Published:Updated:

ஐ.டி முதல் வங்கி வரை... விழிச்சவாலுடன் சாதித்த இளைஞர்!

அப்சரன் ஃபெர்னாண்டோ
பிரீமியம் ஸ்டோரி
News
அப்சரன் ஃபெர்னாண்டோ

தன்னம்பிக்கை

கண் பார்வை தெளிவாக இருப்பவர்களால் தான் கம்ப்யூட்டர் மூலம் பல வேலை களைச் செய்ய முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால், விழிச்சவால் பிரச்னையைத் தாண்டி ஒரு வங்கி ஊழியராக வெற்றிகரமாகப் பணியாற்றுகிறார் அப்சரன் ஃபெர்னாண்டோ. இந்தியாவின் அமேசான் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த முதல் விழிச்சவால் ஐ.டி ஊழியரும் இவரே. தற்போது சென்னையில் பொதுத்துறை வங்கியொன்றில் பணிபுரிந்து வரும் அவரை சந்தித்துப் பேசினோம். மனம் திறந்து பேசினார் அவர்.

“நான் பொறக்குறப்பவே எனக்கு விழித்திறன் சவால் இருந்தது. ஆனா, என் பெற்றோர் களாலேயே எனக்கு விழிச்சவால் இருந்ததைக் கண்டுபிடிக்க முடியல. அவங்களப் பார்க்குறதுக்குப் பதிலா வேற எங்கேயோ பார்ப்பேனாம். சொடக்கு போடும்போது அந்தச் சத்தம் வர்ற திசையை நோக்கி நான் திரும்புறதைப் பார்த்து, நான் சாதாரண குழந்தைங்க மாதிரி இல்லங்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.

அதைத் தெரிஞ்சவுடனே எங்கம்மா மனசு உடைஞ்சு போயிட்டாங்க. அப்புறம் சென்னை யில ஸ்பெஷல் ஸ்கூல் இருக்குறது தெரியவர, அங்கே என்னைச் சேர்த்தாங்க. அந்தப் பள்ளியில மத்த பிள்ளைங்களைப் பார்த்தப்ப தான், அவங்க ஓரளவுக்கு அமைதியானங்க. என் வாழ்க்கையில திருப்புமுனை உருவானதும் அங்கதான்.

அப்சரன் ஃபெர்னாண்டோ
அப்சரன் ஃபெர்னாண்டோ

ஐந்தாவது வரை ஸ்பெஷல் ஸ்கூல்ல படிச் சிட்டு, ஆறாவதுல இருந்து நார்மல் பள்ளியில சேர்ந்தேன். நான் சேர்ந்த சமயத்துலதான் அந்த ஸ்கூலுல கம்ப்யூட்டர் புதுசா வந்துச்சு. ஆனா, ‘12-ம் வகுப்பு பசங்க படிக்குற இடத்துல உனக்கு என்னடா வேலை...’ன்னு கம்ப்யூட்டரை நெருங்கவே விடமாட்டாங்க. ஆனா, கம்ப்யூட்டரைத் தொட்டு பார்க்க வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கிகிட்டு இருந்தேன்.

நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால கம்ப்யூட்டர் ரூம்ல சிஸ்டம்ல தூசி படியாம துடைக்குறதுக்கான பொறுப்பு எனக்கும் என் ஃபிரெண்டுக்கும் கிடைச்சது. ராத்திரி நைசா கம்ப்யூட்டர் லேபுக்கு போய், அதைத் துடைக் குற பேருல தொட்டுப் பார்த்து, ஆன் பண்ணி கூகுள் பக்கத்தை ஓப்பன் பண்ணினேன். சிஸ்டம்ல இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த JAWS சாஃப்ட்வேர் வார்த்தைகளை வாசிச்சுக் காட்டுச்சு. அதைக் கேட்டப்ப வேற லெவல் ஃபீல். அந்தச் சத்தம் கேக்கவே, வார்டன் வந்துடுவாங்களோங்குற பீதியில நானும் என் ஃபிரெண்டும் ஓட்டம் பிடிச்சோம் பாருங்க...” என்று சிரித்தார் அப்சரன்.

பத்தாவது முடித்து, 11-ம் வகுப்பில் சேர்வதற்கு வணிகம், மொழியியல், வரலாறு போன்ற பாடப்பிரிவுகளில் மட்டுமே விழிச்சவால் உடையவர்களுக்கு வாய்ப்பு என்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர முடியவில்லை. வரலாறு படித்துவிட்டு, முதுகலை ஆங்கிலம் வரை படித்தார். விழிச்சவால் உடைய பலரும் ஆசிரியர் வேலைதான் பாதுகாப்பாக இருக்கும் எனத் தேர்வு செய்யும் நிலையில், அப்சரன் ஐ.டி வேலைக்குப் போக வேண்டும் என்றே ஆசைப்பட்டார். பிரபல ஐ.டி நிறுவனம் ஒன்றில் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு இன்டர்ன்ஷிப் போனார்.

அந்தச் சமயத்தில் அப்சரனுக்குத் தெரிந்தவர் ஒரு கம்ப்யூட்டர் சென்டரைத் திறக்க, அதில் பயிற்சியாளராகச் சேர்ந்து, விழித்திறன் சவாலுடையவங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். ஐ.டி வேலைக்காக அடுத்தடுத்து முயற்சி செய்தவர், தொடர்ச்சியாக வந்த நிராகரிப்புகளால் மனம் தளர்ந்துவிடவில்லை. அப்போதுதான் விழித்திறன் சவாலுடையவர்களுக்கான ‘Accessibility Testing’ என்கிற வேலை இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அப்படியொரு வேலை அமேசான் நிறுவனத்தில் இருப்பது தெரிய வர, அதற்கு விண்ணப்பித்தார்.

‘‘அமேசான் நிறுவனத்துல இருந்து கால் லெட்டர் வந்தப்ப எனக்கு ஒரே சந்தோஷம். இன்டர்வியூக்குப் போனேன். அது முடியுறப்ப, ‘Accesibility Testing’ வேலையிடத்துக்குத்தானே வந்தீங்க. எங்க ஆபீஸ்ல ‘ஆக்ஸசிபிலிட்டி’ சிக்கல்களைச் சந்திச்சிங்களா’’ன்னு கேட்டாங்க. ‘‘இன்டர்வியூவுக்கு லிஃப்ட்ல வரும்போது ஃப்ளோர் அறிவிப்பு வரலை’’ன்னு நான் சொன்னவுடனே உடனே அதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

ஆனாலும், விழிச்சவாலை காரணம் சொல்லி, ‘உங்களை வேலைக்கு வச்சுக்குறதால நிறுவனத்துக்கு என்ன லாபம் இருக்கும்’ன்னு பாலிஷா கேக்குற மாதிரி, அடிக்கடி வொர்க் ரிப்போர்ட்டுகளை சப்மிட் பண்ணச் சொல்வாங்க. இருப்பைத் தக்க வச்சுக்குறதே போராட்டமாக இருந்துச்சு.ஆனா, நான் கடுமையா உழைச்சேன். நாலாவது மாசத்துல எனக்கு ‘Best Employer Award’ கிடைச்சது. அதுக்கப்புறமாதான் விழிச்சவால் இருக்குறவங்களாலயும் எல்லாரையும் போல வேலை செய்ய முடியும்ங்குற நம்பிக்கை அவங்களுக்கு வர ஆரம்பிச்சது. என்னை மாதிரி இருக்கிற இன்னும் பலரை வேலைக்கு எடுக்க ஆரம்பிச் சாங்க.

என்னதான் ஐ.டி-யில வேலை பார்க்குறது என்னோட கனவா இருந்தாலும், அரசுத் துறை கள்லயும் விழிச்சவால் உடையவங்களுக்கான வாய்ப்பு எந்த அளவுல இருக்குங்குறத தெரிஞ்சிக்கிட்டு, அங்கேயும் வலம் வரணும்ன்னு முடிவு பண்ணினேன். அமேசான்ல வேலை பார்த்துகிட்டே அரசுத் தேர்வு எழுதி, வங்கித் துறையில அடியெடுத்து வச்சேன். இன்னைக்கு வங்கி வேலையை சிறப்பா செஞ்சுட்டு வர்றேன்’’ என்றவர் ஒரு கோரிக்கையையும் வைத்தார்.

‘‘விழிச்சவாலைக் காரணம் காட்டி வாய்ப்பை மறுக்காம வேலை தந்தாலே தன்னம்பிக் கையையும் முன்னேறி வர்றதுக் கான தெம்பையும் எங்களுக்குக் கொடுக்கும். எல்லாரையும் போல, எங்களாலயும் நிறைய வேலைகளைச் செய்ய முடியும்; அதுக்குக் கூடுதலாகச் சில மென்பொருள்கள் தேவைப்படும், அவ்வளவுதான். வாய்ப்புகள் கிடைச்சா நாங்களும் நிச்சயமா சாதிச்சுக் காட்டுவோம்’’ என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார் அப்சரன்.

பிடித்துச் செய்யும் வேலையில் வெற்றியே கிடைக்கும் என்பதற்கு அப்சரன் சிறந்த உதாரணம்!