Published:Updated:

நீங்கள் வேலை மாறப்போகிறீர்களா..? - கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

ஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஜாப்

J O B C H A N G E

நீங்கள் வேலை மாறப்போகிறீர்களா..? - கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

J O B C H A N G E

Published:Updated:
ஜாப்
பிரீமியம் ஸ்டோரி
ஜாப்

நம் நாட்டில் உள்ள புரஃபஷனல்களில் நான்கில் மூன்று பேர், வேலை மாறும் முயற்சியில் இருப்பதாக ‘லிங்க்ட் இன்’ சொல்கிறது. இதற்கான காரணங்கள் என்னென்ன, வேலை மாறும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என சோஷியாலஜிஸ்ட் அண்ட் ஹெச்.ஆர். கன்சல்டன்ட் பாலமுருகனிடம் கேட்டோம். விரிவான விளக்கம் தந்தார் அவர்.

வேலை மாற பல காரணங்கள்...

உரிய அங்கீகாரம் கிடைக்காததால் தான், பலரும் வேறு நிறுவனத்துக்கு மாற நினைக்கிறார்கள். உரிய அங்கீகாரமின்மை மிகப்பெரிய அளவுக்கு மனஅழுத்தத்தைத் தரக்கூடியது.

நிறுவனம் பிடிக்கவில்லை என்பதற்காகப் பலரும் வேலை மாறுவதில்லை. தன்னுடைய மேலதிகாரியைப் பிடிக்காமல்தான் வேலை மாறுகிறார்கள். பர்சனலாக தனக்குப் பிடித்தவருக்கு சப்போர்ட் செய்வது, பிடிக்காதவருக்கு ‘உன் வேலை சரியில்ல’ என்று மென்டல் டார்ச்சர் தருவது, அவசரத்துக்குக்கூட அவருக்கு விடுமுறை தராமல் இருப்பது என்று குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிற மேலதிகாரிகளிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்திலும் வேலை மாற நினைக்கிறார்கள்.

சில நிறுவனங்கள் தன்னிடம் பல வருடம் வேலைபார்த்தவருக்கு வழங்குவதைவிட புதிதாகச் சேர்ந்தவருக்கு அதிக சம்பளம் தரும். இதனால் மனம் வெறுத்தும் சிலர் வேலை மாற நினைக்கலாம்.

தன்னுடைய குழுவில் வேலை பார்ப்பவர்களின் தவற்றையும் குறைகளையும், மேலதிகாரிகள் தனிமையில்தான் கண்டிக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை மேலதிகாரிகள் பலபேருக்கு முன்னால்தான், ஊழியர்களின் குறைகளைச் சொல்வார்கள். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிற ஊழியர்கள் வேறு வேலை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஓர் ஊழியர் பத்துக்கு ஒன்பது வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். ஒரேயொரு வேலையில் மட்டும் தவறு செய்து சொதப்பியிருப்பார். இதைக் கவனிக்காமல் அவர் செய்த ஒரு தப்பை மட்டும் பெரிதுபடுத்தி காட்டுவதால், சிலர் மனம் வெறுத்து, வேறு வேலை தேட ஆரம்பிப்பார்கள்.

இதெல்லாம் ஓர் ஊழியரின் பார்வையில் மிகச்சரியான மனவருத்தங்கள்தான். ஆனால், ‘நிறுவனங்கள் உங்களை நேசிக்காது. நீங்கள் உங்கள் வேலையை நேசிக்க வேண்டும்’ என்பது ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி சொன்ன வாசகம். இந்த உண்மைபுரிந்தவர்கள், தான் செய்த வேலைக்கான பாராட்டை நிறுவனத்திடமிருந்தோ, மேலதிகாரி யிடமிருந்தோ பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்கள். பாராட்டை எதிர்பார்ப்பவர்கள் அது கிடைக்காத ஏமாற்றத்தால் வேலை மாற நினைப்பார்கள்.

