Published:Updated:

“உழைப்பு என்னை சைக்கிள்ல இருந்து இனோவா கார் வரை உயர்த்தியிருக்கு!’’

எம்.எஸ்.பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.எஸ்.பாஸ்கர்

ஆயிரம் முதல் லட்சம் வரை - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

“உழைப்பு என்னை சைக்கிள்ல இருந்து இனோவா கார் வரை உயர்த்தியிருக்கு!’’

ஆயிரம் முதல் லட்சம் வரை - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

Published:Updated:
எம்.எஸ்.பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.எஸ்.பாஸ்கர்

''பணம் மட்டுமே வாழ்க்கைனு பலரும் சொல்லுவாங்க. அதுல எனக்கு உடன்பாடில்ல. பணத்தைச் சம்பாதிக் கவும் செலவழிக்கவும் நிறைய வழிகள் இருக்கு. ஆனா, இந்த ரெண்டு விஷயங்களையும் சரியாவும் முறையாவும் செஞ்சாதான், பணத்துக்கும் நமக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். நான் செல்வாக்கான குடும்பத்துல பிறந்தாலும், நான் விரும்பின சினிமாத் துறையில, சொந்தக் கால்ல நின்னு சாதிக்கவும், எனக்கான அடையாளத்தைப் பெறவும், உழைப்பும் சேமிப்பும்தான் பக்கபலமா இருந்துச்சு. அதனால, சுமையான காலத்துல பயமும் சிக்கலும் இல்லாம கடந்தேன். கடந்த 35 வருஷங்களா, ஒவ்வொருநாள் விடியலையும் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்’’ என்றபடி பணம் தொடர்பாகத் தனது பக்குவப்பட்ட அனுபவங்களைப் பகிரத் தொடங்கினார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். நெடுங்காலப் போராட்டங்களைக் கடந்து, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உயர்ந்திருப்பவர், உழைப்பாலும் சேமிப்பாலும் உயர்ந்த கதையை உற்சாகமாகப் பேசினார்.

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் வெளிப்பாளையம். அந்த ஊர்ல எங்களோடது செல்வாக்கான குடும்பம். என் அப்பா, எங்க சொந்த நிலத்துல ஏராளமான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்.

எனக்கு ரெண்டு அக்காக்கள், ரெண்டு தம்பிகள். கால்நடைகளை வளர்க்கும் பொறுப்பை எங்ககிட்ட ஒப்படைச்சு, உழைப்பின் அவசியத்தை அந்த வயசுலேயே கத்துக்கொடுத்தாங்க. பொருளாதார ரீதியா எங்களுக்கு எந்தக் குறையும் வைக்காம, அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றோர் முழுமையா பூர்த்தி செஞ்சாங்க. பக்குவப்படாத அந்த வயசுல கையில அதிகமா பணம் புரண்டா, அதனோட அருமை தெரியாம, தவறான வழிக்குப் போக நேரிடலாம்னு நினைச்ச பெற்றோர், பண விஷயத்துல ரொம்பவே பொறுப்புணர்வுடன் இருந்தாங்க. அதனால, அவசியமான செலவுக்கு மட்டும் தான் எங்க கையில காசு கொடுப்பாங்க.

‘காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நம்மகிட்ட கொஞ்சமாச்சும் சேமிப்பு இருந்தா, அவசரச் சூழல்ல இன்னொருத்தர் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்படாது’ன்னு பக்குவமா எங்களுக்குப் புரிய வெச்சாங்க. அதனால, கூடப்பிறந்த எங்க அஞ்சு பேருக்கும் மண் உண்டியல் வாங்கிக் கொடுத்து, சேமிப்புப் பழக்கத்தைக் கத்துக்கொடுத்தாங்க. தினமும் ஸ்கூல் போறப்போ, வாங்கிச் சாப்பிட ஓரிரு பைசாவைக் கொடுத்தனுப்புவாங்க. அதுல மிச்சம் பிடிச்சு, உண்டியல்ல சேமிப்போம். வருஷத்துக்கு ஒருமுறை உண்டியலை உடைச்சு, அதிலிருக்கும் தொகையிலதான் தீபாவளிக்கு பட்டாசு, டிரஸ், படிப்புக்கான பொருள்களை வாங்குவோம். அந்தப் பழக்கம்தான், பணத்தின் மீதான மதிப்பையும், உழைப்பால கிடைக்கும் பணம்தான் நிரந்தரமானதுங்கிற யதார்த்த உண்மையையும் எனக்கு உணர்த்துனுச்சு.

கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். நான் பத்தாவது படிக்கும்போதே நாகை மாவட்டத்திலிருந்து சென்னையில் குடியேறினோம். பி.காம் முடிச்சதும், தனியார் பேஸ்ட் பிரஷ் கம்பெனியில விற்பனை பிரதிநிதியா வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப என் சம்பளம் 750 ரூபாய். முழுச் சம்பளத்தையும் வீட்டுல கொடுத்திடுவேன். என் அவசியத் தேவைக்குப் போக, மீதத் தொகையைச் சேமிச்சு வைப்பேன். அந்தத் தொகையிலிருந்து முதன்முறையா சைக்கிள் வாங்கினேன். வேலை விஷயமா சைக்கிள்ல தினமும் 50 கிலோ மீட்டருக்கும் அதிகமா அலைவேன். வீட்டிலிருந்து கொண்டுபோகும் மதிய உணவை, எங்கயாச்சும் மரத்தடியில உட்கார்ந்து சாப்பிடுவேன்.

வேலைக்குப் போகும் தினங்கள்ல மட்டும் என் செலவுக்குனு வீட்டுல அஞ்சு ரூபாய் கொடுப்பாங்க. தின்பண்டங்கள் வாங்குறது, சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுறதுனு அவசியத் தேவைக்கு மீறி செலவு செய்ய எனக்கு மனசு வராது. எனவே, சேமிப்பு என் வாழ்க்கையில முக்கிய அங்கமா மாறியது. உழைக்கும் திறனுடன், ஒரு கட்டத்துக்கு மேல வளர்ந்த பிறகு, யாரா இருந்தாலும் பொருளாதார ரீதியா இன்னொருத்தருக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது. அந்த விஷயத்தைச் சரியா கடைப்பிடிச்சதுடன், தேவைக் கான ஒவ்வொரு பொருளையும் என் சேமிப்பிலிருந்தே வாங்கினேன். அது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியையும், தேவைக்கு மீறி செலவு செய்யக் கூடாதுங்கிற பொறுப்புணர் வையும் என் மனசுல ஆழமா விதைச்சது.

ஹேமமாலினி, சில்க் ஸ்மிதா உட்பட முன்னணி நடிகைகளுக்குக் குரல் கொடுக்கும் பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்டா என் அக்கா இருந்தாங்க. அவங்க டப்பிங் கொடுக்கப் போகும்போது, அவ்வப்போது நானும் கூடப் போவேன். எனக்கும் டப்பிங் வேலை மீது ஆர்வம் ஏற்பட்டுச்சு. ‘சிட்டுக்குருவி’ங்கிற படத்துல டப்பிங் பேசுறத்துக்கான வாய்ப்பு எதேச்சையா எனக்கு அமைஞ்சது. அதுக்கு சன்மானமா 25 ரூபாய் கொடுத் தாங்க. கலைத்துறையில நான் வாங்குன முதல் சம்பளம் அதுதான்.

“உழைப்பு என்னை சைக்கிள்ல இருந்து இனோவா கார் வரை உயர்த்தியிருக்கு!’’

படிப்படியா டப்பிங் வாய்ப்புகள் வரவே, பிரஷ் கம்பெனி வேலையிலிருந்து விலகினேன். தொடர்ச்சியா தினமும் டப்பிங் வேலைகள் இல்லாம, நிலையான வருமானம் கிடைக்காம, ஆரம்ப காலத்துல ரொம்பவே போராட்டங்களைச் சந்திச்சேன். ஆனா, சினிமாத் துறை எனக்குப் பிடிச்சிருந்ததை உணர்ந்து, குடும்பத்தினர் எனக்கு முழு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தாங்க. அதனால, எப்ப யாச்சும் ஒரு வாய்ப்பு கிடைச் சாலும், அதை நழுவ விடாமப் பயன்படுத்திக்கிட்டேன். டப்பிங் படங்களுக்கு அதிக அளவுல குரல் கொடுத்தேன். படிப்படியா சினிமாவிலும் வாய்ப்புகள் அதிகரிச்சது” என்றவர், இயக்குநர் விசுவால் ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகி, அந்தப் படத்துக்கு 250 ரூபாய் சம்பளம் பெற்றதைச் சொல்லி பெருமிதப்பட்டார்.

“அப்பல்லாம் ஒரு படத்துக்கு டப்பிங் கொடுத்தா, எனக்கு ஆயிரம் ரூபாதான் கிடைக்கும். அந்த 1993-ல் எனக்குக் கல்யாண மாச்சு. சொல்லப்போனா, அப்போதைய சம்பாத்தியம் வரவுக்கும் செலவுக்குமே சரியா இருந்துச்சு. எறும்புகள் கோடைக் காலத்துல உணவைச் சேமிச்சு வைச்சு, மழைக்காலங்கள்ல அதைப் பயன்படுத்துற மாதிரி, நிலையான சினிமா வாய்ப்புகள் இல்லாதப்ப, சின்ன வயசுலேருந்து தொடர்ந்த சேமிப்புப் பழக்கம் தான் எனக்குப் பொருளாதார ரீதியா பெரிசா கைகொடுத்துச்சு.

மழையை நம்பி, ஒரு விவசாயி காத்துகிட்டிருக்குற மாதிரி, ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் அப்ப நான் ஆவலா காத்துக் கிட்டிருந்தேன். விசு அண்ணாவின் சில படங்கள்ல நடிச்ச நிலையில, தூர்தர்ஷன் நாடகங்கள், ரேடியோ நாடகங்கள், சீரியல்னு கிடைச்ச சின்னச் சின்ன வாய்ப்புகளை எல்லாம், கரைசேர கிடைச்ச துடுப்பா பயன்படுத்திக்கிட்டேன்.

உண்மையான உழைப்பு வீண்போகாது இல்லையா? சினிமாத்துறையில பலரும் என் வளர்ச்சிக்கு ஏணிப்படியா இருந்திருக்காங்க. ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல்தான் ஒரு நடிகரா எனக்கு சிறப்பான அடையாளத்தைக் கொடுத்துச்சு. அப்புறமா சினிமாவுலயும் நல்ல வாய்ப்புகள் அமைஞ்சு, என் வருமானமும் உயர்ந்துச்சு. சைக்கிளிலிருந்து ஸ்கூட்டரும், பிறகு பைக்கும் வாங்கினேன். அப்புறம் செகண்ட் ஹேண்ட்டா டியூவ்ல கார் வாங்கினேன். இப்ப இனோவா கார் பயன் படுத்துற அளவுக்கு கடவுள் என்னை உயர்த்தியிருக்கார். என் வளர்ச்சிக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குது. ஒரு நல்ல கணவராவும் அப்பாவாவும் என் கடமைகளைச் சரியா செஞ்சுகிட்டிருக்கேன்.

சாதாரண நிலையிலிருந்து என் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு கலைஞனா உயர்ந்திருக்குறதைப் பெருமிதமா நினைக்குறேன். இதுக்குப் பின்னாடி நான் பட்ட கஷ்டங்கள், காத்திருந்த, எதிர்கொண்ட சோதனையான காலமெல்லாம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டுமே தெரியும். இப்பவரை என் வாழ்க்கை போராட்டமானதுதான். ஓரளவுக்கு வளர்ந்துட்டோமேன்னு நினைச்சு, நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஓய்வெடுக்கலாம்னு ஒருபோதும் நான் நினைச்சதில்ல. மனுஷனுக்கு அழகே உழைப்புதான். எனவேதான், கடந்து வந்த பாதையை மறக்காம, 35 வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச அதே துடிப்புடன், இப்பவும் சினிமாவுல ஓடிக்கிட்டிருக்கேன்.

கல்யாணத்துக்கு முன்பு பெற்றோர்கிட்ட தந்ததுபோல, அதன்பிறகு வாங்குற சம்பளத்தை அப்படியே என் மனைவிகிட்ட கொடுத்துட்டு, என் தேவைக்கான தொகையை மட்டும் வாங்கிப் பயன்படுத்துறேன். கால மாற்றத்துக்கு ஏற்ப என் சேமிப்புப் பழக்கம் மாற்றமடைஞ்சு, இப்ப வங்கிச் சேமிப்பைக் கடைப்பிடிக்குறேன். நிதானமான ஓட்டம், நம்பிக்கையை இழக்காத பக்குவம், வரவுக்கு ஏற்ற செலவு, தேவையற்ற செலவுகளைச் செய்யாதது, சேமிப்பு... இந்த அஞ்சு குணங்களையும் விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து இப்பவரைக்கும் கடைப்பிடிக்குறேன். இதனால, நிம்மதியான வாழ்க்கையும் வளர்ச்சியும் எனக்குக் கிடைச்சிருக்கு” என்று பெருமிதத்துடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism