாகிற அழுத்தத்தால் உருவானதாக இருக்கிறது. இந்தவித முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் எனில், நமக்கு நம்மைப் பற்றியும் (ஆசைகள், தேவைகள், பலம் மற்றும் பலகீனம் போன்றவை) நம்முடன் பணிபுரியும் சகமனிதர்கள் பற்றியும் தெளிவானதொரு புரிந்துகொள்ளல் இருக்க வேண்டும். இந்தவிதமான புரிந்துகொள்ளல்கள் நூறு சதவிகிதம் சரியானதாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், இந்தப் புரிந்துகொள்ளலை இயன்ற அளவு அதிகரித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முயன்றால், அதுவே பெரிய அளவிலான பலன்களை அளிக்க வல்லதாக இருக்கும்.

நம்மைப் பற்றிய சரியான புரிந்துகொள்ள லுடன் நாம் மற்றவர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மால் செயல்பட முடியும். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலுமே, இது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால், நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் புரிந்துகொள்வது சுலபம் எனில், நம் வாழ்வில் பிரச்னைகளே இருக்காது இல்லையா?

புதிய நபருக்கு வரும் பயங்கள்...

புதிதாக வேலைக்குச் செல்லும் நபருக்கு இருக்கிற பயங்கள் என்னென்ன, எல்லோருக்கும் என்னைப் பிடிக்குமா, நன்றாகப் பழகுவார்களா, எனக்குப் பிடித்த மாதிரியான நபர்கள் என் குழுவில் இருப்பார்களா, என் பாஸ் எப்படிப் பட்டவராக இருப்பார், நான் வேலை பார்க்கும் விதம் அவருக்குப் பிடிக்குமா என்பன போன்ற பல்வேறு கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

இந்த மாதிரியான மன நிலையை எதிர்கொள்ளாத ஆட்களே கிடையாது. இதைத் தாண்டி, ‘இது இப்படி இருக்கும், அது அப்படி இருக்கும்’ எனப் பணியிடம் குறித்து பல முன்முடிவுகளை நாமே உருவாக்கி வைத்தி ருப்போம். படித்து முடித்து புதிதாக வேலைக்குச் செல்லும் ஒரு நபர், இந்த மாதிரியான முன்முடிவுகளை அடிப்படையாக வைத்தே பணியிடச் சூழலை (அலுவலக நடைமுறைகள், உறவுகள், செயல் பாடுகள் போன்ற) எதிர்கொள்ள ஆரம்பிப்பார்.

பணியிடத்தில் இணக்கமான உறவே படிப்படியான முன்னேற்றம் தரும்!

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவரின் வாக்குமூலம்...

புத்தம் புது எம்.பி.ஏ-வாக ஒரு ரீடெயில் நிறுவனத்தில் மேனேஜராகப் பணிக்குச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இது. ‘‘ஆரம்பத்தில் நிறுவனத்தில் ஒரு புது நபராக எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எந்தமாதிரி எதிர்பார்ப்புடன் இருக்கிறார் கள் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல், என் மேலதிகாரியும் என்னிடம் இருந்து பணிரீதியாக என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை.

நிறுவனம் உபயோகிக்கும் டெக்னாலஜி, டீம் மேனேஜ் மென்ட் எனப் பல்வேறு சேலஞ்சுகளும் அந்த நேரத்தில் என்னுடன் கூடவே இருந்தது. சக பணியாளர்களை நிர்வகிப்பது எப்படி என்பதற்கான பயிற்சியும் எனக்கில்லை. எனக்குக் கீழே பணிபுரிந்த நான்கு ஒப்பந்த ரீதியிலான பணியாளர்களை நிர்வகிப்பது எப்படி என்பது பெரியதொரு சவாலாக இருந்தது. அதிலும் நான் சுலபத்தில் அனைவரிடமும் பழகிவிடும் சுபாவம் (Extrovert) கொண்டவள். குறுகிய காலத்திலேயே அனைவரிடமும் நன்றாக வேறு பழகிவிட் டேன். இதனால் அவர்களை வேலை வாங்குவது மிகவும் கடினமானதாக இருந்தது. தவிர, எனக்குக்கீழ் பணிபுரிபவர்கள் எனக்கு நிகராகவோ, ஒரு சிலவற்றில் என்னைவிட டெக்னிக்கலாக அதிக அனுபவம் கொண்டவர்களாக இருந்தார்கள். என்னிடம் ரிப்போர்ட் பண்ணவே அவர் களுக்குப் பிடிக்கவில்லை என்பது பிறகுதான் புரிந்தது.

ஆனால், என் பாஸ் கொஞ்சம் சிடுசிடுக்கும் குணம் கொண்ட ஆசாமி (Introvert). என் நிர்வாகம் செய்யும் முறையும் அவருடைய நிர்வாகம் செய்யும் முறையும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால், புதுப்புது சிக்கல்களை உருவாக்கியது. அங்கே பணிபுரிந்தபோது எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம், ஒரு புரொஃபஷனல் சூழ்நிலையில் எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்பதை நான் முழுமையாகக் கற்றுக்கொண்டதுதான். ஒரு நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளாமல், நான் உடனடியாக என்னுடைய ஸ்டைலில் களப்பணியில் இறங்கியதே இத்தனை சொதப்பலுக்கும் காரணம் என்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

இப்படி ஒட்டுமொத்தமாகத் தோற்ற பின்னால் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து நான் கண்டுபிடித்த ஒரே விஷயம், வெற்றிகரமாகச் செயல்பட வேண்டும் எனில், உடன்பணி புரியும் மனிதர்களை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான்’’ என்று வாக்குமூலம் தந்திருக்கிறார். இதேபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும்!

