Published:Updated:

வாகனத்துறையின் எதிர்காலம் CASE...

Future Skills for the Automotive Industry
பிரீமியம் ஸ்டோரி
Future Skills for the Automotive Industry

Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

வாகனத்துறையின் எதிர்காலம் CASE...

Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

Published:Updated:
Future Skills for the Automotive Industry
பிரீமியம் ஸ்டோரி
Future Skills for the Automotive Industry

பரத், பிரபலமான‌ வாகனம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மின்சார வாகனப் (electric vehicle – EV) பிரிவின் CTO. அவரும் அவருடைய மேலதிகாரி Dr. ஷர்மாவும் தங்கள் அணியினர் மற்றும் ஆலோச‌கர்களின் உதவியுடன் EV தயாரிக்க வியூக‌ங்கள் வகுத்திருந்தார்கள். ஆனால் கொரோனாவின் பாதிப்பால், இந்த வியூகங்கள் சரியாக இருக்குமா என்று சமீபகாலமாக பரத் கவலைப்பட ஆரம்பித்தார்.

கொரோனா உலக அளவில் சப்ளை செயின்களை ஒரு புரட்டு புரட்டி விட்டது என்று சொல்லலாம். பரத் பேசி வைத்திருந்த சப்ளையர்களால் சொன்னபடி பாகங்கள் அனுப்ப முடியுமா என்று அவருக்குக் கேள்விக்குறியாக இருந்தது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு பாகங்கள் மற்றும் மென்பொருட்களின் ஆதிக்கம் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தொடங்கவிருந்த EV தயாரிப்பு தடை இல்லாமல் நடக்குமா? வாடிக்கையாளர்களுக்குச் சொன்ன தேதிக்கு வாகனங்கள் விற்க ஏதாவது மாற்றி யோசிக்க வேண்டுமா?

நிலைத்தன்மையின் அளவுகோல்கள்

சில மாதங்கள் முன் நடந்து முடிந்த COP26 மாநாட்டிற்குப் பிறகு நிலைத்தன்மை (sustainability) பற்றி விழிப்புஉணர்வு அதிகமாகக் காணப்பட்டது. பரத்திற்கும் அவருடைய நிர்வாகத்திற்கும் நிலைத்தன்மை புதிதல்ல. ஆனால் இன்று முதலீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், ஏன் மாணவர்கள் கூட ஒரு நிறுவனத்தில் நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன‌ என்று அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

கிரீன் ஹவுஸ் கேஸ் (GHG) எனப்படும் CO2, மீத்தேன் போன்ற சூட்டை உள்ளடுக்கும் வாயுக்களின் உமிழ்வை அளக்கப் பிரபலமான ஒரு கட்டமைப்பு Greenhouse Gas Protocol. GHG Protocol-ன்படி உமிழ்வுகளின் வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம். அவை Scope 1, 2, 3.

Scope 1 என்பது, ஒரு நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலையிலிருந்து நேரடியாக வெளியிடும் உமிழ்வுகள். உதாரணத்துக்கு மின்சாரத் தயாரிப்பு, வாகனங்கள், பாய்லர்களின் செயல்பாடு. Scope 2 என்பது, வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் மின்சாரத்தின் பயன்பாடு. இவை இரண்டையும் ஒரு நிறுவனம் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கண்காணிக்க முடியும்.

Scope 3 என்பது, அந்த நிறுவனத்தின் வெளியே சப்ளையர்கள் மற்றும் போக்குவரத்தினால் ஆகும் உமிழ்வுகள். இவற்றை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் கண்காணித்து ஆலோசனைகள் வழங்க முடியும். பரத் தன் மேற்பார்வையில் நடக்கவிருக்கும் EV தயாரிப்பில் எங்கெங்கு என்னென்ன வகை உமிழ்வுகள் நடக்கும் என்று கணித்து, காலப்போக்கில் அவற்றை எப்படிக் குறைக்கலாம் என்றும் ஒரு திட்டம் வைத்திருந்தார்.

கொரோனாவினால் சிப் பற்றாக்குறை!

கொரோனாவால் அனைத்துத் தொழில்துறைகளிலும், குறிப்பாக வாகனத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பாதிப்பு சிப் பற்றாக்குறை. தொழிற்சாலைகள் 2020-ல் அடைக்கப்பட்டபோது சிப்களின் தயாரிப்பு தடைபட்டது. அதேசமயம் வீட்டிலிருந்தே வேலை செய்ய, படிக்க க‌ணினிகள், கைபேசிகளின் தேவை, விற்பனை அதிகரித்தது. இவற்றில் பயன்படுத்தப்படும் சிப்கள் வாகனத்துறையை விட நவீனமானவை.

சிப் உற்பத்தி மீண்டும் தொடங்கியபோது, தயாரிப்பாளர்கள் வாகனங்களின் பயன்படும் குறைவான லாபம் கொடுக்கும் சிப்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. அவற்றைத் தயாரிக்கவும் இல்லை. பாகங்களைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளாமல், தேவைப்படும்போது மட்டுமே வாங்கிக்கொள்ளும் வழக்கம் (just in time) கொண்டிருந்த வாகனத்துறையில், இந்த நிலைமை ஒரு பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

இதனால் வாகன விற்பனை உலக அளவில் பாதிப்படைந்தது. புதிய வாகனம் உடனே கிடைக்காமல் வாடிக்கையளர்கள் காத்திருக்கும் நிலை உருவானது. இந்தச் சவாலை ஒவ்வொறு நிறுவனமும் அதன் வழியில் சமாளித்தது. சிப் கையிருப்பில் வைத்திருந்த வாகனத் தயாரிப்பாளர்களால் சில மாதங்கள் சமாளிக்க முடிந்தது. இந்தப் பற்றாக்குறை இன்னும் சில மாதங்கள், ஏன் சில ஆண்டுகளுக்கும் நீடிக்கலாம். இதனை உணர்ந்து வாகனத்துறைத் தலைவர்கள் தங்கள் வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

தரக்கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன நிறுவனம் டொயோட்டா. குறை உள்ள பாகங்களைச் சகித்துக் கொள்ளாத டொயோட்டாவே, சிப் பற்றாக்குறையைப் பார்த்து - அவற்றில் சிறு குறைபாடுகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று சமீபத்தில் முடிவு செய்தது.

பல வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்பற்றும் ஒரு பழக்கம், ஒரு மாதத்தில் எத்தனை வாகனங்கள் விற்றுப்போகும் என்று முன்னதாகவே கணித்து (demand forecasting), அதன்படி தயாரித்து, டீலர்களின் கையிருப்பில் அவற்றை வைத்துக்கொள்வது. இப்படித் தயாரிக்கப்பட்ட வாகனங்களை வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக‌ வாங்குவார்கள் என்று உத்தரவாதம் கிடையாது. இதனால் வாகனங்களின் கையிருப்பு அதிகமாக இருக்கும். விற்காமல் போகும் மாடல்கள் தேங்கி விடும்.

சிப் பற்றாக்குறைச் சவால்களைச் சமாளிக்க ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் இந்த வழக்கத்தை மாற்றியுள்ளன. விற்பனையைக் கணிக்காமல் ஒரு வாடிக்கையாளர் கொடுக்கும் உறுதியான ஆர்டரை வைத்தே ஒரு வாகனம் தயாரிக்கப்படும் (make to order). இதனால் கையிருப்பு குறைந்து பணம் முடங்காமல் இருக்கும். வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படாத அம்சங்களைத் தவிர்த்து குறைந்த‌பட்ச அம்சங்கள் கொண்ட வாகனங்களைத் தயாரிக்கலாம். இதனால் சிப் தேவை குறைந்து, வாகனத்தின் விலையும் குறையும்.

பல வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் விரைவில் தங்கள் சொந்த சிப்களைத் தயாரிக்கும் நிலை உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் சப்ளையர்களை நம்பி இருக்கும் நிலை த‌விர்க்கப்படும். ‘Just in time’ஐ-த் தவிர்த்து நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை ‘just in case’ ஆக மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளன. மிக முக்கியமான பாகங்களைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். சப்ளையர்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ளாமல் முடிந்த வரை அருகில், சொந்த நாட்டில் மாற்று ஏற்பாடாக‌ வைத்துக்கொள்வது அவசியம். செலவை மற்றும் போக்குவரத்திற்கு ஆகும் நேரத்தை மட்டும் குறைக்காமல், கொரோனா போன்ற‌ எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போது வேகமாக மீண்டு வருவதும் மிக அவசியம்.

வாகனத்துறையின் எதிர்காலம் CASE...
வாகனத்துறையை மாற்றி அமைக்கும் 
CASE போக்கு
வாகனத்துறையை மாற்றி அமைக்கும் CASE போக்கு
நகர்ப்புற‌ வாகனப் போக்குவரத்தில் உள்ள சவால்கள்!
நகர்ப்புற‌ வாகனப் போக்குவரத்தில் உள்ள சவால்கள்!
வாகனத்துறையின் எதிர்காலம் CASE...
வாகனத்துறையின் எதிர்காலம் CASE...

மென்பொருட்களின் ஆதிக்கம்!

வாகனத்துறையின் எதிர்காலம் CASE (Connected, Autonomous, Shared, Electric vehicles) என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.‍ இணைக்கப்பட்ட, மின்சாரமயமாக்கப்பட்ட, பலரும் பகிர்ந்து கொள்ளும் தானியங்கி எலெக்ட்ரிக் வாகனங்கள். இந்தப் போக்கிற்கு ஒரு பெரிய தூண்டுதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அடிப்படை, மென்பொருள்.

மேலே பார்த்த சிப் பற்றாக்குறையை டெஸ்லா மென்பொருள் கொண்டே சமாளித்துவிட்டது. பல வகையான சிப்கள் பயன்படுத்தாமல் அவற்றின் வகைகளைக் குறைத்து, மென்பொருட்களை மாற்றி எழுதி, கிடைக்கும் சிப்கள் கொண்டு வாகனம் இயங்கும்படி செய்தது டெஸ்லா. மென்பொருட்களுக்கு மற்றவர்களை நம்பி இருந்த நிறுவனங்களால் இப்படிச் செய்ய முடியவில்லை.

டொயோட்டா நிறுவனம், மென்பொருட்கள் கொண்டு அனைத்தையும் இயக்கும் ஒரு நிலையை நோக்கிச் செல்கிறது (software defined everything). இனி வரும் காலகட்டங்களில், ஒரு வாகனத்தின் மதிப்பில் பெரும்பகுதி அதில் இருக்கும் மென்பொருட்களுக்கே இருக்கும்.

மென்பொருட்கள் சார்ந்த வருமானமும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் 2030-ல் $20 பில்லியனிற்கும் மேலாக மென்பொருட்கள் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் மூலமே வரும் என்று கணித்துள்ளது. ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்களை வேலைக்கு எடுக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் மென்பொருட்களில் அதன் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளது. வாகனங்களை இயக்கும் ஆப்பரேடிங் சிஸ்டம் ஒன்றை டொயோட்டா வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் பெயர் Arene. சுயமாக ஓடும் வாகனம் போன்ற திறன்கள் இதில் இருக்கும்.

மின்னணு சாதனங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் சோனி நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் களத்தில் இறங்கியுள்ளது. இதற்கென ஒரு தனிப் பிரிவு அமைத்து முன்னேறும் சோனி இந்தப் போட்டியில் ஆப்பிள் போன்ற மற்ற போட்டியாளர்களையும் மிஞ்சலாம். வாகனத்தை வாடிக்கையாளர்கள் கைகளில் ஒரு சாதனமாகப் பார்க்கும் சோனி உள்ளே இருக்கும் ஒலி, பொழுதுபோக்கு அம்சங்களில் தன் திறமையைக் காட்ட உள்ளது.

வாகனத் தயாரிப்பிலும் மென்பொருட்களின் ஆதிக்கம் காணப்படும். டிஜிட்டல் ட்வின் மூலம் ஒரு தொழிற்சாலையின் மாதிரியை உருவாக்கலாம். அதில் பல வகையான நிலைமைகளை உருவகப்படுத்தி (simulate), ஒவ்வொரு நிலைமையிலும் எப்படிப்பட்ட முடிவு எடிக்கலாம் என்று முன்னமே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், எதிர்பாராத தருணங்களில் அதிர்ச்சி அடையாமல் ஒரு நல்ல முடிவு எடுக்கலாம்.

CASE போக்கின் பரிணாம வளர்ச்சி!

நகர்ப்புறப் போக்குவரத்தில் உள்ள பெரிய ச‌வால்கள் மூன்று. அவை வாகனங்கள் விடும் புகை, ஒன்றோடு ஒன்று ஏற்படும் மோதல்கள், விபத்துக்கள் மற்றும் நெரிசல். CASE-ஆல் இந்த‌ச் சவால்களைச் சமாளிக்க முடியும். ஆனால் அதன் அம்ச‌ங்கள் நான்கும் ஒரே வேகத்தில் முன்னேற்றம் காண முடியாது. CASE அம்சங்களின் வெவ்வேறு சேர்க்கைகளால் (combinations) என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

நகர்ப்புற‌ வாகனப் போக்குவரத்தில் உள்ள சவால்கள்!

பலரும் பகிர்ந்து கொள்ளும் மின்சார மயமாக்கப்பட வாகனங்களால் (Shared EV) புகையினால் ஏற்படும் மாசும், போக்குவரத்து நெரிசலும் குறையும். தெருக்களில் வாகனங்களில் எண்ணிக்கை குறையும். வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு குறையும். வாகனம் ஓட்டுபவர்களின் மன அழுத்தம் குறைந்து, பயணிக்கும் நேரமும் விபத்துக்களும் குறையும்.

இணைக்கப்பட்ட மின்சார வாகனங்களால் (Connected EV) மாசு, நெரிசல் தாண்டி விபத்துக்கள் நடக்காமல் இருக்க எச்சரிக்கைகள் அனுப்பலாம். வாகனத்திற்கு வாகனம் இருக்கும் தூரம், போக்குவரத்து சந்திப்புகளில் சிக்னல், நடந்து செல்பவர்களின் தூரம் பொறுத்து எச்சரிக்கைகள் கொடுத்து விப‌த்துக்களைத் தவிர்க்கலாம்.

இந்த இரண்டு வகையான‌ வாகனங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் அதிக தொழில்நுட்ப சாத்தியக்கூறும் (technical feasibility), லாபம் செய்யக்கூடிய பொருளாதார அடிப்படையும் (economic viability) இருக்கும். மின்சார வாகனங்களின் விற்பனைக்கு ஒரு தடை அதிக சார்ஜிங் நிலையங்கள் இல்லாமல் இருப்பது. இந்தத் தடையை நீக்க, இந்திய அரசு சமீப‌த்தில் இந்தத் துறையில் தாராளமயமாக்கலைக் கடைப்பிடித்துள்ளது. உரிமம் எதுவும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இவற்றை அமைக்கலாம்.

ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், 5G தொழில் நுட்பத்தின் பயன்பாட்டால் ஒரு வாகனத்தை விற்றபின் அதன் மதிப்பைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டது. வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நிலைமை குறையும். வாகனப் பயன்பாட்டைத் தனியுரிமையை மீறாமல் கண்காணிக்கலாம். பல நேரங்களில் ஓட்டுநரின் முயற்சி இல்லாமல் தானே இயக்கி எரிபொருளை மிச்சப்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் மதிப்பு உயரும். இதனால் 5G உள்ள இணைக்கப்பட்ட‌ அம்சங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு விட்டுவிடாமல் கட்டாயமாகும் நிலை உருவாகும்.

தானே இயங்கும் அம்சங்களால் (Autonomous) போக்குவரத்தின் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆபத்தான நிலைகளை முன்னமே கணித்து, மனிதர்களைவிட வேகமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்து, விபத்துக்கள் நடக்காமல் த‌விர்க்கலாம்.

தானே இயங்கும் வாகன அம்சங்களுக்கு ஒரு அளவுக்குத்தான் தொழில்நுட்ப சாத்தியக்கூறும் பொருளாதார நம்பகத்தன்மையும் இருக்கும். நகரங்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள இன்னும் தயாராக இல்லை. தொழிற்சாலைகள், அதிக அளவு வர்த்தகம் கையாளும் கிடங்குகள், துறைமுகங்களில் இதன் பயன்பாட்டைக் காணலாம்.

மேலே பார்த்ததுபோல CASE-ல் ஒரு சில அம்ச‌ங்கள் மட்டும் இருப்பதால், அவற்றின் முழுப்பயனை அடைய முடியாது. அவை நான்கையும் ஒன்று சேர்ந்து செயல்படுத்தினால்தான் முழுப் பயனை அடைய முடியும். இவை ஒவ்வொன்றும் அதன் வேகத்தில் முன்னேறுகிறது. அவை சந்திக்கும் சவால்களும் தனிப்பட்டவை. அதனால் இவை ஒருசேர்ந்து வாகனத்துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நாம் இப்போது பார்த்ததுபோல CASE-ன் வெவ்வேறு அம்சங்களின் சேர்க்கை முன்னேறினால் நிலைமை எப்படி இருக்கும் என்று கணித்து, அவற்றுக்கு ஏற்பத் தயாராக இருப்பது ஒரு சிறந்த வழி.

வாகனத்துறையை மாற்றி அமைக்கும் CASE போக்கு!

வாகனத்துறையில் மென்பொருட்களின் ஆதிக்கத்தைப் பார்த்த பரத், இந்தப் பிரிவில் கண்டிப்பாக தன் அணியின‌ருக்குக் கூடுதல் பயிற்சி அளித்து தங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தார்.

CASE-ல் வெற்றி பெற நிறுவனங்கள் தங்கள் அணிகளின் திறன்களை வளர்க்க முதலீடு செய்ய வேண்டும். அனைத்துத் திறன்களும் குறுகிய நேரத்தில் நம் அணியில் வளர்க்க முடியாத சூழ்நிலையில், பார்ட்னர்களின் பங்கு முக்கியம். வாகனத்துறையில் என்ன நடக்கப்போகிறது என்று வருமுன் காக்கும்விதமாக மாற்றி யோசிக்கும் நிறுவனங்கள், தங்கள் போட்டியாளர்களைவிட வேகமாகச் செயல்பட்டு வெற்றியும் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism