Published:Updated:

அன்று 20 பேர்... இன்று ஒரே ஆள்! நலிவடையும் உள்ளூர் சோடா தொழில்

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களால், உள்ளூரில் தயாரிக்கப்படும் சோடா தொழில் நலிவடைந்து வருவது பற்றிய கட்டுரை.

கோலி சோடா
கோலி சோடா ( ஆர்.எம்.முத்துராஜ் )

நாம் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றாலும் சரி.... வெளியூரில் இருந்து நம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் சரி, வீட்டுக்குள் நுழைந்தவுடன் யாராவது கடைக்குச் சென்று சோடா வாங்கிவந்து கொடுப்பார்கள். அதுபோல், உடலில் ஏதேனும் அஜீரண கோளாறு இருந்தாலும் உடனடியாக சோடாதான் வாங்கிக் குடிப்பார்கள். இப்படியான சோடாக்கள், பெரும்பாலும் உள்ளூரிலோ அல்லது பக்கத்து ஊர்களிலோ தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில்...

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களால், உள்ளூரில் தயாரிக்கப்படும் சோடா தொழில் நலிவடைந்து வருகிறது என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் குளிர்பானங்கள் நம் ஊரில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதால், அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு வெளிநாடுகளுக்கே செல்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்கிக் குடித்தவுடனேயே பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி எறிந்துவிடுகிறோம். இதனால் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்கிச் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் கோலி சோடாக்களால் அந்த வருமானம் உள்நாட்டு வளர்ச்சிக்கே உதவும். உள்ளூர் நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கண்ணாடி பாட்டில்களை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் நம்மால் முடிந்தளவு தடுக்கலாம்.

இதுகுறித்து சோடா உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்த சண்முகம், “எங்க அப்பா சுப்பிரமணியன் 40 ஆண்டுகளுக்கும் மேலா சோடா உற்பத்தி செஞ்சுவந்தார். எங்க ஊருல மட்டும் மூணு சோடா கம்பெனிங்க இருந்தன. இதன்மூலம் 20 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைச்சது. சோடாவால, எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது. வியாபாரமும் நன்றாக இருந்துச்சு. ஆனா, கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகை அதிகரித்திருக்கு. இதனால மக்கள் மத்தியில சோடாவுக்கான வரவேற்பு குறைஞ்சுபோச்சு. ஒரு கோலிசோடா 6 ரூபாதான். ஆனா, இதை வாங்க மறுக்கும் பொதுமக்கள் 10 ரூபாகூடக் கொடுத்து பன்னாட்டுக் குளிர்பானங்களை வாங்கிக் குடிக்கிறாங்க. இதனால எங்கள் ஊருல இருந்த ரெண்டு கம்பெனிகள மூடிட்டாங்க. அங்கே வேலை செஞ்சவங்க எல்லாரும் வேற வேலைக்குப் போய்ட்டாங்க.

சோடா உற்பத்தி
சோடா உற்பத்தி
ஆர்.எம்.முத்துராஜ்

எங்க கம்பெனியில ஏழு பேரு வேலை செஞ்சாங்க. தற்போது நான் மட்டும்தான் வேலை செய்றேன். புதிய சோடா பாட்டிலை 80 ரூபாய்க்கு விற்கிறாங்க. அதுவும் ஒண்ணுரெண்டு பாட்டில்களை எல்லாம் தனியாக வாங்க முடியாது. மொத்தமா, ஒரு மூட்டையாத்தான் வாங்கணும். ஒரு மூட்டை 9,500 ரூபாய். இவ்வளவு பணம்கொடுத்து எப்படி வாங்க முடியும்? அதனால, புதுசா பாட்டிலும் வாங்க முடியலை. முன்பு வாங்கிய பாட்டில்களை மட்டுமே பயன்படுத்துறோம்.

நெடுங்குளம், கொடிக்குளம், கூமாபட்டி ஆகிய ஊர்களில் உள்ள கடைகளுக்கு மட்டுமே சோடா விற்பனை செய்றேன். ஒருநாளைக்கு 100 பாட்டில்கள்கூட விற்பனையாவதில்லை. 250 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அப்பாதான் முதல்ல எங்க ஊருல சோடா தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். அதனால, அதை அழியாமல் காப்பாத்தணும் என்பதற்காகவே தொடர்ந்து நடத்துறேன்” எனத் தெரிவித்தார்.

உற்பத்தி
உற்பத்தி
ஆர்.எம்.முத்துராஜ்

கடை வைத்திருக்கும் முகமது தாகா கூறும்போது, “முன்பு, ஏதேனும் வயிற்றுப் பிரச்னை இருந்தால் பொதுமக்கள் சோடாவைத்தான் தேடி வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. வெளிநாட்டுக் குளிர்பானங்களையே அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று கோலி சோடா விற்பனையாவதே கஷ்டம்தான். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் சர்பத் குடிப்பவர்கள் சோடா சர்பத்தையும் விரும்புகின்றனர். இதனால் வெயில் காலத்தில் மட்டும் ஒருநாளைக்கு 25 கோலி சோடா வரை விற்பனையாகிறது.

ஆனால், எல்லா நாட்களும் இப்படியே இருப்பதில்லை. மக்கள் கோலி சோடாவை விரும்பினால் நிச்சயம் இந்தத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெறும்” எனத் தெரிவித்தார்.

முகமது தாகா
முகமது தாகா

வெறுமனே பழைமையை பாதுகாப்போம் என்பதாக மட்டும் பார்க்காமல் உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காகவும் கோலி சோடா தொழிலை அழியாமல் பாதுகாப்போம்.