இந்தியாவில் விமானச் சேவைகள் பல இயக்கப்பட்டு வந்தபோதும் நிதி பற்றாக்குறை மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக சில விமான நிறுவனங்கள் திவாலாகி செயல்படாமலே போயின.
இப்போது வாடியா குழுமத்துக்குச் சொந்தமான `Go First’ விமான நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாகத் திவால் தீர்மானத்துக்கு விண்ணப்பித்துள்ளது. அதனால் இந்த விமான நிறுவனத்தின் சேவைகள் மே 3 முதல் 5-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுபோல் இந்தியாவில் செயல்படாமல் போன விமான சேவைகள் பல உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் 15 விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை முடக்கிக்கொண்டன. அவற்றில் சில…
* ஜெட் ஏர்வேஸ் - மும்பையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ், நாட்டில் இரண்டாவது பெரிய விமான சேவையாகச் செயல்பட்டு வந்தது. ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ போன்ற வளர்ந்து வந்த குறைந்த விலை விமான சேவைகள் நிறுவனத்துடன் கடுமையாகப் போராடிய பின், இந்நிறுவனத்தின் சேவைகள் 2019 ஏப்ரல் மாதத்தில் முடக்கப்பட்டது.
* கிங்பிஷர் ஏர்லைன்ஸ் - விஜய் மல்லையாவால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 2005-ல் தொடங்கப்பட்டது. கடும் நிதி நெருக்கடிகள் மற்றும் விஜய் மல்லையாவின் அதிக கடன் ஆகியவற்றால் விமான சேவைகள் 2012-ல் நிறுத்தப்பட்டது.
* இண்டியன் ஏர்லைன்ஸ் - டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ், உள்நாட்டு வழித்தடங்கள் மற்றும் சில சர்வதேச சேவைகளில் கவனம் செலுத்தி வந்தது. 2007-ம் ஆண்டில் ஏர் இந்தியா லிமிடெட் உடன் இணைந்தது. இதன் சேவைகள் 2011 பிப்ரவரி 26-ல் நிறுத்தப்பட்டது.
* ஏர் கோஸ்டா - விஜயவாடா, சென்னை சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்ட விமான நிறுவனம். நிதி நெருக்கடிகள் காரணமாக இதன் சேவைகள் 2017 பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது.
* சஹாரா ஏர்லைன்ஸ் - இந்த விமான நிறுவனம் இரண்டு போயிங் 737 - 200 விமானங்களைப் பயன்படுத்தி 1991 செப்டம்பர் 20-ம் தேதியில் விமான சேவைகளைத் தொடங்கியது. ஹாரா பரிவாரைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்ரதா ராய் இதன் உரிமையாளர். 2006-ல், ஜெட் ஏர்வேஸ் சஹாரா ஏர்லைன்ஸின் அனைத்து சொத்துக்களையும் 545 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எடுத்துக் கொண்டது.

* டெக்கன் ஏர்வேஸ் - ஹைதராபாத் நிஜாம் மற்றும் டாடா ஏர்லைன்ஸ் டெக்கான் ஏர்வேஸ் ஆகியோருக்குச் சொந்தமானது, டெக்கன் ஏர்வேஸ். 1953-ல் இந்நிறுவனம் ஏழு விமான நிறுவனங்களுடன் இணைந்தது. அதன் பின் இந்தியன் ஏர்லைன்ஸ் என அறியப்பட்டது.
* பாராமௌன்ட் ஏர்வேஸ் - சென்னையைத் தளமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம் வணிக சேவைகளுக்காக இயக்கப் பட்டது. 2010-ல் இந்நிறுவனம் சேவையை நிறுத்தியது.