Published:Updated:

கல்விக் கடன்... சிக்கல் இல்லாமல் வாங்க சிறப்பான யோசனைகள்! நிபுணர்களின் வழிகாட்டல்

கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

C O V E R S T O R Y

கல்விக் கடன்... சிக்கல் இல்லாமல் வாங்க சிறப்பான யோசனைகள்! நிபுணர்களின் வழிகாட்டல்

C O V E R S T O R Y

Published:Updated:
கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

'பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப் பட்டு அதன் அடிப்படையில், வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித் திருக்கிறார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்தில் கல்விக் கடன் கேட்டு வங்கியை அணுகும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கல்விக் கடனை எளிதாகப் பெறுவது எப்படி, கொரோனா காலகட்டத்தில் கல்விக் கடன் விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் வந்திருக்கின்றனவா, கல்விக் கடன் பெறுவதில் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன எனப் பல்வேறு கேள்விகளுடன் வங்கி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

கல்விக் கடன்... சிக்கல் இல்லாமல் வாங்க சிறப்பான யோசனைகள்! நிபுணர்களின் வழிகாட்டல்

வித்ய லட்சுமி போர்ட்டல்!

முதலில் பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரி தனசேகரனிடம் பேசனோம். “முன்பு கல்விக் கடனைப் பெற வங்கிகளை நேரடியாக அணுகி கேட்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது மத்திய அரசின் ‘வித்ய லட்சுமி போர்ட்டல்’ (www.vidyalakshmi.co.in) மூலம் எளிதாகக் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த போர்ட்டலில் மாணவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் போதும். அவர்களுடைய ஊர், அவர்கள் விரும்பும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகளில் சிறப்புச் சலுகைகள் உள்ளன என்பதைக் கணக்கில்கொண்டு அவர்களுக்கான வங்கி பரிந்துரைக்கப்படும்.

கல்விக் கடன் பெற விரும்புபவர் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள மூன்று வங்கிக் கிளைகளைத் தேர்வு செய்துகொள்ளும் அனுமதியை வித்ய லட்சுமி போர்ட்டல் வழங்குகிறது. வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைகளைத் தேர்வு செய்யும்போதுதான் அந்த வங்கியால் நேரடி விசாரணை மற்றும் இதர நடவடிக்கைகளை விரைந்து செய்ய முடியும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

கல்விக் கடன் பெறுவதற்கான அனைத்து விவரங்களையும் போர்ட்டலில் பதிவு செய்தவுடன், அவற்றை பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு, மாணவர்கள் தேர்வு செய்த வங்கிக் கிளைக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரிக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

போர்ட்டல் வழியாக, நீங்கள் தேர்வு செய்யும் வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. புதிதாக கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். போர்ட்டலில் பதிவு செய்யாமல் நீங்கள் கணக்கு வைத் திருக்கும் வங்கியிலும் கல்விக் கடன் பெற முடியும். வங்கிக்கும், உங்களுக்குமான உறவுமுறை சுமூகமாக இருந்து, வங்கிப் பரிவர்த்தனைகளும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், மற்ற கடன்களைப் போல கல்விக் கடன் கிடைப்பதிலும் எந்தச் சிக்கலும் இருக்காது.

தனசேகரன்
தனசேகரன்

வங்கி மேலாளருடனான நேர்காணல்

மாணவர்கள் கல்விக் கடனுக்காக வங்கி மேலாளரை நேரில் சந்திப்பது முக்கியமானதாகும். வங்கி மேலாளர் கேட்கும் கல்வி தொடர்பான விளக்கங் களைத் தெளிவாக, விவரமாகத் தெரிவிப்பதும் முக்கியம். மேலாளர் மற்றும் மாணவருக்கு இடையேயான உரையாடலானது, அந்த மாணவர் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறாரா, அவருக்குக் கல்விக் கடன் கொடுத்தால் அந்தத் தொகையை அவர் முறையாகச் செலுத்துவாரா என்கிற தோரணையில் இருக்கும். ஏனெனில், பெரும்பாலான கல்விக் கடன்கள் அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படு கின்றன. அதனால் அதற்கு ரிஸ்க் அதிகம். கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர், மேலாளரின் நன்மதிப்பை பெறும்படி நடந்துகொண்டால், கல்விக் கடன் எளிதில் கிடைக்க உதவும்’’ என்றார்.

எந்தெந்தப் படிப்புக்கு கல்விக் கடன் கிடைக்கும்?

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE - All india council of technical education), பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) முதலிய அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்பவர்கள் கல்விக் கடனுக்காகத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

ஐ.சி.டபிள்யூ.ஏ (ICWA), சி.ஏ (CA), சி.எஃப்.ஏ (CFA) போன்ற படிப்பு தொடங்கி, டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் படிப்புகள், மேலும் நர்ஸிங் டிப்ளோமா அல்லது நர்ஸிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங் உள்ளிட்ட பட்டப் படிப்பு மற்றும் டிப்ளோமா படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தேர்வு செய்யப்பட்ட வர்களும் வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம். மேலும், பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேர்பவர் களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.

கடன் தொகையும்; வட்டி விகிதமும்!

இன்று கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை எவ்வித அடமானமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. பிரபலமான முன்னணிக் கல்வி நிறுவனங்களில், அதிக கட்டணத்தில் படிக்கும் மாணவர் களுக்கு அடமானம் இல்லாமல் 7.5 லட்சம் வரை கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. ரூ.4 லட்சத்துக்கு அதிகமாக 7.5 லட்சம் வரையிலும் கடன் பெறும்போது மூன்றாம் நபர் உத்தரவாதமும் தர வேண்டியிருக்கும்.

வாங்கும் கடன் தொகை 7.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் போனால், ஃபிக்ஸட் டெபாசிட், வீடு, மனை போன்ற சொத்துகளை உத்தரவாதமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெறலாம். வெளிநாட்டில் படிப்பதற்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை கல்விக் கடனாக வழங்கப்படுகிறது.

இன்றைய நிலையில் கல்விக் கடனுக்கு ஆண்டு வட்டி 6.75 சதவிகிதத்திலிருந்து ஆரம்பித்து 17% வரை வழங்கப்படுகிறது. கல்விக் கடன் தொகை மற்றும் இதர காரணங்களுக்காக வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

திருப்பிச் செலுத்தும் காலம்!

ஒரு மாணவர் கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடுவதற்கு ஓர் ஆண்டு அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த ஆரம்பித்துவிட வேண்டும். படித்து முடித்ததுமே வேலை கிடைத்துவிட்டதென்றால் வேலை கிடைத்த அடுத்த மாதத் திலிருந்தே தவணைத் தொகையைச் செலுத்த ஆரம்பித்துவிடலாம். படிப்பை முடித்து ஒரு வருடத்துக்குப் பிறகும் வேலை கிடைக்க வில்லை என்றால், கால அவகாசம் கேட்டு வங்கி மேலாளரை அணுகலாம். கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்குள் கல்விக் கடன் முழுவதையும் அடைக்க வேண்டும்.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

தனியார் வங்கிகள் மூலம் கல்விக் கடன்

வங்கித்துறை சார்ந்த நிபுணர்களில் ஒருவரான மணியன் கலியமூர்த்தி, “தனியார் வங்கிகளில் சில, அதிக அளவில் கல்விக் கடன்களைத் தந்து வருகின்றன. குறிப்பாக, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இந்திய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ‘ஹெச்.டி.எஃப்.சி கிரெடிலா’ என்கிற தனி அமைப்பை உருவாக்கி யிருக்கிறது.

கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த அமைப்பை நேரடியாகவும், hdfccredila.com என்கிற வலைதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்த வலைதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள், தங்களின் முழு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, கிரெடிலா கிளையிலிருந்து உங்களைத் தொடர்புகொண்டு, கடன் தொகை கிடைப்பது வரையிலான நடைமுறைகளை மேற்கொள்வார்கள். அடமானத்துடன்கூடிய கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 10.25% - 11.25% வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அடமானம் இல்லாத கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 11.25% - 12% வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கு மட்டுமே கல்விக் கடன் என்கிற விதிமுறை அமலில் இருக்கிறது” என்றார்.

படிப்பை தேர்வு செய்வதில் கவனம்!

“பொதுவாக, சில வங்கிகள் குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. அதே போல, முந்தைய ஆண்டுகளுடைய ரெக்கார்டுகளின்படி, சில படிப்பு களுக்குக் கடன் வழங்க மாட்டார்கள். காரணம், அந்தப் படிப்புக்காகக் கடன் வாங்கிய பலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பார்கள். அப்படி இருந்தால், அந்தப் படிப்புக்காகக் கடன் கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான்.

உதாரணமாக, சில பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் சமீப காலங்களில் குறைவு. இதனால் அத்துறை சார்ந்து படித்த மாணவர்கள் பலருக்கு வேலை கிடைக்காத நிலை உருவாகி யிருக்கிறது. அல்லது குறைந்த சம்பளத்தில் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வாங்கிய கல்விக் கடனை முறையாகச் செலுத்த முடியவில்லை. அதனால் தான், பொறியியல் சார்ந்த சில படிப்புகளுக்குப் பெரும்பாலான வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அதனால், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்பைத் தேர்வு செய்யும்போது, கல்விக் கடன் எளிதாகக் கிடைக்கும்” என்பது வங்கியாளர்களின் கருந்து.

வாராக்கடன் ஆகவிடாதீர்கள்...

சிக்கல் இல்லாமல் கல்விக் கடன் வாங்குவதற்கான யோசனைகளைச் சொல்லிவிட்டோம். வங்கிகளில் வாங்கப்படும் கல்விக் கடனானது வாராக்கடனாக மாறுவது மோச மான போக்காகும். வங்கிகளில் கல்விக் கடன் வாங்கியவர்கள் அதை எப்பாடுபட்டாவது திரும்பக் கட்டிவிட வேண்டும் என்ற தீர்மானமான முடிவுடன் செயல்படுவது அவசியம்!

காரணமின்றி கல்விக் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்..?

ஒரு மாணவர் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த திலிருந்து அடுத்த 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கி மாணவருக்குக் கடன் அளிப்பது அல்லது கடன் நிராகரிப்புக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகளால் நிராகரிக்க முடியும். காரணமின்றி, மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக அந்த வங்கியின் மண்டல மேலாளரிடம் (Zonal Manager) புகார் தெரிவிக்கலாம். அவரிடமிருந்து உரிய பதில் ஏதும் கிடைக்காதபட்சத்தில் மத்திய அரசின் இணையதளமான pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism