Published:Updated:

மின்சார வாகன யுகத்தில் புதிய யுக்திகள்!

Future skills for automobile industry
பிரீமியம் ஸ்டோரி
Future skills for automobile industry

உலக அளவில் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள், அதுவும் குறிப்பாக வாகனத்துறையில் நிகழும் முன்னேற்றங்களைப் பார்த்த ப‌ரத்திற்கு மலைப்பாகவே இருந்தது.

மின்சார வாகன யுகத்தில் புதிய யுக்திகள்!

உலக அளவில் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள், அதுவும் குறிப்பாக வாகனத்துறையில் நிகழும் முன்னேற்றங்களைப் பார்த்த ப‌ரத்திற்கு மலைப்பாகவே இருந்தது.

Published:Updated:
Future skills for automobile industry
பிரீமியம் ஸ்டோரி
Future skills for automobile industry

உலக அளவில் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள், அதுவும் குறிப்பாக வாகனத்துறையில் நிகழும் முன்னேற்றங்களைப் பார்த்த ப‌ரத்திற்கு மலைப்பாகவே இருந்தது. இந்த மாற்றங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் மட்டும் ஏற்படவில்லை. வாகன வடிவமைப்பு மற்றும் அதன் பின் தயாரிப்பு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, சட்ட ஒழுங்குமுறை, சுற்றுப்புற‌ச் சூழல், சப்ளை செயின் என்று அனைத்துச் செயல்பாடுகளிலும் மாற்றம் காணமுடிந்தது.

இந்த மாற்றங்களைச் சரியான விதத்தில் கையாளும் நிறுவனங்கள்தான் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும் என்பதில் பரத்திற்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. பரத் ஒரு வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (Electric Vehicle - EV) பிரிவின் CTO. சில மாதங்களில் புதிதாக வெளியிட இருக்கும் EVக்கள் நல்லபடியாக, தொலைநோக்குப் பார்வையுடன் வெற்றியடைய அவர் அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார்.

வாகனம்
வாகனம்

பரத் தன் மேலாளர் CTO Dr. ஷர்மாவைச் சந்திக்கச் சென்றபோது, தன் முயற்சிகளைப் பற்றி எடுத்துக் கூறினார். அனைத்து வழிகளிலும் த‌யாராக இருக்க வேறு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு Dr. ஷர்மா ஒரு யோசனை கூறினார். அடுத்த வாரம் ஒரு நாள் பலதரப்பட்ட‌ துறைகளின் தலைவர்களையும் அழைத்து விவாதிக்குமாறு கூறினார். அந்த யோச‌னை பரத்திற்கும் சரியாகவே பட்டது. மார்க்கெட்டிங், தயாரிப்பு, வாகனங்கள் த‌யாரிப்பைத் திட்டமிட்டும் ப்ளானிங் மற்றும் சட்ட ஒழுங்குமுறை துறைத் தலைவர்களை அழைக்க பரத் முடிவெடுத்தார்.

புதிய நிறுவனங்களின் முரணான யுக்திகள்

வாகனத்துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விவாதிக்க பரத் ஏற்பாடு செய்த மீட்டிங்கை அவர் தொடங்கினார். Dr.ஷர்மாவும் தவறாமல் வந்திருந்தார். ஊடகத்தில் படித்த‌ மற்றும் தன் வாடிக்கையாளர்கள், சப்ளையர்களிடமிருந்து தான் சமீபத்தில் கேள்விப்பட்ட முன்னேற்றங் கள் பற்றி முதலில் கூறினார். அதன் பின் ஒவ்வொருவரிடமும் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

முதலில் புது மாடல்கள் வெளியிடுவதைப் பற்றித் திட்டமிடும் குமாரிடம் கேட்டார் பரத். ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்களின் தேவையைக் கணித்து புது வாகனங்க‌ள் கொண்டுவருவது எவ்வளவு முக்கியம் என்று குமார் பேசினார். அதைக் கேட்டுவிட்டு பரத் டெஸ்லாவின் முரண்பாடான அணுகுமுறை பற்றி விளக்கினார்.

