Published:Updated:

தந்தூரி டீயால் திருச்சியைக் கலக்கும் இன்ஜீனியர்!

டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி ( என்.ஜி.மணிகண்டன் )

வித்தியாசமாக கொடுக்கப்படும் தந்தூரி டீயைப் பருக வாடிக்கையாளர்கள், திருச்சி, புத்தூர் நால்ரோடு அருகே உள்ள `அரேபியன் தந்தூர் சாய்' டீக்கடையில் குவிகிறார்கள்.

கரி அடுப்பு தனலில் போடப்பட்ட சின்னச் சின்ன மண்பானைக் குடுவைகள் கிடக்கின்றன. வாடிக்கையாளர்கள் கேட்டதும், சட்டென இடுக்கியில் மண் குடுவையை எடுத்து, ஏற்கெனவே போடப்பட்ட `தம் டீ'யை அதில் ஊற்ற பெங்கி வரும் டீயை, கரம் மசாலா நறுமணத்துடன் அப்படியே கோப்பையில் கொடுக்க வாடிக்கையாளர்கள் சந்தோஷமாக அருந்துகிறார்கள்.

டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
என்.ஜி.மணிகண்டன்

பலருக்கு பலநேரங்களில் தேனீர்தான் எல்லாம். அதைக் குடிக்காமல் தலை பிய்த்துக்கொள்ளும் சாமானியர்கள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமாக கொடுக்கப்படும் தந்தூரி டீயைப் பருக வாடிக்கையாளர்கள், திருச்சி, புத்தூர் நால்ரோடு அருகே உள்ள `அரேபியன் தந்தூர் சாய்' டீக்கடையில் குவிகிறார்கள்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு, இந்தக் கடையை நடத்திவரும் முகமது அஸ்லாமை சந்தித்தோம்.

`படிப்பை முடித்ததும், அண்ணன் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் அங்கு எனக்குத் தற்காலிகமாக வேலை கிடைத்தது. அந்த வேலை தற்காலிகம் என்றாலும் முழு ஈடுபாட்டோடு செய்தேன். அதில் கிடைத்த வருமானம் குடும்பச் செலவுக்குப் போதவில்லை. அதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்தேன். என்ன தொழில் செய்வது எனப் பலரிடம் ஆலோசனைக் கேட்டேன். பல விஷயங்களை யோசித்தோம். அப்படி முடிவு செய்ததுதான் இந்தத் தொழில்.

டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
என்.ஜி.மணிகண்டன்

வட இந்தியாவில் பரவலாக உள்ள தந்தூரி டீ குறித்து தெரிந்து, அதுகுறித்து தேடி கற்றுக்கொண்டேன். அப்பா டீ தூள் பிசினஸ் செய்து வந்தார். அது எனக்குக் கைகொடுத்தது. அது மட்டுமல்லாமல் இந்தத் தொழில் வட இந்தியா மட்டுமல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது. ஆனால், நம்ம பக்கம் யாருக்கும் அறிமுகம் இல்ல. முயற்சி பண்ணலாம்னு நம்பினேன். அப்போது எங்க வீட்டில் இருப்பவர்களே இன்ஜினீயரிங் படிச்சிட்டு டீக்கடை வைக்கப் போறியானு கேட்டாங்க. முதலில் பயந்தாங்க. நான் வேலை செய்த இடத்திலும் கலாய்த்தார்கள். நாம நல்ல முடிவு எடுத்துள்ளோம் என உறுதியாக இருந்தேன்.

அதன்படி இறுதியாக ஏப்ரல் முதல் வாரம் இந்தக் கடையை ஆரம்பித்தேன். ஒரு டீ விலை 10 ரூபாய் என நிர்ணயித்தேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூணு மாதத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சிருக்காங்க. இந்த டீயில் நாங்களே தயாரிக்கும் கரம் மசாலா உள்ளிட்டவை சேர்ப்பதால் டீயின் சுவை புதுவிதமா இருக்கு. அதுவே எல்லோருக்கும் புடிச்சுப் போச்சு. தினம் தினம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகிட்டே போகுது. சிலர் வந்து எங்களின் டீயைக் குடித்துவிட்டு, எப்படி தயாரிக்கிறீங்க? எங்களுக்கும் இதே மாதிரி ரெடி பண்ணி தர்றீங்களானு கேக்குறாங்க.

டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி
என்.ஜி.மணிகண்டன்

நாங்கள் பயன்படுத்தும் மண் குவளைகளையும் 2,3 நாளைக்குத் தான் பயன்படுத்தலாம் . அதனால, இதே மாதிரியான கடைகள் நிறைய ஆரம்பிச்சா பானை செய்றவங்களுக்கும் தொழில் வளரும். நலிந்து போய்ட்டு இருக்குற அந்தத் தொழிலையும் அதை நம்பி இருக்குபவர்களுக்கும் இது நம்பிக்கை தரும்.

நாங்கள் `தந்தூர் சாய் ' , `தந்தூர் காபி ' மட்டுமின்றி கேரளாவில் அதிகம் விற்கும் ஆரஞ்ச், மேங்கோ, பைனாப்பில், இன்னும் சில ப்ளேவர்களில் தயாரிக்கப்படும் `குலுக்கி' சர்பத் விற்கிறோம். இதில் பச்சைமிளகாயைக் கீறி சர்பத்தில் போட்டுத் தருவதால் இனிப்பு , காரம் என இரட்டைச் சுவை இருக்கும். இதேபோல் குலுக்கி பூஸ்ட், தட்டு வடை , குவளை குல்பி உள்ளிட்டவையும் எங்களிடம் உள்ளது.

படிச்சிட்டு வேலை தேடித் திரியும் இளைஞர்களுக்கு மத்தியில் சுயமாக தொழில் தொடங்கி, இன்னும் சிலருக்கும் சேர்த்து வேலை தரும் அஸ்லாம் நம்பிக்கை பாராட்டுக்குரியது.

இப்போது எங்கள் கடையில் பொறியியல் படிக்கும் சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். நான் இப்போது நிறைய பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளேன். தொழிலில் என்னைக் கலாய்த்தவர்களைவிட நல்லா சம்பாதிக்கிறேன். இன்ஜினீயரிங் படிச்சுட்டு சும்மா இருக்கோமேன்னு கவலப்பட்டு உக்காராதீங்க, புதுமையா யோசிச்சு கடினமா உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம்.  வேலை கிடைக்காமல் இருக்கிற இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவும் ஆசைப்படுறேன்" என உற்சாகமாகச் சொல்கிறார் அஸ்லாம்.

அடுத்த கட்டுரைக்கு