ஜாப்
ஜாப்

வேலை மாறும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கல்லூரியில் படிக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கும். அப்போது இருந்த மனநிலையில் ‘உங்கள் கம்பெனிதான் என்னுடைய ட்ரீம் கம்பெனி. இந்த வேலைதான் என் கனவு வேலை’ என்று சொல்லி வேலையை ஒப்புக்கொண்டிருப் பார்கள். சில மாதங்கள் கழித்து, அவர் எப்போதோ விண்ணப்பித்த மல்ட்டிநேஷனல் கம்பெனியிலிருந்து இன்டர்வியூவுக்கு அழைப்பு வரும். இந்த கம்பெனியை அம்போவென்று விட்டுவிட்டு அந்த கம்பெனியின் இன்டர்வியூவுக்கு சென்று விடுவார்கள். முறைப்படி வேலையை விட்டு வெளியேறாததால், இவர்களிடம் ரிலீவிங் ஆர்டர் இருக்காது. அதனால் புதிய நிறுவனத்தில் ஏற்கெனவே வேலை பார்த்ததை மறைப்பார்கள். இந்த விவரம் புது கம்பெனிக்குத் தெரிய வரும்போது, அவர் மீதான நம்பிக்கை குறையும். இந்த நிறுவனத்திலும் இவர் இப்படித்தான் நடந்துகொள்வார் என்று நினைக்கும். விளைவு, மரியாதை இழப்பிலிருந்து வேலை இழப்பு வரைக்கும்கூட நிகழலாம். ஏனென்றால், நிறுவனங்கள் வேலை தொடர்பான அறிவைவிட உங்கள் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதைத்தான் அதிகம் பார்க்கும்.

நீங்கள் வேலை மாறப்போகிறீர்களா..? - கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

சில நிறுவனங்களில் இது சற்று மாறியும் நடக்கும். ‘ரிலீவிங் லெட்டர் இல்லையென்றாலும் உடனே வேலையில் சேர்ந்துவிடுங்கள்’ என்பார்கள். ஆனால், மூன்றாவதாக ஒரு கம்பெனிக்கு நீங்கள் மாறும்போது, நீங்கள் ஏற்கெனவே வேலை பார்த்த கம்பெனிகளில் உங்களைப் பற்றி விசாரிப்பார்கள். அப்போது உங்களைப் பற்றி சொல்லும் விஷயங்கள், உங்கள் இமேஜைக் குலைக்கும்படி அமையும். இதன் விளைவாக அந்த நிறுவனம் உங்களுக்கு வேலை தராமல்கூட போகலாம். எனவே, பழைய நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது எந்த விதத்திலும் பகையை சம்பாதிக்காமல் முறைப்படி வெளியேறுவது அவசியம்.

வேலை மாறும்முன் செய்ய வேண்டியவை...

புதிய கம்பெனி உங்களை உடனே வேலையில் சேரச் சொன்னாலும், பழைய கம்பெனியில் என்னிடம் கொடுத்திருக்கிற வேலைகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டுத் தான் வரமுடியும் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். இதனால், உங்களை வேலைக்கு எடுக்கவிருக்கிற புதிய கம்பெனிக்கு உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.

ஒரு சிலர் ஹார்டு வொர்க் செய்வார்கள். ஒரு சிலர் ஸ்மார்ட் வொர்க் செய்வார்கள். இன்றைக்குப் பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வொர்க்கைத்தான் விரும்புகின்றன. அதனால் வேறு நிறுவனத்தில் இன்டர்வியூவுக்கு செல்லும்போது நீங்கள் ஸ்மார்ட் வொர்க்கர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டு வாருங்கள். அது, நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தைவிட அதிகம் சம்பளம் பெற்றுத் தரும்.

பாலமுருகன்
பாலமுருகன்

வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும்!

வேலைபார்த்துக் கொண்டிருக் கிற கம்பெனியைவிட, வேலை பார்க்கப்போகிற கம்பெனியில் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு புது விஷயங்கள் நிறைய இருக்க வேண்டும். கூடவே உங்கள் வளர்ச்சியும் வேகமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப சிறந்த நிறுவனங்களில் வேலை தேடுங்கள்.

சவால்கள் அவசியம்!

வெற்றி கண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவர்கள் தங்களுக்கு செளகர்யமான நிறுவனங்களில் தொடர்ந்து வேலை பார்க்காமல், சவால் நிறைந்த வேலைகளைத் தேர்ந்தெடுத்திருப்பதை அறிந்துகொள்ள முடியும். அதனால், வேறு வேலைக்கு முயற்சி செய்யும்போது, ஏற்கெனவே பார்த்த வேலை என்று இருக்காமல் உங்கள் திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வருகிற சவால் நிறைந்த வேலையா என்று பாருங்கள்.

சில ஆயிரங்களுக்கு விலை போகாதீர்கள்!

கூடுதலாக, ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு வளர்ச்சி வாய்ப்பில்லாத வேறு கம்பெனிக்கு மாறாதீர்கள். அடுத்த மூன்று வருடங்களுக்கு சம்பள உயர்வு இல்லாமல் வேலைபார்க்க வேண்டி வரலாம். அதனால், வேலை மாறுவது என்று முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், உங்கள் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிற நிறுவனமாகத் தேர்ந்தெடுத்து மாறுங்கள்.