Published:Updated:

‘‘ஏழு ஆண்டு சபதம் எடுத்து, எட்டாவது வருஷம் கார் வாங்கினேன்!’’

ஆயிரம் முதல் லட்சம் வரை... - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பிரீமியம் ஸ்டோரி

நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுத்துத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருடைய பண அனுபவத்தைப் பார்ப்போம்.

‘‘என்னுடைய முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாள்கள்’ 1977-ல் ஆனந்த விகடனில் வெளியானது. அதற்கு 150 ரூபாய் காசோலை அனுப்பியிருந்தார்கள். நான் சம்பாதித்த முதல் தொகை அதுதான்.

அந்த செக்கை கையில் வாங்கும்போது மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஏனென்றால், அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. அந்தக் காசோலையை அப்பாவிடம் காட்டியதும் என்னை வங்கிக்கு அழைத்துச் சென்று என்பேரில் வங்கிக்கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். 19 வயது வரைக்கும் என் பேரில் வங்கிக் கணக்கு கிடையாது.

அதன்பிறகு, எழுத்துலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தேன். எழுத்தாளர்கள் சுரேஷ், பாலா (சுபா) ஆகியோருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’, ‘உல்லாச ஊஞ்சல்’ என இரண்டு பத்திரிகை களை நடத்துவதற்காகச் சென்னைக்கு வந்தேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

அடையாறில் 150 ரூபாய் வாடகை வீட்டில்தான் என் சென்னை வாழ்க்கை ஆரம்பித்தது. ஒரு சூட்கேஸ், ஒரு பைக் இவ்வளவுதான் என் சொத்து. என் வீட்டிலிருந்த மடக்குக்கட்டில் பகலில் நான் வேலை பார்ப்பதற்கான டேபிளாகவும், இரவில் கட்டிலாகவும் மாறிவிடும்.

பிறந்த ஊரான பட்டுக்கோட்டையில் பலமான பொருளாதாரப் பின்னணி இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தேன். சென்னையில் இருந்தபோது எத்தனையோ பொருளாதாரக் கஷ்டங்களை அனுபவித்திருக் கிறேன். ஆனாலும், ஒருதடவைகூட பணம் அனுப்பச் சொல்லி ஊருக்குக் கடிதம் எழுதியது கிடையாது. யாரிடமும் கடன் வாங்கியதும் கிடையாது.

வாழ்க்கையில் முன்னேறிவரும் காலத்தில் எனக்குத் திருமணம் நடந்தது. அப்போது நாவல்கள், தொடர் கதைகள் எழுதிப் பிரபலமாகி இருந்தேன். என் உழைப்பின் மீதான நம்பிக்கையிலும் பத்திரிகைத் துறை மீதான நம்பிக்கையிலும் மனைவியையும் இரண்டு பெண் குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போதும் வாடகை வீடுதான்.

குழந்தைகள் வளர ஆரம்பித்தார்கள். குடும்பமாக பைக்கில் செல்லும்போது, பெட்ரோல் டேங்கின் மீது சிறிய மகளையும், எனக்கும் என் மனைவிக்கும் இடையில் பெரிய மகளையும் உட்கார வைத்துக்கொண்டு செல்வேன். அப்படிச் செல்லும்போதெல்லாம், முன்னாடி உட்கார்ந்திருக்கிற மகளின் தலைமுடி, ரோட்டைப் பார்க்க முடியாதபடிக்கு என் கண்களை மறைக்கும். அப்போதெல்லாம் ‘கொஞ்சம் குனிஞ்சுக்கோம்மா... கொஞ்சம் குனிஞ்சுக் கோம்மா...’ என்று சொல்வேன். அப்படிச் சொல்லும் போதெல்லாம் ‘நாம கார் வாங்கலாமாப்பா’ என்று குழந்தைகள் கேட்பார்கள். எனக்கும் ஆசைதான். ஆனால் பணம்..? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, தொடர்ந்து 7 வருடங்கள் புத்தாண்டு உறுதிமொழியாக என்னுடைய டைரிகளில் ‘இந்த வருஷமாச்சும் கார் வாங்கணும்’ என்று எழுதி வைத்திருக்கிறேன். எட்டாவது வருடம் ரூ.1.40 லட்சம் தந்து ஒரு மாருதி 800 காரை வாங்கினேன். அதையும் 75,000 வாகனக் கடன் வாங்கித்தான் என்னால் வாங்க முடிந்தது.

காலங்கள் சென்றன. தொலைக்காட்சி சீரியல் என்கிற பொருளாதார ஜன்னல் திறந்தது. புகழ்ரீதியாகவும் பணரீதியாகவும் நன்கு வளர ஆரம்பித்தேன். தமிழின் முதல் நெடுந்தொடர் ‘பரமபத’த்துக்கு நான் கதை, திரைக்கதை, வசனம். அதற்கு சன்மானமாக ஒரு எபிசோடுக்கு 4,500 ரூபாய் கொடுத்தார்கள்.

இது நடந்து 25 வருடங்களாகி விட்டன. ஆனால், கடந்த 15 வருடங்களாக நெடுந்தொடர் களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில்லை. அவர்கள் டி.ஆர்.பி-க்காக கதை கேட்கிறார்கள். ஒரு நாவலோ, சிறுகதையோ எழுதுகிற திருப்தி அதில் கிடைக்காது என்பதால், சின்னத்திரை எனக்கு நல்ல சன்மானம் கொடுக்கத் தயாராக இருந்தும் தவிர்த்து வருகிறேன்.

