1997-ம் ஆண்டு, பி.ஜி.துவாரகநாத், சுப்ரமண்ய பட் இருவரும் அப்போதைய டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷெர்செக்ஸ் தேசாயை, பெங்களூருவில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
``இதுவரை எந்த இந்திய நிறுவனமும் யோசித்துக்கூட பார்க்காத திட்டம் சார்... உலகின் மிக மெலிதான வாட்ச் மூவ்மென்டைத் தயாரிக்க வேண்டும். அது நம்மை இந்தியச் சந்தையில் மட்டுமல்ல, உலகச் சந்தையிலும் முத்திரை பதிக்க உதவும்’’ என்றார் பி.ஜி.டி.

வாகனங்களுக்கு எப்படி இன்ஜின் இதயம் போல செயல்படுகிறதோ, அப்படி வாட்சுகளுக்கு மூவ்மென்ட். 1997-லேயே பி.ஜி.டி கணித்திருந்த வாட்ச் மூவ்மென்டின் அளவு என்ன தெரியுமா 1.5 மில்லி மீட்டர். அதுவும் பேட்டரியோடு இத்தனை மெலிதான மூவ்மென்டை உருவாக்க வேண்டும். பேட்டரி நீண்ட காலத்துக்கு தாக்குப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்பதும் சவால்களாக இருந்தன.
இதற்கு முன்பே பல நிறுவனங்கள், இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, பெயரளவுக்கு சில வாட்சுகளைத் தயாரித்து அருங்காட்சியகங்களில் வைத்திருந்த கதைகள் எல்லாம் அவர்கள் கண்முன் வந்துபோயின. ஆனால், இப்போது வடிவமைக்க இருக்கும் மூவ்மென்ட், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு மக்களால் வாங்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் டைட்டன் தெளிவாக இருந்தது. கடைசியில், டைட்டன் எம்.டி தேசாய், பி.ஜி.டி-யின் ஸ்லிம் வாட்ச் திட்டத்துக்கு ஓகே சொல்லி, வாழ்த்தி வழியனுப்பினார்.
50 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் பேட்டரி...
உடனடியாக, டைட்டன் நிறுவனத்தில் உள்ள சிறந்த மூளைகள் ஓரணியில் திரட்டப்பட்டன. திட்டம் விளக்கப்பட்டது. வேலை சூடுபிடித்தது. சில வெளிநாட்டு நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் உதவியோடு 2000-ம் ஆண்டு வாக்கில் ஒரு வாட்ச் மூவ்மென்ட் தயாரிக்கப்பட்டது. அந்த மூவ்மென்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி, ஒரு 40 வாட்ஸ் பல்ப்பை ஒரு நேரம் எரிய வைக்கத் தேவையான மின்சாரத்தைக் கொடுப்பதாக இருந்தது. அவ்வளவு மின்சாரத்தைக் கொண்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு வாட்சை இயக்கலாம்.

அந்தளவுக்கு எல்லாமே கனகச்சிதமாகப் பொருந்தி வந்தபோது, ஏதோ சில காரணங்களுக்காக அந்த வாட்ச் மூவ்மென்டை ரேமண்ட் வெய்ல் (Raymond Weil) என்கிற சுவிஸ், நிறுவனத்திடம் விற்க விரும்பியது டைட்டன். ``இந்திய நிறுவனத்தின் வாட்ச் மூவ்மென்டை தாங்கள் பயன்படுத்தினால் தங்களின் பிராண்ட் இமேஜ் அடிவாங்கும்” என ரேமண்ட் வெய்ல் தரப்பில் ஒருவர் முகத்தில் அறைந்தாற்போல கூறியது பிஜிடியைக் கடுமையாக பாதித்தது.
வாட்டர் ரெசிஸ்டென்ட்...
சுவிஸ் நம் மூவ்மென்டை வாங்கவில்லை எனில் என்ன..? நாமே என் பிராண்டின் கீழ் உலகின் அல்ட்ரா ஸ்லிம் வாட்சை அறிமுகப்படுத்துவோம் என உத்தரவிட்டார் தேசாய். ஆனால், டைட்டனின் இந்த அல்ட்ரா ஸ்லிம் வாட்சை வாட்டர் ரெசிஸ்டென்டாக இருக்க வேண்டும், அப்போதுதான் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒத்து வரும், சந்தையிலும் நம் பொருள் தாக்குப்பிடிக்கும் என்றார்.

ஒட்டுமொத்த அணியும் மிரண்டு போய்விட்டனர். அத்தனை மெலிதான வாட்ச்சில் எப்படி வாட்டர் ரெசிஸ்டென்ட் வசதியைக் கொண்டு வர முடியும்... என மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். மீண்டும் ஒரு சுவிஸ் நிறுவனத்திடம் உதவி கேட்டுபோனபோது படாரென கதவைச் சாத்தி டைட்டனை வெளியேற்றினர்.
கடைசியில் தங்கள் தொழில் நிபுணத்துவத்தை வைத்து வாட்டர் ரெசிஸ்டென்ட் வாட்ச் ஒன்றைத் தயாரித்தனர். வாட்ச் மூவ்மென்ட், மேற்பகுதி எல்லாம் சேர்த்து வாட்சின் தடிமன் வெறும் 3.5 மில்லி மீட்டர், எடை வெறும் 14 கிராம் மட்டுமே. உலகின் மிக மெலிதான, எடை குறைவான வாட்ச் என்கிற டேக்லைனுடன் 2002-ம் ஆண்டு மே மாதத்தில் `டைட்டன் எட்ஜ்' வாட்ச்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் ஹிட்டடித்து உலக வாட்ச் நிறுவனங்கள் எல்லாம் டைட்டனை உச்சிமோந்தது வரலாறு.
தமிழக அரசுதான் டைட்டனின் முக்கியமான பங்குதாரர்...
தமிழ்நாட்டுக்கும் டாடா குழுமத்துக்கும் இந்த நிறுவனத்தோடு ஒரு தொப்புள் கொடி உறவும் உண்டு. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவிக் கிடக்கின்றன. அப்படி 1984-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) மற்றும் டாடா குழுமத்தால் இணைந்து தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டைட்டன். இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் இன்று வரை தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரத்தில்தான் இருக்கிறது.

இன்று டைட்டன் நிறுவனம் வெறும் வாட்ச் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியாவின் முன்னணி லைஃப் ஸ்டைல் பிராண்டுகளில் ஒன்று. ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் பிரமாண்ட நிறுவனம்.
டைட்டனின் தொடக்கமே அதிரடிதான். 1980-களில் குவார்ட்ஸ் கைக்கடிகாரங்கள் விலை அதிகமானவையாக இருந்தன. ஆனால், தரத்திலும், நேரத்தை சரியாகக் காட்டும் தொழில்நுட்பத்திலும் சிறந்தது. இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டாம் எனப் பலரும் கூறியபோதும், டைட்டன் குவார்ட்ஸ் வாட்ச்களைத் தயாரித்து தன் தரத்தை உலகுக்கு உரக்கச் சொன்னது.
இளைஞர்களைக் கவர்ந்த ஃபாஸ்ட்டிராக்...
1998-ம் ஆண்டுக்குப் பிறகு ஃபாஸ்ட்டிராக் என்கிற இளைஞர் களுக்கான பிராண்டை அறிமுகப்படுத்தி இன்று வரை சந்தையில் சக்கை போடுபோட்டுக் கொண்டிருக்கிறது டைட்டன். அதே போல, கடந்த 20 ஆண்டுகளில் கேரட் லேன், Favre Leuba என பல பிராண்டுகளைக் கையகப்படுத்தியது.
ஃபாஸ்ட்டிராக், சோனாட்டா, ஆக்டேன், சைலஸ், ஹீலியோஸ், டைட்டன் ராகா, கேரட் லேன், டைட்டன் ஐ பிளஸ், ஸ்கின் எனப் பல பிராண்டுகளின்கீழ்... டைட்டன் நிறுவனம் கடிகாரம், கண்ணாடி, வாசனை திரவியம், பை... எனப் பல பொருள்களை உற்பத்தி விற்பனை செய்து வருகிறது.

கடந்த டிசம்பர் 2021 நிலவரப்படி, இப்போதும் தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திடம் டைட்டன் நிறுவனத்தின் சுமார் 27% பங்குகள் உள்ளன. டைட்டன் நிறுவனம் கொடுக்கும் ஈவுத் தொகை இப்போதும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு வருமானமாக சென்றுகொண்டுதான் இருக்கிறது.
2019-ம் ஆண்டு நிலவரப்படி, உலகின் ஐந்தாவது மிகப் பெரிய கைக்கடிகாரத் தயாரிப்பாளராக உலகின் டாப் நிறுவனங்களோடு மோதி விளையாடிக்கொண்டிருக்கிறது டைட்டன்.
விடா முயற்சி... விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும் என்பதற்கு டைட்டன் எட்ஜ் ஒரு சூப்பர் பிராண்ட் உதாரணம்.
(மீண்டும் அடுத்த செவ்வாய் சொல்வேன்)