Published:Updated:

ஸ்க்ரீனிங் இன்டர்வியூ முதல் ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ வரை... எதிர்கொள்வது எப்படி?!

செ.கார்த்திகேயன்

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் பற்றித் தெரிந்து கொள்வது போல, அந்நிறுவனம் எந்த வகையான நேர்காணலை நடத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது.

இன்டர்வியூ
இன்டர்வியூ

ன்று பெரும்பாலான இளைஞர்கள் எல்லாவிதமான நிறுவனங்களுக்கும் வேலைகளுக்கும் ஒரே மாதிரியான நேர்காணல்கள் இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ, அதற்கு ஏற்றாற்போலவும், நீங்கள் செல்லும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போலவும் பலவிதங்களில் நேர்காணல்கள் அமையும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னர் அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை கரைத்துக் குடித்தாலும்,  எவ்வளவுதான் படித்தாலும் நேர்காணல் பயத்தினால் கோட்டை விட்டு விட்டால் அவ்வளவுதான். ஆனால், நீங்கள் முழுத் தகுதியுடையவராக இல்லாவிட்டாலும், மிக இயல்பாக, எந்த பயமும், பதற்றமும் இல்லாமல் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டால், அதுவே உங்கள் பணி வாழ்க்கைக்கான வாசலைத் திறக்கும்.

இன்டர்வியூ
இன்டர்வியூ

நேர்காணல் முறை அறிந்து தயாராகுங்கள்!

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் பற்றித் தெரிந்து கொள்வது போல, அந்நிறுவனம் எந்தவகையான நேர்காணலை நடத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது. யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்கிற தயக்கம் உங்களுக்கு இருந்தால், உங்களை நேர்காணலுக்கு அழைத்த அலுவலர்களிடம் நேரடியாக, 'நீங்கள் எந்த வகையான நேர்காணல் முறையைப் பின்பற்றப்போகிறீர்கள்?' என்று கேட்பதில் தவறு இல்லை. நீங்கள் செல்லப் போகும் நிறுவனத்தில் இந்த வகையான நேர்காணல்தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தால், அந்த வகைக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்வது நலம்.

இன்ஃபர்மேஷனல் இன்டர்வியூ (Informational Interview)

தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்தச் சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்குக் குறிப்பிட்ட அந்தத் துறையைப்பற்றி என்ன தெரியும், அந்தத் துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது.

இன்டர்வியூ
இன்டர்வியூ

இந்த இன்டர்வியூவுக்குச் செல்லும் போது துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே ஒரு ஹோம் வொர்க் செய்துகொண்டுபோவது நல்லது. ரெஃபரன்ஸ்கள் (Reference) அளிக்கும்பட்சத்தில் முன்னமே அவர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டு, அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது நலம். இதனால் நேர்காணல் செய்பவருக்குச் சுலபமாக இருக்கும். உங்களின் ரெஸ்யூம்(Resume), விசிட்டிங் கார்டு போன்றவற்றைக் கொடுப்பது மூலம், அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக இருக்கும். சந்திப்புக்குச் சென்று வந்தவுடன் ஒரு நன்றி தெரிவிக்கும் கடிதமோ, மெயிலோ அனுப்புவது நல்லது.

டைரக்டிவ் ஸ்டைல் இன்டர்வியூ (Directive Style)

இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்குக் கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்

இன்டர்வியூ
இன்டர்வியூ

நேர்காணல் செய்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர் தரும் லீடுக்கு ஏற்பச் செயல்படுவது உசிதம். எந்த ஒரு நிலையிலும் நேர்காணல் உங்கள் கையை மீறிப் போய்விடாதபடிக்குக் கவனமாக இருங்கள். நேர்காணல் செய்பவர் உங்களிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காதபோது மிகவும் மென்மையாக இடைமறிக்கவும். ஒரு விண்ணப்பதாரராக உங்களின் 'சுப்பீரியாரிட்டி'யைக் காட்ட வேண்டிய இடம் இது.

ஸ்க்ரீனிங் இன்டர்வியூ (Screening Interview)

சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிகிற சமயத்தில், உங்களின் 'ரெஸ்யூம்'களை மிக ஆழமாக ஆராய்வார்கள்.

அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல உங்களையும் கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். சலிக்காமல் நேரடியான பதில்களை மட்டுமே அளிக்கவும். 'ஓவர் குவாலிஃபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த நேர்காணல்.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் 'ரெஸ்யூம்'களைக் கணினி உதவியுடன்தான் பிரித்து எடுக்கிறார்கள். ஆகவே, எப்போதும் 'டிஜிட்டல் ரெஸ்யூம்' ஒன்றை 'ஸ்க்ரீன் ஃப்ரெண்ட்லி'யாக வைத்திருப்பது முக்கியம்.

ரெஸ்யூம்களில் உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும். சம்பளம்பற்றிப் பேசும்போது 20,000 ரூபாய், 25,000 ரூபாய் என்று நிர்ணயித்த ஒரு தொகையைச் சொல்வதைவிடவும், 15,000 -20,000 ரூபாய் வரை, 20,000- 30,000 ரூபாய் வரை என்று ஒரு ரேஞ்ச் வைத்துக்கொள்வது நல்லது. தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, கூடவே ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதைச் சோதிக்கவே, அது நடத்தப்படும்.

கவனிக்க: இன்டர்வியூ ஹாலில் நீங்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்.

* இன்டர்வியூ அறையில், நேர்முகக் குழுவினரைக் கண்டதும், புன்னகையுடன், முதல் வணக்கத்தைத் தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும். குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக இல்லாமல், மிருதுவாகவும், அவருடைய கைக்குலுக்கலுக்கு ஏற்றார் போலவும் உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும்.

* அமரச் சொல்லும் வரை காத்திருங்கள். அவர்கள் அமரச் சொன்னதும், நன்றி கூறி அமருங்கள்.

* தளர்வாக உட்காருவது அவசியம். எனினும், நீங்கள் அமரும் விதம், நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். 

* கால்களை குறுக்காகப் போட்டுக் கொண்டோ, ஃபைலை முகத்திற்கு எதிராக வைத்துக் கொண்டோ அமராதீர்கள். அதே போல ஸ்மார்ட்போன்களை மேசையின் மீது வைத்து அமராதீர்கள். 

* தலைமுடியில் கைகளை அலைய விடாதீர்கள். ‘இன்டர்வியூ’ அறையில் அமர்ந்து கொண்டு, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் கவனம் செலுத்தாதீர்கள்.

இன்டர்வியூ
இன்டர்வியூ

* தேர்வுக் குழுவினரை, நேராக அவர்கள் கண்களை பார்த்துப் பேச வேண்டும். அதற்காக வெறித்துப் பார்க்கக் கூடாது.

* நேர்முகக் குழுவினரில் ஒருவருக்கு மேல் இருந்தால், உங்களிடம் யார் கேள்வி கேட்டாரோ, அவரைப் பார்த்துப் பதிலளியுங்கள். அதே நேரம், பிறரிடமும் உங்களது பார்வை சென்று வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

*தேவைக்கு அதிகமாக கைகளை அசைத்துப் பேசாதீர்கள். அதற்காக கைகளை அசைக்காமல், ‘மிஷின்’ போல பேச வேண்டாம்.

* தேர்வுக்குழுவினர் பேசும் போது, லேசாகத் தலையை அசைத்து, நீங்கள் கவனிப்பதை அவர்களுக்கு உணர்த்தலாம். இது இயல்பாக இருக்க வேண்டும்.

பிஹேவியரல் இன்டர்வியூ (Behavioral Interview)

நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்துக்கு, தரம் சம்பந்தப்பட்ட ஒரு வேலைக்குக் கடினமான ஒரு நபரைத் தேர்வு செய்வார்கள். காரணம், தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது. மனித வளத் துறையில் 'பீப்பிள்-ஓரியன்டட்' ஆக இருக்க வேண்டும். அங்கே கடினமாக இருப்பது வேலைக்கு ஆகாது. உற்பத்தித் துறையில் 'பர்ஃபெக்ட்' எதிர்பார்க்கப்படும். மார்க்கெட்டிங் துறையில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது இருக்கும். ஆகவே, அப்படிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்வார்கள். இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதைவிட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

இன்டர்வியூ
இன்டர்வியூ

இந்த மாதிரியான இன்டர்வியூக்களில் நீங்கள் நீங்களாக இருங்கள். நடிக்க வேண்டாம். படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக் கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்ததேகூட இருக்கலாம். உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று அளக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ (Stress Interview)

உங்களின் பொறுமையைச் சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களைச் செய்யச் சொல்வது எனக் கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ராகிங் போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.

நீங்கள் 'ரெஸ்பான்ஸிவ்' ஆக இருக்கிறீர்களா... அல்லது 'ரியாக்டிவ்' ஆக இருக்கிறீர்களா என்பது இங்கு முக்கியம். ரெஸ்பான்ஸிவ் என்றால், நீங்கள் வேலைக்குத் தகுதியான ஆள். ரியாக்டிவாக இருந்தால் வேலைக்குத் தகுதியற்றவர்.
ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ

இந்த இன்டர்வியூவில் கையாளும் விஷயங்கள், ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்சனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

மீல் டைம் இன்டர்வியூ (Mealtime Interview)

'சும்மா சாப்பிடுங்க பாஸ்' என்று நேர்காணல் செய்பவர் உங்களை பிஸ்கட்டோ, கேக்கோ அல்லது டிபனோ கொடுத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல பர்சனலான விஷயங்களைப் பேசவும் இந்த மீல் டைம் இன்டர்வியூ மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரைத் தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, மீல் டைம் இன்டர்வியூக்கள் கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்.

இந்த வகை இன்டர்வியூக்களின்போது உங்களை ஒரு விருந்தினராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள். டயட் போன்ற விஷயங்களை இங்கே எடுத்து வர வேண்டாம். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது.

அவர் ஆர்டர் செய்தது உங்களுக்குக் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்கிறபட்சத்தில் அதை மென்மையாகத் தவிர்க்கவும். உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், ரொம்ப ஹெவியாக இல்லாமல் 'லைட்'டாக ஆர்டர் செய்யவும். உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

ஸ்க்ரீனிங் இன்டர்வியூ முதல் ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ வரை... எதிர்கொள்வது எப்படி?!

இன்டர்வியூவுக்குப் போனோம்... வந்தோம்... அதோடு நம் வேலை முடிந்தது என்று இருக்காமல், தொடர்ந்து அந்த நிறுவனத்தை ஃபாலோ-அப் செய்வது, உங்களின் நிலைபற்றி அறிந்துகொள்வது, நீங்கள் தேர்வு பெறாவிட்டாலும் இன்டர்வியூவில் நீங்கள் செய்த தவறுகள் என்ன, அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பன போன்றவற்றை எல்லாம் நேர்காணல் நடத்தியவருடன் விவாதித்து அலசுவது உங்கள் மீதான ஒரு நன்மதிப்பை உயர்த்தும்!