Published:Updated:

“மனதளவில் எனக்கு 25 வயதுதான்..!” அமைச்சர் மா.சுப்பிரமணியன் உற்சாகம்

மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மா.சுப்பிரமணியன்

ஹெல்த் இஸ் வெல்த் - புதிய பகுதி

வாழ்வதற்குப் பணம் முக்கியம்தான். ஆனால், பணத்தைவிட மிக முக்கியமானது ஆரோக்கியமான உடல்நிலை. சமூகத்தில் நாம் வியந்து பார்க்கும் பிரபலங்கள் தங்கள் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வாரமும் விவரிக்கவிருக்கிறது இந்த `ஹெல் இஸ் வெல்த்’ என்கிற புதிய பகுதி.

'மாரத்தான் ஓட்டம் + உடற்பயிற்சி = மா.சுப்பிரமணியன்’ என்று தாராளமாக அடையாளப்படுத்தலாம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை! அவரின் ஃபிட்னஸ் ரகசியம் அறிந்துகொள்ள ஓர் அதிகாலையில் அவரைச் சந்தித்தோம். காலை 5 மணிக்கு எழுந்து, 21 கி.மீ தூரம் ஓடி முடித்துவிட்டு, வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

``சின்ன வயசிலிருந்தே எந்த விளையாட்டுகள் மீதும் எனக்கு ஆர்வமே வரலை. அதிக பட்சமா நான் விளையாடிய விளையாட்டு, கோலி விளையாட்டுதான். திருமணம், குழந்தைகள், அரசியல் வாழ்க்கை என்று வாழ்க்கையின் போக்கில் உடல்நலத்தைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை.

1996-ம் ஆண்டு, உடல் சோர்வு ஏற்படவே மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றேன். பரிசோதனையில், எனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. அப்போது எனக்கு வெறும் 35 வயதுதான். அந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது. நண்பர்கள் எல்லாம் எனக்காக வருந்தினார்கள். `இனிமேல் விரும்பியதைச் சாப்பிட முடியாது; ஆக்ட்டி வாக இருக்க முடியாது’ என்று பலரும் சொன்னார்கள். ஆனால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் இயல்பாக இருக்க முடி யாதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

மருத்துவர்களுடைய அறிவுரைப்படி, முதலில் வாக்கிங் போக ஆரம்பித்தேன். காலையில் எழுந்து, ஆறு கிலோ மீட்டருக்கு மேல் வாக்கிங் செல்லும் அளவுக்கு என் ஈடுபாடு அதிகரித்தது. அதிக தூரம் நடப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அதுபோலவே, சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில்தான் என் வாழ்க்கை யையே திருப்பிப் போட்ட இன்னொரு சம்பவம் நடந்தது” - சற்று இடைவெளிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“மனதளவில் எனக்கு 25 வயதுதான்..!” அமைச்சர் மா.சுப்பிரமணியன் உற்சாகம்

``2004-ல் அக்டோபர் 17 அன்று, மதுரையில் கலைஞருக்குச் செம்மொழி விருதுக்கான பாராட்டு விழா. பெரம்பலூர் தாண்டி நாரணமங்கலம் என்கிற கிராமத்துக்கிட்ட நாங்க சென்றுகொண்டிருக்கும்போது, கார் மிகப் பெரிய விபத்தில் சிக்கியது. என்னுடன் பயணித்த ஜம்புலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எனக்கு தலையில் பலத்த காயம். அதிக அளவு ரத்தம் வெளியில் சென்றுவிட்டது. அதுமட்டுமல்ல, வலது காலில் மூட்டு ஆறு துண்டுகளாக உடைந்துவிட்டது. திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அனைத்துச் செய்தித்தாள்களிலும் ‘ஜம்புலிங்கம் மரணம், மா.சுப்பிர மணியன் கவலைக்கிடம்...’ என்று எழுதினார்கள். 10, 15 நாள் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு, சென்னைக்கு அழைத்துவந்து, மியாட் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

சில நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தலைக் காயம் சரியாகியது. கால் மூட்டும் ஓரளவுக்குச் சரியானது. ஆனால், `இனிமேல் நீங்கள் வாழ்க்கை முழுவதும் வேகமாக நடக்க முடியாது. ஓட முடியாது. தரையில் சம்மணம் போட்டு உட்கார முடியாது’ என அதிர்ச்சி தகவல் சொன்னார் மருத்துவர். அதைக் கேட்டு எனக்கு கவலை வந்துவிட்டது. இந்த நிலையில்தான், யோகா பயிற்சி பற்றிக் கேள்விப்பட்டு அதில் ஈடுபட்டேன். என் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பாஸ்கரன் என்ற யோகா மாஸ்டரிடம் நான் யோகா பயின்றேன். ஒன்றரை வருடத்துக்கும் மேலாக முழு ஈடுபாட்டுடன் யோகா பயிற்சி மேற்கொண்டதன் பலனாக நான் தரையில் சம்மணம் போட்டு அமரும் அளவுக்கு முன்னேறினேன்.

“மனதளவில் எனக்கு 25 வயதுதான்..!” அமைச்சர் மா.சுப்பிரமணியன் உற்சாகம்

சில நாள் சென்றதும் உங்களால் சம்மணம் போட்டு அமர முடியாது என்று சொன்ன மருத்துவரைச் சந்தித்தேன். அவர் முன்பு பத்மாசனம் செய்து காண்பித்தேன். மிரண்டு போய் பார்த்தார். எப்படி இது சாத்திய மானது என்று கேட்டார். யோகா பயிற்சிதான் காரணம் என்றேன்! அனுபவத்தின் வாயிலாக யோகாவின் மகத்துவத்தை அறிந்த நான், 2006-ல் சென்னை மாநகராட்சி மேயர் ஆனதும், பொதுமக்களும் அந்த பலனைப் பெற வேண்டும் என்பதற்காக, சென்னை மாநகராட்சி பள்ளி களிலும் யோகாவை ஒரு பாட மாகக் கொண்டு வந்தோம். சென்னை மாநகராட்சி பூங்காக்கள் அனைத்திலும் யோகா மேடைகள் அமைத்து, பார்ட்-டைம் யோகா பயிற்சி யாளர்களை நியமித்து பொது மக்களுக்கும் இலவசமாக யோகா பயிற்சி தந்தோம்’’ என்றவர், அடுத்ததாகத் தன்னுடைய மாரத்தான் ஓட்டம் குறித்த வரலாற்றுக்குள் நுழைந்தார்.

``2014-ல் பாண்டிச்சேரி ஆரோவில்லில் ஒரு மாரத்தான் நடக்கிறது என்று கேள்விப்பட் டேன். யோகா, வாக்கிங், ஜிம் ஆகியற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எனக்கு மாரத்தானிலும் கலந்து கொள்ள ஆர்வம் வந்தது. அதற்காக இரண்டு மாதங்கள் ஓடி, பயிற்சி செய்தேன். 2014 பிப்ரவரி யில்தான் நான் முதல் மாரத்தானில் கலந்து கொண்டேன். முதல் மாரத்தானே 21 கிலோ மீட்டர் ஓடினேன். அப்போது வயது எனக்கு 54. என்னைவிட குறைந்த வயது உடையவர்கள்கூட அந்தத் தூரத்தை ஓடி முடிப்பதற்கு மூன்று மணி நேரத்துக்குமேல் எடுத்துக் கொண்டார் கள். நான் 2 மணி நேரம் 34 நிமிடங்களில் ஓடி முடித்தேன். முதல் அனுபவமே இதுவும் நம்மால முடியும்ங்கிற நம்பிக்கையைக் கொடுத்தது.

அதை அடுத்து எங்கு மாரத்தான் நடக்கிறது என்று தேடித் தேடி ஓட ஆரம்பித்தேன். இரண்டாவது மாரத்தான் மும்பையிலும், மூன்றாவது மாரத்தான் ஆஸ்திரேலியாவிலும் ஓடினேன். 25 மாரத்தான் ஓட்டங்களை நான் ஓடி முடித்த பிறகு, 54 வயது சர்க்கரை நோயாளி, அதுவும் வலது கால் மூட்டு ஆறு துண்டு களாக உடைந்து மீண்ட நிலையில் இவ்வளவு மாரத்தான்கள் ஓடியிருக்கிறார்களா என்று பார்த்தால், அப்படி யாருமே இல்லை. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தேன். இன்றுவரை 133 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்திருக் கிறேன். கலைஞர் நினைவாக, நானே ஒரு விர்ச்சுவல் மாரத் தானையும் ஒருங்கிணைத்திருக்கிறேன். ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ முதல் உலக சாதனை வரை படைத்திருக்கிறேன்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கத்தார், நார்வே உள்ளிட்ட 12 வெளிநாடுகளில் ஓடியிருக்கிறேன். இந்தியாவில் 20 மாநிலங்களில் ஓடியிருக்கிறேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 21 கிலோ மீட்டர் என் கால் தடத்தைப் பதிய வைக்க வேண்டும் என்பது எனது லட்சியம். ஒரு நாளும் என் ஓட்டத்தை நிறுத்தியதே கிடையாது.

வெளியூரோ, வெளிநாடோ எங்கு சென்றாலும் காலை 5 மணிக்கே எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவேன். அதைச் சமூக வலைதளங்களில் தவறாமல் பகிர்வேன். காரணம், என்னைப் பார்த்து ஒரு சிலராவது உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால், அது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தினமும் பத்துப் பேராவது `உங்களைப் பார்த்து நானும் ஓடுகிறேன்’ என்கிறார்கள்.

25 வருஷங்களுக்கு மேலாக எந்த உணவையும் ஒதுக்குவது இல்லை. நான் அசைவப் பிரியன். விரும்பிய உணவை உண்பேன். ஆனாலும், என்னால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க முடிகிறது எனில், எனது ஓட்டமும் உடற்பயிற்சியும் மட்டும்தான். எனக்கு இப்போது 61 வயது ஆகிறது. ஆனால், மனதுக்குள் 25 வயது இளைஞருக்கான உடல் வலிமை இருப்பதாக நினைக்கிறேன்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் சிகரெட், மது என உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற எந்த கெட்ட பழக்கங்களும் எனக்கு கிடையாது” என்று முடிக்கிறபோது அவர் குரலில் அவ்வளவு உற்சாகம்!