மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டிக் கடை to நகைக் கடை... நான்காம் தலைமுறையில் ஜொலிக்கும் சலானி! - 5

ஶ்ரீபால் சலானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபால் சலானி

வெற்றித் தலைமுறை - 5

நம்முடைய பொருள் தனித்துவமாக இருந்தால் போதும், பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யாமல் நமக்கான வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர்கள் ‘சலானி’ நிறுவனத்தினர். வட்டிக் கடையில் தொடங்கிய அவர்களின் பயணம், வெள்ளி நகைகள் உருவாக்குவதில் பரிணாமம் அடைந்து, இன்று நான்காம் தலைமுறையில் தங்க நகை வியாபாரம் செய்யும் நிறுவனமாகத் தடம் பதித்துள்ளது.

1920-ம் ஆண்டு ரத்தன் சந்த் என்ற தனிநபர் தன் சொந்த மாநிலத்தை விட்டு தொழிலுக்காகப் புலம்பெயர்ந்து, அவர் எடுத்த முயற்சியே இந்த நிறுவனத்தின் ஆரம்பம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்தன் சந்த் சலானி. அவரின் உறவுக்காரர்கள் தமிழ்நாட்டின் தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வசிக்க, அவர்களுடன் தன்னுடைய 6 வயதில் ராஜஸ்தானிலிருந்து மதுராந்தகத்துக்குப் புலம் பெயர்ந்தார். பதின்ம வயது வரை கூலி வேலை செய்தவர், அதன்பின் தன் அனுபவத்தில் சிறிய வட்டிக்கடை ஒன்றைத் தொடங்கினார். அந்த வட்டிக் கடை, ரத்தன் சந்த் மகன் ஜவரி லாலால் நகைகளை வாங்கி விற்கும் விற்பனை மையம் ஆகவும், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் நிறுவனமாகவும் மதுராந்தகத்தில் உருவானது.

நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையான ஜெயந்திலால் சலானி, பல போராட்டங்களுக்குப் பின் 1980-களில் தங்களுடைய கிளையை சென்னையில் தொடங்கினார். அதுவரை சிறிய கடையாக இருந்த சலானி ஜுவல்லரி, நிறுவனமாக உருவாகியது. இன்று நான்காம் தலைமுறையைக் கண்டுள்ள சலானி நிறுவனத்தின் வெற்றிக்கதையை பகிர்கிறார் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் ஶ்ரீபால் சலானி.

ஶ்ரீபால் சலானி
ஶ்ரீபால் சலானி

“எங்கள் குடும்பம் தமிழகத்துக்கு வந்து 100 வருடங்கள் ஆகிறது. இந்த நூறு வருடத்தில் எங்களுடைய தலைமுறை மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிசினஸில் கற்றுக்கொள்ளுதல் மிக முக்கியமான ஒன்று. அதை எங்களுடைய கொள்ளுத் தாத்தா எங்களுக்குப் பாடமாகப் புகட்டியுள்ளார். அவர் ஒரு கூலித் தொழிலாளி. அவர் நினைத்திருந்தால் அடுத்தடுத்து கூடுதல் சம்பளம் வாங்கி கூலியாகவே இருந்திருக்க முடியும். ஆனால், கற்றுக்கொள்வதை வளர்ச்சியாகப் பார்த்தார். கூலியாக இருந்தாலும் ஒரு கடையை நிர்வாகம் செய்வது எப்படி, வாடிக்கையாளர்களை எப்படி தக்க வைக்க முடியும் என்பதையெல்லாம் கற்றுக் கொண்டு சொந்தமாக ஒரு வட்டிக் கடையைத் தொடங்கினார்.

அடுத்த தலைமுறையினர் அதை வெள்ளிப் பொருள் தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார்கள். பல்வேறு நகைக் கடைகளுக்கு நாங்கள் வெள்ளி நகைகள் தயாரித்துக் கொடுத்து வந்தோம். வாடிக்கையாளர்களிடம் தாத்தா பேசுவது, அவர் களின் மனம் கோணாமல் லாபம் பார்க்கும் டெக்னிக்குகளை எல்லாம் நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்போதே நானும் பிசினஸ் செய்ய வேண்டும் என்பது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

தாத்தா காலத்தில் சிறிய கடையாக இருந்ததை அடுத்தடுத்த தளத்துக்கு நகர்த்தினார் என் தந்தை ஜெயந்திலால் சலானி. எங்கள் அப்பாதான் பிசினஸ் என்றால் என்ன என்பதை எங்களுக்குப் பதிய வைத்தார்.

1980-களில் சென்னையில் எங்களுடைய முதல் கடையைத் திறக்கும்போது அவர் நிறைய சவால்களை எதிர்கொண்டார். ஆனால், அதை எல்லாம் அப்பா கையாண்ட விதம் நுணுக்க மானது. அப்பா சென்னையில் நகைக் கடை தொடங்கியபோது நானும் என் சகோதரர்களும் படித்துக்கொண்டிருந்தோம். அப்போதே கடைக்கு வருவது, கணக்கு வழக்குகள் பார்ப்பது, மார்க்கெட் பற்றி பேசுவது இதெல்லாம் இயல்பாக நடக்கத் தொடங்கியது.

அண்ணன்கள் கல்லூரி முடித்து பிசினஸுக்குள் என்ட்ரி ஆனார்கள். நான் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, பிசினஸ் செய்யப்போறேன்னு உள்ளே வந்தேன். அப்பா வலுக்கட்டாய மாகக் கல்லூரி அனுப்பினார். பி.பி.ஏ முடித்து நகைத் தயாரிப்பு பற்றிய படிப்புகளையும் படித்து சில ஆண்டுகள் வெளி நிறுவனங் களில் பணி செய்தேன். அந்த அனுபவங்களோட எங்கள் பிசினஸுக்குள் என்ட்ரி கொடுத்தேன்.

ஒரு பிசினஸில் மாற்றம் என்பது அவசியமான ஒன்று. எங்களுடைய பிசினஸ் எல்லாத் தலைமுறையிலும் மாற்றம் கண்டுள்ளது. இப்போது நான்காம் தலைமுறையினர் நிர்வாகம் செய்கிறோம். நாங்கள் பிசினஸுக்குள் வந்தபோது 2013-ம் ஆண்டு தங்க நகை வியாபாரத்தைத் தொடங்கினார் அப்பா. அது எங்கள் நிறுவனத்தின் அடுத்த மைல் ஸ்டோன்’’ என்ற ஶ்ரீபால் நான்காம் தலைமுறையினர் பிசினஸில் செய்த மாற்றம் பற்றி பேசத் தொடங்கினார்.

தன் சகோதரர்கள் மற்றும் அப்பாவுடன் ஶ்ரீபால் சலானி
தன் சகோதரர்கள் மற்றும் அப்பாவுடன் ஶ்ரீபால் சலானி

“சகோதரர்கள் நாங்கள் மூன்று பேர். மூத்த அண்ணன் ரிஷப், நகைகள் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார். இரண்டாவது அண்ணன் கௌதமும் நானும் நிர்வாக வேலைகள் மற்றும் பேக் என்ட் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறோம். நிர்வாகத்தில் எது நடந்தாலும் மூன்று பேரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து அதை அப்பாவிடம் சொல்லி அதன்பின் தான் நடைமுறைப்படுத்துவோம். அதனால் பிசினஸில் பெரிய அளவில் சறுக்கல்கள் இல்லை.

‘தொழில் செய்தால் அதில் ஏதாவது புதுமை செய்யணும்’ என அப்பா அடிக்கடி சொல்லுவாங்க.நாங்கள் சென்னையில் தங்க நகை வியாபாரம் தொடங்கும்போது இங்கு ஆயிரக்கணக்கான நகைக் கடைகள் இருந்தன. போட்டியாளர் களில் சின்ன நிறுவனம், பெரிய நிறுவனம் என்பதெல்லாம் கிடை யாது. மேலும், தாத்தா, அப்பா காலத்தில் இல்லாத அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தியும், டிசைன் தேர்வுகளும் அதிகமாகின. எனவே, தனித்துவம் என்பதை நாங்கள் கையில் எடுத்தோம்.

சிறிய பொருளோ, பெரிய பொருளோ அது தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நாங்கள் குறிக்கோளாக எடுத்துக்கொண்டோம். தனித்துவ மான நகைகள் தயாரிப்பில் கவனம் செலுத்தினோம். கோயில் சிற்பங் களில் இருந்து டிசைன்களைத் தேர்வு செய்வது, அதை நகையாக உருவாக்குவது, பாரம்பர்யமான விஷயங்களை நகைகளாக மாற்று வது எனப் புதுப்புது முயற்சிகள் எடுத்தோம்.

நாங்கள் நினைத்தது மாதிரியே எங்களுடைய டிசைன் மக்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. நாங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்யாமலே வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வர ஆரம்பித்தார் கள். இப்போது எங்களுக்கு இருக்கும் 90% வாடிக்கை யாளர்கள் வாய்வழி விளம்பரம் மூலம் வந்தவர்கள்தான். இப்போதும் சேனல்களில் விளம்பரம் செய்வதைவிட, வாய்வழி விளம்பரத்தைப் பெரிதாக நினைக்கிறோம்.

இன்றைக்கு வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது மிகப் பெரிய டாஸ்க். அதற்காக நாங்கள் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற ஒன்றை எங்கள் தலைமுறையில் அறிமுகம் செய் தோம். வரும் வாடிக்கையாளர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, கடையின் உரிமையாளர்களான நாங்களே உபசரிக்கிறோம். மேலும், நிறைகுறைகளைக் கேட்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஸ்டாக்கு களைத் தேர்வு செய்கிறோம்.

பிசினஸில் ஜெயிக்க ஹோம் வொர்க் அவசியம். அதை நாங்கள் மூன்று பேரும் நம்புகிறோம், கடைப்பிடிக்கிறோம். மார்க்கெட்டில் என்ன அப்டேட் இருக்கிறது, நம்மிடம் இருக்கும் ஸ்டாக்குகள் என்ன, இந்த மாதம் எவ்வளவு சேல்ஸ் செய்யப்போகிறோம், டார்கெட் என்ன என்பதை எல்லாம் நாங்கள் திட்டமாக வகுத்திருக்கிறோம்.

சென்னையில் 1980-ல் கடை தொடங்கியபோது மூன்று பணியாளர்கள்தான் இருந்தார்கள் இப்போது 250-க்கும் மேல் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் எங்களின் பலம். ‘வாடிக்கையாளர்களை நாம் எப்படி கவனித்துக்கொள்கிறோமோ, அதே போன்று நம் பணி யாளர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்பது அப்பாவிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்.

அதற்கு ஓர் உதாரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டு பணியாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா சொன்னார். நிர்வாகத்தில் எங்களுடன் நீண்ட நாளாக இருந்த 8 பேருக்கு காரும், 20 பேருக்கு பைக்கும் பரிசளிக்க விரும்புவதாகச் சொல்லி பட்ஜெட் ஒன்றரை கோடி என்றும் சொன்னார். அப்பா வழிகாட்டுதலின்படி, நடந்தோம். உண்மையில் அந்த ஊழியர்கள் அவ்வளவு மகிழ்ச்சியில் எங்களைக் கொண்டாடித் தீர்த்தார்கள். அவர்களும் நம் குடும்பம் என்பதை அந்தத் தருணத்தில் நாங்கள் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டோம். அப்பா செய்த செயல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி பல்வேறு பாராட்டுகளையும் பெற்றது.

சென்னைக்கு வரும்போது நம்பிக்கைதான் எங்களுடைய மிகப் பெரிய முதலீடாக இருந்தது. இப்போது மூன்று ஷோ ரூம்கள் இருக்கின்றன அடுத்தடுத்த ஊர்களில் கிளைகள் திறக்கும் திட்டங்களும் இருக்கின்றன. உண்மையில் வெற்றி என்பது, நம் தலைமுறை எங்கு தொடங்கியது என்பதைவிட எவ்வளவு உயர்ந்திருக்கிறது. குடும்பமாக எந்த உயரத்தில் நிற்கிறோம் என்பதே முக்கியம். அதை நாங்கள் செயலில் காட்டியிருக்கிறோம். எங்கள் பயணம் தொடரும்” என்றார் நம்பிக்கையுடன்!