Published:Updated:

“கையை இழந்தேன்... நம்பிக்கையை இழக்கவில்லை!’’ ஓர் இளைஞரின் வெற்றிக் கதை...

ரிஷி கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி கிருஷ்ணா

S U C C E S S S T O R Y

“கையை இழந்தேன்... நம்பிக்கையை இழக்கவில்லை!’’ ஓர் இளைஞரின் வெற்றிக் கதை...

S U C C E S S S T O R Y

Published:Updated:
ரிஷி கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி கிருஷ்ணா

எனக்கு 23 வயசு... என் வாழ்க்கையையே தலைக்கீழா புரட்டி போட்டுச்சு. ஆனா... இன்னைக்கு நான் ஒரு சி.இ.ஓ-வா இருக்குறதுக்கான காரணமும் அதுதான்’’ என்று முதல் சீனிலேயே எதிர்பார்ப்பைக் கிளப்பும் படம் போல பேச ஆரம்பித்தார் ரிஷி கிருஷ்ணா. செயற்கை கைகளைச் செய்துவரும் சிம்பயானிக் (symbionic)என்கிற நிறுவனத்தின் சி.இ.ஓ சாதாரண மனிதனாக இருந்த ரிஷி, நம்பிக்கை மனிதராக மாறியது எப்படி? வாருங்கள், அவர் கதையை அவர் சொல்லக் கேட்போம்.

‘‘விஸ்காம் முடிச்ச கையோட ஃபிலிம் மேக்கர் ஆகணும்னு ஆசை. ஆனா, டிகிரி முடிச்சதும் ஒரு என்.ஜி.ஓ-ல வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு பஸ்ஸுல போயிட்டு இருந்தப்ப பஸ் ஆக்சி டென்ட் ஆச்சு... அத்தனை பேர் இருந்த பஸ்ஸுல எனக்கு மட்டும்தான் விபத்தாம்... ஆமா, என்னோட ஒரு கையை இழந்துட்டேன்.

கையை இழந்ததை என்னால ஏத்துக்க முடியல... தாங்கிக்கவும் முடியல... உடல்ரீதியான வலியைக் கடந்து, செயற்கை கை வைக்குறதுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முயற்சி எடுத்தேன்.

ரிஷி கிருஷ்ணா
ரிஷி கிருஷ்ணா

எனக்கேத்த கையைத் தேடி நிறைய கடைகளுக்குப் போனேன். நான் தேடினது சாதாரண கையில்லை. தானாக இயங்கக்கூடிய ரோபோ கை. தொடர்ந்து ஆறு மாசங்களா காஸ்மெட்டிக் சென்டர்ஸ் ஏறி இறங்கினேன். பல ஆயிரம் செயற்கை கைகளைக் காட்டினாங்க. எனக்குப் பொருத்தமா இருந்த கையை காசு அதிகம்ங்கறதால வாங்க முடியல... கம்மியான காசுல உள்ளது எனக்கு செட் ஆகல. கடைசியா, ‘உங்க டைப் ஆம்ப்யூட்டேஷனுக்கு செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டாங்க.

விபத்து ஏற்பட்டு கை, கால் இழந்தவர்களுக்குச் செயற்கை கை, கால்களை ஹாஸ்பிடல்கள்லேயே போட்டுவிடுவாங்கனுதான் அது வரைக்கும் நினைச்சேன். ஆனா, அரசு மருத்துவமனைகள் சில நிறுவனங்களோட பார்ட்னர்ஷிப் பண்றதால அவங்க தர்ற செயற்கை கையும் விலை அதிகமாவே இருக்கும். இதனால் சாதாரண மக்களால வாங்க முடியாதுன்னு தெரிஞ்சு கிட்டப்ப எனக்கு கோபம் கோபமா வந்துச்சு.

வெறும் செயற்கை கையா இல்லாம, ரோபோ முறையில இயங்கிற ஒரு செயற்கை கையை நானே சொந்தமா ஏன் டிசைன் பண்ணி உருவாக்கக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரு உந்துதல் ஏற்பட்டுச்சு... அது கம்மியான விலையில கொண்டு வரணும்ங்குற வெறியா மாறுச்சு. வெளியில எங்கேயும் வாங்காம நானே செய்யுற செயற்கை கையைத்தான் எனக்கு பொருத்தணும்னு முடிவு பண்ணேன்.

எத்தனை பேர் விபத்தால கை கால்களை இழந்திருக்காங்கங்கற விவரங்களைத் தெரிஞ்சிகிட்டேன். இந்தியாவுல மட்டும் ஏறக்குறைய 10 லட்சம் பேர் கை கால்களை இழந்து வாழ்ந்துட்டு வர்றாங்க. காஸ்மெட்டிக் கையோ, ரோபோடிக் கையோ வைக்காமதான் பலர் இருக்காங்க. இன்னும் நிறைய தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்கதான் இதோட தீவிரத் தைப் புரிஞ்சிக்க முடிஞ்சுது. என்னோட நண்பர்களும் என் கூட இணைஞ்சாங்க. எந்தவொரு ஸ்டார்ட்அப் செட்டப்பும் இல்லாம சாதாரணமா வெறும் ஹாபியாக பண்ண ஆரம்பிச்சதுல போகப் போக நிறைய பேர் சேர ஆரம்பிச்சாங்க. இதையே ஏன் ஒரு டீமாக இன்னும் சீரியஸா எடுத்து பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.

எங்கள்ல பல பேருக்கு டெக்னாலஜி பேக்ரவுண்ட் கிடையாது. ‘Prosthetics’ கான்செப்ட்டும் எங்களுக்கு ரொம்பவே புதுசு. டெக்னாலஜி பார்ட் கஷ்டமா இருந்ததால, ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட்டோம். செயற்கை கை செய்றதுக்கான மெட்டீரியல் எங்க இருந்து வருது, ஒவ்வொரு மெட்டீரியல் பார்ட்டும் எந்தெந்த பார்ட்டுக்கு பொருத்தமா இருக்கும், அதுக்கு எவ்வளவு செலவாகுது, இப்படி டெக்னாலாஜி, பிசினஸ், மார்க்கெட்டிங், டீம் பில்டிங், மேனேஜ்மென்ட், ஃபைனான்ஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ்ன்னு நிறைய கத்துக்கிட்டோம்.

இன்குபேஷன் ஆபீஸர்கள்கிட்ட நாங்க செய்றதை வீடியோவா காட்டி விளக்கினோம். எங்களோட ஐடியாவும் குறிக்கோளும் அவங்களுக்கு புடிச்சு போக ஆர்வம் தெரிவிச்சதை அடுத்து இரண்டு வருஷங்களா ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட்டில் கவனம் செலுத்தினோம். என்னை வச்சே டெஸ்டிங்கையும் பண்ணோம். இனி யூசர்ஸ்கிட்டயும் டெஸ்ட் பண்ணப் போறோம். ஹாஸ்பிடல்ஸ்கூட இணைஞ்சு மெடிக்கல் ட்ரையல்ஸ் முடிச்சு சர்ட்டிஃபிக்கேஷன்ஸ் வாங்கிட் டோம். இப்ப, எங்க கண்டுபிடிப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் பணிகள்ல இறங்கியிருக்கோம். கிட்டத்தட்ட 20 மடங்கு குறைந்த விலையில செயற்கைக் கைகளை கொடுக்கணும்ங்குற என்னோட கனவு நனவாகப் போகுது.

2019-ல ரொம்ப சாதாரணமா ஆரம்பிச்ச இந்தப் பயணம் இன்னைக்கு ஆய்வுகளை முடிச்சு நடைமுறைக்கு வருது. இந்த ரெண்டு வருஷ ரிசர்ச் புராஜெக்ட் எங்களுக்குக் கொடுத்த அனுபவங் களும் பாடங்களும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. செயற்கை கை கால் பொருத்தும் தொழில்துறையில (prosthetic devices) இருக்கும் நெளிவுசுளிவுகளை நல்லா தெரிஞ்சிக்கிட்டோம். செயற்கை கை பொருத்துறது மட்டுமல்லாம மற்ற உடல் இயலாமை குறைபாடு இருக்குற வங்களுக்கும் தீர்வு கொடுக்குற துக்கான முயற்சியில இறங்கி யிருக்கோம். ‘சிம்பையானிக்’ன்னு ஒரு நிறுவனம் என்னால உருவாகும் என நான் கனவுலகூட நெனச்சுப் பார்த்ததில்லை... ஆனா, விடாம முயற்சி செஞ்சதுல அதெல்லாம் இன்னைக்கு உண்மையாயிருக்கு.

இந்த ரெண்டு வருஷத்துல கம்பெனியை உருவாக்குனது மட்டுமல்ல, ஒரு கையை வச்சு என்னால என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை விஷயங் களையும் செய்ய ஆரம்பிச்சேன். ஒரு கையோடவே அருமையா பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். ஒரு கை இல்லையேன்னு நான் இப்ப நினைக்கிறதில்லை. ஒரு கை இருக்கே. அதை வச்சு என்ன பண்ணலாம்னுதான் நான் யோசிக்கிறேன். எனக்கு ஒரு கை போனாலும், என் வாழ்க்கை எவ்ளோ அர்த்தம் நிறைஞ்சதா மாறியிருக்கு’’ என ரிஷி கிருஷ்ணா நம்பிக்கையுடன் பேசுவதைக் கேட்டதும், நம் இரண்டு கைகளையும் பார்த்து, நாம் என்ன செய்யப் போகிறோம் எனக் கேட்கத் தோன்றுகிறது!