Published:Updated:

மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குவோம்!

தலையங்கம்

பிரீமியம் ஸ்டோரி

கோவிட்-19 மூன்றாம் அலை செப்டம்பரில் உச்சத்தில் இருக்கும்; அக்டோபரில் அபாரமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்ட அனுமானங்கள் எல்லாம், நல்லவேளையாக நீர்த்துப்போகிற அளவுக்கான நிலைமை உருவாகியிருப்பதைப் பார்த்து, வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவருமே பெரு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கோவிட் தடுப்பூசி பெரிய அளவில் நம் மக்களைச் சென்றடைந்ததே இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகப் பூட்டிக் கிடந்த ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. ஐ.டி துறை சார்ந்த சில நிறுவன அலுவலகங்கள் தவிர, பிற நிறுவன ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து, வேலைபார்க்கத் தொடங்கிவிட்டார்கள். பஸ், ரயில் போக்குவரத்து விறுவிறுப்படைந்து இருப்பதுடன், உணவகங்கள், பொருள்களை விற்கும் கடைகள், பல்வேறு சேவைகளைத் தரும் நிறுவனங்கள் என எல்லோருக்கும் வருமானம் உயரத் தொடங்கியிருக்கிறது. அடுத்து வியாபாரத்தை விஸ்தரிப்பது எப்படி என்று வெகு ஜாக்கிரதையாகப் பலரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

உலகின் பல பகுதிகளில் கோவிட் நோய்த்தொற்று இன்னும் மிரட்டிக் கொண்டிருக்க, நம் நாட்டில் இந்த நோய்க்கு ஆட்படுகிறவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதைக் கவனத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை களையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நமது மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. கோவிட் நோய்ப் பரவல் மீது கொஞ்சம் கவனம் வைத்திருக்கிற அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியின் மீது கூடுதல் கவனம் வைத்துச் செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும்.

கோவிட் நோயால் செயல்பட முடியாமல் போன சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பது, தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் களைவது, முக்கியமாக, கூடுதலான மூலதனத்தைக் கடனாகத் தந்து பல லட்சம் நிறுவனங்களை மீண்டும் உயிர்ப்பிப்பது என ஆட்சியாளர்களும், நிர்வாகப் பணியில் இருப்பவர்களும் தீவிரமாக யோசித்துச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்க வேண்டிய நேரம் இது. கோவிட் என்பது கெட்ட காலத்தின் மறக்க முடியாத அங்கம். அதனால் நாம் படாதபாடு பட்டுவிட்டோம். அந்தக் கெட்ட காலத்தின் கடைசிக் கட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம். கடந்த காலத்தைப் பற்றியே நாம் அதிகம் கவலைப்படாமல், இனிவரும் வசந்த காலத்தை நினைத்து, சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குவோம். கோவிட்டுக்கு முன்பிருந்ததைவிட இன்னும் சிறப்பான வாழ்க்கை நம் எல்லோருக்குமே கிடைக்கும் என்று நம்புவோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு