
எங்க ஏரியா ஸ்பெஷல்! - புதிய பகுதி
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் அருகே 6 கி.மீ தூரத்தில் உள்ளது தைக்கால். வழி நெடுகிலும் 50 கடைகளுக்கும் மேல் பிரம்பால் செய்யப் பட்ட கலைப்பொருள்கள் அழகுற மிளிர்ந்தன. பிரம்பால் செய்யப்படும் கலைப்பொருள் களின் உற்பத்தித் தொழில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தைக்கால் பகுதி மக்களால் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு 300 குடும்பங்களுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்துவரும் இப்பகுதி மக்களால் மட்டுமே வெறும் கைகளாலேயே பிரம்பை உருக்கி வளைத்து, பின்னி கலைப் பொருள்களை உருவாக்க முடியும். தைக்கால் பகுதி மக்களின் பிரம்பால் செய்யப்படும் கலை கைப் பக்குவம் உலகில் வேறு எந்தப் பகுதி மக்களிடமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியுடன் பிரம்பால் ஆன கலைப்பொருள்களைச் செய்கிறார்கள்.

நூற்றாண்டு பழைமையான தொழில்...
பல்வேறு வேலைகளுக்கு இடையில் நம்முடன் பேச ஆரம்பித்தார் ராயல் லுக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி.
“இந்தத் தொழிலுக்கு நான் நான்காவது தலைமுறை. நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இதே தொழிலைத்தான் செஞ்சுகிட்டு வர்றோம். 28 வருஷமாக நான் இந்தத் தொழிலில் இருக்கேன்.
ஆரம்ப காலத்துல ரொம்ப ஷார்ட்டான மெட்டீரியல் தான் கிடைக்கும். அதை வச்சுதான் கோயில் அர்ச்ச னைக் கூடை, சோறு வடிக்கும் கூடை, ஆலைகளுக்குத் தேவையான கூடை எல்லாம் செஞ்சோம். நாளடைவில் அஸ்ஸாமில் இருந்து பிரம்பு மெட்டீரியல் எங்களுக்கு வர ஆரம்பிச்சது. வெளிநாடு களில் இருந்து சில பிரம்பு நாற்காலிகளின் மாடல் (catalogue) கிடைச்சது. அதை வச்சு நாங்க உற்பத்தி பண்ண ஆரம்பிச்சதுதான் நாற்காலி, ஊஞ்சல் எல்லாமே.
இந்த ஏரியாவுல இந்தத் தொழிலை செய்யும் நிறைய குடும்பங்கள் இருக்காங்க. குறிப்பா, பெண்களுக்கு 100 நாள் வேலையத் தாண்டி ஒரு நாளைக்கு 300 - 350 ரூபாய் இதுல வருமானம் கிடைக்குது.

என்னென்ன பொருள்கள் கிடைக்கும்?
வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் செய்றோம். பிறந்த குழந்தை தொடங்கி வயதான வர்களுக்குத் தேவையான நாற்காலி வரை இடைப்பட்ட அனைத்துப் பொருள்களும் இங்கே கிடைக்கும். சோபா செட், அலமாரி, செப்பல் ஸ்டாண்ட், அழுக்குத் துணிக்கூடை, நாற்காலிகள், கட்டில், டைனிங் டேபிள், கூடைகள், டிரைவர் சீட், தட்டுகள், அர்ச்சனைக் கூடை போன்ற அழகுக்கலை பொருள்கள், பல்வேறு ரகங்களில் ஊஞ்சல்கள் போன்றவை தரமாகச் செய்து தந்துகிட்டுருக்கோம்.
ஊஞ்சலில் பல ரகங்கள்...
ரூ.1,000-ல் தொடங்கி ரூ.12,000 வரை பிரம்பில் ஏழு, எட்டு வெரைட்டி இருக்கு. வெரைட்டி மற்றும் டிசைன்களைப் பொறுத்து ஊஞ்சலின் விலையும் மாறுபடும். மக்கள் கேட்கும் ரகங்களை வரைஞ்சு கொடுத்துக்கூட வாங்கிட்டுப் போறாங்க.
அஸ்ஸாம் to உருவாக்கப்படும் கலைப்பொருள்...
பிரம்பு இலைகள் மலேசியாவில் இருந்து அஸ்ஸாமுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருக்கும் ஒரு டீலர் மூலம் பிரம்பு மெட்டீரியலை அஸ்ஸாம், மேற்கு வங்கம், இமாசலப் பிரதேசத்தில் இருந்து எடுக்குறோம். ஒரு பிரம்பு கட்டுல 10 அடி கொண்ட 25 பிரம்பு குச்சிகள் இருக்கும்.
ஒரு கட்டு பிரம்போட விலை ரூ.2,000 ரூபாய். அதை வாங்கி நெருப்பில் சூடு படுத்தி, வளைத்து ஃபிரேம் பண்ண ஒருவர், டெக்கரேஷன் பண்ண ஒருவர், பாலிஷ் பண்ண ஒருவர் என இப்படி மூன்று கைமாறி ஒரு அழகான கலைப்பொருள் உருவாகும். அது ஊஞ்சலாக, நாற்காலியாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கலைப்பொருளாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கூலி.

எவ்வளவு சம்பாத்தியம்..?
வார்னிஷ் பண்றவங்களுக்கு 500 ரூபாய், டெக்ரேஷன் பண்றவங்களுக்கு 600 ரூபாய், ஃபிரேமிங் பண்றவங்களுக்கு 1,000 ரூபாய் மாதிரி கிடைக்கும். ஒரு நாளைக்கு 3, 4 ஊஞ்சல் செய்யலாம். ஒரு ஊஞ்சலுக்கு ஊஞ்சலின் மாடல், தரத்தைப் பொறுத்து 200 - 700 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்.
வருடத்தில் ஏப்ரல், மே போன்ற மாதங்களிலும் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாள்களிலும் அதிகம் விற்பனை ஆகும். அருகில் பல சுற்றுலாத் தலங்கள் இருப்பதால், சுற்றுலாத் தலம் செல்லும் மக்கள் அனைவரும் இவ்வழியே செல்லும்போது எங்களிடம் பிரம்பால் செய்யப்படும் பொருள்களை நேரடியாக வாங்குவாங்க.
குறிப்பா, நாகூர், வேளாங்கண்ணி செல்லும் சுற்றுலாப் பயணிங்க வருகையின்போது விற்பனை அமோகமாக இருக்கும். பிற மாவட்டங்களில் இருந்து டெலிவரியின் மூலமாகவும் வாங்கிக்குவங்க’’ எனப் பூரிப்போடு முடித்தார்.
உடலில் குளிர்ச்சி உண்டாகும்...
அடுத்ததாக, குவாலிட்டி ஃபர்னிச்சர்ஸ் கடையின் உரிமையாளர் பக்கீர் முகம்மது, “பிரம்பால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்து வதன் மூலம் உடலில் குளிர்ச்சி உண்டாவதாகவும், இங்கு உருவாக்கப்படும் பிரம்பு கலைப் பொருள்களுக்கு ஆயுள் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல, தமிழகத்திலேயே மிகக் குறைந்த விலை யில் பிரம்பால் செய்யப்படும் கலைப் பொருள்களை வாங்கக் கூடிய இடமாகவும் தைக்கால் திகழ்வதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
தைக்கால் பகுதியில் உருவாகும் பிரம்புப் பொருள்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங் களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலங் கள் உள்ளிட்ட பிற மாநிலங் களுக்கும் மூங்கில் பொருள்கள் அதிகம் செல்கின்றன” என்றார் பெருமையுடன்.
அடுத்தமுறை சிதம்பரத்துக்குப் போனால், தைக்காலுக்கு ஒரு விசிட் அடியுங்கள். நீங்கள் தேடும், விரும்பும் மூங்கில் கலைப் பொருள்கள் இங்கு நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்!
நீங்களும் எழுதலாம்..!
வாசகர்களே... உங்கள் பகுதியிலிருக்கும் புகழ்பெற்ற சந்தை / மார்க்கெட், வியாபார ஸ்தலம், வெற்றிபெற்ற சிறுதொழில் முனைவோர், மாற்றி யோசித்து வெற்றிபெற்ற தொழில்முனைவோர் என்று நீங்கள் நன்கு அறிந்த / கேள்விப்பட்ட விஷயம் குறித்து சுவராஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் (கேமரா/செல்போன்) அனுப்புங்கள். வீடியோவுடன் அனுப்பினால் இன்னும் சிறப்பு. நீங்கள் எழுதவிரும்பும் சந்தை/மார்க்கெட்/வியாபார ஸ்தலம் / தொழில்முனைவோர் கையாளும் பொருள்கள், கிடைக்கும் வருமானம், கையில் நிற்கும் லாபம், விற்பனையாகும் சிறப்பான பொருள்கள் என்று கிடைக்கும் தகவல்களை முழுமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத வேண்டும். தகவல்கள் பிழையற்றதாகவும் நூறு சதவிகிதம் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். விகடன் இதழ்/டிஜிட்டல் / சோஷியல் மீடியா தளங்களில் பதிவிடப்படும் கட்டுரை / வீடியோக்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: navdesk@vikatan.com