நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கம்பெனி பயோடேட்டா: சியெட் லிமிடெட் (BSE Code: 500878 NSE Symbol: CEATLTD)

கம்பெனி பயோடேட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பெனி பயோடேட்டா

நாளொன்றுக்கு 1,40,000-க்கும் எண்ணிக்கையிலான டயர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கான நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்

ஆர்.பி.ஜி குழுமத்தின்கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் சியெட் லிமிடெட், மோட்டார் வாகனங்களுக்கான டயர்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது.

நிறுவனத்தின் வரலாறு...

1924-ம் ஆண்டில் சியெட் இன்டர்நேஷனல் நிறுவனம் இத்தாலியில் உள்ள டொரினோ (Turin) எனும் இடத்தில் டெலிபோன் மற்றும் ரயில்வே நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கேபிள்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. இந்தியாவில் 1958-ம் ஆண்டில் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு சியெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1972-ம் ஆண்டில் மும்பைக்கு அருகே இருக்கும் பந்தப் எனும் இடத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி மையத்தில், தன்னுடைய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியது. 1982-ம் ஆண்டில் ஆர்.பி.ஜி குழுமம் சியெட் டயர்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 1990-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயர் சியெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2009-ம் ஆண்டில் ஹலோல் எனும் இடத்தில் பயணிகள் டிரக்குகள் மற்றும் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளில் உபயோகிக்கப்படும் டயர்களுக்கான ரேடியல் பிளான்ட்டை நிறுவியது சியெட் லிமிடெட் நிறுவனம். 2012-ம் ஆண்டில் உலக அளவில் சியெட் எனும் பிராண்டைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை பைரெலி நிறுவனத்திடம் இருந்து சியெட் நிறுவனம் கையகப்படுத்தியது.

கம்பெனி பயோடேட்டா: சியெட் லிமிடெட் (BSE Code: 500878 
NSE Symbol: CEATLTD)

நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள்...

பல்வேறு உற்பத்தி மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது சியெட் நிறுவனம். தன் மையங்களின் மூலம் செய்யப்படும் உற்பத்தி விவரங்கள்...

* பந்தப் (1958-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) உற்பத்தி மையத்தில் டிரக் மற்றும் பஸ், விவசாயத்தில் உபயோகப்படுத்தப் படும் வாகனத்துக்கான டயர்கள், ஸ்பெஷாலிட்டி டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* நாசிக்கில் (1973-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) உள்ள உற்பத்தி மையத்தில் டிரக் மற்றும் பஸ்களுக்கான டயர்கள், லைட் டிரக்குகளுக்கான டயர்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான டயர்கள், பாசஞ்சர் கார்களுக்கான ரேடியல் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* ஹலோல் (2009-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) உற்பத்தி மையத்தில் பாசஞ்சர் கார்களுக்கான ரேடியல் டயர்கள், டிரக், பஸ்களுக்கான ரேடியல் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* நாக்பூரில் (2016-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) இருக்கும் உற்பத்தி மையத்தில் பைக்குகளுக்கான டயர்கள், ஸ்கூட்டர்களுக்கான டயர்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* அம்பெர்நாத் (2017-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) உற்பத்தி மையத்தில் ஸ்பெஷாலிட்டி டயர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* சென்னையில் (2020-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) உள்ள உற்பத்தி மையத்தில் பாசஞ்சர் கார்களுக்கான ரேடியல் டயர்கள், மோட்டார் சைக்கிள்களுக்கான ரேடியல் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாளொன்றுக்கு 1,40,000-க்கும் எண்ணிக்கையிலான டயர்களை உற்பத்தி செய்யும் அளவுக்கான நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இது தவிர, 17 டயர் உற்பத்தியாளர்களிடம் இருந்து டயர்கள், டியூப்கள் மற்றும் பிளாப்புகளை அவுட் சோர்ஸிங்கும் செய்துவருகிறது. 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையமானது 120-க்கும் மேலான காப்புரிமைக்கான விண்ணப்பங்களைச் செய்துள்ளது. 7,622 (2021-22 நிதி ஆண்டின்படி) நிரந்தரப் பணியாளர்களுடன் இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

1958-ம் ஆண்டில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளையும் சேவையையும் வழங்கிவருகிற இந்த நிறுவனம், ஸ்கூட்டர்கள், பைக்குகள், மூன்று சக்கர வாகனங்கள், கார், பஸ், இலகுரக கமர்ஷியல் வாகனங்கள், டிரக்குகள், டிராக்டர்கள் போன்ற வற்றுக்கான டயர்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. தன் தயாரிப்புகளை வாடிக்கையாளர் களிடம் சேர்க்க 400-க்கும் மேற்பட்ட சியெட் விற்பனை யகங்கள், 2,500-க்கும் மேற்பட்ட டீலர்கள், 51,000-க்கும் மேற்பட்ட சப்-டீலர்கள் கொண்ட நெட் வொர்க்குடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி பயோடேட்டா: சியெட் லிமிடெட் (BSE Code: 500878 
NSE Symbol: CEATLTD)

ரிஸ்க்குகள் என்னென்ன?

டயர் உற்பத்தித் துறையில் ஈடுபட்டு வருகிற நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. டயர்கள் உற்பத்தியில் மூலப்பொருள்களின் விலை உயர்வு முக்கியமான ரிஸ்க்காக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. மூலப் பொருள்கள் விலை ஏற்றம் அடைந்து, அதற்கேற்ப டயர்களின் விலையை ஏற்ற முடியாதுபோனால் அது இந்த நிறுவனத்தின் செயல் பாட்டை பாதிக்கவே செய்யும். குறிப்பிட்ட சில மூலப்பொருள் களை சப்ளை செய்வதில் சிக்கல் உருவாகும்போது பாதிப்பு வரலாம். குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்தே மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஏதாவது ஒரு காரணத்தால் நடைமுறை சிக்கல்கள் உருவானால் மூலப்பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதில் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது.

அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், தொழில் ரீதியான போட்டி, அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே யாகும். மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் உபயோகப்படுத்தும் மோட்டார் வாகனத் துறையானது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையக் கூடிய ஒன்றாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும்

ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பது நல்லது.

கம்பெனி பயோடேட்டா: சியெட் லிமிடெட் (BSE Code: 500878 
NSE Symbol: CEATLTD)

தற்போதைய விலை: ரூ.1,536.95

52 வார அதிகம்: ரூ.1,981

52 வார குறைவு: ரூ.890

புத்தக மதிப்பு: ரூ.814.92

விலை / புத்தக மதிப்பு: 1.89

முகமதிப்பு : ரூ.10

8.2.2023 நிலவரப்படி

சியெட்டின் வாடிக்கையாளர்கள்..!

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக 50-க்கும் மேற்பட்ட முன்னணி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

ஸ்கூட்டர்: ஹோண்டா, ஹீரோ, பஜாஜ், சுஸூகி, யமஹா மற்றும் பியாஜியோ.

பைக்: ஹோண்டா, ஹீரோ, பஜாஜ், ராயல் என்பீல்டு, யமஹா, சுஸூகி.

மூன்று சக்கர வாகனங்கள்: ‌பியாஜியோ, மஹிந்திரா, ஃபோர்ஸ் மோட்டார்ஸ், அதுல், டாடா, மற்றும் அசோக் லேலண்ட்.

கார்: மாருதி, டாடா, மஹிந்திரா, ரெனால்ட், ஹுண்டாய், டட்சன், கியா மோட்டார்ஸ், மற்றும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.

இலகுரக கமர்ஷியல் வாகனங்கள்: டைம்லர் இந்தியா, அசோக் லேலண்ட், அதுல் ஆட்டோ, ஃபோர்ஸ் மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் பியாஜியோ.

பஸ்: எஸ்.எம்.எல் இசூசு, எய்ஷர், டாடா, டைம்லர் இந்தியா மற்றும் அசோக் லேலண்ட்.

டிரக்: எய்ஷர், ஏசியா மோட்டார் வொர்க்ஸ், மஹிந்திரா, டாடா, அசோக் லேலண்ட்.

டிராக்டர்கள்: சுவராஜ், டாஃபே, எஸ்கார்ட்ஸ், சோனாலிக டிராக்டர்ஸ் (Sonalika Tractors), ப்ரீத், எய்ஷர், ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.