நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, விடுப்பு கேட்பதுதான். மருத்துவ காரணங்களுக்காக விடுமுறை கேட்கும்போது கூட, அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால்தான் நம்பி விடுப்பு கொடுக்கும் நிறுவனங்கள் பல உண்டு.

இந்நிலையில், முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று வழிபடுவதாகக்கூறி விடுப்பு கேட்டவருக்கு, விடுப்புக்கு முன் முன்னோர்களின் கல்லறையைப் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார் முதலாளி. இந்தச் சம்பவம் தற்போது பலரின் கவனத்தையும் பெற்று, பேசுபொருளாகி உள்ளது.
ஹாங்காங்கில் வசித்து வரும் ஒருவர், தன்னுடைய முதலாளியிடம் `Ching Ming’ என்ற திருவிழாவிற்குச் செல்ல 12 நாள்கள் விடுப்பு கேட்டுள்ளார். இந்தத் திருவிழாவின்போது, சீனாவில் உள்ள குடும்பங்கள் தங்களுடைய மூதாதையர்களின் கல்லறைகளுக்குச் சென்று, அவற்றைச் சுத்தம் செய்து அவர்களுக்குச் சம்பிரதாய சடங்குகளைச் செய்வதுண்டு.
விடுமுறை கேட்டவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், முதலாளி அவரின் விடுப்புக்கான காரணத்தை நிரூபிக்க, விடுப்பு எடுப்பதற்கு முன்பு முன்னோர்களின் கல்லறையை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார்.

`என் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக நான் நேரத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் அதை நிரூபிக்க கல்லறையைப் புகைப்படம் எடுக்க வைத்தார்.
உன்னுடைய மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்த உண்மையில் உனக்கு 12 நாள்கள் விடுப்பு வேண்டுமா எனக் கேட்டார். ஹாங்காங்கில் உள்ள முதலாளிகள் வெறித்தனமாகி வருகிறார்கள், அவர்கள் என்னையும் பைத்தியமாக்குகிறார்கள்’ என தன்னுடைய முகநூல் பக்கத்தில் வேலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தைக் குறித்து பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று பேசுபொருளாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவிட் தொற்றின் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து இந்தத் திருவிழா நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதுபோல விடுப்பு கேட்டதற்கு ஆதாரம் கேட்ட சம்பவம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கிறதா..?