Published:Updated:

`40+ வயதானவர்கள் வேலை பறிபோகும் என அஞ்ச வேண்டாம்!’ – `மஃபா' லதா பாண்டியராஜன்

ஒரு நிறுவனத்துக்கு இளைஞர்கள் தேவைப்படுவதுபோலவே அனுபவசாலிகளும் தேவை. ஏனெனில், அவர்களுக்குத்தான் அந்த நிறுவனம் குறித்த வரலாறு தெரியும்.

லதா பாண்டியராஜன்
லதா பாண்டியராஜன் ( vikatan )

40 வயது கடந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதா, வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப நினைப்பவர்களுக்கு அதே சம்பளத்தில் இங்கேயும் வேலை கிடைக்குமா, இல்லத்தரசிகளாக இருந்துவிட்டு, 40 வயது கடந்தபின்னர் பெண்கள் வேலைக்குச் செல்வது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் `மஃபா’ குழுமத்தின் இயக்குநர் லதா பாண்டியராஜன்.

லதா பாண்டியராஜன்
லதா பாண்டியராஜன்
vikatan

40 வயதிலிருப்பவர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற விரும்பினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதா... நிறுவனங்களில் அவர்களை வேலைக்கு எடுப்பார்களா?

அலுவலகம்
அலுவலகம்
vikatan

பணிக்காலத்தைப் பொறுத்தவரை 40 வயது என்பது இடைப்பட்ட காலகட்டம். அவர்களிடம் 15 -20 ஆண்டுக்கால அனுபவம் சேர்ந்திருக்கும். எனவே அவர்களுடைய துறையில் ஆழ்ந்த திறமை இருக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை. எனவே, வேலைவாய்ப்பு குறித்த பயமே அவர்களிடம் இருக்கக் கூடாது. மனிதவளத்துறையைப் பொறுத்தவரை நாங்கள் குறிப்பிடுவது, அந்த 40+ வயதுக் காலத்தில்தான் அவரது பணியில் உயரமான இடத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையும்.

அப்படியான அனுபவத்தைப் பெறுவதற்கு, முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்ததுமே அந்த நிறுவனத்திலேயே குறைந்தது ஐந்தாண்டுகளாவது தொடர்ந்து பணியாற்றினால் அந்த துறை குறித்த முழுமையான அறிவைப் பெற முடியும். அதை அடிப்படையாகக்கொண்டு மென்மேலும் வளர்ச்சிகளை எட்டலாம்.

இதுகுறித்து நாங்கள் ஓர் ஆய்வே நடத்தியிருக்கிறோம். அதன்படி பார்த்தால், அடிக்கடி நிறுவனங்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்களைவிட, ஆரம்பத்தில் ஒரே நிறுவனத்தில் நான்கைந்து ஆண்டுகள் பணியாற்றியபின் அடுத்தடுத்த நிலைக்குச் செல்பவர்களின் வளர்ச்சி நிலை மிகவும் நன்றாக இருப்பது தெரியவந்தது.

அனுபவமும், தனது அறிவின்மீதான நம்பிக்கையும் மிகவும் முக்கியம். அதேபோல, டெக்னாலஜி மாறமாற புதுமையாகக் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். அப்படியிருந்தால் 40 வயது கடந்தாலும் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை.

40 வயது கடந்தவர்களுக்கு சம்பளம் அதிகம் என்பதற்காக வேலை பறிபோகும் சூழல் இருப்பது உண்மையா, பணியை எப்படித் தக்கவைத்துக்கொள்வது?

அலுவலகம்
அலுவலகம்

சம்பளம் அதிகமென்பதால் பணியிலிருந்து நீக்குவது உண்மைதான். அவர்களுக்குத் தரும் சம்பளத்தைவிடக் குறைவான சம்பளத்தில் இளைஞர்களைப் பணியில் அமர்த்தலாம் என்று முடிவெடுப்பதுண்டு. இதுபோன்ற சூழலைத் தவிர்ப்பதற்கு, பணியிலிருப்பவர்கள் எப்போதும் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதில் ஆர்வத்தோடு இருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள், 10 ஆண்டுகள் பணியாற்றியதுமே அதற்குமேல் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதில் ஆர்வம்காட்டுவதில்லை.

ஒரு நிறுவனத்துக்கு இளைஞர்கள் தேவைப்படுவதுபோலவே அனுபவசாலிகளும் தேவை. ஏனெனில், அவர்களுக்குத்தான் அந்த நிறுவனம் குறித்த வரலாறு தெரியும். எந்தவொரு சிக்கலையும் திறம்பட தீர்க்கத்தெரியும். நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கு அனுபவமிக்க பணியாளர்களும் அவசியம். எனவே, அனுபவமிக்கவர்கள் தங்களைக் காலத்துக்கேற்ப புதுப்பித்துக்கொண்டே வந்தால் பணி இழப்பு குறித்து கவலைப்படத்தேவையில்லை.

குடும்பச்சூழல் காரணமாகப் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பலாம் என்று நினைப்பவர்களுக்கு அதே சம்பளம் இங்கே கிடைப்பதில்லையே, எப்படிச் சமாளிப்பது?

`40+ வயதானவர்கள் வேலை பறிபோகும் என அஞ்ச வேண்டாம்!’ – `மஃபா' லதா பாண்டியராஜன்

வெளிநாடுகளில் பணியாற்றி பெறக்கூடிய வருமானம் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும்போது வருமான வரி கிடையாது என்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடிகிறது. மேலும், அங்குள்ள பணிச்சூழலே வேறு மாதிரியானது. வெளிநாடுகளில் மார்க்கெட்டிங் அல்லது விற்பனைப் பிரிவுகளில் பணியாற்றுவதற்கும் இந்தியாவில் அதே துறையில் பணியாற்றுவதற்கும் வித்தியாசம் உண்டு.

எனவே, வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்தவர்கள் இந்தியாவுக்குள் வரும்போது இங்குள்ள பணிச்சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். தங்களது வாழ்க்கைமுறை, எதிர்பார்ப்புகள் போன்றவற்றை இங்குள்ள நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டு வாழப்பழகிவிட்டால் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

வெளிநாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இந்தியாவுக்கு வரும்போது முன்பிருந்த சூழல் தற்போது இருக்காது. டெக்னாலஜி உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனவே, இப்போதுள்ள சூழலுக்கேற்ப தங்களை மாற்றியமைப்பதற்கு இரண்டாண்டு காலம் எடுத்துக்கொண்டால், அதன்பின்னர் இந்தியாவிலேயே பணியில் தொடர்வது எளிதானதாகிவிடும். இந்த இரண்டாண்டுக் காலம்தான் மிகவும் போராட்டமாக இருக்கும்.

வளர்ந்த குழந்தைகளுக்கு உடனிருந்து வழிகாட்டுவது, வயதான பெற்றோரை அருகிலிருந்து கவனித்துக்கொள்வது, மனைவியோடு அன்பைப் பரிமாறி குடும்பத்தை வழிநடத்துவது போன்ற நன்மைகளைக் கருத்தில்கொண்டு சில சிரமங்களைத் தாங்கியாக வேண்டும்
லதா பாண்டியராஜன்

திருமணமான பின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக வீட்டிலேயே இருந்துவிட்டு, 40 வயதை எட்டும்போது மீண்டும் வேலைக்குச் செல்லலாமே என்ற எண்ணத்திலிருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவில் உள்ளது?

பெண்கள்
பெண்கள்

40 வயது கடந்த பெண்களில் பலருக்கும் இதுபோன்ற எண்ணம் எழுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பணி வாய்ப்பு என்பது தொழில்முனைவோர்களாகக் களமிறங்குவது. தொழில்முனைவோருக்கு வயது ஒரு தடையே கிடையாது. 60 வயதிலும்கூட தொழில்முனைவோர் ஆகலாம். அதற்கான பயிற்சிகள், நிதி மேலாண்மை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

எம்பிராய்டரி, கவரிங் நகைகள் செய்வது, சமையல், பேக்கேஜிங் போன்று பல தொழில்களை வீட்டிலிருந்தே செய்து ஆன்லைன் மூலமாகக்கூட மார்க்கெட்டிங் செய்ய முடியும். இதற்கான யோசனையும் ஆர்வமும் இருந்தாலே போதும். சாதிக்கலாம்.

கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினால், எந்தத் துறை என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெற்று வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அப்படிச் செய்வதுதான் சரியான வழிமுறை. ஏற்கெனவே சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அதன்பின் வேலையை விட்டிருந்தால், மீண்டும் வேலைக்குப் போவதற்கு அதே துறையில் அப்டேட் செய்துகொண்டு விண்ணப்பிக்கலாம். அனைத்துத்துறைகளிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இன்றைய காலகட்டத்தில் பணிக்குச் செல்லும் ஆர்வமுள்ள பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த தயங்கக்கூடாது.