மிரட்டி வேலை வாங்குவது சரியா..?

சுலபத்தில் மற்றவர்களை நம்பும் குணம் கொண்டவராலும், அதட்டி உருட்டி வேலை வாங்க நினைத்தால், நம்மை அனை வருக்கும் பிடிக்காமல் போய் விடுமே என்கிற எண்ணமும் கொண்ட மேனேஜராலும் யாரையும் குறித்த காலத்தில் வேலை செய்யவைக்க முடியாது. எக்கச்சக்கமான திறமையைக் கொண்டிருக்கும் ஒரு மேனேஜ ரானாலுமே இந்த மாதிரியான பர்சனாலிட்டியைக் கொண் டிருந்தால், அது பணியிடத்தில் எக்கச்சக்கமான சிக்கல்களை உருவாக்கவே செய்யும்.

இந்த மாதிரியான குணம் கொண்ட நிர்வாகிகள் தங்க ளுடைய முதல் பணியிடத்தில் தோல்வி அடைந்து அதற்கான காரணம், தங்களுடைய பர்சனா லிட்டியே என்பதை உணர்ந்த பின்னரே, வெற்றிப்பாதையில் பயணித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

பார்ப்பது வேறு, விளையாடுவது வேறு...

கல்லூரியில் நிர்வாகம் குறித்து பயில்வது என்பது கேலரியில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதைப் போன்ற ஒன்றாகும். இந்தப் பந்தை இப்படி அடித்திருக் கலாம். இவர் ஒரு ரன் எடுத்து எதிரே இருக்கும் பேட்ஸ்மேனை பந்தை எதிர்கொள்ளச் செய்திருக் கலாம் என்பது போன்ற கமென்டு களை அள்ளித் தெளிக்கலாம். ஆனால், படித்து முடித்து வேலைக் குச் சென்றால், அந்த இடத்தில் இருக்கும் சூழல் புதிதாக இருக்கும். திடீரென்று கேலரியில் இருந்து கிரவுண்டுக்குள் இறக்கி விட்ட மாதிரி பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். எக்கச்சக்கமான நிச்சய மற்ற சூழல்களில் செயலாற்ற வேண்டியிருக்கும். இதனால் கடும் மனஅழுத்தம் உருவாகி தவறு களைச் செய்ய ஆரம்பிப்போம். எதை எடுத்தாலும் இடைஞ்சல் என்ற சூழலை எதிர்கொள்வோம். நம்முடன் பணிபுரிபவர்கள் (பாஸையும் சேர்த்து) நமக்கெதிராக சதி செய்கிறார்களோ என்றெல் லாம் தோன்றும். கொஞ்சம் தீவிர மாகச் சிந்தித்து நிலைமையை ஆராய்ந்தால், ‘நாம்தான் இவை அனைத்துக்கும் காரணம்’ என்று நமக்குத் தெளிவாகப் புரியும். இதனால் உருவாகும் ஸ்ட்ரெஸ் நம்மை முழுவதுமாகச் செயலிழக் கச் செய்துவிடும். எனவே, ஆரம்பத்திலேயே ஸ்ட்ரெஸை உருவாக்கும் விஷயங்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய் வதே இதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

நிறுவனத்துக்கேற்ப மாற்றிக் கொள்வதே சரி...

நிறுவனம் என்பது பெரியதொரு சிஸ்டம். தனிநபராகிய நமக்கும் இந்த சிஸ்டத்துக்கும் எந்த அளவு இணக்கம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெற்றி நமக்குக் கிடைக் கும். புதிதாக வேலைக்குச் சேர்ந் தவர், அலுவலக நடை முறைக் கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, அலுவலக நடைமுறையை மாற்றும் அளவுக்கான பதவி நமக்கு வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு ஆரம்ப நிலையிலேயே ‘சிஸ்டத்தைச் சரிசெய்கிறேன்’ என்று நம் நேரடி பாஸைத் தவிர்த்துவிட்டு, ஏனைய உயரதிகாரிகளிடம் ‘சிஸ்டம் சரியில்லை, மாற்றி அமையுங்கள்’ என்று பேசக் கூடாது. அப்படிச் செய்தால், நம் நேரடி உயரதிகாரியும் சரி, நமக்குக் கீழ் பணிபுரிபவர்களும் சரி, புதிய சிஸ்டத்தில் உள்ள ஓட்டைகளைத் தோண்டி எடுத்து, அதனால் வரும் இடைஞ்சல்களைப் பூதாகரமாக ஆக்கி நம்மைத் தோற்கடித்துவிடுவார்கள்’’ என்று எச்சரிக்கிறார் ஆசிரியை.

முதல் பணியிடத்தில் தனியாளாக யாருடனும் சேராமல் இருப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும், நம்மைப் பற்றி நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். நம்முடன் வேலை பார்ப்பவர்கள் குறித்து நாம் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்மால் முடியும் என நாம் முழுமையாக நம்புவதால் கிடைக்கும் பலாபலன்கள், தன்னம்பிக்கைக்கு இடையூறு செய்யும் பல்வேறு விஷயங்கள் மற்றும் நம்முடைய செயல்பாடு குறித்து மற்றவர்கள் கூறும் கருத்துகளைக் (பின்னூட்டங்கள்) கவனத்துடன் கேட்க வேண்டியதன் அவசியத்தை எல்லாம் தெளிவாகப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

புதிதாகப் பணிக்குச் செல்லும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு