தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிலாளர்கள் தாமே முன்வந்து தமது பணியை ராஜினாமா செய்யும் விகிதம் 49% என்ற அளவுக்கு அதிகரிக்கும் என்று நாக்ரி வலைதளத்தின் சர்வே தெரிவிக்கிறது. இது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவு ஆகும்.
கொரோனா பாதிப்புக்குப் பிறகு, பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். நோய்த்தொற்று விகிதம் குறைந்து இயல்பு நிலை திரும்பினாலும் ஐ.டி தொழிலாளர்கள் அலுவலகம் திரும்புவது இன்றும் பெரும்பாலான நிறுவனங்களில் நடக்கவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எல்.கே.ஜி வகுப்புகள்கூட தற்போது நேரடியாகப் பள்ளிகளில் நடக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்து பழக்கப்பட்ட ஐ.டி தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி மீண்டும் அலுவலகத்துக்கு வரவழைப்பது தற்போது பெரும்பாலான ஐ.டி நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் அதிகபட்ச பணி ராஜினாமாக்களே காரணமாகும்.
கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்தபோது ஐ.டி நிறுவனங்கள் தன் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்த ஐ.டி ஊழியர்கள் தன் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று வேலை பார்க்கத் தொடங்கினர். இணையதளம் வளர்ந்துவிட்ட தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டிலுள்ள குக்கிராமங்களில் இருந்துகூட சிரமம் இல்லாமல் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசென்னை போன்ற பெருநகரங்களில் பேச்சிலர் வாழ்க்கை வாழ பழக்கப்பட்ட ஐ.டி ஊழியர்கள் தன் சொந்த ஊரில் தன் குடும்பத்தினருடன் வசிக்கும் வாய்ப்பை இந்த ஊரடங்கு ஏற்படுத்ந்த் தந்தது.
தற்போது பல சிறிய நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அலுவலகத்துக்கான வாடகை, மின்சார கட்டணம், தண்ணீர் செலவு போன்ற பல செலவுகள் மிச்சமாகி லாப விகிதம் அதிகரித்துள்ளது.

அதனால், சிறிய நிறுவனங்கள் இந்த நடைமுறைக்கு தம்மை மாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்த நோய்த்தொற்று பல துறைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினாலும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு ஐ,டி துறை பங்குகள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 முதல் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதை வைத்து இதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன் காரணமாகத் தகுதிவாய்ந்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பெரிய நிறுவனங்களும் தமது ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி மீண்டும் அலுவலகத்துக்கு அழைப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வாறு கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள். அதன் காரணமாகப் பணிகளில் தொய்வு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே ஊழியர்களைப் பெருநிறுவனங்கள் கட்டாயப் படுத்துவதில்லை.
நிரந்தரமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. டிஜிட்டல் புரட்சி என்று நாம் கூறிக் கொண்டாலும் இன்னும் பல இடங்களில் இணையதள வசதி
சிறப்பாக இல்லை. மேலும் ஐ.டி துறையில் குழுவாக வேலை செய்யும் சூழ்நிலை உள்ளது. தொழிலாளர்கள் பல இடங்களில் இருப்பது காரணமாக அவர்களை ஒருங்கிணைப்பதில் பல சிரமங்களை மேற்கொள்ளும் நிலை உள்ளது.

மேலும் ஊழியர்கள் அனைவரும் சரியாக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கும் பணியும் கடினமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட தற்போதைய சூழ்நிலையில் இதை மேலும் கால தாமதப்படுத்தினால் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று பெரிய ஐ.டி நிறுவனங்கள்
அச்சம் அடைந்துள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி ஐ.டி ஊழியர்கள் விரைவாக மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் உள்ள சூழ்நிலை காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்தால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை ஐ.டி நிறுவனங்கள் அடைய முடியும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பெரிய ஐ.டி நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வாரத்துக்கு குறிப்பிட்ட நாள்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறத் தொடங்கியுள்ளன. என்றாலும், தற்போது வரை பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயப் படுத்துவது இல்லை. ஊழியர்கள் விருப்பப்பட்டால் மட்டும் அந்தக் குறிப்பிட்ட நாள்களில் அலுவலகத்திலிருந்து வேலை செய்யலாம் என்று தற்போது நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்புக்குப் பிறகு, எத்தனை ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வார்கள் என்று வரும் காலங்களில்தான் அறிந்துகொள்ள முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ராஜினாமா செய்ய வைப்பதாகப் புகார்கள் எழுந்தன. தற்போது அந்த சூழ்நிலை அடியோடு மாறியுள்ளது. ஐ.டி ஊழியர்களும் அதிக ஊதியம் கிடைத்தால் வேறு நிறுவனங்களுக்கு மாறிச் சென்று விடுகின்றனர். அவர்களைத் தக்க வைப்பதற்குத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது அதிக ஊதிய உயர்வு, போனஸ் போன்ற சலுகைகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அட்ரிஷின் அளவு சற்று குறைய வாய்ப்புள்ளது.
மேலும் நாக்ரி ஆய்வு முடிவுகளில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் புதிய ஊழியர்களைப் பணியமர்த்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. கல்லூரிகளிலிருந்து நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கப் படாதது பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதிக அளவு வசிக்கும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் பல வீடுகள் காலியாக இருப்பதன் மூலம் இதை உணர முடியும்.
அந்தப் பகுதிகளில் வியாபாரம் செய்யும் பலர் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகவல்தொழில்நுட்ப ஊழியர்களின் வருகைக்கு வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஆனால், பழைய நிலை முழுவதும் திரும்புவதற்கு வாய்ப்பு குறைவே ஆகும். காலச்சக்கரத்தின் மாற்றத்துக்கு ஏற்ப தொழில்கள் மாறுவது இயல்பு. வீட்டிலிருந்தபடியே வேலை என்பது ஐ.டி துறையின் இயல்பாக மாறிவிட்டது. தற்போதைய நிலவரப்படி 60 முதல் 70 சதவிகித ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதற்கு வாய்ப்புள்ளது.

ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு கூடுவதும் குறைவதும் சுழற்சிமுறையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2000-ம் ஆண்டு, 2007-ம் ஆண்டு, 2017-ம் ஆண்டு ஆகியவை சோதனையான ஆண்டுகளாகும். உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை வாய்ப்புகள் இந்த ஆண்டுகளில் குறைந்தன.
பல தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போதைய தேவை அதிகரிப்பு என்பது அந்தச் சக்கரத்தின் மறுமுனை ஆகும். தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு ஏற்றத்தை வழங்கும்.