Published:Updated:

“எங்கள் கல்லூரியில் பரீட்சை கிடையாது!’’ சொல்கிறார் ‘லிபா’ இயக்குநர் ஜோ.அருண்

ஜோ.அருண்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ.அருண்

பேட்டி

சில வாரங்களுக்கு முன் லயோலா நிர்வாகக் கல்லூரியின் புதிய கட்டடத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தவிர, 2025-ல் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறது லயோலா கல்லூரி. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், லிபாவின் (LIBA - Loyala Institute of Business Administration) இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ.அருண், அந்த நிர்வாகக் கல்லூரியில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார். அந்த மாற்றங்கள் என்ன, நிர்வாகப் படிப்பு தொடர் பான திட்டங்கள் என்னவாக இருக்கிறது எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார் ஜோ.அருண். அவருடன் பேசியதில் சுருக்கமான தொகுப்பு இனி...

உங்களுடைய ஆரம்பகாலம் குறித்து..?

‘‘மதுரை அருகே பிறந்தேன். திருச்சியில் கல்லூரிப் படிப்பு. ஸ்காலர்சிப் மூலம் அடுத்தடுத்து படித்தேன். என் ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே அடுத்தடுத்து உயர்ந்தேன். அதனால் ஆசிரியராக வேண்டும் என்று விரும்பி, இந்த வேலைக்கு வந்தேன்.’’

பொருளாதாரம், மானுடவியல், மனிதவளம் எனப் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நீங்கள் மோதல் நிர்வாகம் (conflict management) குறித்து ஆய்வு மேற்கொண்டது ஏன்?

‘‘மோதல் என்று ஒன்று வந்தால்தான் நீங்கள் யார், உங்கள் எதிரி, நண்பன் யார் என்பது உங்களுக்குப் புரியும். மோதல்தான் ஒன்று மறையவும், இன்னொன்று புதிதாகப் பிறக்கவும் வழிசெய்கிறது. மோதல் என்பது நிம்மதியைக் குலைப்பதாக இருந்தாலும், அதுதான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் அதைத் தவிர்ப்பது நல்லதல்ல. எனவேதான் அது பற்றி ஆய்வு மேற்கொண்டேன்.’’

“எங்கள் கல்லூரியில் பரீட்சை கிடையாது!’’ சொல்கிறார் ‘லிபா’ இயக்குநர் ஜோ.அருண்

உங்களுக்கு இருக்கும் சர்வதேச அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...

‘‘கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பிசினஸ் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிசினஸை வைத்து கலாசாரம் உருவாவதில்லை.நீங்கள் ஒரு முடிவெடுக்கிறீர்கள் எனில், உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தில் இருந்து தான் எடுப்பீர்கள். அப்படியானால், உங்கள் முடிவு என்பது உங்களுடைய கலாசாரத்தில் இருந்துதான் வருகிறது. உதாரணமாக, வெளி நாடுகளில் கே.எஃப்.சி-யில் வெறும் சிக்கன் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்தியாவில் அரிசி சார்ந்த உணவும் கிடைக்கும். அப்படியானால் கலாசாரம்தான் தொழிலைக் கட்டமைக்கிறது.

வெளிநாடுகளில் பெரும்பாலும் தொழில் தொடங்கு வதற்காக எம்.பி.ஏ படிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் நிர்வாகத் துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காக எம்.பி.ஏ படிக்கிறார்கள். இதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. கல்விதான் நம்மை மாற்றுக்கிறது. அதனால் பலரும் கல்விக் கடன் வாங்கி, எம்.பி.ஏ படிக்கிறார்கள். வேலைக்குச் சென்று கல்விக் கடனை அடைத்த பிறகு தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது.’’

லயோலா நிர்வாகக் கல்லூரிக்கு வந்த பிறகு நீங்கள் செய்த மாற்றம் என்ன?

‘‘நமது கல்விமுறையில் சுயசிந்தனை என்பது மிகவும் குறைவு. படித்ததை அப்படியே எழுதுவது என்பதே இங்கு எல்லோரும் ஏற்றுக்கொண்ட முறையாக இருக்கிறது. சொந்தக் கருத்துக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் சுயசிந்தனை என்பதே இல்லாமல் மாணவர்கள் வளருகிறார்கள். இதை ஊக்குவிக்கத் தேவையான பல நடவடிக்கைகளை எடுத்தேன். அதில் முக்கியமாக, இங்கு பரீட்சை, தேர்வு என்பதெல்லாம் கிடையாது. அதாவது, ஒரு கோர்ஸ் முடித்த பிறகு, கடைசியாக ஒரு பரீட்சை வைக்கும் நடைமுறை இங்கு கிடையாது. தினமும் உங்கள் கற்றல் திறனை அளக்கும் அசெஸ்மென்ட் (Assessment) தேர்வு கள் உண்டு. அதற்கு மதிப்பெண்கள் தரப்படும். இதனால் மாணவர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்; தொடர்ந்து கற்றுக்கொண்டே, கவனித்துக்கொண்டே இருந்தால்தான் மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்கும்.

இதில் மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கு வேலை அதிகம். ஆனால், அதுதான் சரியான நடைமுறை என்பதால், இதை அறிமுகம் செய்தோம். இந்த முறையில், ஆசிரியர் நினைத்தால், குறிப்பிட்ட மாணவருக்கு அதிக மதிப்பெண் தந்துவிடுவார்களே என்று கேட்கலாம். ஒரு பாடத்தை ஒரே ஓர் ஆசிரியர் எடுத்தால், அப்படி நடக்கலாம். ஆனால், ஒரு பாடத்தை இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துபேசி எடுக்கும்போது (Collaborative Teaching) அப்படி நடக்காது. அதனால் மாணவர்களின் கற்றல் திறன் அதிமாக இருக்கும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இந்த முறை பின்பற்றப் படுகிறது. ஆசிரிய ருக்குத் தெரிந்த விஷயங்களை அப்படியே மாணவர்களுக்குக் கொடுப்பது முக்கியமல்ல; மாணவர்களுக்குத் தெரிந்த விஷயத்தை மேலும் விரிவடைய உதவுவதே ஆசிரியரின் பணி. முன்பு ஆசிரியர் கேள்வி கேட்பார், மாணவர்கள் பதில் சொல்வார்கள். இப்போது மாணவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதற்கான பதிலைக் கண்டடைய ஆசிரியர் உதவு கிறார். அந்த வித்தியாசத்தை நாங்கள் கொண்டு வந்திருக் கிறோம்.’’

லிபாவின் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படி இருக்கும்?

‘‘கடந்த 42 ஆண்டுகளாக 100% வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம். நடப்பாண்டில் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை சம்பளம் தரும் வேலைகள் மாண வர்களுக்குக் கிடைத்திருக்கிறது. சராசரி சம்பளமே ரூ.11 லட்சமாக இருக்கிறது. நான் பொறுப்புக்கு வரும்போது, மாணவர்கள் பெற்ற அதிகபட்ச சம்பளம் ரூ.12 லட்சம்; தற்போது ரூ.20 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

‘லிபா’வைப் பல்கலைக்கழக மாக மாற்றும் திட்டத்துக்கான வேலைகள் நடந்துவருகின்றன. 2023-24-ம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்று பெருமையுடன் பேசி முடித்தார் ஜோ.அருண்.