அடுத்து, திரைத்துறை. 1996 முதல் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்தேன். முதல் படம், சரத்குமார் நடித்த ‘மகாபிரபு.’ இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்துக் கொண்டிருக்கிற ‘தி லெஜண்ட்’ படத்துக்கும், நடிகர் பிரசாந்த் நடித்துக்கொண்டிருக்கிற ‘அந்தகன்’ படத்துக்கும் வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

முதல் படத்துக்கு நான் பெற்ற சன்மானம் 40,000 ரூபாய். இன்றைக்கு இதைவிட பல மடங்கு வாங்கிக்கொண்டிருக்கிறேன். நம்முடைய உழைப்பைத் தொடர்ந்து முழுமையாகக் கொடுத்துக்கொண்டிருந்தால், எதுவும் சாத்தியம் என்பதற்கு நானே உதாரணம்’’ என்றவர், தான் சேமித்த விதங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘‘வைப்பு நிதிகளும் தபால் அலுவலக சேமிப்புகளும் என்னுடைய முதல் சாய்ஸ். அதிலும் தபால் அலுவலக சேமிப்புகள் அத்தனையிலும் நான் பணம் போட்டிருக் கிறேன். தனியார் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, என் பணத்தைப் போட்டுத் தொலைத்ததில்லை. முதலீடுகளிலும் ‘க்விக் மணி கான்செப்ட்’டுக்குள் நான் போனதே இல்லை.

மற்றபடி, நிலத்தில் நிறைய முதலீடு செய்திருக்கிறேன். அதற்கு எனக்கு உதவியது என் மாமனார்தான். அவர் இருந்தது திருச்சியில். ‘திருச்சியில இத்தனை கிரவுண்ட் விலைக்கு வருது. பத்து வருஷத்துல நிலத்தோட மதிப்பு இவ்ளோ அதிகரிக்கும் மாப்பிள்ளை’ என்பார். ‘வாங்கிடுங்க மாமா’ என்று சொல்லிவிடுவேன். பிறந்த ஊரிலும் நிலங்கள் வாங்கியிருக்கிறேன்.

‘‘ஏழு ஆண்டு சபதம் எடுத்து, எட்டாவது வருஷம் கார் வாங்கினேன்!’’

சினிமாவில் கதை, வசனம் எழுதுவதற்கு முன்பே நானும், எழுத்தாளர்கள் சுரேஷும் பாலாவும் சேர்ந்து சென்னை அடையாறில் நிலம் வாங்கி, ஒரே கட்டடத்தில் மூன்று வீடுகள் கட்டிக்கொண்டோம்.

ஒரு காலத்தில் வாடகை வீட்டில் இருந்த நான், இப்போது வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறேன். திருச்சியிலும் பட்டுக்கோட்டையிலும் வாங்கிப் போட்டிருந்த நிலங்களில் சிலவற்றை விற்று, இரண்டு மகள்களுக்கும் ஜாம்ஜாம் என்று திருமணம் செய்து வைத்தேன். 30 வருடத்தில் மூன்று கார்தான் மாற்றியிருக்கிறேன். என் பிறந்தநாள்களின்போது மகள்கள் பரிசளிப்பதன் மூலம்தான் என்னுடைய செல்போன்கள் புதிதாகி இருக்கின்றன.

ஒரேயொரு விஷயத்தைத் தவிர, மணி மேனேஜ்மென்ட்டில் (Money management) நான் திறமையான நபராகவே இருந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்’’ என்று சிரித்தவர், அந்த ஒரு விஷயம் பற்றி சொன்னார்.

‘‘எந்த ஊருக்குப் போனாலும் ஒரு சட்டையாவது வாங்காமல் வரமாட்டேன். டிசைன் எனக்குப் பிடித்துவிட்டால் அது நடைபாதைக் கடையோ, வணிக வளாகமோ சட்டையை வாங்காமல் வரமாட்டேன். பிறந்த நாளையொட்டி ஒரு பண்டிகை வந்தால், பொதுவாக இரண்டு சட்டைதானே வாங்குவார்கள். நான் ஐந்தாறு சட்டைகள் வாங்குவேன். என்னிடம் நூற்றுக்கணக்கான சட்டைகள் இருக்கின்றன. ஆனால், வருட முடிவில் அந்த வருடம் வாங்கிய சட்டைகளை இல்லாதவர் களுக்குத் தந்துவிடுவேன்.

என்னுடைய இந்தப் பேட்டியைப் படிக்கும்போது ‘பண விஷயத்துல நீங்க ஏமாந்ததே இல்லையா சார்’ என்று சிலருக்குக் கேட்கத் தோன்றலாம். நானும் ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் சில செக்குகள் பவுன்ஸாகி இருக்கின்றன. அந்த ஏமாற்றங்களை இப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்’’ என்று மென்மையாக சிரித்தபடி பேசி முடித்தார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

பெரிதாக லாபம் அடையா விட்டாலும் பரவாயில்லை, நஷ்டம் தவிர்த்தாலே போதும், பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு இவர் நல்ல உதாரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு