``கிட்ஸ் போட்டோகிராபி... செம ட்ரெண்டிங்... வருமானம் லட்சங்களில்!" - அசத்தும் கோயமுத்தூர் தோழிகள்

`குழந்தையை போட்டோ எடுக்கிறதா?'னு எதிர்மறை கேள்விகளும் எழுந்துச்சு. இந்தப் பேச்சு தானாவே குறைஞ்சுடும்னு அப்போ நினைச்சோம். இப்போ அதுதான் நடந்துருக்கு.
தற்போதைய டிரெண்டிங் யுகத்தில், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு பலரும் பல்வேறு துறைகளில் சாதித்துவருகிறார்கள். அந்த வகையில், அனு மற்றும் சர்வீனா தோழிகள் `கிட்ஸ் போட்டோகிராபி' பிசினஸில் அசத்திவருகிறார்கள். கோயம்புத்தூரில், `பேபி ட்ரையல் போட்டோகிராபி' நிறுவனத்தை நடத்திவரும் இவர்கள், லட்சங்களில் வருமானம் சம்பாதிக்கின்றனர்.

``எனக்குப் பூர்வீகம் கோயம்புத்தூர். காலேஜ் படிக்கும்போதிலிருந்தே போட்டோகிராபியில அதிக ஆர்வம். எனக்குக் குழந்தை பிறந்ததும், நானே குழந்தையை போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தேன். என்னைப் போலவே விருப்பப்படுற பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றவும், எனக்குப் பிடிச்ச இந்தத் துறையை கரியரா மாத்திக்கவும், ஒரு போட்டோகிராபி நிறுவனத்தைத் தொடங்கணும்னு நினைச்சேன். என் குழந்தை பிறந்த ஏழாவது மாதத்திலிருந்து, தனியா போட்டோகிராபி வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.
என் பிசினஸ் பார்ட்னர் சர்வீனாவுக்கும் போட்டோகிராபியில ஆர்வம் அதிகம். அதுக்காகப் பயிற்சியும் எடுத்திருக்காங்க. அவங்க குழந்தையையும் போட்டோ எடுத்து சந்தோஷப்பட்டிருக்காங்க. அவங்க பூர்வீகமான திருநெல்வேலியிலிருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்குக் குடியேறினாங்க.

அப்போ எதேச்சையா இருவரும் சந்திச்சுகிட்டப்போ, போட்டோகிராபியைப் பத்தி நிறைய பேசினோம். இருவரின் பிசினஸ் ஆர்வங்களும் ஒரே அலைவரிசையில் வரவே, இணைந்து செயல்படலாம்னு முடிவெடுத்தோம்" என்கிற அனு, தோழி சர்வீனாவுடன் இணைந்து 2015-ம் ஆண்டு போட்டோகிராபி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
``பிறந்து 5 முதல் 14 நாள்களுக்குள், தாயின் கருவறையில் இருப்பதுபோல குழந்தைகள் கை, கால்களைப் பெரிதாக விரிக்காமல் க்யூட்டா இருப்பாங்க. அந்தப் பச்சிளம் குழந்தைகளை (Newborn Babies), பெற்றோர் விருப்பப்படி வித்தியாசமான கோணங்கள்ல போட்டோஸ் எடுக்கிறோம்.

தவிர, மூன்று மாதங்கள் முதல் 1 வயது பிறந்த நாள் வரை அல்லது அதற்கு மேலான காலகட்டங்கள் வரையும் போட்டோஸ் எடுப்போம். சிரிக்கிறது, வித்தியாசமான முக பாவனைகளைக் காட்டுறது, தவழ்றது, நடக்கிறதுனு குழந்தைகளின் எல்லா ரியாக்ஷனுமே அழகுதான்!

இப்படி, மழலைத் தன்மையுடன் குழந்தைகளைப் போட்டோ எடுக்க எல்லாத் தரப்புப் பெற்றோரும் ரொம்பவே ஆசைப்படுறாங்க. இந்த போட்டோகளை, வாழ்நாள் முழுக்க பொக்கிஷமா வெச்சு ரசிப்பதுடன், குழந்தைகள் வளர்ந்த பிறகு அவங்ககிட்ட காட்டியும் சந்தோஷப்படுவாங்க. இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.
முதல்ல, எங்க நிறுவனத்தை சிறிய அளவில்தான் தொடங்கினோம். இது புதுமையான பிசினஸ் என்பதால, எதிர்காலத்துல வரவேற்பு கிடைக்கும்னு உறுதியா நம்பினோம். அதேநேரம், `குழந்தையை போட்டோ எடுக்கிறதா?'னு எதிர்மறை கேள்விகளும் எழுந்துச்சு. இந்தப் பேச்சு தானாவே குறைஞ்சுடும்னு அப்போ நினைச்சோம். இப்போ அதுதான் நடந்துருக்கு. வித்தியாசமான எந்த முயற்சிக்கும் வரவேற்பு கிடைக்கும். அதுபோல, எந்த விளம்பரமும் செய்யாமலேயே, எங்க வாடிக்கையாளர்களால், `வேர்டு ஆஃப் மவுத்' மூலமாகவே பிசினஸ் வளருது.

பெரும்பாலும், சுற்றுவட்டார மாவட்டங்கள்ல இருந்து வாடிக்கையாளர்கள் எங்க அலுவலகத்துக்கே வந்திடுவாங்க. இங்க குழந்தைகளை போட்டோ எடுக்க காற்றோட்டத்துடன் கூடிய விசாலமான அறை இருக்கு. குழந்தைகளுக்கான பல்வகையான உடைகள், தொப்பி, விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட நிறைய அக்ஸசரீஸ் இருக்கு. குழந்தைகளுக்குப் பாலூட்டவும், தூங்க வைக்கவும் தனித்தனி அறைகள் இருக்கு.
எனவே, சில மணிநேரத்தில் போட்டோஷூட் முடிந்து பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கிளம்பிடுவாங்க" என்று புன்னகையுடன் கூறும் சர்வீனா, போட்டோஷூட்டில் கவனம் செலுத்த ஆயத்தமானார். தோழிகள் இருவரும், இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகளை போட்டோஷூட் செய்திருக்கிறார்கள். தோழிகள், ஆண்டுக்குப் பல லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்கள்.

``கொங்கு மண்டலத்திலிருந்துதான் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வர்றாங்க. மற்றபடி தொலைதூர மாவட்ட கஸ்டமர்கள் அழைச்சா, அவங்க இடத்துக்கே சென்றும் போட்டோஷூட் செய்துகொடுப்போம். ஆல்பம், சாஃப்ட் காபி போட்டோஸ், வீடியோஸ் எனப் பல்வகையிலும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொடுக்கிறோம். குழந்தைகளுக்கான போட்டோகிராபிக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது.
இந்த போட்டோகிராபிக்கு அம்மாக்கள்தான் குழந்தைகளை எடுத்துட்டுவருவாங்க. என்னையும் சர்வீனாவையும் தவிர, எங்க நிறுவனத்துல நான்கு பெண்கள் வேலை செய்றாங்க. முழுக்கவே பெண்கள் என்பதால, தாய்மார்கள் நம்பிக்கையுடன் எங்களை நாடி வர்றாங்க. எங்க கஸ்டமர்களின் குழந்தைகளை, எங்க சொந்தக் குழந்தையைப்போல கனிவாகவும், கவனமாகவும் பார்த்துக்கிறோம்.

அதனால, `எங்க குழந்தை இன்னொரு தாயிடம் பத்திரமா இருக்கு'னுதான் கஸ்டமர்கள் பேசிப்பாங்க. இந்த நம்பிக்கைதான் எங்க முதல் வெற்றி" என்று உற்சாகமாகக் கூறுகிறார் அனு. அதை ஆமோதித்துச் சிரிக்கிறார், கையில் கேமராவுடன் நின்றுகொண்டிருக்கும் சர்வீனா.