
தமிழகத்தில் இருந்து மிகச் சில நிறுவனங்களே எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட்டுள்ளன...
பத்து கோடி ரூபாய் முதல் ரூ.25 கோடி வரை டேர்ன்ஓவர் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் என்பது எப்போதுமே பிரச்னைதான். கையில் இருந்த பணத்தை எல்லாம் பிசினஸில் போட்ட பிறகும், வங்கியில் இருந்து தொழில் கடன் வாங்கிய பிறகும், மேற்கொண்டு பிசினஸை சிறப்பாக நடத்த பணம் தேவைப் படவே செய்கிறது. இந்தப் பணத்தை எங்கிருந்து, எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் எஸ்.எம்.இ துறை சார்ந்த பல தொழில்முனைவோர்கள்.
இது மாதிரியான பணத் தேவை உடையவர் களுக்கு உதவ உருவாக்கப்பட்டதுதான் எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்ச். இந்த எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் முன்னணியில் இருக்கிறது பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். இந்தியா முழுக்க இருக்கிற எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் இந்த எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் தங்கள் பங்குகளை வெளியிடலாம்.இந்த எக்ஸ்சேஞ்சில் எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் பங்குகளை எப்படி வெளியிடலாம் என்பது குறித்து சிறு தொழில் நிறுவனங் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் சில நாள்களுக்குமுன் சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் பல நிபுணர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ‘ஃபேம்-டிஎன்’ (FaMeTN) நிறுவனத்தின் இணை இயக்குநரும் பொது மேலாளருமான எஸ்.சக்திவேல். ‘‘எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ‘ஃபேம்-டிஎன்’ மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறோம். சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு மாவட்டத் திலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி சிறுதொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு தருகிறோம். எஸ்.எம்.இ நிறுவனங்கள் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருள்களை விற்கும்பட்சத்தில் அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை எங்கள் மூலம் 48 மணி நேரத்துக்குள் கிடைக்கும்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் பங்குகளை எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட விரும்பினால், அதற்கான லிஸ்ட்டிங் தொகை 75% வரை மானியமாகத் தருகிறோம். இந்த அளவுக்கான மானியம் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் தரவில்லை’’ என்றார்.
பி.எஸ்.இ. எஸ்.எம்.இ & ஸ்டார்ட் அப்-ன் உதவி பொது மேலாளர் ஆனந்த் சாரி பேசியபோது, ‘‘எஸ்.எம்.இ நிறுவனங்கள் பி.எஸ்.இ எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சை ஒரு வரமாகத்தான் பார்க்கிறார்கள். மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் உள்ள எஸ்.எம்.இ நிறுவனங்களை நடத்துபவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். 2012-ல் இந்த எக்ஸ்சேஞ்சை பி.எஸ்.இ தொடங்கியது. அன்றி லிருந்து இன்று வரை 433 எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் பங்குகளை எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட்டு உள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து 136 நிறுவனங்களும் குஜராத்தில் இருந்து 120 நிறுவனங்களும் இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் பங்குகளைப் பட்டியலிட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இருந்து 9 எஸ்.எம்.இ நிறுவனங்களே இதில் பட்டியலிட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் கடும் உழைப்புக்கும் நேர்மைக்கும் பெயர்போனவர்கள். அவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை இந்த எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட்டால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடுவது சுலபம். பெரிய நிறுவனங்களைப் போல இல்லாமல், சில எளிய விதிமுறைகளே எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பெரிய நிறுவ னங்கள் போல காலாண்டுக்கு ஒரு முறை லாப நஷ்டக் கணக்கை வெளியிடத் தேவையில்லை; ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கை வெளியிட் டாலே போதும். தவிர, நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு என்பதையும் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். 10, 20 கோடி ரூபாய்தான் மதிப்பு இருக்கும் என நினைத்த நிறுவனங்களுக்கு அதைவிட பல மடங்கு மதிப்பு கிடைத்ததைக் கண்டு பல எஸ்.எம்.இ நிறுவ னங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள எஸ்.எம்.இ நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்கள் பங்குகளைப் பட்டியலிட இப்போது எங்களுடன் பேசி வருகிறார்கள். இந்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10 நிறுவனங் களாவது இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் பங்குகளைப்பட்டிய லிடும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் பங்குகளை எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் மெர்ச்சன்ட் பேங்க ரான ரஜத் பெய்ட்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் நம்முடன் பேசினார் ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப் பின் நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கே.ஆனந்த். ‘‘இந்த நிகழ்ச்சிக்கு 75-க்கும் மேற்பட்ட சிறுதொழில்முனைவோர்கள் வந்திருந்தார்கள். இவர்களில் 33 பேர் தங்கள் பங்குகளை எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட தங்கள் ஆர்வத்தைத் (Letter of Interest) தெரிவித்திருக் கிறார்கள். இது மிகப் பெரிய மாற்றம். இதுபோல, தமிழகம் முழுக்க இருக்கும் சிறுதொழில் முனைவோர்களும் தங்கள் பங்கு களைப் பட்டியலிட முன்வர வேண்டும்’’ என்றார்.
தமிழகத்தில் பல லட்சம் எண்ணிக்கையில் எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் பி.எஸ்.இ எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்சில் தங்கள் பங்குகளை பட்டியலிட பரிசீலிக்கலாமே!