Published:Updated:

`கார்ப்பரேட் கதவுகள் திருநங்கைகளுக்காகவும் திறக்கப்பட வேண்டும்!' - சம்யுக்தா விஜயன்

செ.கார்த்திகேயன்

`எல்.ஜி.பி.டி சமூக மக்களுக்கு உதவும் வகையில் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது’

சம்யுக்தா விஜயன்
சம்யுக்தா விஜயன்

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, முதன்முதலாக சம்யுக்தா விஜயன் என்கிற திருநங்கைக்கு, முதன்மைத் தொழில்நுட்ப திட்ட மேலாளர் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.

`எல்.ஜி.பி.டி சமூக மக்களுக்கு உதவும் வகையில் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியிருப்பதால், ஸ்விகி நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்’ என ஸ்விகி தெரிவித்துள்ளது.

சம்யுக்தா விஜயன்
சம்யுக்தா விஜயன்

சம்யுக்தா விஜயன், Toutestudio என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் திருநங்கைகளின் ஃபேஷன்டிசைன், மேக்-அப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் போன்ற திறமைகளை ஊக்குவித்துக்கொண்டிருப்பார். ஸ்விகி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர் பேசிய போது, "என் திறமையை மதித்து, ஸ்விகி நிறுவனம் கெளரவமான பதவியை எனக்கு வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு அங்கமாக இருந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றுவேன்.

என்னுடைய குடும்பம் என் உணர்வுகளை மதித்து, ஒத்துழைப்பு வழங்கியதால்தான் என்னால் படிப்பு மற்றும் இதர விஷயங்களில் கவனம் செலுத்தி முன்னேற முடிந்தது. அதனால்தான் மற்ற திருநங்கைகள் சந்திக்கும் கஷ்டங்கள், என்னுடைய துன்பங்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றன.
சம்யுக்தா விஜயன்

என்னைப் போலவே படிப்பில் தேர்ந்த பல திருநங்கைகள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கிறார்கள். மேலும், படிப்பறிவற்ற திருநங்கைகளும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, இன்டர்ன்ஷிப் அல்லது ஒரு பயிற்சித் திட்டத்தை ஒன்றிணைத்து சரியான திறன்களைப் பயிற்றுவித்து, பின்னர் அவர்களை வேண்டிய பணியில் சேர்த்துக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஸ்விகி நிறுவனத்தில் என்னுடைய குழு, நிச்சயமாகத் திறமை வாய்ந்த திருநங்கைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்" என்றார்.