Published:Updated:

இயற்கை உணவு... உடற்பயிற்சி... நடிகர் வேல ராமமூர்த்தியின் ஃபிட்னஸ் சீக்ரெட்..!

வேல ராமமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
வேல ராமமூர்த்தி

ஹெல்த் இஸ் வெல்த்

''இந்த உலகத்துல வானத்துக்கும் பூமிக்கும் கீழே உள்ள எல்லாவற்றையும்விட நமக்கு ஆரோக்கியம் முக்கியம். அதுக்கு அப்புறம்தான் இந்த எழுத்து, நடிப்பு, பேர், புகழ்... எல்லாமே! உடல் ஆரோக்கியம் இருந்தாதான், மற்ற விஷயங்கள்லாம் நடக்கும்’’ - உறுதியுடன் பேசுகிறார் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி.

கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படை யான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்றவர் வேல ராமமூர்த்தி. சினிமாக்களில் இவரைப் பார்த்ததும், `இவரோட ஃபிட்னஸ் ரகசியம் என்னவாக இருக்கும்?’ என்று சிந்திக்காதவர்கள் குறைவு. தன் நாவல் ஒன்றை திரைப்படம் ஆக்குவது குறித்த பணிகளில் இருந்தவரை `ஹெல்த் இஸ் வெல்த்’ பகுதிக்காக தொடர்பு கொண்டபோது, குறையாத உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

``சின்ன வயசுல நாம சாப்பிடுற உணவும், வளர்ற சூழலும்தான் நம் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம். அந்த வகையில, பார்த்தா நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ராமநாதபுரம் மாவட்டத்துல உள்ள பெருநாழி கிராமம்தான் என் சொந்த ஊர். எங்க ஊர்ல இருந்து எட்டு மைல் தொலைவுல கடல். எங்களுடையது பெரிய, வசதியான குடும்பம். எங்க அய்யா வேலுச்சாமி தேவர்தான் ஊர் பிரசிடென்ட். சாப்பாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். ஆகையால, நல்ல உணவுகளைத் தேடுற ஆர்வம் என் ரத்தத்துலயே இருந்துச்சு.

தினமும் சாயங்காலம் கடல்ல இருந்து பெட்டி பெட்டியா மீன்கள் வந்திறங்கும். வெள்ளை வாவல், சீலா, சூடன்னு வகை வகையான மீன்கள் இருக்கும். பெருநாழியில ரெண்டு, மூணு மீன் கடைதான். அதுல குறிப்பா, பச்சமுத்து நாடார்னு ஒருத்தர் மீன் கடை போட்ருப்பார். மீன் பெட்டி வந்ததுமே உயர்ந்த ரக மீன்களை எங்க வீட்டுக்குன்னு தூக்கி வெச்சிருவார்.

வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி

சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் டியூஷனுக்குப் போவேன். ஆறேழு மணி வாக்குலதான் டியூஷன் முடியும். அப்ப மின்சாரம் எல்லாம் கிடையாது. தெருவுக்குத் தெரு கல்தூண் விளக்குகள்தான். பயங்கரமான பசியில இருட்டுல விழுந்து வீட்டுக்கு ஓடியாருவேன். எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் பெரிய அலமாரி இருக்கும். அலமாரி கதவைத் திறந்தோம்னா மீன் குழம்பு வாசம் வரும் பாருங்க… அதை இப்போ நினைச்சாலும் வாயூறுது. எங்கம்மா வைக்கிற மீன் குழம்பு அப்படியே தகதகன்னு இருக்கும். மீனைப் பொரிச்சு வெச்சிருக்கும். பொரிச்ச சட்டியில கிரேவி ஒட்டியிருக்கும்ல... அந்த கிரேவியை சோத்துல பிசைஞ்சு தின்னா, அந்த டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

அதேபோல, பிச்சை நாடார்னு ஒருத்தர் கறிக்கடை வெச்சிருப்பார். கறி வெட்ட ஆரம்பிக்கும்போதே எங்க வீட்டுக்குன்னு தனியா எடுத்து வெச்சிருவார். இப்படி தினமும் கறியும் மீனுமா தின்னு வளர்ந்தவன் நான். திங்கள் கிழமை எங்கம்மா விரதம் இருக்கும். அன்னைக்கு ஒருநாள் தான் எங்க வீட்ல சாம்பார். மற்ற நாள்கள்லாம் அசைவம் மட்டும்தான்.

அதுமட்டுமல்ல, அப்ப நாங்க சாப்பிட்டதெல்லாம் நஞ்சில்லாத உணவு. 60-களுக்குப் பின்னாலதான் ரசாயன உரம்லாம் வந்துச்சு. அதுக்கு முன்னாலயெல்லாம் மாட்டுச் சாணமும் ஆட்டுச் சாணமும்தான் உரம். நாட்டுப் பருத்தி, நாட்டுக் கம்பு, உளுந்தங்காயி, தட்டங்காயின்னு தின்னு வளர்ந்தோம். மஞ்சணத்தி மரத்துக் காயைப் பிடுங்கி மண்ணைத் தோண்டி புதைச்சு வெச்சுருவோம். ரெண்டாவது நாள் போய்ப் பார்த்தா, கன்னங் கரேர்னு பழுத்திருக்கும். அதை எடுத்து சாப்பிட்டாஅவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். வேப்பம் பழம், புளியம்பழம்னு எதையும் நாங்க விட்டதில்லை. இப்படி காட்டு உணவுகளா சாப்பிட்டதுல கிடைச்ச சத்துக்கு ஈடு எதுவும் இல்லை.

இயற்கையான, சத்தான உணவு மட்டுமல்ல, கிராமத்துல ஊரு ஊருக்கு கம்மாய், ஊரணி இருக்கும். அதுலதான் நாங்க குளிப்போம். குளியல்ன்னா சும்மா இல்லை. ஊரணியில இறங்கியாச்சுனா, ரெண்டு மணி நேரத்துக்கு வெளியில வரவே மாட்டோம். முங்கு நீச்சல்ல ஆரம்பிச்சு அத்தனை நீச்சலையும் அடிப்போம். விவசாயக் காடுகள்ல கிணறு இருக்கும். `ஓடிப்போய் எவன் முதல்ல கிணத்துல குதிக் கிறானோ, அவன்தான் வீரன்’னு சொல்லி ஒரு விளையாட்டு. திடுதிடுன்னு ஓடிப்போய் குதிப்போம்.

அந்த வயசுல நாங்க கபடி, கிரிக்கெட்னு எந்த விளையாட் டையும் விட்டு வைக்கலை. ஊர்ல நாங்க ஏறாத மரம் கிடையாது. காக்கா, குஞ்சுன்னு ஒரு விளையாட்டு. மரத்துல ஏறி கொம்புக்கு போய் ஒடிஞ்சு விழுவோம்… பால்யத்தில் கிடைச்ச இப்படியான கிராமத்து வாழ்க்கைதான் என்னோட உடல்வாகுக்கும் ஆரோக்கியத் துக்கும் முக்கியமான காரணம்” என்று சிலாகித்தவர் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

``நான் 16 வயசுலேயே மிலிட்ரிக்குப் போயிட்டேன். ஆறு மாசம் மத்தியப்பிரதேசம் ஜபல்பூர்ல ராணுவப் பயிற்சி. இங்கிருக்கிற போலீஸ் டிரெய்னிங்கைவிட அந்தப் பயிற்சி 100 மடங்கு கடினமா இருக்கும். பலபேர் தாங்க முடியாம ஓடிருவாங்க. அப்படியான கடினமானப் பயிற்சியை நான் ரொம்ப சந்தோஷமா எடுத்தேன். அங்கே உள்ள உணவுகளையும் கேட்கவே வேண்டியதில்லை. சட்டிச் சட்டியா, அண்டா அண்டாவா கறிகள் இருக்கும். ஒரே நேரத்துல நான் 32 சப்பாத்தியெல்லாம் சாப்பிட்ருக்கேன். நிறைய சாப்பிட்டோம்னா, அந்தளவுக்கு கடுமையான பயிற்சியும் இருக்கும். ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர் ஓடுவோம். வாரம் ஒருமுறை ரூட் மார்ச்னு சொல்லிட்டு காடு மலைன்னு 40, 50 கிலோ மீட்டர் எங்களுடைய முழு `கிட்’டோட ஓடுவோம். சாயங்காலம் கிளம்பினா, ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் தொடரும் அந்த ஓட்டம்.

இயற்கை உணவு... உடற்பயிற்சி... 
நடிகர் வேல ராமமூர்த்தியின் ஃபிட்னஸ் சீக்ரெட்..!

சொன்னா நம்புவீங்களான்னு தெரியலை. மிலிட்டரிக்கு செலக்ட் ஆகிப் போகும்போது, 5 அடி 4 அங்குலம் இருந்த நான், ஆறு மாச காலப் பயிற்சி முடிச்சுட்டு வரும்போது 6 அடி உயரத்துல வந்தேன். காரணம், சத்தான உணவும், சிறப்பான பயிற்சியும்தான். அஞ்சு வருஷத்துக்குப் பிறகு, நான் ராணுவத்தை விட்டு வந்துட்டேன். ஆனாலும், நான் ராணுவக் கட்டுப்பாடுகளைக் கைவிடலை. வார்ம்-அப் பண்றது, வாக்கிங் போறதுன்னு கரெக்ட்டா இருப்பேன். வெளியூருக்கு ஷூட்டிங் போனா அதையெல்லாம் செய்ய மாட்டேன். மதுரையில இருந்தா மட்டும்தான்.

பல பேருக்கு ரெகுலரா உடற்பயிற்சி செய்ய லைன்னா, செட் ஆகாது. ஆனா எனக்கு அப்படி இல்லை. நாலு நாள் பயிற்சி செஞ்சாலும் திரும்பி வர்ற வரைக்கும் தாங்கும். அவனவன் உடம்புக்கு அவன்தான் மருத்துவன். நொறுக்குத் தீனி திங்கற சோலியே நமக்குக் கிடையாது. நாட்டுக் காய்கறிகளைத் தேடிச் தேடி சாப்பிடுவேன். இப்ப, அசைவம் வாரத்துல மூணு நாளா குறைஞ்சுருக்கு. மற்ற நாள்கள்ல கொண்டக்கடலைக் குழம்பு, வாரம் ஒருமுறை வெள்ளைப்பூண்டு குழம்பு, கீரைன்னு நாங்க உணவுக்குக் கொடுக்குற முக்கியத்துவம் ரொம்ப பெருசு.

இதுவரைக்கும் நான் ஆஸ்பத்திரிக்கே போன தில்லை. காய்ச்சல் வந்ததுன்னா, நாட்டுக் கோழி சாறு வெச்சு குடிப்பேன். காய்ச்சலாவது, கழுதையாவது தெறிச்சு ஓடிரும். வயித்த வலிச்சா கழுத்து முட்ட தண்ணி குடிச்சுப்பேன். பிளாடர்ல நல்லா தண்ணி ஏத்திட்டா வயித்துவலியெல்லாம் போயிரும். எனக்கு நான்தான் மருத்துவன்! `வைத்தியன்கிட்ட கொடுக் கிறதை வாணிபன்கிட்ட கொடு’ன்னு அந்தக் காலத்துல ஒரு பழமொழி சொல்வாங்க. நல்ல உணவுக்காக நீங்க இப்ப செலவு பண்ணீங்கன்னா, பின்னால மருத்துவத்துக்குச் செலவு பண்ணத் தேவை இருக்காது.

உணவு, உடற்பயிற்சி எல்லாத்தையும் விட மனசை வெள்ளையா வெச்சுக் கிரணும். கவலைகளை சுமந்துகிட்டு பெரிய திட்டங்களைப் போட்டுக்கிட்டு அந்தக் கணக்கு, இந்தக் கணக்குன்னு பார்த்துகிட்டிருந்தா, நோய் வந்திரும். `நாம சாகுறவரைக்கும் வாழப்போறோம். வாழுறவரை சந்தோஷமா வாழ்ந்துட்டு போவோம்!” என்று நெகிழ்வுடன் பேசி முடித்தார் வேல ராமமூர்த்தி.