Published:Updated:

ஐ.டி துறையில் நீண்ட நாள்களுக்கு WFH செய்வதில் பல சிக்கல்கள்! - விளக்கும் ஊழியர் #MyVikatan

IT Industry
IT Industry ( Thought Catalog on Unsplash )

வீட்டிலிருந்து ஊழியர்கள் பணி புரிவதில் பல சிரமங்கள் இருந்தாலும் வெற்றிகரமாக பணி பாதிக்காமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த 3 மாதங்கள் சிறப்பாகவே இயங்கின ஆனால்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் துரித கதியில் தமது ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு வழி வகை செய்தது.

போர்க்கால அடிப்படையில் ஒரு ஊழியர் பணி புரிவதற்கு தேவையான மடிக்கணினி, டெஸ்க்டாப் போன்றவற்றை பணிபுரியும் ஊழியர்களின் வீட்டுக்குக் கொண்டு சேர்த்தது. நிறுவனத்தின் கணினி இல்லாமல் ஒரு ஊழியர் சொந்த மடிக்கணினி வைத்திருந்தாலும் அதைக் கொண்டு பணிபுரிவதற்கு அனுமதி அளித்தது.

IT Professional
IT Professional
Pixabay

இன்டர்நெட் வசதியில்லாத ஊழியர்கள் தமது வீட்டில் இன்டர்நெட் கனெக்‌ஷன் எடுத்து பணிபுரிய வழிவகை செய்தது. பெரும்பாலும், இன்டர்நெட் பில்லை ஊழியர்களுக்கு நிறுவனமே செலுத்தியது.

வீட்டிலிருந்து ஊழியர்கள் பணி புரிவதில் பல சிரமங்கள் இருந்தாலும் வெற்றிகரமாகப் பணி பாதிக்காமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த 3 மாதங்கள் சிறப்பாகவே இயங்கின.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டனர்.

தமிழக அரசு ஊரடங்கில் இப்பொழுது பல தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழக அரசு வழங்கிய தளர்வுகள் குழப்பத்தின் உச்சமாக இருந்தது.

முதலில் சென்னை நகரத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் அதிகபட்சம் 80 ஊழியர்களுடன் பணி புரியலாம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு தமிழக அரசிடம் தகவல் தொழில்நுட்பத்துறை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதை பிரதிபலிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

Work From Home
Work From Home
Surface on Unsplash

சென்னையில் இயங்கிவரும் பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவிலான ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. பெரிய நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட், ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களில் 10,000 முதல் 30,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் செக்யூரிட்டிகள் மட்டுமே சில 100-களில் இருப்பார்கள். இந்தப் பெரு நிறுவனங்களில்தான் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் அதிகபட்சமாக 80 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று கூறினால் அந்த நிறுவனத்தை நடத்தவே முடியாது.

மேலும், மற்றொரு அறிவிப்பாக அந்த ஊழியர்கள் நிறுவனம் அமைத்துக் கொடுக்கும் பேருந்துகளில் மட்டும்தான் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்ற மற்றொரு வழிகாட்டுதலையும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பான்மையான ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமது சொந்த வாகனங்களில் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்தக் கொரோனா காலத்தில் தமது சொந்தக்கார்களில் அல்லது டூவீலர்களில் வருவதையே தமக்கு பாதுகாப்பாகக் கருதுகின்றனர். இந்த நிறுவனத்தின் பணி புரிபவர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

பெரும்பான்மையானவர்கள் அலுவலகம் போய் வர 2 முதல் 4 மணி நேரம் பிரயாணம் செய்யக்கூடியவர்களாக உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பேருந்துகளில் வருவதும் பாதுகாப்பு குறைவாகவே அவர்கள் கருதுகின்றனர்.

Work From Home
Work From Home
Jefferson Santos on Unsplash

தகவல் தொழில்நுட்பம் என்றால் வீட்டில் இருந்தே பணிபுரிய முடியும் என்ற பொது எண்ணத்தினால்தான் இவ்வளவு குறைவாக ஊழியர்களைப் பணி செய்ய அரசு அறிவுறுத்துகிறது.

ஆனால், உண்மை அதுவல்ல. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல முன்னணி நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் கையாளுகின்றன. அதாவது, உலகில் உள்ள பிரபல வங்கிகள், இன்ஷுரன்ஸ், மருத்துவ விவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட விவரங்களை பராமரித்து வருகின்றனர்.

``முதல் மாதம் நல்லாத்தான் இருந்தது, ஆனா இப்போ..!" வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து ஐடி ஊழியர்கள்

மிகவும் முக்கியமான தகவல்களைப் பராமரிக்கும் புராஜெக்ட்களை இந்த நிறுவனங்கள் பல கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அலுவலகங்களில் பராமரித்து வருகிறது. இத்தகைய புராஜெக்ட்களில் பணிபுரியும் ஊழியர் அலுவலகத்துக்குள் கைபேசியைக் கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கைபேசி கொண்டு தகவல்களைப் போட்டோ எடுத்து விடக்கூடாது. அதன் மூலம் தகவல் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை.

Office environment
Office environment
Austin Distel on Unsplash

மேலும் அலுவலகத்தில் இன்டர்நெட் கனெக்சன் பெரும்பாலும் இருப்பதில்லை. இந்தப் பாதுகாக்கப்பட்ட தகவல்களை இணையத்தின் வாயிலாகப் பரப்பக் கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை. மேலும், அலுவலகத்தினுள் பிரின்டர்கூட இருக்காது. இவை அனைத்துமே தகவல் திருடப்படக் கூடாது என்ற காரணத்துக்காகவே ஆகும். மேலும், இந்த அலுவலகங்களில் உள்ள செக்யூரிட்டிகள் ஒவ்வோர் ஊழியரையும் தனித்தனியாக ஆராய்ந்து உள்ளேயும் வெளியேயும் அனுப்புவார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் ஒப்புதலைப் பெற்று ஊழியர்களைத் தமது வீட்டிலிருந்து பணிபுரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுமதித்துள்ளனர். இருந்தாலும், வீட்டிலிருக்கும் ஊழியர்கள் கைபேசி, இன்டர்நெட் பயன்படுத்தக் கூடாது என்று கட்டாயப்படுத்த முடியாது. சூழ்நிலை கருதி சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களைப் பணி செய்ய அனுமதித்தது என்றாலும் தகவல் திருடப்படும் அபாயம் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் பொழுது அதிகளவில் உள்ளது.

Office environment
Office environment
Mario Gogh on Unsplash

மேலும், இந்த நிறுவனங்கள் பல பிரபல நிறுவனங்களின் சர்வர்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தினம்தோறும் தகவல்களைப் பாதுகாக்கவும் சர்வர்களை பராமரிக்கவும் ஊழியர்கள் சர்வர் இருக்கும் இடத்துக்கு கட்டாயம் செல்ல வேண்டியது இருக்கும். இந்த வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்ய இயலாது. அரசு நினைப்பதுபோல 80 நபர்களுடன் இந்த நிறுவனங்களால் பணி செய்ய முடியாது.

இந்தக் காரணங்களால், நீண்ட காலத்துக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது. தகவல் திருட்டு ஏதேனும் ஏற்பட்டால் இந்திய நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்த நம்பிக்கை உலக அளவில் சரிந்துவிடும். அதனால் விரைவில் இது போன்ற பாதுகாப்பான பணிகளில் ஈடுபடக்கூடிய தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வருவது மிகவும் அவசியமாகும்.

Work From Home
Work From Home
Pixabay

அதனால்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக ஊழியர்கள் பணி புரிய அனுமதிக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஏற்று தமிழக அரசு முதலில் 10 சதவிகித ஊழியர்களை அலுவலகத்திலிருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. பின்னர் 50 சதவிகித ஊழியர்கள் உடன் பணிபுரிய அனுமதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்புகள் மூலம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊர்களுக்குச் சென்ற தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் வரும் நாள்களில் சென்னை திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இயல்பு நிலை திரும்ப வழி வகுக்கும். பணி திரும்பும் ஊழியர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படாத வகையில் அலுவலகங்களில் உட்காரும் முறையை இந்த நிறுவனங்கள் மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்துறை என்பது பெரு நிறுவனங்களின் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல, அதனோடு தொடர்பிலிருக்கும் பல நூறு மக்களின் வாழ்வாதாரம் என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

Work
Work
Pixabay

இந்தச் சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் செய்து தர வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. ஊழியர்களின் அச்ச உணர்வைப் போக்க வேண்டிய கடமையும் இந்த நிறுவனங்களுக்கு உள்ளது. ஊழியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் தகுந்த மருத்துவ காப்பீடுகளை இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் இந்த நோய் தொற்று இன்னும் சில மாதங்கள் வாழும் என்ற சூழ்நிலையில் அரசு வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பணிகளைத் தொடர நிறுவனங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும். மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், வங்கி போன்ற பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் அலுவலகத்திலிருந்து பணிசெய்ததே இந்த ஊரடங்கு நடவடிக்கையை வெற்றி பெறச் செய்தது. நாட்டின் பொருளாதார சக்கரத்தை சுழல செய்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் நிறுவனத்தின் தேவைகளுக்கு உதவிட வேண்டும்.

- ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு