நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஐ.டி துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு... உண்மை நிலவரம் என்ன?

ஐ.டி துறை
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி துறை

ஐ.டி துறை

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை தொழில் நிறுவனங்களானது பல்வேறு மாற்றங் களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு தலைதூக்கி, ஆள்குறைப்பு நடந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதுடன், ஊழியர்களின் ஊதியமும் உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல், காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 2.3 லட்சம் புதிய பட்டதாரி களுக்கு ஐ.டி நிறுவனங்கள் வேலை தந்துள்ளன. அடுத்து வரும் 2023-லும் அதிக வேலை வாய்ப்புகளை வழங்க ஐ.டி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வில், 2022-23 நிதியாண்டின் முடிவில் ஐ.டி நிறுவனங்கள், முதன்முறையாக வேலை தேடும் சுமார் 3.6 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் அதே சமயத்தில், போதிய திறன் உள்ளவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், கொரோனா காரணத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை.

ஐ.டி துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு... உண்மை நிலவரம் என்ன?

வகுப்புகள் முறையாக நடக்கவில்லை. பல தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளும் திருப்திகரமான உணர்வைத் தருவதாக இல்லை. ஏற்கெனவே படிப்புக்கும் வேலைக்கும் மிகப் பெரிய இடைவெளி காணப்படும் நிலையில், இது மேலும் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேலைவாய்ப்புக்கான உண்மையான நிலவரம் எப்படி இருக்கிறது என்று காம்ஃபை சொல்யூஷன் என்ற ஹெச்.ஆர் துறை ஆலோனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது...

‘‘பொதுவாக, சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கோடிக் கணக்கான டாலர்களில் வருவாயைக் குவிக்கின்றன. ஆனால், அதில் வேலைபார்க்கும் ஐ.டி ஊழியர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே தருகின்றன என்றும், பணிச்சூழல் அதிக மன அழுத்தத்தைத் தருவதாகவும் கருத்துகள் எப்போதும் உண்டு.

அதில் மாற்றுக்கருத்துகள் இல்லைதான். இருந்தபோதிலும், அதிக அளவு சம்பளம், கனவு வாழ்க்கை முறை ஐ.டி துறையை நோக்கியே அவர்களை ஓடவைத்தது. ஓடவைக்கிறது. இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த வருடம் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிக அளவு கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி பிரிவுகளில் சீட்டுகள் நிரம்பியுள்ளன.

கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி மற்றும் புதிய புராஜெக்ட்டுகள் போன்ற காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களின் பிராண்டுகள் மேலான மோகம் குறைந்து விட்டது. பத்து, பதினைந்து வருடங்கள் ஐ.டி துறையில் வேலைபார்த்த ஒருவர், தன்னுடைய நெட்வொர்க்கைப் பயன்படுத்தி புராஜெக்ட்டுகள் பெற்று சுயமாகச் செய்து முடித்து விட முடியும் என்ற சூழல் இப்போது உள்ளது.

ஏ.கே.சுகுமாரன்
ஏ.கே.சுகுமாரன்

பெரிய நிறுவனங்கள் போன்று குறைந்த ஊதியம் அளிக்காமல் குறைந்த அளவு லாபம் வைத்து வைத்து தன்னுடைய ஊழியர் களுக்கு அதிக அளவில் ஊதியம் அளிப்பதால் அத்தகைய நிறுவனங்களை நோக்கி இன்றைய இளைஞர்கள் நகர் கிறார்கள். அதனால் வேறுவழி யன்றி பிரபல நிறுவனங்களும் தங்களுடைய ஊதிய முறையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டுள்ளன.

ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கு முன் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் அதிகபட்சம் மூன்று மாதம் வரை நோட்டீஸ் காலத்தில் வேலை செய்துவிட்டுப் போகச் சொல்கின்றனர். ஏனெனில், புதிதாக ஒருவரை அந்த இடத்துக்கு வேலைக்கு அமர்த்த அவரைத் தயார் செய்வதற்கான கால அவகாசமாக இதைப் பார்க்கிறார்கள். இல்லையெனில், அதற்குரிய இழப்பீட்டுத் தொகையைக் கட்டச் சொல்கிறார்கள். இத்தகைய ஊழியர்களுக்கு புது ஆஃபர் கொடுத்த நிறுவனங்களே இத்தகைய தொகையைக் கட்டி குறைந்த நோட்டீஸ் காலத்தில் இருந்து அந்த ஊழியர்களைத் தங்கள் நிறுவனங்களுக்கு கூட்டிச் சென்ற கதையும் நடந்தேறியுள்ளது.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கிறோம் என்று சந்தோஷப்பட்ட ஊழியர்கள், போகப்போக வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போதுதான் அதிக அளவு வேலை அழுத்தத்தை அனுபவிப்பதாகப் புலம்பத் தொடங்கினார்கள். ஒரு சிலர் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் கான்செப்ட்டைப் பயன்படுத்தி பகுதி நேர பணியாக வேறு வேலைகளையும் பார்க்கத் தொடங்கினர். வேறு நிறுவனத்தின் புராஜக்ட்டில் பணிபுரிவதும் நடந்தது.

ஆக கடந்த சில வருடங்களாக மேலோட்டமாக இருந்த இந்தப் போக்கு, கொரோனா காலத்துக்குப் பின் தீவிரமடைந்தது. அதே போல, இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் ‘வேலை பாதுகாப்பு’ குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தால், வேலைக்குச் சேர பத்து நிறுவனங்களின் ஜாப் ஆஃபர் லெட்டர்கள் இருப்பதாக நினைக்கிறார்கள்.

நிறுவனங்களும் ஒரு காலத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது பல கட்ட தர ஆய்வுகளுக்குப் பின் வேலைக்கு ஆள் எடுத்தன. தொழில்நுட்ப அறிவு எந்த அளவு உள்ளது என்று பார்த்து, ஊழியரின் திறன் பயன்பாட்டையும் உள்ளடக்கி முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், இப்போது ஆள் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டன. இதைப் பயன்படுத்தி இன்றைய இளைஞர்களும் தங்களுடைய ஆஃபர் பேரத்தைக் கனக்கச்சிதமாக சாதித்துக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களின் திறமை மீது வெளிநாட்டவர்க்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியர்களின் திறமையைத் தாண்டி நம் கலாசாரம், பாரம்பர்யத்தில் ஒன்றிப்போன ‘எத்திக்ஸ்’ மற்றும் ‘இன்டக்ரிட்டி’ ஆகியவற்றின் மீதும் நம்பிக்கை உண்டு. அதனால்தான் இந்தியர்களுக்குத் தங்களுடைய புராஜக்ட்டுகளைக் கொடுக்கின்றன.

ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாண்புகளை நாம் இழந்துகொண்டு வருகிறோமோ என்ற சந்தேகமும் எழுகிறது. நம் நாட்டில் மனிதவளம் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்க இந்த மாண்புகளே காரணமாக இருக் கின்றன. அதை நாம் இழந்துவிடக் கூடாது. அதை நிறுவனங்களும் நிறுவனத்தின் தூண்களான ஊழியர் களும் கருத்தில் கொண்டால் இன்னும் அதிகமான வாய்ப்புகளும் வளர்ச்சியும் சாத்தியமாகும்’’ என்றார்.

செய்யும் வேலை தரமாக இருந்தால் மட்டுமே எந்தத் தொழிலிலும் நாம் நிலைத்து நிற்க முடியும். ஐ.டி தொழிலை நாம் தரத்துடன் செய்தால் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து புராஜெக்ட் தரும் என்பதே உண்மை!