Published:Updated:

நிர்வாகத் துறையில் புதுமை படைத்தவர்... பன்முக வித்தகர் பாலா பாலச்சந்திரன்!

அஞ்சலி

பிரீமியம் ஸ்டோரி

மாணவர்களால் ‘அங்கிள் பாலா’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் பாலா பாலச்சந்திரன் செப்டம்பர் 27-ம் தேதி அமெரிக்காவில் மறைந்தார். 84 வயதில் மறைந்த பாலா பாலச்சந்திரன் பேராசிரியர், கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனர், எழுத்தாளர், பல முக்கிய குழுமங்களுக்கு ஆலோசகர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.

புதுக்கோட்டையில் பிறந்து சர்வதேச அளவில் முக்கியமான பேராசிரியராக உச்சம் தொட்டிருக்கிறார்். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பாதி நாள்களையும், அமெரிக்கா வில் பாதி நாள்களையும் வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர் தற்போது நிரந்தர ஓய்வில் இருக்கிறார்.

நன்றாகப் படித்தாலும் பாலாவுக்கு முக்கிய கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. படிக்கும்போது கணிதத்தில் ஆர்வம் இருந்ததால் பி.எஸ்ஸி கணிதம் மற்றும் புள்ளியியல் படித்தார். அதைத் தொடர்ந்து எம்.ஏ படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே பேராசிரியராக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

 பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

கணிதத்தின் மீது இருக்கும் ஆர்வம் இவரை அடுத்துகட்டத்துக்கு எடுத்துச் சென்றது. டேடன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அவருடைய ஆராய்ச்சி பணிக்கு உதவியாளர்களைத் தேடுவதற்காக வருகிறார்; அப்போது பல்கலைக்கழகம் பாலா பாலச்சந்திரனைத் தேர்ந்தெடுக்கிறது; பேராசிரியருக்கும் இவரைப் பிடித்துப்போகிறது. ஆனால், இவரின் குடும்பத்தில் விடுவார்களா என்பது தெரியவில்லை. குடும்பத்தின் மூத்தமகன் என்பதால் அப்பா விடமாட்டார் என்பது இவரது எண்ணம்.

ஆனால், பேராசிரியர் அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்கிறார். அவர் சென்னையில் இல்லை, புதுக்கோட்டையில் இருக்கிறார் என்று சொல்லவும் பேராசிரியர் ரயிலில் புதுக்கோட்டைக்குச் சென்று அவர் அப்பாவிடம் சம்மதம் வாங்கி, பாலாவை அமெரிக்கா அழைத்துச் செல்கிறார். 1967-ம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக அமெரிக்கா சென்றவருக்கு அங்கிருந்து புதிய மாற்றம் தொடங்கியது.

ஆராய்ச்சிப் பணி முடித்தவுடன் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி முடித்தார். அதைத் தொடர்ந்து கெலாக்ஸ் பல்கலைக்கழகத்தின் டீனை சந்தித்து அங்கு பேராசிரிய ராக வாழ்க்கையைத் தொடங்கினார். அமெரிக்கா வில் பரபரப்பான பேராசிரியான பிறகு, ஆண்டுக்கு மூன்று மாதம் இந்தியாவில் சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தார். மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப மேனேஜ் மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்ன்ட்யூட்டை (கூர்கான்) உருவாக்கினார்.

2002-ம் ஆண்டு இவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப் பட்டது. ‘கிட்டத்தட்ட மரணம் என முடிவெடுத்து விட்டேன்’ எனச் சொன்னார். மரணத்தை நெருங்கி விட்டதால் இனி இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவருக்குத் தோன்றி யிருக்கிறது. அந்த சிந்தனை தான் கிரேட் லேக்ஸ் உருவாகக் காரணம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இதயம் 65 சதவிகித செயல்பாட்டை இழந்து விட்டது. ஆனால், இவர் விடாமல் முயற்சி செய்தார்.

ஏன் சென்னையில் கிரேட் லேக்ஸ் தொடங்கப்பட்டது எனக் கேட்டபோது, அப்போது ஐ.ஐ.எம் உள்ளிட்ட கல்லூரிகள் இல்லை என்பதால் சென்னையில் தொடங்கினேன் எனத் தெரிவித்திருக்கிறார். இவருடைய சொந்த முதலீடு மற்றும் தொழில்துறையின் உதவியுடன் சென்னையில் கிரேட் லேக்ஸ் தொடங்கப் பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈ.சி.ஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பெரிய வளாகம் கட்டப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து கூர்கானிலும் கிரேட் லேக்ஸ் பிரிவைத் தொடங்கினார்.

டாடா குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசக ராக இருந்திருக்கிறார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது அவருக்கும், சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த போது அவருக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார்.

மத்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கி கெளரவித்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அரசு களுக்கும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பாலாவின் மறைவு இந்திய நிர்வாகத் துறைக்கு பெரும் இழப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு