படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் இருப்பவர்கள், வேலை தேடி தேடியே அலுத்துப்போனவர்கள், மகனோ, மகளோ படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற கவலையிலேயே இருக்கும் பெற்றோர்களே... கவலை வேண்டாம். ஏனெனில், இங்கு சுயதொழில் தொடங்கவும் ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவு செய்யவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
இன்றைய நிலையில் இந்திய பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதே குறு, சிறு, தொழில் நிறுவனங்கள்தாம். இந்தியாவில் உள்ள சின்னச் சின்ன நிறுவனங்கள்தாம், கொரோனாவினால் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (GDP) மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி யிருக்கிறது. அந்த வகையில், இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டு களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றன. இக்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளன.

இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு, அந்தந்த நிறுவனங்களின் உழைப்பு ஒரு காரணமாக இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கடன்கள், மானியங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களும் மிக முக்கிய காரணங்களாகும். தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (TANSTIA), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைப்பு (MSME), மாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO) ஆகிய அரசு அமைப்புகள் நமக்கு வழங்கிய விவரங்களின்படி இந்த இணைப்பிதழில் தொழில் முதல் வீடு வரை... மத்திய, மாநில அரசு வழங்கும் மானியங்கள், கடன்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
கடன் திட்டங்கள்!
நீட்ஸ் திட்டம் (NEEDS Scheme)
தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் மூலம், முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப் படுகிறது. படித்த இளைஞர்களுக்கு இதன் மூலம் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படுகிறது. இத்திட்டத்தை மாவட்ட தொழில் மையங்களும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25% மானியமும், 3% வட்டி மானியமும் வழங்குகிறது.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி யடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, இதர சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) அதிகபட்ச வயது 45.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாகப் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் (Project Value) 10 சதவிகிதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
வங்கி மூலம் வழங்கப்படும் கடனுதவியைப் பொறுத்து கால நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் கடனை திருப்பிச் செலுத்து வதற்கான கால அவகாசமாகும். இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பம் பெறலாம்.
யூ.ஒய்.இ.ஜி.பி (UYEGP) திட்டம்!
படித்த, வேலையில்லாத இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்க ‘வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (Unemployed Youth Employment Generation Programme - UYEGP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் ஆரம்பிப்பதற்காக ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொழில்களுக்கான கடன் வரம்பு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மானியத் தொகை 25% என்றாலும், முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கு மிகைப்படும்போது ரூ.1.25 லட்சம் மானிய உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலே உள்ள இரண்டு திட்டங்களுக்கும் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பி.எம்.இ.ஜி.பி (PMEGP) திட்டம்!
தொழில்முனைவோர் தொழில்களைத் தொடங்குவதற்கான முதலீட்டைப் (Capital) பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் `பி.எம்.இ.ஜி.பி திட்டம்' (Prime Minister Employment Generation Programme - PMEGP) உதவுகிறது. தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
உற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 25 லட்சத்துக்குள் இருந்தால் அதற்கான முதலீட்டைப் பெற இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ.10 லட்சத்துக்குள் இருந்தால் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவிகிதத்தையும், நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15 சதவிகிதத்தையும் மானியமாகப் பெறலாம்.
சிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர், பழங்குடியினர்,இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள்) கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35 சதவிகிதத்தையும், சிறப்பு பிரிவினர் நகர்ப் புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25 சதவிகிதத்தையும் மானியமாகப் பெறலாம்.
பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்த பட்சம் 10% தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது வரம்போ, வருமான வரம்போ இல்லை. மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன்கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்குக் கடை, மளிகைக் கடை, பொருள்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க இந்தத் திட்டத்தில் விண்ணப் பிக்க இயலாது. படித்துக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டைப் பெற இயலாது.
இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதைப் பொருள்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலிதீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்க இந்தத் திட்டத்தில் பயன் பெற இயலாது. இந்தத் திட்டத்துக்காக kviconline.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டாண்டுஅப் இந்தியா (StandUp India) திட்டம்!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களைத் தொழில் தொடங்க ஊக்கப்படுத்தி ஆதரவளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப் படுகிறது.
ஒவ்வொரு வங்கிக் கிளையில் இருந்தும் குறைந்தபட்சம் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தவர் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கி அவர்கள் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க இத்திட்டம் உதவுகிறது.
புதிய தொழில் என்பது உற்பத்தி சார்ந்தோ, சேவைகள் துறையாகவோ, வணிகமாகவோ இருக்கலாம். தனி நபர் அல்லது கூட்டு நிறுவனத் தொழில் முனைவோராக இருந்தால், அத்தகைய நிறுவனத்தில் குறைந்தது 51% உரிமை ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் பெண்களிடம் இருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெறுவோர், ஏற்கெனவே எந்த வங்கியிலாவது அல்லது நிதி நிறுவனத்திலாவது கடன் பெற்று திரும்பச் செலுத்த தவறியவராக இருக்கக் கூடாது.
புதிய தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 75% கடன் பெறலாம். கடன் பெறுபவர்களின் சொந்த பங்களிப்பு 25% இருக்க வேண்டும். கடன் பெறுபவரின் சொந்த பங்களிப்பு மற்றும் பிற திட்டங்கள் ஆதரவு திட்ட மதிப்பில் 25%-க்கும் அதிகமாக இருக்கும்போது, கடனுக்கான உச்சவரம்பு 75% என்பது தளர்த்தப் படும்.
இந்தத் திட்ட கடன்களை ஏழு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கு standupmitra.in மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கிகள் குறிப்பிட்ட இந்தப் பிரிவில் விதிக்கும் குறைந்தபட்ச வட்டியே இந்தக் கடனுக்கும் விதிக்கப்படும். அதாவது, அடிப்படை கடன் விகிதம் + 3% என்ற கணக்கில் வட்டி நிர்ணயிக்கப்படும்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம்!
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency - MUDRA) மூலமாக அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டுக்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். ரூ.10 லட்சத்துக்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் தொழிலுக்கு பொதுத் துறை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம், தொழில்முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய மூன்று முறைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக, சரக்குகளை எடுத்துச் செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடித்திருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவுக்கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழக்கடைகள், துணிக்கடைகள், பேக்கரி விரிவுபடுத்துதல், ஏஜென்சி வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைப் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
பண்ணைத் தொழில் சார்ந்த மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, விவசாயம், காளான் வளர்ப்பு, ஆட்டுப் பண்ணை போன்ற தொழில்களைப் புதிதாக ஆரம்பிக்க இத்திட்டத்தின் மூலம் கடன் கிடையாது. அந்தத் தொழிலை விரிவுபடுத்துவதற்கோ, வியாபாரத்துக்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்கோ கடன் கிடைக்கும். கடன் பணமாகக் கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருள்கள், சரக்கு வண்டி என அனைத்துக்கும் அதன் விற்பனையாளரின் விலைப்பட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும்.

இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க தொழில் கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்படும். நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பிச் செலுத்தலாம். கடனை இ.எம்.ஐ மூலம் வங்கிக் கணக்கிட்டு அறிவிக்கும்.
நீங்கள் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும்போது மேற்கொண்டு இந்தத் திட்டத்தின் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடனை பெற எந்தவித சொத்துப் பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

முத்ரா கார்டு!
முத்ரா திட்டத்தின் கீழ், குறுந்தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு அன்றாடம் தேவைப்படும் நடப்பு மூலதனத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள ‘முத்ரா கார்டு’ வழங்குகிறது. இந்த கார்டை நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் டெபிட் கார்டை போலவே பயன்படுத்தி நம்முடைய கடன் கணக்கில் இருந்து தேவையான பணத்தை எடுத்து அன்றாட தொழில் சம்பந்தமான செலவுகளைச் செய்துகொள்ள முடியும்.
இந்த கார்டின் மூலம் தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கவும், தங்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தை எப்போது வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தவும் முடியும். இந்தக் கடன் திட்டம் மூலம், கடன் பெறும் நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திய பணத்துக்கு மட்டுமே வட்டியைக் கட்டுவதால் அதிக லாபத்தைப் பெற முடிகிறது.
முத்ரா கார்டை நாடு முழுவதிலும் உள்ள எந்த ஏ.டி.எம் இயந்திரங்களை உபயோகப்படுத்தியும் தேவைப்படும் பணத்தை ரொக்கமாக அல்லது கடைகளில் பாயின்ட் ஆஃப் சேல் மூலமாக (Point of Sale) வாங்கும் பொருள்களுக்கான விலையை ஸ்வைப் செய்தும் வாங்கிக்கொள்ள முடியும்.
சிறுபான்மையினர் கடன்!
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் மற்றும் தொழில் செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதன் மூலம் அச்சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (Tamilnadu Minorities Economic Development Corporation - TAMCO) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார விரிவாக்கம், கைவினை மற்றும் மரபு வழி (Traditional) சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை (Service) நிலையங்கள், விவசாயம் தொடர்பான சிறு தொழில்கள், போக்குவரத்து ஆகிய தொழில்களுக்கு தனிநபர் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு இஸ்லாமியர்/ கிறிஸ்துவர்/சீக்கியர்/பௌத்தர்/பாரசீகியராக இருக்க வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் எனில், ஆண்டு வருமானம் ரூ.39,500-க்கு மேற்படாமலும், நகர்ப் புறத்தைச் சேர்ந்தவர் எனில், ஆண்டு வருமானம் ரூ.54,500-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

கடன் கோரும் திட்டத்தின் மதிப்பீடு ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை இருப்பின், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் (NMDFC) ஒப்புதல் பெற்று தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். போக்குவரத்து தொழில் தவிர, பிறவற்றுக்கு வழங்கப்படும் அனைத்துக் கடன்களுக்கும் ஆண்டு வட்டி விகிதம் 6%. போக்குவரத்து வாகனங்கள் வாங்கிட அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. இக்கடன் தொகைக் கான ஆண்டு வட்டி விகிதம் 10%. திட்ட மதிப்பீட்டில் 5% பயனாளியின் பங்கு ஆகும். மீதமுள்ள 95% கடனாக வழங்கப்படும். கடன் தொகையை 60 மாத கால தவணைகளில் கடன் பெற்ற வங்கிக்குக் குறிப்பிடப்பட்ட தேதியில் திரும்பச் செலுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிக் கிளைகள், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள டாம்கோ அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சி.ஜி.டி.எம்.எஸ்.இ (CGTMSE) திட்டம்!
புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட தொழில் முனைவோர்கள், தாங்கள் பெறவிருக்கும் கடனுக்கு ஈடாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை பிணையமாக (Collateral security) வழங்காமல் வங்கிகளிலிருந்து கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் சி.ஜி.டி.எம்.எஸ்.இ திட்டம் (Credit Guarantee Funds Trust for Micro and Small Enterprises - CGTMSE).
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSME Ministry) மற்றும் சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) மூலம் நிறுவப்பட்ட அறக்கட்டளை இது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்குக் கடன் உத்தரவாதம் அளிப்பதாகும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமே எந்தவிதமான சொத்து அடமானமும் மூன்றாவது நபரின் உத்தரவாதமும் (Third party guarantee) இல்லாமல், 2 கோடி ரூபாய் வரை கடன் உதவி பெறுவதாகும். இவர்கள் வட்டிக்கு மேல் அதிகபட்சமாக 1.5 சதவிகிதம் உத்தரவாத தொகையாகவும், சர்வீஸ் சார்ஜும் கொடுக்க வேண்டியிருக்கும்.
கடன் வாங்கியவர்கள் அதைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வங்கிகளுக்குக் கடனை இந்த அறக்கட்டளை திருப்பிச் செலுத்துகிறது. கடனுக்கான தொகையில் அதிகபட்சம் 85% வரை இந்த அறக்கட்டளை உத்தரவாதம் அளித்து திருப்பித் தருகிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இத்திட்டம் பொருந்துகிறது.
அனைத்து வகை எஸ்.எம்.இ (SME) மற்றும் எம்.எஸ்.எம்.இ (MSME) அமைப்புகளும் கடன் பெறத் தகுதியானவர்கள். இந்தத் திட்டத்தில் பயிற்சி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், வணிகர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு இடமில்லை. பெண்களால் தொடங்கப்படும் தொழில்களுக்கு சிறப்புச் சலுகையும் உள்ளது.

வீடு கட்ட மானியம்!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana - PMAY) திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு கூறுகள் உள்ளன.
முதலாவதாக, நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். மற்றொன்று, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர், மின்சாரம்) வழங்கும் வேறு சில திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன்கூடிய கடனுதவியைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் அதிகபட்சம் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறுவதற்கு 2022 மார்ச் 31 கடைசி தேதியாகும். எனவே, இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் வீடு கட்டுவோர் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகளாக மானிய உதவி கிடைக்கிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், வீட்டு விலை, வீட்டின் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்படும் வீட்டை நான்காகப் பிரித்துள்ளார்கள். ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் வரை இருப்பவர்களைக் குறைந்த வருவாயுள்ள பிரிவினர், ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் - 1; ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய் வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் - 2 என்று பிரித்துள்ளனர்.
யாரெல்லாம் பெறலாம்?
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாகக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களில் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தக்க சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம்.

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்னர், சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்து, குடிசைவாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது இதர மூன்றாம் கூறின் பயனாளர்கள் (benefits under other 3 components) என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல்கள் உண்மை யானவையாக இருந்தால், அடுத்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அந்தப் பக்கத்தில் உங்களுடைய பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் எண், குடும்பத் தலைவரின் பெயர் ஆகிய இதர விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயமாகும். பொதுச் சேவை மையங்களிலும் இத்திட்டத் துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. இந்த விண்ணப்பத்துக்கான கட்டணம் 25 ரூபாய். ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
நீங்கள் நேரடியாக வங்கியையோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிறுவனத்தையோ அணுகி கடன் வாங்கும்போது, நீங்கள் பெறுகின்ற கடன், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் விதிமுறைகளுக்குப் பொருந்தி வரும் என்றால், அந்த வங்கியோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிதி நிறுவனமோ, நேரடியாக வீட்டு வசதி அமைச்சகத்திடமோ, தேசிய வீட்டு வங்கியிடமோ, தகவல்களை அளித்து அந்த மானியத் தொகையை உங்களின் கடன் கணக்கில் வரவு வைத்துவிடும். அவர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டியது அவசியம்.
இந்தத் திட்டம் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புது வீடு வாங்குவோருக்கும், தங்களின் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கும் மட்டுமே பொருந்தும். பழைய, கட்டப்பட்ட வீட்டை வாங்குபவர்களுக்குப் பொருந்தாது. ஒரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மற்றொரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றும் கடனுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தின் மூலம் மானியத்தொகை பெற்றாலும் கடனை முன்கூட்டியே செலுத்தி முடிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுக்குக் கிடைக்கும் மானியத்தொகை, தங்களின் கடன் கணக்கில் வரவு வைத்து, தங்களின் கடன் அளவைக் குறைத்து, மீதமுள்ள கடன் தொகைக்கு மட்டுமே மாதாந்தரத் தவணை செலுத்துமாறு கணக்கிடப்படும்.

எங்கெல்லாம் வீடு கட்டலாம்?
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொதுவானது. கிராமம், நகரம், பெருநகரம் என எந்த இடத்தில் வீடு கட்டினாலும் / புதிதாக வீடு வாங்கினாலும் இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. பழைய வீடு வாங்குவதாக இருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. வீட்டுக்கு உரிமையாளராகவோ, இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத்தலைவரின் பெயரில் அந்த வீடு இருக்கும்பட்சத்தில், குடும்பத்தலைவியை துணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளிப்பவராகவோ காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன் திட்டங்கள்!
சம்பளதாரர், சொந்த தொழில் செய்வோர் என யாராக இருந்தாலும் வீடு கட்டுவதற்கு, பொதுத்துறை மற்றும் தனியார் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. கடன்தாரர்கள் முறையான வருமானம் சார்ந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போதைய நிலையில் பொதுத்துறை வங்கிகளில் 6.90% முதல் 8% வரை வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டுக் கடன் வரலாற்றிலேயே இதுதான் மிகக் குறைவான வட்டி விகிதமாகும். பெரும்பாலான தனியார் வங்கிகளிலும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன்கள் கிடைக்கின்றன.
வீட்டுக் கடன் வட்டியைப் பொறுத்தவரை, நிலையானது (Fixed Loan) மற்றும் மாறுபடும் வட்டி விகிதம் (Floating Rate) என்கிற இரு வகை உண்டு. நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு நிலையானதாக இருக்கும். அதன் பிறகு, அப்போதைய மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாற்றப் படும். மாறுபடும் வட்டி விகிதத்தில், வீட்டுக் கடனுக்கான வட்டி ஆர்.பி.ஐ-யின் ரெப்போ வட்டி விகித மாற்றத்துக்கேற்ப கடனுக்கான வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாகும். அதாவது, ஆர்.பி.ஐ ரெப்போ வட்டியை உயர்த்தினால், வீட்டுக் கடனுக்கு வட்டி உயரும்; ரெப்போ வட்டி குறைந்தால் வீட்டுக் கடனுக்கான வட்டி குறையும்.
கலவை வட்டி விகிதம் (Mixed Rate) என்கிற வட்டி விகிதம் சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்களில் இருக்கின்றன. இதில் மொத்தக் கடன் தொகையில் குறிப்பிட்ட தொகைக்கு நிலையான வட்டியும், மீதித் தொகைக்கு மாறுபடும் வட்டியும் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஒருவர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ரூ.15 லட்சம் நிலையான வட்டி விகிதம், ரூ.15 லட்சம் மாறுபடும் வட்டி விகிதம் எனப் பிரித்துக் கொள்ளலாம் அல்லது ரூ.20 லட்சம் நிலையான வட்டி விகிதம், மீதி ரூ.10 லட்சம் மாறுபடும் வட்டி விகிதம் என நிர்ணயித்துக்கொள்ளலாம்.

எவ்வளவு தொகை கடன் கிடைக்கும்?
வீட்டுக் கடனுக்கான நெறியாளர், ரிசர்வ் வங்கி. அது வீட்டின் முழு மதிப்புக்கும் கடன் வழங்க வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்களை அனுமதிப்பது இல்லை. அந்த வகையில் வீட்டின் மதிப்பில் 75% முதல் 90% வரைதான் கடன் கிடைக்கும். மீதித் தொகையைக் கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து செலுத்த வேண்டும். இதை வீட்டுக் கடன் முன் பணம் (டவுன் பேமென்ட்) என்பார்கள். உதாரணத்துக்கு, ஒரு வீட்டின் விலை ரூ.40 லட்சம், 80 சதவிகிதம் தான் கடன் கிடைக்கும் எனில், ரூ.32 லட்சம்தான் கடன் கிடைக்கும். மீதி ரூ.8 லட்சம் கையிலிருந்து செலுத்த வேண்டி இருக்கும்.
வீட்டுக் கடன் தொகையை சம மாதத் தவணையாக (Equated Monthly Installment - EMI) குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் கட்டி முடிக்க வேண்டும். இந்த இ.எம்.ஐ என்பது திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டி சேர்ந்ததாகும். ஆரம்ப ஆண்டுகளில் இ.எம்.ஐ-யில் வட்டிக்குச் செல்லும் தொகை அதிகமாக இருக்கும். ஆண்டுகள் செல்லச் செல்ல, பாக்கிக் கடன் தொகை குறையக் குறைய வட்டிக்குச் செல்லும் தொகை குறைந்துகொண்டே வரும்.
வீட்டுக் கடனை ஐந்து ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரைக்கும் கட்டி வரலாம். இளம் வயதினருக்குச் சில வங்கிகள் 40 ஆண்டுகள் வரைகூட அனுமதிக்கின்றன. இந்தக் காலம் ஒருவரின் வயது மற்றும் கடனைத் திரும்பக் கட்டும் தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். நீண்ட காலத்தைத் தேர்வு செய்தால், மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆனால், வட்டிக்குச் செல்லும் தொகை அதிகமாக இருக்கும். இதுவே, குறுகிய காலத்தில் கடனை அடைத்தால் மாதத் தவணை அதிகமாகவும், வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாகவும் இருக்கும்.

தேவையான ஆவணங்கள்!
கே.ஒய்.சி படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டிவரும். அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம், வருமான சான்றிதழ், சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கில் மூன்று மாத அறிக்கை, கடந்த மூன்று ஆண்டு வரிக் கணக்குத் தாக்கல் செய்த விவரங்கள், சொத்து ஒரிஜினல் பத்திரங்கள், சொத்து மூலப் பத்திரம், பட்டா, லே அவுட் மற்றும் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். இவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதன் மூலம் விரைந்து வீட்டுக் கடன் பெற முடியும்.
வீட்டுக் கடன் வாங்க நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை வங்கி, வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனம் எங்கே வைத்துப் பாதுகாக்கிறது என்கிற விவரத்தைக் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து ஆவணங் களையும் 2, 3 நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும். காரணம், சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் சொத்து ஆவணங்களை அதற்கு என இருக்கும் ஆவணப் பாதுகாப்பு மையத்தில் வைத்துக்கொள்கின்றன. இந்த அலுவலகங்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி என இருக்கின்றன. அந்த ஆவணங்களைத் தமிழக கிளைக்குக் கொண்டுவர செலவு மற்றும் நாள்கள் எடுத்துக்கொள்ளும். மேலும், இதற்கான செலவை வங்கிகள், நிறுவனங்கள் கடன் வாங்கியவரிடமிருந்துதான் வசூலிக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

காப்பீடு!
கடன் வழங்கும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனமே, வீட்டுக் கடன் தொகைக்கு இணையாக வீட்டுக் கடன் தொகை காப்பீடு எடுத்துக்கொள்ளச் சொல்லும் அல்லது எடுத்துத் தருவார்கள். இப்படி காப்பீடு எடுப்பது கட்டாயமாகும். வீட்டுக் கடன் எடுத்திருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, இந்தக் காப்பீட்டுத் தொகை மூலம் வீட்டுக் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுகளுக்கு வீடு போய் சேரும்.
கடனை சரியாகக் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்?
வீட்டுக் கடன் தவணையைத் தொடர்ந்து ஒழுங்காகக் கட்டி வருவது அவசியம். தொடர்ந்து மூன்று தவணைகள் கட்டவில்லை என்றால் வாராக் கடனாக மாறிவிடும். அதன் பிறகு, பாக்கி உள்ள தவணைகளைச் சேர்த்துக்கட்டி வர வேண்டும். இல்லை என்றால் வங்கி/வீட்டு வசதி நிறுவனம் கடனைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பும். நீதிமன்ற தலையீடு இல்லாமல், சர்ஃபாசி சட்டப்படி (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act - SARFAESI Act) நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டை வங்கி அதன் வசம் எடுத்துக்கொண்டு, சொத்தை ஏலத்தில் விடும். பாக்கி கடனைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டால், கடன் போக மீதித் தொகை கடன் வாங்கியவருக்குக் கொடுக்கப்படும். இல்லை என்றால் பாக்கித் தொகையைக் கடன் வாங்கியவர் கட்ட வேண்டும்.

தொழில்முனைவோர்களுக்குப் பயனுள்ள இணையதளங்கள்!
Government of Tamilnadu - www.tn.gov.in
Entrepreneurship Development and Innovation Institute - www.editn.in
Ministry of Micro, Small & Medium Enterprises ( (Government of Tamilnadu) - www.msmeonline.tn.gov.in
Ministry of Micro, Small & Medium Enterprises (Government of India) - www.msme.gov.in
Investing in Tamilnadu Government of Tamilnadu - www.investingintamilnadu.com
Startup India - startupindia.gov.in
Electronics Corporation of Tamil Nadu Ltd (ELCOT) - www.elcot.in
Khadi and Village Industries Commission (KVIC), Govt of india - www.kvic.org.in
National Institute of MSME - www.nimsme.org
National Skill Development Corporation - www.nsdcindia.org
Small Industries Corporation - www.sidbi.in
National Institute for Entrepreneurship & Small Business Development ( NIESBUD) - www.niesbud.nic.in
Tamilnadu Small & Tiny Industries Association- www.tanstia.org.in
Ministry of Commerce & Industry (Dept .of Indl.Policy & Promotion) - www.dipp.nic.in
State Industries Promotion Corporation of Tamilnadu (SIPCOT) - www.sipcot.tn.gov.in
Tamilnadu Industrial Investment Corporation TIIC - www.tiic.org
Federation of Indian Export Organizations www.fieo.org
Standup India - www.standupmitra.in