டெஸ்லா போன்ற வாகனத்துறையில் புதிதாக நுழைந்த நிறுவனங்கள் பாரம்பரியமான வழிமுறைகளை மாற்றி யோசிக்கத் தொட‌ங்கிவிட்டன. பொதுவாக புதிது புதிகாக வாகனங்களை வெளியிடுவதால் விற்பனை மற்றும் வருமானம், லாபம் அதிகம் ஆகும் என்பது அனைவரும் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம். ஆனால் எலான் மஸ்க் 2022-ல் டெஸ்லா புதிய மாடல்களை வெளியிடாது என்று சமீபத்தில் அறிவித்தார். சிப் பற்றாக்குறையை நல்லபடியாகச் சமாளித்து, சொன்ன தேதியில் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களைக் கொடுத்த டெஸ்லா, இப்படி ஒரு முரணான முடிவை எடுத்துள்ளது. புது மாடல்கள் வெளியிட்டால் முழுக்கவனமும் அதில் சென்றுவிடும் என்பதால், ஏற்கெனவே இருக்கும் மாடல்களைத் தயாரிப்பதற்கே டெஸ்லாவில் இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும். இதைக் கேட்ட குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.

மின்சார வாகன யுகத்தில் புதிய யுக்திகள்!

தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்று தயாரிப்பின் தலைவரான குப்தாவைப் பார்த்து பரத் கேட்டார். அவரும் அசெம்ப்ளி லைன் திட்டமிட்டபடி தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறினார். புதிதாக உருவாகிவரும் தங்கள் தொழிற்சாலை எல்லா வகைகளிலும் சிறந்ததா என்று கேட்டுவிட்டு, பரத் பதிலுக்குக் காத்திருக்காமல் மற்றொரு முறண்பாடான உதாரணத்தைக் கூறினார்.

டெஸ்லாவின் மற்றொரு வித்தியாசமான பழக்கம், அதன் தொழிற்சாலையின் வடிவம். ஃபோர்டின் நிறுவனர் ஹென்ரி ஃபோர்ட் பிரபலப்படுத்திய ஒரு பழக்கம் அசெம்ப்ளி லைன் (assembly line). 18-ம் நூற்றாண்டில் வாகனங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப‌ தனித்தனியாக‌த் தயாரிக்கப்பட்டன. பெரிய அளவில் ஒரே மாதிரியான “மாடல் T” வாகனத்தை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார் ஃபோர்டு. 19-ம் நூற்றாண்டில் அவர் அறிமுகப்படுத்திய பழக்கம் நீளமாக வாகனங்களைச் சுமந்து கொண்டு மோட்டார் மூலம் நகரும் அசெம்ப்ளி லைன். ஆனால் டெஸ்லா, தன் தொழிற்சாலையில் பயன்படுத்தியது ஒரு வைரத்தின் வடிவம்.

California மாநிலத்தில் இருக்கும் டெஸ்லாவின் தொழிற்சாலை, சென்ற ஆண்டு உற்பத்தித் திறனில் முதல் இடம் வாங்கியது. அங்கு டொயோட்டாவையும் மிஞ்சும் வகையில் சராச‌ரியாக ஒரு வாரத்திற்கு 8,550 வாக‌ன‌ங்கள் தயாரிக்கப் ப‌ட்டன. அதற்கு தங்கு தடையின்றி நீளமாக வைர வடிவத்தில் உள்ள தொழிற்சாலையின் அமைப்பும் ஒரு காரணம் என்று டெஸ்லா கூறுகிறது. இந்த வடிவம் அந்த தொழிற்சாலை இருக்கும் சுற்றுச் சூழலுக்குப் பொருத்தமாக, கட்டும்போது அதிக மண்ணை நீக்காமல் கட்ட உதவியதாக மஸ்க் கூறினார். வடக்கு நோக்கி இருப்பதால், சூரிய ஒளியை நாள் முழுவதும் உள்வாங்கி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.

வாடிக்கையாளர்கள் கையில் பழுது பார்க்கும் உரிமை!

நம் எதிர்காலத் தலைமுறைகளை மனதில் கொண்டு நிலைத்தன்மையைக் (Sustainability) கடைப்பிடிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒரு முயற்சி ஒரு பொருள் அல்லது பாகம் பயன்படுத்தப்பட்ட பின் அதை மறுசுழற்சி (circularity) மூலம் மீண்டும் பயன்படுத்துவது. ஆனால் அதைவிட நிலையான ஒரு வழக்கம் அந்தப் பொருளையோ அல்லது பாகத்தையோ பழுதுபார்ப்பதன் மூலம், அதனை மீண்டும் பயனுள்ளதாக மாற்றுவது.

அடுத்ததாக வாகனங்களை விற்ற பிறகு அவற்றைப் பராமரிப்பது, பழுது பார்ப்பதிலிருந்து வரும் வருமானம் (aftermarket) பற்றி சட்ட ஆலோச‌னைத் தலைவர் ராமனாதன் மற்றும் மார்கெட்டிங் தலைவர் ஸையதிடம் கேட்டார் பரத். அதற்கு ஸையத், `புது வாகனங்கள் விற்பனையைவிட லாபம் அதிகமாக கொடுக்கும் துறை இதுதான்’ என்று கூறினார்.

பொதுவாக ஒரு பொருளைப் பழுது பார்க்க, அதன் தயாரிப்பாளரிடமோ அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட டீலர், ஏஜென்ட்டிடமோதான் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் பல வாடிக்கையாளர்கள், `சிறு குறைபாடுகளுக்கு நாங்கள் ஏன் டீலரிடம் செல்ல வேண்டும், நாங்களே பழுதுபார்த்துக் கொள்ளலாமே’ என்று கேட்கிறார்கள். இந்த ‘right to repair’ இன்று ஒரு இயக்கமாகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது, குறிப்பாக கைபேசி, க‌ணினி போன்ற மின்னணுப் பொருட்களுக்கு.

மின்சார வாகன யுகத்தில் புதிய யுக்திகள்!

Right to repair பற்றி ஜனவரி மாதம் பார்த்தோம். இப்போது இந்தத் தலைப்பு வாகனத்துறையிலும் பேசப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும் இந்த உரிமை மின்னணு சாதனங்களுக்குச் சரி என்றே சொல்லலாம். குறிப்பிட்ட சில வருடங்கள் பயன்பாட்டிற்கென்றே வடிவமைக்கப்படும் இந்தச் சாதனங்கள் அவற்றின் பயன்பாட்டிற்குப் பின் குப்பையாக மாசுபடுத்தும் வகையில் பூமிக்கு அடியில், அல்லது வீட்டின் ஒரு மூலையில் தூக்கி எறியப்படுகிறது. இதனைத் தவிர்க்க ஒரு பொருள் வேலை செய்யாதபோது அதனைச் சரி செய்ய வேண்டிய த‌கவல்கள், கருவிகள், பாகங்களை வாடிக்கையாளரின் கையில் கொடுத்து அவர்களே சரிசெய்து கொள்ளும்படி செய்வது!

உலக அளவில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருட்களில் 20% மட்டும் மாசுபடுத்தாத வகையில் கையாளப்படும் நிலையில் இந்த முயற்சி நிலைப்பாட்டிற்கு உகந்ததாகவே இருக்கும். ஆனால் வாகனம் போன்ற சிக்கலான பொருட்களுக்கு இது பொருந்துமா? அமெரிக்காவில் த‌யாரிப்பாளர்களை எதிர்த்து வழக்குகள் சமீபகாலமாகத் தொடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் John Deere நிறுவனத்திற்கு எதிராக Alabama மாநிலத்தில் விவசாயிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை, வாகனத்தில் John Deere நிறுவனத்தின் தனியுரிமை மென்பொருளின் பயன்பாடு அவர்களுக்கு நியாய‌மற்றதாக இருப்பதே! நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் விரைவாக வாகனத்தைப் பழுதுபார்த்து விடலாம். ஆனால் கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு வல்லுந‌ர் வரும் வரை காத்திருந்து, அல்லது வாகனத்தை நகரத்திற்கு ஓட்டிச்சென்று ஒரு நாளே வீணாகலாம்.

Massachusetts மாநிலத்தில் நடந்து வரும் ஒரு வழக்கு வாகனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளை அனைவரும் அணுகும் வகையில் `open data platform’ ஆக்குவது. நீதிமன்றத்தில் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி வாகனம் தயாரிப்பவர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர்களுக்கு ஒரு வாகனத்தின் செயல்பாடு பற்றி அறிந்து கொள்ள முழு அனுமதி அளிக்கவேண்டும். ஆனால் இந்த `open data platform’ஐச் செயல்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள‌னர்.

தயாரிப்பாளர்கள் இதனை எதிர்க்கப் பல காரணங்கள் உள்ளன. சரியாக பழுது பார்க்காத பொருட்களில் பாதுகாப்பு குறைந்து ஆபத்தில், ஏன் விபத்தில்கூட முடியலாம். இந்த டிஜிட்டல் நூற்றாண்டில் அனைத்துப் பொருட்களும் IoT (Inernet of Things) மூலம் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இதனால் cyber security ஆபத்துக்களும் அதிகம். தப்பான எண்ணத்துடன் ஒருவர் ஒரு வாகனத்தை, தான் நினைக்கும் வழியில் நடத்தி விபத்தில் முடியலாம்.

மின்சார வாகன யுகத்தில் புதிய யுக்திகள்!

இங்கிலாந்தில் டொயோட்டா நிறுவனம் வாகனங்களைப் புதுப்பிக்க (refurbish) முடிவு செய்துள்ளது. ஒரு வாகனத்தின் ஆயுள்காலத்தை நீட்டிக்க, இது ஒரு வழி என நினைக்கிறது டொயோட்டா. ஒரு புது வாகனத்தை அதன் பயன்பாட்டிற்குப் பிறகு இரண்டு முறை பயன்படுத்தலாம் என்பதே திட்ட‌ம். ஒரு வண்டியை ஒரு முறை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டபின், அதனை மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பி தேவைப்படும், புதிப்பிக்கும் வேலைகளைச் செய்து அதனைப் புதிதுபோல மாற்றி வேறு ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுக்கலாம். மீண்டும் ஒரு முறை இதனைச் செய்த பிறகு அந்த வாகனம் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.

இந்தப் பழுது பார்க்கும் உரிமையைப் பற்றிக் கேட்டவுடன், ஸையத் இந்தக் கோரிக்கை எதிர்காலத்தில் இந்தியாவிலும் வந்தால் எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்தார். மின்சார வாகனங்களில் அதிக பாகங்கள் இல்லை; அவற்றை வடிவமைக்கும்போதே சுலபமாகப் பழுதுபார்ப்பதை ஒரு குறிக்கோளாக எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கும் டீலர்களுக்கும் சுலபமாக இருக்கும். வாகனத்தை வாங்கும் போதே பழுதுபார்க்கத் தேவையான கருவிகள், பயிற்சிமுறைகளைக் கொடுத்துவிடலாம் என்று யோசனை கூறினார்.

மின்சார வாகனங்களைத் தயாரித்துp பழுது பார்ப்பது மூன்று தொழில்நுட்பங்களால் சுலபமாக இருக்கும். அவற்றில் ஒன்று - வாகனங்களை இணைக்கும் IoT (internet of things). இதனால் எப்போதும் வாகனத்தின் செயல்பாட்டைக் கண்காணித்து, பழுதாகும் முன்னரே தக்க நடவடிக்கைகள் எடுத்துவிடலாம். இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்களைவிட மின்சார வாகனங்களில் IoT-யைச் செயல்படுத்துவது சுலபம். இரண்டாவது முன்னேற்றம் - EV-யின் பாகங்கள் ஒவ்வொன்றும் modularஆக இருப்பது. chassis ம‌ற்றும் பேட்டரி, மோட்டார், சக்கரங்கள், இவற்றைக் கட்டுப்படுத்தும் control system. மூன்றாவது முன்னேற்றம் - 3D printing. இதன் மூலம் தேவைப்படும் அளவு பாகங்களை மட்டும் தேவைப்படும் நேரத்தில் வாகனம் தயாரிக்கும் இடத்திலேயே செய்துவிடலாம். இன்று ஒரு மின்சார வாகனத்தின் 80% அமைப்பு 3D printing மூலம் சில நாட்களில் தயாரித்துவிடலாம்.

‘Right to repair’-ல் சட்டம் சார்ந்த சிக்கல்களும் வரலாம் என்று ராமனாதன் கூறினார். பொதுவாக அங்கீகரிக்கப்படாத ஒருவர் ஒரு வாகனத்தைப் பழுது பார்த்தால், உத்தரவாதம் (warranty, guarantee) செல்லாது என்று அவர் கூறினார். சரியாகப் பழுது பார்க்காமல் வாகனத்தின் செயல்திறன் அல்லது பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை வந்தால், யார் பொறுப்பு என்று ராமனாதன் கேட்டார். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று அவரும் பரத்தும் குறித்து வைத்துக்கொண்டார்கள்.

கொள்கை வழி மாற்றங்கள்

வாகனத்துறையில் கொள்கை வழியாகவும் பல மாற்றங்கள், உலக அளவிலும் குறிப்பிட்ட நாடுகளிலும் வரையறுக்கப்பட்டு வருகின்றன. அதிக அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்குத் தடையாக இருக்கும் ஒரு காரணம், அவற்றின் charging station. இந்தக் குறைப்பாட்டை நீக்க ஒரு வழி பேட்டரிகளை ஒன்றோடு ஒன்று மாற்றிக் கொள்வது (battery swapping). சமீபத்தில் 2022 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் பேட்டரி ஸ்வேப்பிங் கடைப்பிடிக்க ஒரு கொள்கை வகுக்கப்படும் என்று அறிவித்தார். இதில் வெவ்வேறு தயாரிப்பாளர்களின் பேட்டரிகளைச் சுலபமாக‌ மாற்றிக் கொள்ளும் interoperability-ம் உள்ளடங்கும் என்றார்.

இந்தய அரசு, சமீபத்தில் எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ - உரிமம் எதுவும் இல்லாமல் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கலாம் என்று தாராளமயமாக்கியது. மின்சார வாகனம் வைத்திருப்பவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ மற்ற இயந்திரங்கள் பயன்படுத்துவதுபோல அதே கட்டணத்தில் மின்சாரம் பயன்படுத்தி வாகனத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

தானியங்கி வாகனங்களிலும் புது சட்டப்பூர்வமான முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முற்றிலும் தானாகவே வாகனத்தை ஓட்டும் மென்பொருள் மற்றும் ஓட்டுநருக்கு உதவும் அம்சங்கள் - இவை இரண்டின் வேலை மற்றும் பொறுப்பையும் தெளிவாக வேறுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன.

நிறுவனங்களின் EV சார்ந்த மாற்றங்கள்

பரத் சந்திக்கும் மேலே பார்த்த சவால்கள், மற்ற நிறுவனங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணத்திற்கு, ஃபோர்டு நிறுவனம் மின்சார வாகனப் பிரிவைத் தனியாகப் பிரித்துவிடலாமா என்று யோசிக்கிறது. இதனால் அதன் ம‌திப்பீடு உயர வாய்ப்பு இருக்கிறது. மின்னணுத் துறையில் இன்டெல் நிறுவனம் வாகனம் சார்ந்த சிப்கள் தயாரிக்க, ஒரு தனிப் பிரிவை உருவாக்கியுள்ளது. மின்சார வாகனத்தில் அதிக ஆர்வம் காட்டாத டொயோட்டா, இப்போது பெரிய அளவில் EV தயாரிக்கத் திட்டம் தீட்டியுள்ளது.

தன் சக ஊழியர்கள், மேலதிகாரி Dr. ஷர்மா மற்றும் தன் அணியினர் கூறும் யோச‌னைகள் மட்டும் இல்லாமல் யொயோட்டா, ஃபோர்டு, டெஸ்லா போன்ற நிறுவனங்களும் எப்படிச் செயல்படுகின்றன என்று கவனித்து, தானும் தன் பிரிவை வழிந‌டத்திச் செல்லலாம் என்று பரத் முடிவு செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism