பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

70 பில்லியன் டாலர் இலக்கு... சினிமாவுக்கு எப்போது துறை அந்தஸ்து கிடைக்கும்?

தக்‌ஷின் - 2023 நிகழ்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
தக்‌ஷின் - 2023 நிகழ்ச்சி...

‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்-1’, ‘விக்ரம்’ படங்கள் அரசுக்கு ரூ.1,000 கோடி ஜி.எஸ்.டி வருவாய் தந்துள்ளன!

பாலிவுட் சினிமாக்கள் மட்டுமே இந்தியா முழுக்க ஆக்கிரமித்திருந்த காலம் மலை யேறிவிட்டது. இப்போது பிராந்திய மொழி சினிமாக்கள்தான் ‘பான் - இந்தியா’ சினிமாக் கள் என்கிற அந்தஸ்தைப் பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணங்கள், ‘ஆர்.ஆர். ஆர்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன் 1’ ஆகியவை. இதை மேலும், வளர்த்தெடுக்கும் முயற்சியில் தென் இந்திய சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் அடுத்தகட்ட சவால்கள், வாய்ப்புகள், இலக்குகள் என்னென்ன என்பது பற்றி விவாதிக்க ஒரு பெரிய கருத்தரங்கை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது சி.ஐ.ஐ அமைப்பு.

10 தென்னிந்திய படங்கள் தந்த ரூ.1,000 கோடி...

தக்‌ஷின் - 2023 என்கிற பெயரில் கடந்த ஏப்ரல் 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் நடந்த இந்த மாநாட்டில் தென்னிந்திய சினிமா ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘பொதுவாக, சினிமாத்துறையில் ஒற்றுமை என்பது இருக்காது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகத் திரைத் துறையினர் இணைந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திவருவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். “தென்னிந்திய சினிமாவில் கடந்த 2022-ல் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கே.ஜி.எஃப் 2’, காந்தாரா, பொன்னியின் செல்வன் 1, விக்ரம் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் மட்டுமே அரசுக்கு ரூ.1,000 கோடி ஜி.எஸ்.டி வருவாயாகத் தந்திருக்கிறது. ஆனால், சினிமாவுக்கு துறை அந்தஸ்து இதுவரை இல்லை என்பது வருத்தமான உண்மை” என்றார்.

70 பில்லியன் டாலர் இலக்கு...
சினிமாவுக்கு எப்போது துறை அந்தஸ்து கிடைக்கும்?

50% சம்பளம் நடிகர்களுக்கே போய்விடும்...

பட்ஜெட் படங்கள் பற்றிய விவாதத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்க்யூப் ஃபிலிம்ஸ் பார்ட்னர்கள், இயக்குநர்கள் விபின் தாஸ், கௌதம் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் பேசிய தாவது... “பெரிய ஸ்டார் நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஆண்டுக்கு மிகக் குறைவாகவே வெளியாகின்றன. ஆனால், சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. சினிமா துறை பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. மேலும், எல்லோராலும் பெரியளவில் பட்ஜெட் போட்டு படம் எடுக்கவும் முடியாது. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் மொத்த பட்ஜெட்டில் 50 சதவிகிதத்துக்குமேல் அவர்கள் சம்பளத்துக்கே போய்விடும்’’ என்றார்.

நாடகம் டு ஓ.டி.டி... மாறிவரும் மீடியா...

மக்கள் பொழுதுபோக்கு நாடக வடிவிலிருந்து, சினிமாவுக்கு மாறி இன்று ஓ.டி.டி வரை மாற்றம் கண்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஒருங்கிணைத்தார். டிஸ்னி ஸ்டார் இந்தியாவின் அலோக் ஜெயின், பாலிசிபஜார் சமிர் சேத்தி, ஏசியா நெட் சங்கரநாராயணா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் பேசியதாவது...

“இந்த மீடியாவை அந்த மீடியா ஒழித்துவிடும் என அந்தந்தக் காலங்களில் பேசி வந்திருக்கிறோம். ஆனால், இன்றளவும் அனைத்துமே அதனளவில் சந்தையில் தங்களுக்கான பங்களிப்பை தந்துகொண்டே இருக்கின்றன. மக்கள் எந்த மீடியத்தை விரும்பு கிறார்களோ, அதன் வழியாக தயாரிப்புகளை வழங்க சந்தை தயாராக இருக் கிறது. அதே சமயம், பொழுது போக்கு நுகர்வில் மக்களின் வசதி, வயது, அவர்களின் விருப்பம் அனைத்தும் சம்பந்தப் பட்டிருக்கின்றன. எனவே, பொதுவாக, ஒன்று மற்றொன்றை அழித்துவிடும் என்று சொல்வதற் கில்லை. அவற்றின் பங்களிப்பு விகிதம் மாறலாம். ஆனால், எந்த மீடியாவும் இல்லாமல் போகாது’’ என்று பேசினார்கள்.

28 நாளில் ஓ.டி.டி-யில் படம்...

அடுத்ததாக, திரையரங்கங் களின் அனுபவம் குறித்த விவாதத்தை நடிகர் மோகன் ராமன் முன்னெடுத்தார். இந்த விவாதத்தில் ஷெனாய் தியேட்டர் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஷெனாய், ஏசியன் சினிமாஸ் சுனீல் நரங், ரோஹினி சில்வர் ஸ்க்ரீன் இயக்குநர் நிகிலேஷ் சூர்யா, யு.எஃப்.ஓ மூவீஸ் பங்கஜ் ஜெய்சிங், தமிழ்நாடு திரையரங் குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘‘பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப் போன்ற பிரமாண்ட மான சினிமாக்களுக்கு மட்டும் தான் திரையரங்குகளுக்கு மக்கள் வருகிறார்கள். மற்ற படங் களைப் பார்க்க மக்கள் வருவ தில்லை. காரணம், ஓ.டி.டி-களுக் கான வெளியீட்டு அவகாசம் என்பது 28 நாள்களாக இருப்பதே. ஓ.டி.டி-யில் படத்தை வெளியிடும் கால அவகாசத்தை இரண்டு மாதங் களாக உயர்த்த வேண்டும்.

ஏற்கெனவே 4,000 திரையரங்கு கள் இருந்த தமிழகத்தில் இப்போது ஆயிரத்து சொச்சம் திரையரங்குகளே இருக்கின்றன. படத்தின் டிக்கெட் விலை அதிகம் என்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங் களைவிட தமிழகத்தில் டிக்கெட் விலை குறைவுதான். சுத்தம், சுகாதாரம், நல்ல வசதியான இருக்கை, ஏசி, நல்ல ஒலி ஒளி அனுபவம் ஆகியவை அனைத் தையும் கொடுக்க உகந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையும் முழுமையாக தியேட்டர் ஓனர்களுக்கு வந்து விடாது; விநியோகஸ்தர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, ஜி.எஸ்.டி போக 180 ரூபாயில் 40 ரூபாய்தான் தியேட்டர் ஓனர்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

ஓ.டி.டி-யின் அபார வளர்ச்சி...

அடுத்ததாக, ஓ.டி.டி தளங்களில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் குறித்து விவாத அமர்வு நடந்தது. சிஐஐ தக்‌ஷின் உறுப்பினர் அனுப் சந்திரசேகரன், ஸ்டார்/டிஸ்னி இந்தியா பிசினஸ் ஹெட் கிருஷ் ணன் குட்டி, ஆஹா ஓ.டி.டி.யின் இணை நிறுவனர் அஜித் தாக்கூர், ஜீ5 ஓ.டி.டி முதன்மை தெற்கு க்ளஸ்டர் அதிகாரி சிஜு பிரபாகரன் ஆகியோர் இதில் பேசினார்கள்.

இதில் பேசியவர்கள், ‘‘ஓ.டி.டி.களின் வருவாய் ஒவ்வோர் ஆண்டும் 20% என்னும் அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா வின் ஒட்டுமொத்த ஓ.டி.டி பார்வை யாளர்களில் நான்கில் ஒரு பங்கு தென்னிந்திய பார்வையாளர்கள் ஆவார்கள். தற்போது ரூ.10,000 கோடியாக இருக்கும் ஓ.டி.டி வருவாய், 2030-ல் ரூ.30,000 கோடி அளவுக்கு வளர்ச்சி அடையும் வாய்ப்புகளுடன் இருக்கின்றன. தற்போது ஓ.டி.டி-களில் ஒரிஜினல் சீரிஸ்களில் இந்தி மொழி சீரிஸ்கள் அதிகம் உள்ளன. தென்னிந்திய மொழிகளில் ஓ.டி.டி ஒரிஜினல் சீரிஸ்களுக்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால், மிக மிகக் குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன” என்று பேசினர்.

எது பான் இந்திய சினிமா?

அடுத்ததாக, பான்-இந்தியா படங்கள் குறித்து விவாத அமர்வு பாஃப்டா ஃபிலிம் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஜி.தனஞ்செயன் ஒருங்கிணைத்தார். இந்த அமர்வில் தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா, டி.ஜி.தியாகராஜன், எஸ்.எஸ்.லலித்குமார், சாலுவே கவுடா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் பேசியதாவது...

விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், 
‘டிஸ்னி ஸ்டார் இந்தியா’  அலோக் ஜெயின், 
‘ஏசியா நெட்’ சங்கரநாராயணா, ‘பாலிசிபஜார்’ சமிர் சேத்தி
விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ‘டிஸ்னி ஸ்டார் இந்தியா’ அலோக் ஜெயின், ‘ஏசியா நெட்’ சங்கரநாராயணா, ‘பாலிசிபஜார்’ சமிர் சேத்தி

“கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பான் இந்தியா படங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா, பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற படங்கள் நாடு முழுவதும் வெற்றி அடைந்ததை அடுத்துதான் ‘பான் இந்தியா’ படங்கள் என்பது பெரிதாகப் பேசப்படுகின்றன. ‘பான் இந்தியா’ படங்கள் எனில், ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு நடிகரைத் தேர்வு செய்து நடிக்க வைப்பதல்ல. அது எல்லா மக்களாலும் வரவேற்கப்படக்கூடிய திரைப்படமாக இருக்க வேண்டும். எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் ‘லியோ’, டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் ‘கேப்டன் மில்லர்’, கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘கங்குவா’ போன்ற படங்களை பான் இந்தியா படமாக உருவாக்கும் பொருட்டு அதற்கேற்ப கதைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், காந்தாராவை ‘பான் இந்தியா’ படமாகத் திட்டமிடப்படவில்லை. காந்தாரா ரீலீஸுக்கு முன்பே பிற மொழிகளிலும் டப் செய்து தயாராக வைத் திருந்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் பிற மொழிகளில் வெளியிட்டார்கள். சில நேரங்களில் கதை திட்டமிட்டு ‘பான் இந்தியா’ படமாக உருவாக்கப்படும், சில நேரங்களில் அதுவாகவே ‘பான் இந்தியா’ படமாக மாறிவிடும்’’ என்று பேசினர்.

இறுதியாக, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான் விருதும், நடிகர் சிரஞ்சீவிக்கு ஐகான் விருதும் வழங்கினார். அதன்பிறகு பேசிய அமைச்சர், “2030-ல் இந்திய பொழுதுபோக்குத் துறையைத் தற்போதுள்ள 30 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 70 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். சமீபத்தில் பைரஸியைத் தடுக்க சினிமடோகிராபி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பைரஸியால் பொழுதுபோக்குத் துறை ஆண்டுக்கு 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் இழப்பைச் சந்திக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் சினிமடோகிராபி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

மீடியா பிசினஸை அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராய்வதாக இருந்தது இந்தக் கருத்தரங்கம்.