
நேர்காணல்
சமீபத்தில் கிளியர்ட்ரிப் குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கிளியர்ட்ரிப் நிறுவனத்தை ஃப்ளிப்கார்ட் குழுமம் வாங்கியது. அதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அய்யப்பன் நியமனம் செய்யப் பட்டார். இந்த நிலையில், கிளியர்ட்ரிப் நிறுவனத்தில் 20% பங்குகளை அதானி குழுமம் வாங்கியிருக்கிறது. அதானி குழுமத்தின் சூப்பர் ஆப் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், க்ளியர்ட்ரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அய்யப்பனுடன் பேசினோம். கிளியர்ட்ரிப் நிறுவனத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, ஊடகத்துக்கு அளிக்கும் முதல் பேட்டி இது.
நீங்கள் எப்படி ஃப்ளிப்கார்ட் குழுமத்துக்கு வந்தீர்கள்?
‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். திருவொற்றியூரில் வளர்ந்தேன். 11, 12-ம் வகுப்பு ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். (கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை படித்தது இந்தப் பள்ளியில்தான்). செயின்ட் ஜோசப் கல்லூரி யில் இன்ஜினீயரிங்கில் ஐ.டி முடித்தேன்.
படிப்பு முடிந்தவுடன், பெங்களூருவில் உள்ள நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அது டெஸ்க் சார்ந்த வேலை. எங்கள் குடும்பத்தில் பெரும்பாலான வர்கள் பிசினஸ் தொடர்புடையவர்கள் என்பதால், எம்.பி.ஏ படிக்க முடிவெடுத்தேன்.
என்னுடைய 10 வயதில் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். பள்ளி, கல்லூரி வரை அம்மாவும் அக்காவும்தான் என்னைப் படிக்க வைத்தார்கள். அம்மா டெய்லரிங் உள்ளிட்ட வேலைகளைச் செய்தார். அக்கா என்னைவிட ஏழு வயது மூத்தவர் என்பதால், நான் படிக்கும்போது அவர் வேலையில் சேர்ந்துவிட்டார். எம்.பி.ஏ படிக்க வேண்டும் என நான் முடிவெடுத்ததில் என் மனைவிக்குப் பெரும்பங்கு இருக்கிறது. சுருக்கமாக, என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்ததில் இந்த மூன்று பெண்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.
ஜார்க்கண்ட்டில் ஜாம்செட்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.இ (XLRI) கல்லூரியில் எம்.பி.ஏ முடித்தவுடன், ஐ.டி.சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கர்நாடகாவில் விற்பனைப் பயிற்சிக்கு அனுப்பினார்கள். நான் அங்கு கற்றுக்கொண்டது பெரும் பாடம். சிகரெட் விற்பனை செய்வது, விற்பனை செய்பவர்களை நிர்வகிப்பது என கர்நாடகா முழுவதும் பயணம் செய்திருக் கிறேன். இதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் சிகரெட் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பிறகு, உணவுப் பொருள் விற்பனைக்கு மாறினேன். அதற்கடுத்து கொல்கத்தா தலைமை அலுவலகத்துக்கு சென்றேன். சி.இ.ஓ அலுவலகத்தில் வேலை என்பதால், பெரிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை நேரடியாகப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.’’

ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனத்தில் இருந்து விலகி, ஃப்ளிப்கார்ட்டில் சேர்ந்தது ஏன்?
‘‘நான் வேலை மாறியது 2013-ம் ஆண்டு. இப்போது போல பல ஸ்டார்ட்அப்கள் அப்போது உருவாகவில்லை. ஆனால், ஸ்டார்ட்அப்களின் தொடக்க காலம் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய பல நண்பர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒப்பீட்டளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இன்னும் புதிதாக நிறைய கற்றுக் கொள்ள முடியும், கூடுதல் பொறுப்புகளைக் கையாள முடியும் என்பதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்தேன். அப்போது என்னுடன் பணியாற்றிய நண்பர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்தார். ஃப்ளிப்கார்ட்டின் பின்னி பன்சால் ஒரு புதிய லீடர்ஷிப் டீமை உருவாக்கப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே, நான் அந்தக் குழுவில் இணைந்தேன். இதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வுகள் வந்தன. கிளியர்ட்ரிப்புக்கு முன்பாக மிந்திராவின் சீப் பிசினஸ் ஆபீஸர் (Chief Business Officer) ஆக உயர்ந்தேன். தற்போது கிளியர்ட்ரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறேன்.’’
சச்சின் பன்சால், பின்னி பன்சால், கல்யாண் கிருஷ்ணமூர்த்தி யுடன் பழகிய அனுபவம் எப்படி இருந்தது?
‘‘சச்சின் பன்சால் ஒரு தீர்க்கதரிசி. அடுத்த பத்தாண்டுகளில் சந்தை இப்படியெல்லாம் இருக்கும் என்பதைக் கணித்தவர். பின்னி பன்சால், திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவார். கல்யாண் கிருஷ்ணமூர்த்தி முதலீட்டாளர்கள் சார்பாக நிறுவனத்துக்குள் வந்தவர்; தற்போது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பவர். இவர்தான் என்னைக் கண்டுபிடித்து புதிய பொறுப்புகளை வழங்கினார்.’’
டிராவல் புக்கிங் என்பதே ஏற்கெனவே போட்டி நிறைந்த சந்தை... கிளியர்ட்ரிப்பை ஏன் ஃப்ளிப்கார்ட் வாங்க வேண்டும்?
‘‘ஏற்கெனவே ஃப்ளிப்கார்ட்டுக்குள் டிராவல் பிரிவு இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்கள் விமான டிக்கெட் புக் செய்ய வேண்டும் எனில், எங்கள் நிறுவனம் குறித்து ஞாபகம் வருவதற்குப் பதிலாக வேறு நிறுவனங்களைத் தேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால், இந்தத் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற வாய்ப்புள்ள துறை. இதில் கிளியர்ட்ரிப் சிறப்பாகச் செயல்பட்டுவந்தது. வாடிக்கை யாளர்களுக்கு வசதியான செயலியையும் அது வைத்திருந்தது. வழக்கமாகத் தள்ளுபடி தந்து வாடிக்கையாளர்களைக் கவரும் நிறுவனமாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகச் செயல்பட்டு வந்ததால், ஃப்ளிப்கார்ட் குழுமம் வாங்கியது.’’
தற்போது கிளியர்ட்ரிப் எவ்வளவு சந்தையை வைத்திருக்கிறது?
‘‘மற்ற துறைகளைப்போல, இதை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. கிளியர்ட்ரிப்பில் ஹோட்டல் முன்பதிவு செய்தால் மேக் மை ட்ரிப் மூலமாக நடக்கும். அமேசான் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், கிளியர்ட்ரிப் வழியாக நடக்கும். ஃப்ளிப்கார்ட் மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், ixigo மூலம் நடக்கும். அதனால் ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்தால் இருவருமே சந்தை மதிப்பைக் கோர முடியும். அதனால் யார் எவ்வளவு சந்தையை வைத்திருக்கிறார் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. டிராவல் புக்கிங் சேவைத் துறையில் நாங்கள் இரண்டாம் இடத்தில் இருப்போம் எனக் கருதுகிறேன்."
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பர்யமான நிறுவனங்கள் விளம்பரம் செய்தன. ஆனால், தற்போது பணம் இருக்கிறது என்பதற் காக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு அதிக தொகை செலவழிக்கிறதா?
‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்தியாவின் பெருநிறுவனங் களுடன் ஒப்பிட முடியாது. அவர்களை ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங் களுடன்தான் ஒப்பிட வேண்டும். தவிர, பாரம்பர்ய நிறுவனங்களின் வளர்ச்சி 10% என்கிற அளவில் தான் இருக்கிறது. ஆனால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்தபட்சம் 40% என்ற அளவில் வளர்ச்சி இருக்கிறது.
இதுபோன்ற நிறுவனங்களுக்கு அதனால்தான் முதலீடு கிடைக் கிறது. ஆகையால், வளர்ச்சிக்கு அதிகம் செலவு செய்கிறார்கள். சில ஸ்டார்ட்அப் நிறுவனங் களின் பிசினஸ் மாடலே தெளிவில்லாத சூழலில் முதலீடு கிடைக்கிறது என்பதற்கும் மாற்றுக் கருத்து இல்லை.’’
கோவிட்டுக்குப் பிறகு, பயணங்களைப் பொறுத்தவரை, இயல்பு நிலை திரும்பியிருக்கிறதா?
‘‘பொதுவாக, பயணத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். உள்நாட்டு விமானப் போக்கு வரத்து, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் ஹோட்டல்கள். உள்நாட்டு விமானங்களைப் பொறுத்தவரை, விமான நிலையங்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. கிட்டத்தட்ட 90% அளவுக்கு செயல்பாடு இருக்கிறது; தேவையும் இருக்கிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்து அளவில் இன்னும் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை. இப்போதைக்கு சில `ஏர் பபுள்’ உருவாக்கியிருக்கிறது. உதாரணமாக, இந்தியாவில் இருந்து துபாய் செல்லலாம். துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரலாம். இதுபோல சில வழித் தடங்களில் செயல்பாடு இருக்கிறது. ஹோட்டல்களைப் பொறுத்தவரை, இன்னும் முழுமையான அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.’’
நீங்கள் செயல்படும் துறைகளில் (விமானம், ரயில், ஹோட்டல்) புதிதாக வழித்தடங்களை உருவாக்க முடியாது. ஏற்கெனவே இருக்கும் சந்தையை மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்படித்தானே..?
‘‘விமானத்தைப் பொறுத்தவரை, நம்மால் எதுவும் செய்ய முடியாது. பல கறாரான கட்டுப்பாடுகள் கொண்ட துறை அது. அங்கு சப்ளை என்பது ஒரு எல்லைக்குள்தான். ரயில் களுக்கும் இதேதான்.
ஆனால் கார்கள், பஸ்கள் மற்றும் ஹோட்டல் களில் புதிய சப்ளையை உருவாக்க முடியும். ஏற்கெனவே கார்கள் மற்றும் பஸ்களில் செயல்பட்டு வந்தோம். மீண்டும் இந்தப் பிரிவில் செயல்படுவோம். ஹோட்டல்களைப் பொறுத்தவரை ஹோம் ஸ்டே, ரிசார்ட் உள்ளிட்ட பல ஹோட்டல்களை இணைக்க முடியும். இதன் அடுத்தகட்டமாக டிராவல் மற்றும் சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் இருக்கிறோம்!’’